என் மலர்tooltip icon

    உலகம்

    • ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது.
    • அதன்படி, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக் கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகிறது.

    மத்திய தரைக்கடல் பகுதியில் 2 அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
    • காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதல் நடத்தப்படாது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது.

    காசாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
    • ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசினார். அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடிய நெதன்யாகு, 'அடுத்தகட்டத்திற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?' என்று கேட்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

    • மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

    எனவே மக்கள் வட காசாவில் இருந்து பல்வேறு வழிகளில் தென்காசாவிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.

    இந்த நாட்டிற்குள் செல்ல ஒரே வழி தென்காசாவில் உள்ள ரஃபா கிராஸிங் எனும் பாதை ஆகும், அதனையும் இஸ்ரேல் மூடிவிட்டதாகவும், இனிமேல் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் இஸ்ரேல் அனுமதி பெற வேண்டும் என்றும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எகிப்து நாட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்து நாட்டிற்குள் செல்ல வேண்டுமானால் எங்களை தொடர்பு கொண்டுதான் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    • சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது.
    • சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    பால் வெளி மண்டலத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் சிறுகோள்கள், விண்கற்கள் ஆகியவை அதிக அளவில் குவிந்து காணப்படுகின்றன. அங்கு அமைந்துள்ள சிறுகோள்களில் ஒன்றாக 'சைக்' விளங்குகிறது. முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் போன்ற உலோகங்களாலான அந்த சிறுகோளை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டது. அதன்படி ஸ்பெக்ஸ்-எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து அந்த சிறுகோளுக்கு விண்கலனை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணம் கேப் கேனவேரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது.

    பூமியில் இருந்து 50 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சைக் சிறுகோளை ஆறு ஆண்டுகளுக்குள் சென்றடையும்படி நாசா வடிவமைத்துள்ளது. நாசா கணிப்பின்படி செவ்வாய் கிரகத்தை அடைந்த பின்னர் குறைந்த உந்துதல் கொண்ட மின்சார உந்துவிசை என்னும் நவீன முறையை பயன்படுத்தி சிறுகோள் குவியலை கடந்து பயணித்து சைக்கை நெருங்கும். பின்னர் 4 நிலை சுற்றுப்பாதையை அமைத்து கொண்டு பயணித்த பின்னர் சைக்கில் இறங்கி ஆய்வுகள் மேற்கொள்ளும் என நாசா ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் செய்தியாளர் உயிரிழப்பு.
    • இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (வெள்ளிக் கிழமை) தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் தனியார் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டார்.

    போர் பற்றிய செய்தி சேகரிக்க சர்வதேச செய்தியாளர்கள் அடங்கிய குழு நேற்று மாலை தெற்கு லெபனான் அருகே உள்ள ஆல்மா அல் சஹாப் என்ற கிராமத்தில் ஒன்று கூடியது. அப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் இசாம் அப்தல்லா உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து போரில் உயிரிழந்த செய்தியாளர் இசாமின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இவரது உடலுக்கு செய்தியாளர்கள், லெபனான் பாராளுமன்ற உறுப்பினர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பிறகு இவரின் உடல் லெபனானின் தெற்கில் உள்ள கியாம் கிராமத்தின் வழியே உள்ளூர் இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    வெள்ளி கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்று லெபனான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியதோடு, ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக புகார் அளித்தது.

    • இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்.
    • இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம்.

    ஹமாஸ் படையால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இல் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிணை கைதிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகளுடன் வந்து அவர்களை மீட்கக் கோரி கண்டனக் குரல் எழுப்பினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதுதவிர, இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் பாலஸ்தீனியர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரட்டை குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறலாம் என்று முதலில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன

    பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி இஸ்ரேல் ராணுவ படை (IDF), பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் தேடி தேடி ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடி வருகிறது. வான்வழி குண்டு வீச்சு தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தொடர இருக்கிறது.

