என் மலர்
பாலஸ்தீனம்
- இஸ்ரேல் வான்தாக்குதலில் காசாவில் உள்ள கட்டடங்கள் இடிந்து தரைமட்டம்
- கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை மீட்க முடியாத பரிதாபம்
அக்டோபர் 7-ந்தேதி தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை, தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசா சீர்குலைந்துள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலை தாக்குப்பிடிக்காமல் கட்டங்கள் இடிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதுவரை காசாவில் 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் 2.3 மில்லியன் பாலஸ்தீனர்கள் உள்ளனர். இவர்களை உடனடியாக தென்பகுதிக்கு செல்ல இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், மக்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கும் மேற்பட்டோர், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஐ.நா. நடத்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். ஐ.நா. பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தற்காலிக முகாமாக மாற்றியுள்ளது.
இந்த நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் பலியான ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று உடல்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபையில் காசா மீதான போரை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை விமர்சித்த இஸ்ரேல், போரின் 2-ம் கட்ட நிலை தொடங்கியுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
- ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.
இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
- இப்போரில் இதுவரை 110 பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்
- ஹமாஸ் அமைப்பினரை தேடும் போது இஸ்ரேல் ராணவத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடங்கிய போர் தீவிரமடைந்துள்ளது. இதுவரை பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் 110 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 29லிருந்து 31 வரை வயதுடைய 3 பேர் இன்று அதிகாலை நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதியின் வடமேற்கிலுள்ள பெய்ட் ரிமா, நப்லு பகுதியில் உள்ள அஸ்கர் அகதிகள் முகாம் மற்றும் வடக்கே உள்ள டுபாஸ் நகர் ஆகிய 3 இடங்களில் இஸ்ரேல் ராணுவ படையினரால் கொல்லப்பட்டனர்.
மூன்று இடங்களிலும் ஹமாஸ் அமைப்பினரை தேடும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டு வந்தது. இதில் மறைவிடங்களில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இந்த மூவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் சுகாதார துறை அறிவித்திருக்கிறது.
கடந்த 1967ல் இஸ்ரேல்-அரேபிய போர் நடைபெற்ற போது மேற்கு கரை பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்திலிருந்து பாலஸ்தீன போராளிகளை தேடி இஸ்ரேல் வேட்டையாடி வருவது தற்போது வரை தொடர்கதையாகி வருகிறது.
- காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
- உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 22-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.
இந்நிலையில், தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் இஸ்ரேல் சிறையில் வாடும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு நிபந்தனை விதித்துள்ளது.
- காசா மீதான தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது இஸ்ரேல்
- தரைவழி தாக்குதலில் முழுப்படைகளுடன் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்கொள்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அமைப்புகளுடன் சேர்ந்து முழுப்படையுடன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஊடுருவலை முறியடிப்போம்.
நேதன்யாகு மற்றும் தோற்கடிக்கப்பட்ட அவருடைய ராணுவமும் எந்தவொரு ராணுவ வெற்றியையும் அடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று இஸ்ரேல் துருப்புகளுடன் காசாவின் வடகிழக்கு நகரான பெய்ட் ஹனௌன் மற்றும் அல்-புரெய்ஜின் மத்திய பகுதியில் சண்டையிட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் காசா பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
- உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.
வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- இஸ்ரேல் ஹமாஸ் போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வருகிறது
- காசா டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் மட்டுமே இருக்கும்
"ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்" (Operation Al-Aqsa Flood) என்ற பெயரில் ஒரே நேரத்தில் 5000க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவியும், தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் மூலமாகவும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக சிறை பிடித்தது.
ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் 4-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பிற்கு ஆயுதங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட பகுதி காசா (Gaza). ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா, இந்திய தலைநகர் டெல்லியின் பரப்பளவில் 25 சதவீதம் இருக்கும். இங்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
காசாவில் இரண்டு இடங்களில் மட்டுமே எல்லையை கடக்கும் இடங்கள் உள்ளன. இரண்டு திசைகளில் இஸ்ரேலும், ஒரு திசையில் எகிப்தும், மற்றொரு திசையில் மத்திய தரைகடலும் காசாவை சூழ்ந்துள்ளது. அங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் மக்கள் செல்வதை இஸ்ரேல் தீவிரமாக கண்காணிக்கிறது.
