என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • நிதி மந்திரியாக முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹாம்சாத் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பதவி காலம் முடிவடையும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை அதிபர் ஆரீப்ஆல்வி ஏற்றுக் கொண்டார்.

    இதையடுத்து பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறும் வரை பாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த எம்,பி.யான அன்வருல் ஹக்காகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இடைக்கால மந்திரி சபை பதவி ஏற்றது. நிதி மந்திரியாக முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஹாம்சாத் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த இடைக்கால மந்திரி சபையில் மனித உரிமை மற்றும் பெண்கள் நல பிரிவின் உதவியாளராக முஷால்ஹூசைன் மவுலிக் என்ற பெண் இடம் பெற்று உள்ளார். இந்த பதவி மந்திரிகளுக்கு இணையான பதவி என்பது குறிப்பிடதக்கது.

    முஷால் ஹூசைன் மவுலிக் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்க தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி தற்போது பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளை குறி வைத்து தாக்கப்பட்டதில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
    • வன்முறை அல்லது மத ரீதியான அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் ஜரன்வாலா பகுதியில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் சிலர் மத நிந்தனை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேவாலயங்கள் முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினர். தேவாலய கட்டிடங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பின்னர் தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள பொருட்களை தேசப்படுத்தி தீ வைத்தனர்.

    மேலும் மத நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து பஞ்சாப் மாகாண காவல்துறை தலைவர் உஸ்மான் அன்வர் கூறும்போது, ஜரன்வாலா பகுதியில் தேவாலயங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அப்பகுதி போலீஸ் துறை கமினஷருக்கு எதிராக மக்கள் திரும்பியதால் அவரையும், கிறிஸ்தவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளோம் என்றார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-

    பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளை குறி வைத்து தாக்கப்பட்டதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வன்முறை அல்லது மத ரீதியான அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் முழு விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    • முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுகிறது. அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டது.
    • தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.

    தேவாலயங்களை மர்ம கும்பல் தாக்கி சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாக ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சீன பொறியாளர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

    புதுடெல்லி:

    சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (சிபிஇசி) சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு பாகிஸ்தானில் பாகிஸ்தானில் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற  அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன அரசாங்கம் தங்கள் பிராந்தியத்தில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் கூறி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் குவாடர் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் இன்று நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன பொறியாளர்கள் தரப்பிலோ, பாகிஸ்தான் மக்கள் தரப்பிலோ யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பிஎல்ஏ-வின் மஜீத் பிரிகேட் பிரிவு இன்று குவாடரில் சீன பொறியாளர்களின் வாகனங்களை குறிவைத்து தாக்கியதாகவும், தாக்குதல் தொடர்வதாகவும் பிஎல்ஏ கூறி உள்ளது.

    • பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    அதைத்தொடர்ந்து இம்ரான்கான் உடனடியாக கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் பாராளுமன்றம் இரவோடு இரவாகக் கலைக்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பிரதமர் பதவியில் இருந்து விலகும் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரைஸ் அகமது இணைந்து தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககரை நியமித்துள்ளனர். அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை அன்வர் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக பிரதமர் நியமனத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடிதம் எழுதினார்.
    • அவரது பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
    • தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற 12-ந்தேதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று அதிபருக்கு கடிதம் எழுத உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். பின்னர் இடைக் கால அரசாங்கம் பொறுப் பேற்கும் என்றார்.

    எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் கூறும்போது, இடைக்கால பிரதமர் யார் என்பது குறித்து ஆலோசிக்க இன்னும் பிரதமரை சந்திக்கவில்லை அல்லது என்னிடம் ஆலோசனையும் கேட்கவில்லை. இன்று கூட்டம் நடைபெறும் நம்புகிறேன். அதில் இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

    பாராளுமன்றம் முன் கூட்டியே கலைக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    • நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார்.
    • இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.

    இஸ்லாமாபாத்:

    இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் நடந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது.
    • ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.

    ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தொடர்பாக 6 ரெயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    • இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிடிஐ கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • கட்சி அலுவலக ஊழியர்களின் வீடுகளை காவல்துறை சோதனையிட்டதாக பிடிஐ குற்றம் சாட்டியுள்ளது.

    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இம்ரான் கானின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், காவல்துறை பிடிஐ கட்சி தொண்டர்களை கைது செய்தது மட்டுமல்லாமல், கட்சி அலுவலக ஊழியர்களின் வீடுகளையும் சோதனையிட்டதாக பிடிஐ குற்றம் சாட்டியுள்ளது. 10க்கும் மேற்பட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இம்ரான் கான் அட்டோக் சிறையில் மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    சிறையில் அவரை சந்தித்த அவரது வழக்கறிஞர் கூறுகையில், 'ஈக்களை வரவைப்பதற்காக சிறை அதிகாரிகள் இனிப்புகளை அறைக்குள் வீசியதால் தூங்க முடியாமல் தவிப்பதாக இம்ரான் கான் கூறுகிறார். இதுதவிர, அவர் வீட்டில் இருந்து உணவு மற்றும் தொழுகை செய்வதற்கான தரைவிரிப்பு கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. திறந்த கழிப்பறை உள்ளது' என்றார்.

    • கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
    • போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது.

    இதில் வாகனம் வெடித்து சிதறி சுக்குநூறானது. இந்த தாக்குதலில் 7 பேர் பலியானார்கள். இதில் யூனியன் கவுன்சில் தலைவர் இஷ்தியாக் யாகூப்பும் அடங்குவார்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பஞ்ச்கூர் துணை கமிஷனர் அம்ஜத் சோம்ரோவ் கூறும் போது, பல்கத்தார் யூனியன் தலைவர் இஷ்தியாக் யாகூப் மற்றும் சிலர் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய போது அவர்கள் சென்ற வாகனத்தை குறி வைத்து வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வைத்துள்ளனர்.

    பால்கதர் பகுதியில் வாகனம் சென்ற போது வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளனர் என்றார். தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பலூச் விடுமுறை முன்னணி பொறுப்பேற்றது.

    தற்போது நடந்துள்ள தாக்குதலிலும் அந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ×