என் மலர்
பாகிஸ்தான்
- ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
- இச்சம்பவம் பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் மாவட்டம் மோட்ச்கா பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ராஜன்பூர் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு படகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் பயணித்தபோது அந்தப் படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த படகு விபத்தில் 19 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
விசாரணையில், அதிக அளவிலான மக்களை படகில் ஏற்றியது, நீரின் ஓட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது.
திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் சமீபத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது.
- இதில் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து, வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 16 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.
சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்க்கு ஆளும் கட்சி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.
- இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது.
- பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார்.
சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது அரசு சிக்கலில் விழுமாறு செய்தது என்றும் குற்றம்சாட்டினார்.
தனது புதிய அரசு பதவி ஏற்று, கனத்த இதயத்துடன்தான் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஏற்ப தாங்களும் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்டார்.
ஆனாலும் தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாகவும், கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். இது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.
- விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.
- கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு விமானத்தை தரை இறக்கினர்.
கராச்சி:
டெல்லியில் இருந்து துபாய்க்கு நேற்று ஸ்பெஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானமான அதில் 138 பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இடது புற டாங்கில் எரி பொருள் குறைந்திருப்பதாக காட்டியது.
இதையடுத்து விமானத்தை பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அங்கு விமானத்தை தரை இறக்கினர்.
உடனே விமானத்தை என்ஜினீயர்கள் ஆய்வு செய்ததில் டாங்கில் இருந்து எரிபொருள் கசிவு இல்லை என்பது தெரிந்தது. இந்திய விமானத்தில் இருந்து பயணிகளை மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாற்று விமானம் மும்பையில் இருந்து கரர்ச்சி விமான நிலையத்தை சென்றடைந்தது.
கராச்சி விமான நிலையத்தில் காத்திருந்த 138 பயணிகளும் மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டு துபாய் புறப்பட்டு சென்றனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் இந்திய பயணிகள் 11 மணி நேரம் தவித்தப்படி இருந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர்.
கடந்த 17 நாட்களில் ஸ்பெஸ்ஜெட் விமானங்களில் 7-வது முறையாக கோளாறு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரிக்கிறது.
- இம்ரான் கான் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார்.
- பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டு சதி என்ற பெயரில் பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றினார் என்று ஆளுங்கட்சியான பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு ஜூலை 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும், அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, லாகூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மரியம் நவாஸ், இம்ரான் கான் மீது குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது, இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை புறக்கணித்தார்.
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது கும்பல் ஆட்சி, பஞ்சாப் மாகாணத்தின் வளங்களை கொள்ளையடித்தது. இம்ரான் கான் கட்சியான பிடிஐ ஆட்சிக் காலத்தில், பஞ்சாப் அனாதை போல் இருந்தது. ஆனால் இப்போது சிங்கம் பிரதமராக மீண்டும் வந்துவிட்டது, ஆகவே பஞ்சாப் முன்பு போல் முன்னேறும். பாகிஸ்தானின் வரலாற்றில் மிகப்பெரிய ஊழல்கள் பிடிஐ ஆட்சியின் போது நடந்தன. துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தானிய அரசியலில் மிகப்பெரிய பொய்யர், குழப்பவாதி மற்றும் ஏமாற்றுக்காரர் ஒருவர் பிரதமரானார்.
நாட்டு மக்களை அமெரிக்கா அடிமைகளாக வைத்திருக்கிறது என்று அவர் மக்களிடம் அடிக்கடி பொய் கூறுவார். இப்படி அவர் தனது சதி வார்த்தைகளில் மக்களை பிஸியாக வைத்திருந்தார். வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.
- இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
- தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.
பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசு கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், ராணுவம் உடந்தையாக இருந்தது என்றும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, "எனது வேட்பாளர்களுக்கு தெரியாத எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மலைபாதையில் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து காவல் உதவி ஆணையர் சையத் மெஹ்தாப் ஷா கூறுகையில், " இஸ்லாமாபாத்தில் இருந்து குவெட்டாவுக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது, மலையின் கூர்மையான வளைவில் நெருங்கியபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், இதுவரை 19 பேரில் உடல்களை மீட்டுள்ளோம். காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் " என்றார்.