ஆனால் நிலம், நீர் மற்றும் வான்வழியை மட்டுமே இஸ்ரேல் கண்காணிப்பதால், அதை தாண்டி பூமிக்கடியில் சுரங்கம் அமைத்து அவ்வழியில் ராணுவ ஆயுதங்களும், தளவாடங்களும் காசாவிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
ஆயுத கடத்தலில் ஈடுபடுபவர்கள் மத்திய தரை கடல் பகுதியின் கரையோரங்களில் சுரங்கங்கள் அமைத்து இஸ்ரேல் கண்காணிப்பை தாண்டி காசாவிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளனர். ஈரான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபாஹர்-3 (Fajr-3) ஃபாஹர்-5 (Fajr-5) ராக்கெட்டுகள் மற்றும் எம்-302 ராக்கெட்டுகள், ஈரானிலிருந்தும் சிரியாவிலிருந்தும் இந்த சுரங்க பாதைகள் வழியே கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறும் போது அமெரிக்கா தான் பயன்படுத்திய ஆயுதங்களை அங்கேயே விட்டுச்சென்றது. அவை அந்நாட்டின் தலிபான் அமைப்பினரின் உதவியுடன் ஹமாஸிற்கு இதே வழியாக வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
- அஹ்மத் யாசின் மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி என்பவர்களால் துவங்கப்பட்டது
- இஸ்ரேலை ஒரு நாடாக ஹமாஸ் அங்கீகரிக்க மறுத்தது
வான்வழி தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள, இஸ்ரேல் "இரும்பு குவிமாடம்" (Iron Dome) எனும் அதி நவீன கட்டமைப்பை உருவாக்கியிருந்தது.
ஆனால் நேற்று காலை, பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இதனை ஊடுருவி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இது மட்டுமின்றி வான், தரை மற்றும் கடல் வழியே தனது அமைப்பாளர்களை கொண்டு இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையை தாண்டி இஸ்ரேலுக்குள் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது ஹமாஸ்.
உலகெங்கும் இந்த அமைப்பின் பின்னணியை குறித்து பெரிதும் விவாதிக்கின்றனர்.
1987ல் எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் (Egyptian Muslim Brotherhood) எனும் அமைப்பை சேர்ந்த அஹ்மத் யாசின் (Ahmed Yassin) மற்றும் அப்தெல் அஜிஸ் அல்-ரன்டிஸ்ஸி (Abdel Aziz Al-Rantissi) ஆகியவர்களால் துவங்கப்பட்டது ஹமாஸ் அமைப்பு. ஹமாஸ் என்றால் "தணியாத அதீத ஆர்வம்" (zeal) என பொருள்படும்.
இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசா முனை (Gaza Strip) பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரே நாட்டை உருவாக்குவதையே லட்சியமாக கொண்டது ஹமாஸ்.
1990களில் பாலஸ்தீனின் முன்னாள் அதிபர் யாசர் அராஃப்த் துவக்கிய ஃபடாஹ் (Fatah) எனும் இஸ்ரேலுக்கு எதிரான அமைப்பு, 2004ல் அராஃபத்தின் மறைவிற்கு பிறகு பலமிழக்க தொடங்கியது. அதற்கு பிறகு பாலஸ்தீனத்தில் ஹமாஸிற்கு மக்கள் ஆதரவும், குறிப்பாக இளைஞர்கள் ஆதரவும் கூடியது.
இந்த அமைப்பினருக்கு தவா (Dawah) எனும் கலாசார பிரிவும், இஜ்ஜத் தின் அல்-கஸ்ஸாம் (Izzat Din al-Qassam) எனும் ராணுவ பிரிவும் உள்ளது. ஹமாஸிற்கு ஈரான், சிரியா மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஆதரவும் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலும் பாலஸ்தீனத்திலும் ஹமாஸ் அமைப்பிற்கு பெரும் ஆதரவு உள்ளது. ஈரான், சிரியா, ஏமன், கத்தார் மற்றும் ஜோர்டான் உட்பட பல நாடுகள் ஆதரவளிக்கிறது.
ஆனால், எகிப்து, மொராக்கோ மற்றும் சவுதி அரேபியா ஹமாஸை ஆதரவிக்கவில்லை. மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, எகிப்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்து, ஆயுத போராட்டத்தை ஊக்குவிக்கும் ஹமாஸிற்கும், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலமாக சிக்கலை தீர்த்து கொள்ள விரும்பும் ஃபடாஹ் அமைப்பிற்குமிடையே சித்தாந்த மோதல்கள் நடைபெறுகிறது.
2021-22க்கான பாலஸ்தீனியத்தின் உள்நாட்டு தேர்தலில் ஹமாஸ் பங்கேற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீதான நேற்றைய தாக்குதலுக்கு பதில் தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ள இஸ்ரேல், ஹமாஸை முற்றிலுமாக ஒழித்து விட உறுதியுடன் போரிட்டு வருகிறது. நீண்டகாலமாக செயல்பட்டு வந்த இந்த பயங்கரவாத அமைப்பின் முடிவு, இந்த போரின் இறுதியில் தெரிந்து விடும்.
- ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்
- போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் சண்டை நடைபெற்றுள்ளது
ஆக்கிரமிப்பு வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பாலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜெனின் அகதிகள் முகாமில் தேடுதல் வேட்டையில் ராணுவம் ஈடுபட்டது. அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படையின் டிரோன்கள் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலியர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டதாக இரண்டு பாலஸ்தீனர்களை கைது செய்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை'' என்றார்.
பாலஸ்தீனத்தின் ரமல்லா பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம், மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயம்அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகள் உள்ளிட்ட இரண்டு குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கடுமையான சண்டையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன. ஆனால், சண்டை குறித்து முழு விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டது.
முன்னதாக, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பாதசாரிகள் பயன்படுத்தும் பாதையை இஸ்ரேல் ராணுவம் மூடியதால் 25 வயது பாலஸ்தீனர், காசா முனையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது இஸ்ரேல் குண்டுக்கு பலியானார்.
மேற்கு கரையில் அடிக்கடி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், ஒன்றரை வருடங்களாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் நடந்த சமீபத்திய வன்முறை இதுவாகும்.
- நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் அறிவிப்பு
- வெடிகுண்டுகள் தவறாக கையாளப்பட்டதால் விபத்து
பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராட்டக்காரர்களும் காசா முனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த இடம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளிக்கும்.
கடந்த 2005-ம் ஆண்டு காசா முனையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறியது. அந்த பகுதியில் வேலியிடப்பட்டு எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. 2007-ல் அந்த பகுதியை ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் வெளியேறிய நாளை நினைவு கூறும் வகையில் போராட்டக்காரர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டனர். அவர்கள் நாட்டின் கொடியை அசைத்து, டயர்களை எரித்து போராட்டடத்தில் ஈடுபட்டனர். வேலியை தகர்க்கும் வகையில் குண்டுகளை வீச முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக குண்டுகள் வீசப்படுவதற்கு முன்னதாகவே வெடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு முன், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் கையெறிகுண்டுகள், மற்ற வெடிபொருட்களை எல்லையை நோக்கி வீசினார்கள். ராணுவம் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தினர். இதில் 25 பேர் காயம் அடைந்தனர் என ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தகவல்.
பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர அகதிகள் முகாமில் இருந்து வெளியேறியதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுமார் 18,000 பாலஸ்தீனியர்கள் வசிக்கும் அந்த முகாமில் இருந்து இதுவரை 3000 பேர் வெளியேறியிருக்கின்றனர் என்றும் அவர்களை ஜெனின் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் பிற தங்குமிடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியிருக்கிறார், ஜெனின் துணை ஆளுநர் கமல் அபு அல்-ரூப்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களிலேயே இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமான இராணுவ நடவடிக்கை என்று கூறும் விதமாக ஒரு தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியிருக்கிறது.
நேற்று தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கணக்கான துருப்புக்களையும் பாலஸ்தீன போராளிகளை தாக்க அனுப்பியிருக்கிறது.
இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்றும், காயமடைந்தவர்களில் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் செய்தித்தொடர்பாளர் ஜூலியட் டூமா, முகாமில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனமான யு.என்.ஆர்.டபிள்யு.ஏ. (UNRWA), பல முகாம்களில் வசிப்பவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றுக்கான பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
வடக்கு மேற்குக் கரை நகரமான ஜெனின் நகரின் புறநகர் பகுதிகளில் உள்ள முகாம், 1950களில் அமைக்கப்பட்டது. ஒரே இனம் சார்ந்த பெருங்குழுவினர் மோசமான சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்தும் "கெட்டோ" (ghetto) போன்ற இந்த பகுதி, நீண்ட காலமாக பாலஸ்தீனியர்களுக்கு ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான பகுதியாக அந்நாடு கருதுகிறது. ஆனால், இஸ்ரேல் அரசாங்கமோ இப்பகுதியை பயங்கரவாதம் தோன்றி வளரும் இடமாக பார்க்கிறது.
ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் ஃபத்தாஹ் உள்ளிட்ட போராளிக் குழுக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய போராளிகள் அந்த இடத்தை தளமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.
- லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.
காசா:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது.
சில பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த பகுதியில் இஸ்ரேலிய ஆயுத படை மற்றும் பாலஸ்தீன படைகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் முஸ்லீம்கள் தொழுகையின் போது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த லெபனான் தலைநகரில் இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் குண்டுகளை வீசினர்.
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பாலஸ்தீன ஆயுதப்படைகள் மீது இன்று காலை வான்வெளி தாக்குதலை நடத்தியது. சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்த சண்டையில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் நமது எதிரிகள் நம்மை குறைத்து மதிப்பிட வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.