    உலக நாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஆனால், அந்நாடுகளில் உள்ள சில அமைப்புகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றன. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் மீது விரும்பத்தகாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

    "இஸ்ரேலின் கடந்த வார தாக்குதலை அடுத்து, இங்கிலாந்தில் உள்ள யூதர்களுக்கு எதிராக 105 சம்பவங்கள் நடந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 30லிருந்து அக்டோபர் 13 வரை நடந்த 75 சம்பவங்களை விட மிக அதிகம்" என்று லண்டன் பெருநகர காவல் துணை ஆணையர் லாரன்ஸ் டேலர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கவலை தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியதாவது:

    கடந்த சில நாட்களாக யூதர்களுக்கு எதிரான சம்பவங்கள் இங்கு அதிகரிப்பது சகித்து கொள்ள கூடியது அல்ல. யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்க அதிக நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பினரும் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய காவல்துறைக்கு என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவையனைத்தும் செய்து தரப்படும். அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது சட்டம் முழு பலத்துடன் பாயும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் திருடு போனது
    • துப்பு தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவித்திருந்தார்

    அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி, பல கோடீசுவரர்களின் விருப்பமான வசிப்பிட பகுதியாக உள்ளது.

    ஏரியல் பேனர்ஸ் (Aerial Banners) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான பாப் பென்யோ (61) எனும் பெரும் கோடீசுவரர் இங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள இவரது மிக பெரிய பண்ணை வீட்டில் தனது பல கார்களுடன் ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் (Rolls Royce Wraith) காரையும் பாப் வைத்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.2 கோடி ($250,000) இருக்கும்.

    சில நாட்களுக்கு முன் அவரது மனைவி ஓல்கா பென்யோ (41) தனது 2 குழந்தைகளுடன் அக்காரில் வெளியே சென்று விட்டு மீண்டும் பங்களாவிற்கு திரும்பினார். அவர் காரை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு பங்களாவிற்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 2 திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் அக்காரை சுலபமாக சிறிது நேரத்தில் அவர்கள் திருடி வெளியே வேகமாக ஓட்டி சென்று விட்டனர். பங்களாவின் நிறுத்துமிடத்தின் ரிமோட் உபகரணத்தை போன்றே தாங்களாக ஒன்று தயார் செய்து வந்து அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவரது நிறுத்துமிடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும், 1970 செவர்லே காரும் இருந்தது. அந்த கார்களை விட்டு விட்டு ரோல்ஸ் ராயிஸ் காரை திருடி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து கார் திருடு போனதை காவல்துறையிடம் தெரிவித்த பாப் பென்யோ, காணாமல் போன காரை கண்டு பிடித்து தர வித்தியாசமாக விளம்பரம் செய்தார்.

    ஒரு விமானத்தின் பின்பகுதியில் ஒரு மிக பெரிய பேனரில் தனது செல்போன் நம்பருடன் "காணவில்லை - ஊதா நிற ரோல்ஸ் ராயிஸ்" என குறிப்பிட்டு, அத்துடன் அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் ரு.4 லட்சம் ($5000) பரிசும் அறிவித்திருந்தார்.

    அந்த விமானம் இந்த பேனருடன் வானில் மியாமி நகர் முழுவதும் பறந்தது.

    அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த ரோல்ஸ் ராயிஸ் காரை தான் கண்டதாக தகவல் தந்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அதை மீட்டனர். கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அதனுள்ளே பென்யோவின் மனைவி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

    காணாமல் போன விலையுயர்ந்த காருக்காக பாப் கையாண்ட நூதன விளம்பர வழிமுறை சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படுகிறது.


    • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது

    இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போது குறிப்பிட்டதாவது:

    இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர். பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறி அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய உள்ளது என நம்பிக்கை தெரிவித்தேன்.

    இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.

    • காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது.
    • வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் தெற்கு காசா மற்றும் எகிப்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி அதிகாலை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் அமைப்பு மீது போர் பிரகடனத்தை அறிவித்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனை பகுதி மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

    மேலும் காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள், உணவு பொருட்கள் வினியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி காசா மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இரு தரப்பிலும் இதுவரை சுமார் 4,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள் ஆவார்கள்.