மேலும், பிரதமர் ஷெஹபாஸ் ஷெரீப் மற்றும் பலுசிஸ்தான் முதல்வர் ஆகியோர் இந்த துயரமான விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
- பாகிஸ்தான் சிறையில் வாடும் 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
- இந்திய சிறைகளில் வாடும் 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை இந்திய அரசு பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பிலும் தூதரக ரீதியில் கைதிகளை பரஸ்பரம் அணுகுவதற்கு வழிசெய்யும் ஒப்பந்தம் 2008-ம் ஆண்டு மே மாதம் 21–ம் தேதி கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பரம் தத்தமது சிறைகளில் வாடும் எதிர்நாட்டு கைதிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1–ம் தேதியும், ஜூலை 1–ம் தேதியும் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சிறையில் வாடுகிற 633 மீனவர்கள், 49 சிவிலியன்கள் என 682 இந்தியர்கள் பற்றிய பட்டியலை அந்த நாட்டின் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தது.
இதேபோல், இந்திய சிறைகளில் வாடும் 116 மீனவர்கள், 345 சிவிலியன்கள் என 461 பாகிஸ்தானியர் பற்றிய பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய அரசும் வழங்கியது. மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள 539 பேரின் இந்திய குடியுரிமை உறுதிப்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்லை வேலிக்கு அருகில் நின்று அழுதுகொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.
- சிறிது நேரத்தில் குழந்தை அவரது தந்தை முன்னிலையில் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பஞ்சாபில் உள்ள சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டிய மூன்று வயதான பாகிஸ்தான் சிறுவனை எல்லை பாதுகாப்பு படையினர் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் நேற்று இரவு 7 மணியிளவில் எல்லை வேலிக்கு அருகில் நின்றபடி குழந்தை அழுதுகொண்டிருந்ததை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கவனித்தனர்.
குழந்தை அழுதுக் கோண்டே அப்பா, அப்பா என்று அழைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு படை களத் தளபதி பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் உடனடியாக பாகிஸ்தானுடன் கொடி சந்திப்பை நடத்த முன்றார். இதனால் குழந்தையைத் திருப்பி ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் குழந்தை அவரது தந்தை முன்னிலையில் ரேஞ்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல மணி நேரம் மின் வெட்டு இருப்பதால் பாகிஸ்தானில் இணையதள சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக தொலைத்தொடர்பு துறை ஆபரேட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
- இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது
கராச்சி:
இலங்கையை போல பாகிஸ்தானிலும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் எரிபொருள் இறக்குமதியின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது.
இதனால் பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஜூலை மாதம் நாடு கடும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது கடுமையான மின்வெட்டினால் பாகிஸ்தான் நாடு தவித்து வருகிறது.
அதன் காரணமாக அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே பணியை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தையும் முன் கூட்டியே மூடுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பல மணி நேரம் மின் வெட்டு இருப்பதால் பாகிஸ்தானில் இணையதள சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக தொலைத்தொடர்பு துறை ஆபரேட்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதனை தீர்க்க எரிபொருள் இறக்குமதிக்காக கத்தார் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.
- பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி இழந்தார்.
- பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார்.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமராக இருந்த இம்ரான்கான் கடந்த ஏப்ரல் மாதம் பதவி இழந்தார். இப்படி பதவி இழந்த முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான்.
அவர் பதவி இழந்ததைத்தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துமாறு கோரி வருகிறார். இது தொடர்பாக பேரணி, பொதுக்கூட்டம் என நடத்தி வருகிறார்.
அந்த வகையில், நாளை (2-ந்தேதி) அவர் இஸ்லாமாபாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், தங்களது பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு, இஸ்லாமாபாத் போலீஸ் துணை கமிஷனருக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவர் அனுமதி தராமல் தாமதம் செய்வததாகக் கூறி, அனுமதி தருமாறு உத்தரவிடக் கோரி உள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போராட்டக்காரர்கள் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இஸ்லாமாபாத் :
நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடுமையான மின்பாற்றக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஒரு நாளில் 12 முதல் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அந்த நகர மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்த கராச்சி நகர மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் போராட்டத்தில் குதித்தனர். நகரில் உள்ள முக்கிய சாலையில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலையில் டயர்களை தீவைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் மின்வெட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் மீண்டும் நகரின் முக்கிய சாலைக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






