என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ்-பிரதமர் ரிஷிசுனக்குடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
    • ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.

    வாஷிங்டன்:

    நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷிசுனக் ஆகியோருடன் இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    11 மற்றும் 12-ந்தேதிகளில் லிதுவேனியாவுக்கு செல்லும் ஜோபைடன் அங்கு நடக்கும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். பின்னர் பின்லாந்து நாட்டுக்கு செல்லும் அவர் பின்லாந்து-அமெரிக்க நார்டிக் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    • உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த லில்லி சில்வா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
    • சுட்டுக்கொல்லப்பட்ட லில்லி சில்வா கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலராடா:

    அமெரிக்காவின் கொல ராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (வயது 15)இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் லில்லி சில்வா தனது காதலை திடீரென முறித்தார். தன்னை இனி சந்திக்காதே என காதலனிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோவனிசிரியோ பல முறை காதலியை சந்தித்து பேச முயன்றார். ஆனால் லில்லி சில்வா அவருடன் பேச மறுத்து விட்டார். இது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று ஜோவனி சிரியோ காதலி வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு படுக்கை அறையில் இருந்த லில்லி சில்வாவை நோக்கி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆத்திரம் தீர சரமாரியாக சுட்டார். அந்த சமயம் பக்கத்து அறையில் லில்லியின் 13 வயதான தம்பி டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தான். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவன் அங்கு ஓடி வந்தான். அங்கு தனது அக்கா சுடப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்த லில்லி சில்வா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் இறந்தார். உடனே ஜோவனி சிரியோ காதலியின் தம்பிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி விட்டார். இதனால் அந்த சிறுவனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமால் போய்விட்டது.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக ஜோவனி சிரியோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட லில்லி சில்வா கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்டூடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிந்தது.
    • தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சின் ஸ்டூடியோ உள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஸ்டூடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கு தீ பரவியது.

    இதனால் பெரும் கரும்புகை எழுந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடும் போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது.
    • டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார்.

    இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் டுவிட்டர் திடீரென்று முடங்கியது. இதனால் பயனர்கள் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர். இதுதொடர்பாக புகார்கள் டுவிட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

    இதையடுத்து இப்பிரச்சினையை சரி செய்யும் நடவடிக்கையில் டுவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் டுவிட்டர் பயனர்கள் தெரிவித்த புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

    அதன்படி சரிபார்க்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்றும் அறிவித்தார்.

    அதன் பின் இந்த உச்ச வரம்பை உயர்த்தினார். சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்றும், சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 1000 ஆகவும், புதிய சரிபார்க்கப்படாத பயனர்களுக்கு 500 ஆகவும் அதிகரிப்பதாக தெரிவித்தார்.

    தேவையற்ற தகவல்களை அழிப்பதற்காக இந்த தற்காலிகமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த புதிய கட்டுப்பாட்டால் டுவிட்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

    • உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் முடங்கியது.
    • இதனால் டுவிட்டர்வாசிகள் டுவிட் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    நியூயார்க்:

    உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் டுவிட்டர். இந்த சமூக வலைதளத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர்.

    இதற்கிடையே, உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. இதனால் கோடிக்கணக்கான பயனாளர்கள் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் தவித்தனர்.

    இந்நிலையில், முடங்கியிருந்த டுவிட்டர் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. டுவிட்டர் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் டுவிட்டர்வாசிகள் மீம்ஸ்களை டுவிட்டரில் தெறிக்கவிட்டனர். இவை டுவிட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், டுவிட்டர் டவுன் என்ற ஹாஷ் டேக் டிரெண்டிங்கிலும் இடம்பிடித்தது.

    • பெண் இனமே பெண் இனத்தை உருவாக்கும் பூச்சிகள் எனத் தகவல்
    • பச்சை நிறத்தில் கண்ணிற்கு புலப்படாத வகையில் சிறியதாகவும் உள்ளது

    அமெரிக்காவின் நியூயார்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது. சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் சுரங்கப்பாதைகளிலும் இவை ஊடுருவியுள்ளது.

    'பிக் ஆப்பிள்' என்று வர்ணிக்கப்படும் நியூயார்க்கில் உள்ள பல குடியிருப்புவாசிகள் தங்கள் உடலில் சிறிய கொசு போன்ற பூச்சிகள் ஒட்டிக்கொண்டுள்ளதாக கூறியிருக்கின்றனர்.

    சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், "இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- ஒருவகை கொசு) அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.

    இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் கோரி மோரோ கூறியிருக்கிறார்.

    கார்னெல் பல்கலைகழகத்தில் உள்ள நியூயார்க்கின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டம் எனப்படும் அமைப்பில் இருக்கும் ஜோடி கேங்லோஃப் என்பவர் ''அஃபிட்களை பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவை பொதுவாக பார்த்தினோஜெனடிக் (parthenogenetic) ஆகும். அதாவது அவற்றில் பெண் இனமே பெண் இனத்தை உருவாக்கும். சரியான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் அதன் எண்ணிக்கை பன்மடங்காகக் கூடும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

    இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள நியூயார்க் நகர சுகாதாரத்துறை, "நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம்" என செய்தி வெளியிட்டிருக்கிறது.

    இந்த பூச்சிகளின் படையெடுப்பு அதிகரித்து வரும் வெப்பம், ஈரப்பதம் மற்றும் சமீபத்திய மழை ஆகியவற்றால் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த படையெடுப்பு குறித்து பலர் தங்கள் அனுபவங்களை வீடியோவுடன் பதிவிட்டு வருகின்றனர்.

    ''இந்தப் பூச்சிகள் நியூயார்க் நகரத்தை கூட்டம்கூட்டமாக ஆக்கிரமித்து வருகின்றன. சுரங்கப்பாதைகளிலும் உள்ளன'' என்று ஒரு டுவிட்டர் பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.

    சில பயனர்கள், "இவை பச்சை நிறத்தில் இருக்கிறது. ஆனால் கண்ணால் பார்ப்பது கடினமாக உள்ளது" எனவும் தெரிவித்திருக்கின்றனர். இச்செய்தி வெளியானதிலிருந்து இந்த படையெடுப்பு எப்பொழுது விலகும் என மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

    • 2018-ல் ஒரு டிரில்லியன், 2020-ல் 2 டிரில்லியன் டாலர் மதிப்பை பெற்றது
    • மைக்ரோசாப்ட் நிறுவனம் 2.5 டிரில்லியனுடன் 2-வது இடத்தில் உள்ளது

    பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது. இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் ஆப்பிள் உயர்ந்திருக்கிறது.

    நாஸ்டாக் (Nasdaq) எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற அளவில் முடிவடைந்ததன் மூலம், அதன் சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட முடிந்தது.

    சற்று மந்தமடைந்திருந்த தொழில்நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பரந்த எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை நன்றாக பயனடைந்திருக்கிறது. மேலும் ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட போகும் "ஆப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பயன் அடைந்திருப்பதாக பங்குசந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    3 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டை தொட்ட முதல் நிறுவனம் என்பது மட்டுமல்லாமல், 2018-ம் வருடம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்ததும், அதன்பின் 2020-ல் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை தொட்டதும், ஆப்பிள் ஏற்கெனவே எட்டிய மைல் கற்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஆப்பிள் பங்குதாரர்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

    சந்தை மதிப்பில் 6 நிறுவனங்கள் மட்டுமே டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்துள்ளது. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் (2.5 டிரில்லியன்), சவுதி அராம்கோ (2 டிரில்லியன்), அல்பாபெட் (1.5 டிரில்ல்லியன்), அமேசான் (1.3 டிரில்லியன்) மற்றும் என்விடியா (1 டிரில்லியன்) ஆகியவை மற்ற 5 நிறுவனங்கள் ஆகும்.