    ஹமாஸ் அமைப்பு மீது தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப எல்லையில் 3 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் எந்த நேரத்திலும் காசாவுக்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த தயாராகும் வகையில் இருந்தனர்.

    ஆனால் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணை கைதிகளை கொல்வோம் என்று ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தரைவழி தாக்குதலை உடனே தொடங்காமல் பிணை கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியது.

    அதன்படி ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற 250 இஸ்ரேல் பிணை கைதிகளை மீட்டு கொண்டு வந்தனர். இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது 18 பிணை கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிணை கைதிகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான செயல்பாடு திட்டத்தை இஸ்ரேல் ராணுவம் வகுத்தது. இதில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பொதுமக்களை உடனே அங்கிருந்து வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்தது.

    காசா நகரின் சுரங்க பாதைக்குள்ளும் பொதுமக்கள் வசிக்கும் கட்டிடங்களுக்குள்ளும் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். எனவே மக்கள் தங்களது பாதுகாப்புக்காகவும், உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தும் ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து விலகி செல்லுங்கள் என்று இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியது.

    வெளியேறுவதற்கான காலக்கெடுவாக 24 மணி நேரம் அளித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவது உறுதியானது.

    தரைவழி தாக்குதலுக்கு முன்பு வான்வழி தாக்குதலை அதிதீவிரமாக நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வடக்கு காசாவில் உள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.

    உயிர் பிழைக்க அப்பகுதியில் இருந்து ஓட்டம் பிடிக்க வேண்டும் அல்லது இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் வடக்கு காசா மக்கள் உள்ளனர். உயிருக்கு பயந்து அவர்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.


    இன்றுடன் இஸ்ரேல் விதித்த கெடு முடிவடைவதால் மக்கள் வேகவேகமாக வெளியேறுகிறார்கள். பாலஸ்தீனியர்கள் தங்கள் பொருட்களை கார்கள், லாரிகள் மற்றும் கழுதை வண்டிகளில் கட்டி செல்கிறார்கள். பலர் தங்கள் வீட்டு கதவுகளை பூட்டி விட்டு சாவிகளை எடுத்துச் சென்றனர்.

    போர் முடிந்து திரும்பி வருவோம் என்று அங்கிருந்து கவலையுடன் வெளியேறி வருகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக தெற்கு காசாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். பலர் நடைப் பயணமாக செல்கிறார்கள்.

    இதனால் வடக்கு காசா சாலைகளில் வாகனங்கள், மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. வடக்கு காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் தெற்கு காசா மற்றும் எகிப்து நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். காசாமுனை பகுதியில் மொத்தம் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வரும் நிலையில் அதில் பாதி அளவு பேர் இடம் பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தெற்கு காசாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், உணவு, தண்ணீர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதே பெரும் திண்டாட்டமாக இருக்கும் நிலையில் அங்கிருந்து காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவதற்கான சூழல் மிக குறைவாக உள்ளது. இதனால் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.


    அதே வேளையில் இஸ்ரேல் விதித்துள்ள காலக்கெடு மிகவும் குறைவான நேரம் என்றும் அந்த காலக்கெடுவுக்குள் லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவது சாத்தியமில்லை என்றும் ஐ.நா. சபை கவலை தெரிவித்தது. இதனால் பேரழிவு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் வடக்கு காசாவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஹமாஸ் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் மக்கள் உயிர் பயத்தில் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடக்கு காசா மக்கள் வெளியேற இஸ்ரேல் பச்சைக் கொடி காட்டியுள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள மக்கள் கான்யூனுஸ் நகருக்கு செல்லலாம் என்று அறிவித்துள்ளது. 6 மணி நேரம் குறிப்பிட்ட வழித்தடப்பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆயுதங்கள் உள்ள பகுதி மற்றும் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான சோதனையை இஸ்ரேல் தரைவழி படை வீரர்கள் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறும்போது, "ஹமாசின் உள்கட்டமைப்புகளின் அச்சுறுத்தல்களை அகற்ற காசான் பிரதேசத்தில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தியது. பிணை கைதிகளை கண்டுபிடிக்க உதவும் ஆதாரங்களை வீரர்கள் சேகரித்தனர்" என்று தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவத்தின் இந்த சோதனையில் மாயமாகி இருந்த இஸ்ரேலியர்கள் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்டவர்களில் சிலரின் உடல்கள் காசா முனையில் கிடந்தது. அந்த உடல்களை இஸ்ரேல் படையினர் மீட்டுள்ளனர். ஆனால் எத்தனை உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

