என் மலர்tooltip icon

    சீனா

    • ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் மாநில அளவிலான அதிகாரிகள், துணை மாநில அதிகாரிகள், ராணுவகமிஷன் உறுப்பினர்கள், டஜன்கணக்கான மந்திரிகள் அலுவலக அதிகாரிகள் என பலர் சிக்கி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. இதில் முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி.

    இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும்.

    இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சாட் ஜி.பி.டி.யை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ரெயில் விபத்தில் 9 பேர் பலியான தாக இணையத்தில் போலி செய்தி ஒன்று பரவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலி செய்தியை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஹாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட சந்தேக நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் சீனாவில் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

    அதன்பிறகு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹாங், போலி செய்திகளை உருவாக்கி அவற்றை தனது கணக்குகளில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.
    • வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன.

    பீஜிங்:

    தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது.

    இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புனே, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்து ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை நடத்தின. இதில் அந்நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன.

    இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.

    வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன. ஆனால் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சிகளை தடுக்கவில்லை. சீன விமானங்களும் அப்பகுதியில் பறந்து உள்ளன.

    இதன்மூலம் ஆசியான்-இந்தியா போர் பயிற்சியை சீன கண்காணிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, ஆசியான்-இந்தியா பயிற்சிகளை பாதிக்கும் அளவிற்கு சீன கப்பல்கள் எங்கும் வர வில்லை. எந்த எச்சரிக்கையும் எழுப்புவதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும் சீன கப்பல்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் சாங்கி கடற்படை தளத்தில் நடந்த இப்பயிற்சியில் இந்தியாவின் ஐ.என்.எஸ். டெல்லி மற்றும் ஐ.என்.எஸ் சத்புரா கப்பல்கள் பங்கேற்றன.

    • தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
    • சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
    • நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி அலறியடித்துக் கொண்டு வீதிகளில்தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
    • சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

    செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.

    இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை. உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

    செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் காலநிலை மாற்றங்களால் அது உறைந்து, அவற்றின் பெரும்பாலான பகுதி கிரகத்தின் வெளிப்புற அடுக்கில் சிக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    செவ்வாய் கிரகத்தில் குறைந்த அட்சரேகைகளில் திரவ நிலையில் நீர் இருப்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

    சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது

    • நேருக்கு நேர் டிராக்டர் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கிழக்கு சீனாவின் ஷான்டாக் மாகாணத்தில் உள்ள ஷெங்சுயு என்ற இடம் அருகே டிராக்டர் ஒன்று சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரெனடிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி டிராக்டர் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் டிராக்டர்களில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி.
    • சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி.

    பீஜிங் :

    உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது.

    இது குறித்து, பீஜிங்கில் நேற்று நிருபர்களிடம் பேசிய சீன வெளியறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    மக்கள் தொகை பங்களிப்பு அளவைச் சார்ந்தது அல்ல அது தரத்தைச் சார்ந்தது. மக்கள் தொகை முக்கியம், அதே போன்றுதான் திறமையும். சீனாவின் மக்கள் தொகை 140 கோடியைத்தாண்டும். தரமான பணியாளர் வர்க்கத்தினர் 90 கோடி பேர் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • தொழிற்சாலையில் பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது.

    பீஜிங்:

    சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல், ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மரக் கதவுகள் தயாரிக்கப்படும் பகுதியில், பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

    • படுகாயமடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன.

    அப்போது அங்குள்ள வெயிலாங் கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயந்துபோய் அவசர அவசரமாக வெளியே ஓடினர்.

    மேலும் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.
    • பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது.

    கொழும்பு:

    டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தன் நாட்டு உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீன உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக குரங்குகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக ஒரு லட்சம் குரங்குகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    எனினும் இது தொடர்பான நிதி சார்ந்த அம்சங்கள் ஏதும் தெரியவில்லை.

    சீனாவுக்கு குரங்குகளை அனுப்பி வைப்பது தொடர்பாக கடந்த 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் நடைபெற்றது.

    இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் குரங்குகள் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து ஒரு குழுவை அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. அவற்றில் அந்நாட்டின் 3 குரங்கு இனங்கள், மயில்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்மூலம் அவற்றை விவசாயிகள் கொல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

    இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடன் கொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மனதில் கொண்டு குரங்கள் தொடர்பான அந்நாட்டின் கோரிக்கையை இலங்கை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    • மீஜியாங் பகுதியில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெஜியாங் பகுதியை சேர்ந்தவன் 11 வயது சிறுவன்.
    • சாலையில் உள்ள வழிகாட்டி பலகை உதவியுடன் பயணம் சிறுவன் செய்தான்.

    பீஜிங்:

    சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள மீஜியாங் பகுதியில் உள்ள எக்ஸ்பிரஸ்வே சுரங்க பாதை அருகே சிறுவன் ஒருவன் மயங்கி கிடந்தான். இதுபற்றி அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவனிடம் விசாரித்த போது, அந்த சிறுவன் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்விபரம் வருமாறு:-

    சாலையில் மயங்கி கிடந்த சிறுவனுக்கு 11 வயது ஆகிறது. மீஜியாங் பகுதியில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெஜியாங் பகுதியை சேர்ந்தவன். சிறுவனை அவனது தாயார் திட்டியுள்ளார். இதில் கோபமடைந்த சிறுவன், தனது பாட்டியிடம் கூறிவிடுவதாக தாயாரை மிரட்டி உள்ளார். அதற்கும் தாயார் சிறுவனை கண்டித்துள்ளார்.

    சிறுவனின் பாட்டி வீட்டுக்கு அவன் இருந்த பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் சென்று விடலாம். இதனால் அந்த சிறுவன் தாயார் பற்றி பாட்டியிடம் புகார் கூற முடிவு செய்தான். இதற்காக சம்பவத்தன்று மாலை, வீட்டில் இருந்து சைக்கிளில் பாட்டி வீட்டுக்கு தனியாக புறப்பட்டு விட்டான்.

    சாலையில் உள்ள வழிகாட்டி பலகை உதவியுடன் பயணம் செய்தான். ஆனால் இடையில் வழியை மறந்துவிட சுமார் 130 கிலோ மீட்டர் பயணம் செய்து எக்ஸ்பிரஸ் சுரங்க பாதை அருகே மயங்கி விழுந்துள்ளான்.

    சிறுவனிடம் நடத்திய விசாரணையில் இதனை அறிந்து கொண்ட போலீசார் சிறுவனின் சாகச பயணத்தை கேட்டு அதிர்ந்து போனார்கள். பின்னர் அவர்கள் போலீஸ் ஜீப்பில் ஏற்றி சிறுவனை அவனது பாட்டி வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதுபற்றிய தகவல் அவனது பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்து சிறுவனை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இரவு முழுவதும் சிறுவன் சைக்கிளில் தனியாக பயணம் செய்ததும், தாயார் பற்றி புகார் கூற பாட்டி வீட்டுக்கு சென்றதும் குறித்து பலரும் ஆச்சரியப்பட்டு கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

    ×