    • உச்சநீதிமன்றத்தின் தடை ஜோ பைடனுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது
    • தள்ளுபடி ரத்தால் 40 மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

    அமெரிக்காவில் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கு வங்கிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் கடன் பெற்று படித்து வந்தனர்.

    மந்தமான பொருளாதார சூழ்நிலையுடன் வேலையின்மை அதிகரித்து வருவதாலும், விலைவாசி உயர்வினாலும், இந்த கடன் மத்திய தர பொருளாதார வகுப்பினருக்கும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு, மிகப்பெரும் கவலையளிக்கும் சுமையாக சில வருடங்களாகவே நிலவி வந்தது.

    2021 தேர்தல் பிரச்சாரத்தில் இந்த பிரச்னையை முன்னெடுத்திருந்த ஜோ பைடன் தாம் அதிபரானால் மாணவர்கள் கடனை தள்ளுபடி செய்வதற்கு வேண்டிய அனைத்தும் செய்யப்படும் என வாக்களித்திருந்தார். அவர் பிரசாரத்தில் மிகவும் முக்கிய வாக்குறுதியாக இது அனைவரையும் கவர்ந்திருந்தது.

    இதனை நிறைவேற்றும் விதமாக, பைடன் ஆகஸ்ட் 2022ல், கல்வித்துறையிடம் கடன் பெற்றவர்களுக்கு, வருடத்திற்கு தனிநபர் சுய வருமானமாக ரூ. 1,25,000 அமெரிக்க டாலர் அல்லது குடும்ப வருமானமாக 2,50,000 கிடைத்து இருந்தால், அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெல் கிராண்ட் (Pell Grant) எனப்படும் மானியம் பெற்று பயின்றோர்களுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் தள்ளுபடி செய்யப்படும்" என்றும் அறிவித்திருந்தார்.

    கல்விக்கடன் தள்ளுபடியால் சுமார் 40 மில்லியன் மாணவர்கள் பயனடையும் நிலை இருந்தது. ஆனால், இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தபோது இந்த தள்ளுபடி செல்லாது என அறிவித்து விட்டது.

    இதனால் அவர் அளித்த வாக்குறுதியை காக்க தவறிவிட்டாரா? என்ற கேள்விக்கு, மறுப்பு தெரிவித்து ஜோ பைடன் கூறியதாவது-

    குடியரசு கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் போலித்தனமே இதற்கு காரணம். கோவிட் தொற்று நோய் பரவல் காலத்தில் வியாபார நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்களை முழுமையாகவும் பகுதியாகவும், தள்ளுபடி செய்ய முடிந்தவர்களுக்கு உழைத்து வாழும் கோடிக்கணக்கான அமெரிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுவது பிடிக்காமல் அதற்கு எதிராக அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள்" என தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்கொள்ளும் விதமாக பைடன் மாற்று வழிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

    இதன்படி, 1965 உயர்கல்விக்கான சட்டத்தின் வழியாக தீர்வு தேடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் கடனை கட்ட தவறும் பட்சத்தில் அவர்களின் கடன் வாங்கும் தகுதிக்கான தரம் (credit rating) வீழ்ந்துவிடும். இதனை தவிர்க்க, 12-மாதத்தில் கல்விக்கடனை அடைக்கும் விதத்தில் வழிவகை செய்யவும் அவர் ஆராய்வதாக தெரிகிறது.

    இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்போது அதன் தாக்கம் அந்நாட்டு பொருளாதாரத்தில் எவ்வாறு இருக்கும் என நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

    • ஆயுத கிளர்ச்சியை தொடங்கிய வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் சென்று விட்டார்
    • ராணுவ உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே எப்படி தெரியாமல் போனது என புதின் தீவிர விசாரணை

    ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின் தலைவர் எவ்செனி பிரிகோசின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

    தனக்கும், தன் நாட்டிற்கும் எதிரான இக்கலக முயற்சிக்கு காரணம் யார்? என்பதை கண்டறிய புதின், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், இக்கிளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகள் மறைமுக காரணம் என குற்றஞ்சாட்டி வந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் பேர்ன்ஸ், ரஷிய நாட்டின் உளவுத்துறை அமைப்பின் தலைவரான செர்ஜி நரிஷ்கினை அழைத்து அந்நாட்டில் நடந்த அந்த குறுகிய கால கலகத்தில், அமெரிக்காவின் பங்களிப்பு எதுவும் இல்லை என பேசியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    ரஷ்யாவில் உள்ள எஸ்.வி.ஆர்., வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு (SVR Foreign Intelligence Services) தலைவரான நரிஷ்கினுக்கும், சி.ஐ.ஏ.வின் பேர்ன்ஸிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இந்த வாரம் நடந்தது. ரஷியாவின் வாக்னர் கலக முயற்சிக்கு பின்னர், இரு அரசாங்கங்களுக்கிடையே நடைபெறும் உயர்மட்ட தொடர்பு இது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை குழுவின் தலைவரான எவ்செனி பிரிகோசின், கடந்த வார ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவருடைய போராளிகள் மாஸ்கோவை நெருங்கியபோது திடீரென அதை நிறுத்தினார்.

    ரஷியாவிற்கு எதிரான வாக்னர் கூலிப்படையினரின் கலகம், அங்கு நடைபெற்ற உள்நாட்டு போராட்டத்தின் ஒரு பகுதி என்றும், அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் அதில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது.
    • நாசா கடந்த ஏப்ரல் மாதம் செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது.

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா ஆராய்ந்து வருகிறது. இதற்காக விண்கலன்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    விண்கலன்களும் செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை நாசா அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாசா கடந்த ஏப்ரல் மாதம் 26- ந் தேதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்காக விண்கலத்துடன் இணைத்து இன்ஜினியுடி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இறங்கிய இரண்டு நிமிடத்தில் நாசாவுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் 63 நாட்களுக்குப் பிறகு அந்த ஹெலிகாப்டரில் இருந்து மீண்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் இறங்கிய பகுதியில் ஒரு பெரிய மலை இருந்ததே தகவல் தொடர்பு தடையானதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அந்த ஹெலிகாப்டரை அனுப்பிய குழுவின் தலைவர் ஜோஸ்வா ஆண்டர்சன் கூறும்போது இன்ஜினியுடி ஹெலிகாப்டர்தான் நீண்ட நாள் காலமாக தகவல் தொடர்பில் இல்லாமல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது தகவல் தொடர்பை இழந்தாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தகவமைத்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டது. தற்போது மீண்டும் தகவல் தொடர்பு கிடைத்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றார்.

    • விண்ணப்பித்த சில பெண்களிடம், அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்களை கேட்டதாக தகவல்.
    • இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது என கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

    அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனத்தின் நிறுவனர், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ். தற்போது அவர் அதிலிருந்து விலகி உலகளவில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது தனிப்பட்ட குடும்ப அலுவலகம், "கேட்ஸ் வென்ச்சர்ஸ்."

    இந்நிலையில், அந்த நிறுவனத்தில் வேலைக்கு வந்த பெண் விண்ணப்பதாரர்களிடம், நேர்காணலின் போது வெளிப்படையாக, அந்தரங்கமான பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

    இதன்படி, வேலைக்கு விண்ணப்பித்த சில பெண்களிடம், அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களுக்கு ஆபாச படங்களில் உள்ள ஈடுபாடு, பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் குறித்த விவரங்கள் போன்ற மிகவும் பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறினர்.

    மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், சில பெண் விண்ணப்பதாரர்களிடம் கவர்ச்சியான நடனத்தில் ஈடுபடுவது குறித்தும், அவர்களின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    கூடுதலாக, சில பெண் விண்ணப்பதாரர்களிடம், பணத்திற்காக ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.

    எனினும், இந்த நேர்காணல் தொடர்பான நடைமுறையானது,  "கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ்" எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இத்தகைய நடைமுறைகளில், விண்ணப்பதாரர்களிடம் அவர்களின் கடந்த கால போதைப்பொருள் பயன்பாடு போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    ஆனால், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக, விண்ணப்பதாரர்களிடம் தாங்கள் செய்யும் இந்த மதிப்பாய்வு நடைமுறையை (screening) நியாயப்படுத்தி கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:

    விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்படாத குணம் ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. நேர்காணலின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. அதே போன்று அவையனைத்துமே வேலைவாய்ப்பு முடிவுகளை தீர்மானிக்க பயன்படுத்தப்படுவதுமில்லை.

    இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    இதற்கிடையில், இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது எனவும், தங்களின் பணியமர்த்தல் செயல்முறையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் மதிக்கின்றோம் என்றும் கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.

    இந்த விவகாரம் பில் கேட்ஸ் தொடர்பான சர்ச்சைகளில் புதிதாக சேர்கிறது. இதற்கு முன், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவர் தொடர்பிலிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது.

    அடுத்து 2019ல் ஒரு ஊழியருடனான பாலியல் உறவு குற்றச்சாட்டின் காரணமாக் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்ததாகக் கூறினாலும், கேள்விகள் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது- ஒபாமா
    • இதன்மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும்- டிரம்ப்

    அமெரிக்காவில் ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பு, இரண்டு முன்னாள் அமெரிக்க அதிபர்களை எதிரெதிர் நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது.

    கருப்பின மற்றும் லத்தீன் இனத்தின மாணவ- மாணவிகளின் கல்லூரி சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கை கொள்கைகள் (affirmative action efforts) என்ற பெயரில் மாணவர் சேர்க்கையின்போது அவர்கள் இனத்தை அறிந்து கொள்ள வழி செய்யும் வகையில் விண்ணப்பபடிவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்நாட்டு உச்சநீதிமன்றம் இனி மாணவ- மாணவியருக்கான விண்ணப்ப படிவத்தில் அனுமதி முறைகளுக்காக அவர்களின் இனம் என்ன என்பதை தெரிந்து கொள்ள கேள்விகள் கேட்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    இந்த தீர்ப்புக்கு முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமாவும், டொனால்ட் டிரம்பும் எதிரெதிர் நிலைகளை எடுத்துள்ளனர்.

    இந்த தீர்ப்புக்கு மாறான கருத்துடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பதாவது:-

    கடைபிடிக்கப்பட்டு வந்த வழிமுறை நாங்களும் இந்த மண்ணை சார்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எனது மனைவி மிச்செல் உட்பட பல தலைமுறை மாணவர்களை அனுமதித்தது. அனைத்து மாணவர்களுக்கும் இனம் பாராமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற இதுபோன்ற கொள்கைகள் அவசியம்.

    அமெரிக்காவின் பெரும்பாலான முக்கிய நிறுவனங்களில் இருந்து திட்டமிட்டு விலக்கப்பட்டவர்களுக்கு, நாங்களும் தகுதியுடையவர்கள் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை அளித்து வந்தது. இந்த தீர்ப்பை அடுத்து எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தருணம் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால், இந்த தீர்ப்பை வரவேற்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத்" (Truth) சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    இதன் மூலம் இனி அமெரிக்கர்கள் பிற நாட்டினருடன் போட்டியிட முடியும். எல்லோரும் எதிர்பார்த்திருந்த ஒரு நல்ல தீர்ப்பு இது. நம்முடைய மிகப்பெரிய மனங்கள் போற்றப்பட வேண்டும். அதைத்தான் இந்த அற்புதமான நாள் கொண்டு வந்திருக்கிறது. அனைத்தும் இனி தகுதியின் அடிப்படைலேயே நிர்ணயம் செய்யப்படும் என்கின்ற நிலைக்கு நாம் திரும்புகிறோம். இது இப்படித்தான் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

    இந்த தீர்ப்பு குறித்து கடுமையான எதிர்ப்பினை பதிவிட்டிருக்கும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "பல தசாப்தகால முன்னுதாரணங்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    ×