    ஹமாஸ் அமைப்பினர் காசாவில் பல இடங்களில் சுரங்கங்கள் அமைத்து அதில் பதுங்கி உள்ளனர். எனவே அதுபோன்ற இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்ததால் இன்னும் சிலமணி நேரங்களில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் பதட்டம் அதிகரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் கிழக்கு, மேற்கு காசா பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி மற்றும் பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.

    மேலும் காசாவில் தாக்குதலுக்கு காரணமாக தொலைத்தொடர்பு இணைய தள சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

    காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டர் பெயர் மெராத் அபு மெராட் என்று அறிவித்துள்ளது. இவர் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரமான தாக்குதலை இவர்தான் வழிநடத்தினார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான சண்டையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த 27 பேரும், அதற்கு அடுத்தப்படியாக தாய்லாந்தை சேர்ந்த 24 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு தினங்களுக்கு முன் மக்களை ஒற்றுமையாக இருக்குமாறு அதிபர் கேட்டு கொண்டார்
    • ஆசிரியர் உடலுக்கு அதிபர் மேக்ரான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

    பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு, கடந்த வாரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததால், இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாகவும் அவர்கள் மீது போர் தொடுத்திருப்பதாகவும் கூறி பாலஸ்தீனம் முழுவதும் அந்த அமைப்பினரை இஸ்ரேல் ராணுவ படை தேடி தேடி வேட்டையாடி வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன.

    இப்பின்னணியில் தனது நாட்டு மக்களை எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இருக்குமாறு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் இரு தினங்களுக்கு முன் கேட்டு கொண்டார். மேலும் அவர் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து உள்நாட்டில் எந்த சர்ச்சையோ மோதலோ பிரான்ஸில் எங்கும் இடம்பெறுவதை தவிர்க்குமாறு மக்களை கேட்டு கொண்டார்.

    இந்நிலையில், பிரான்ஸின் வடக்கே உள்ள அர்ராஸ் பகுதியில் லைசி கேம்பெட்டா உயர்நிலை பள்ளியில் (Lycee Gambetta High School) பணி புரிந்து வந்த டொமினிக் பெர்னார்ட் (Dominique Bernard) எனும் பிரெஞ்சு மொழி ஆசிரியரை மொஹமெத் எம். (Mohamed M.) எனும் 20 வயதான அப்பள்ளியின் முன்னாள் மாணவர், கத்தியால் குத்தினார். இதில் அந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் ஒரு ஆசிரியரையும் ஒரு காவலாளியையும் அந்த இளைஞர் குத்தியதில் அவர்கள் காயமடைந்தனர். கடவுளின் பெயரை கூச்சலிட்டு கொண்டே இக்கொலையை மொஹமெத் செய்ததாக அங்கு இருந்த பலர் கூறியுள்ளனர்.

    இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தையடுத்து உடனடியாக அந்த பள்ளிக்கே நேரில் சென்ற அதிபர் மேக்ரான், அந்த ஆசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினார். "தனது உயிரை விலையாக கொடுத்து பல உயிர்களை அந்த ஆசிரியர் காப்பாற்றி உள்ளார். நம்மை எந்த சக்தியும் பிரிக்க முடியாது" எனவும் அவர் கூறினார்.

    இந்த கொலையை செய்த மொஹமெத் மற்றும் அவரது சகோதரர், பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு அந்நாட்டின் தீவிரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    கொலை செய்த மொஹமெத் ஏற்கனேவே பிரான்ஸ் உளவு அமைப்பினரால் கண்காணிப்பில் இருந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல்-ஹமாஸ் போரின் பின்னணியிலும் தற்போதைய சம்பவத்தினாலும் அந்நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு அமலுக்கு வந்திருக்கிறது.

    ×