என் மலர்
டென்னிஸ்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
- செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷிய வீரர் ரூப்லேவை வென்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் தொடர்களில் ஒன்றாகவும், மிக உயரியதாக மதிப்பிடப்படும் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று போட்டியில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், 7-ம் நிலை வீரர் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லேவுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் முதல் செட்டை இழந்தார். சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் ஜோகோவிச் 4-6, 6-1, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தலி வீரர் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரோமன் சபியுலினுடன் மோதினார். இதில் சின்னர் 6-4, 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
- காலிறுதியில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ஸ்விடோலினா முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை இகா ஸ்வியாடெக் கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்ட்விடோலினா வென்றார்.
இதன்மூலம் ஸ்விடோலினா 7-5, 6-7 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டு வீராங்கனை மார்கெட்டா வொண்ட்ரூசோவா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.
இதில் வொண்ட்ரூசோவா 6-4, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒன்ஸ்ஜபேர் (துனிசியா) 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிவிட்டோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார்.
- ஷபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட் ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெலாரஸ்) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட் ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் இருக்கும் ஒன்ஸ்ஜபேர் (துனிசியா) 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கிவிட்டோவாவை (செக்குடியரசு) தோற்கடித்தார். ரைபகினா (கஜகஸ் தான்), மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
- மெட்வெதேவ் முதல் முறையாக விம்பிள்டன் காலிறுதிக்கு முன்னேற்றம்
- ஜோகோவிச் 3-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யுபேங்க்ஸ்-ஐ எதிர்கொண்டார்.
இதில் சிட்சிபாஸ் முதல் செட்டை 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் தரம் நிலை பெறாத கிறிஸ்டோபர் 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்சிபாஸும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் கிறிஸ்டோபர் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார.
3-வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 4-வது செட்டை கிறிஸ்டோபர் 6-4 எனக்கைப்பற்ற போட்டி 2-2 என சமநிலை பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டிலும் கிறிஸ்டோபர் சிறப்பாக விளையாடி 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் சிட்சிபாஸ் 2-3 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் 7(8)-6(6),7(8)-6(6), 5-7, 6-4 என ஹுபர்ட் ஹர்காஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
முதல் நிலை வீரர் அல்காரஸ் கார்பியா 3-6, 6-3, 6-3, 6-3 என பெரேட்டினியை வீழ்த்தினார். 21-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவை 6-ம் நிலை வீரர் ஹோல்ஜர் ருனே வீழ்த்தினார். 3-ம் நிலை வீரர் மெட்வெதேவ் 6-4, 6-2 என முன்னிலையில் இருந்தபோது, எதிர் வீரர் காயத்தால் வெளியேறியதால், மெட்வெதேவ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் கடும் போராட்டத்திற்கு பின் 2-1 என வெற்றி பெற்றார்
- 3-வது செட்டில் 9-11 என டைபிரேக்கரில் வெற்றி வாய்ப்பை இழந்தார்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல்நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் (போலந்து) 4-வது சுற்றில் 14-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்டார். இதில் ஸ்வியாடெக் 6-7 (4-7), 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் இருக்கும் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் உக்ரைனை சேர்ந்த லெசியா சுரென்கோவை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் வான்ட்ரூ சோவா (செக் குடியரசு), சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 19-வது வரிசையில் உள்ளவருமான அசரென்கா (பெலாரஸ்) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 2-6, 6-4, 6(9)-7(11) என்ற செட் கணக்கில் சுவிட்டோலினாவிடம் தோற்றார்.
கால்இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்- சுவிட்டோலினா, பெகுவா- வாண்ட்ரூ சோவா மோதுகிறார்கள்.
23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் போலந்தை சேர்ந்த 17-ம் நிலை வீரர் ஹூபர்ட் ஹூர்காசை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 7-6(8-6), 7-6(8-6) என்ற செட் கணக்கில் முன்னணியில் இருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணி ஆனதால் போட்டி நிறுத்தப்பட்டது. இன்று அந்த ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.
8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-6 (7-4), 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவை சேர்ந்த டேனியல் கேலனை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டத்தில் ரூப்லெவ், ரோமன் சபியுலின் (ரஷியா), வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.
- சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 16வது சுற்றில் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெக்சாண்டர் பப்லிக்கை எதிர் கொண்டார்.
இதில், 7-5, 6-3, 6-7 (6/8), 6-7 (5/7), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி ஆண்ட்ரே ரூப் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் ஆண்ட்ரே ரூப்லெவ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல், இத்தாலியின் எட்டாம் நிலை வீரரான ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் எலாஹி காலனை நேர் செட்களில் வென்றுள்ளார்.
சின்னர் 7-6 (7/4), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்குள் நுழைந்துள்ளார்.
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று போட்டி நடந்தது.
- இதில் இத்தாலி வீரர் பெரெட்டினி, ஜெர்மனி வீரர் ஸ்வரேவை தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.
இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
- 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), 8-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 2-வது சுற்று ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
உலகின் முதல் நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து) 3-வது சுற்றில் குரோஷியாவை சேர்ந்த 30-வது வரிசையில் உள்ள பெட்ரா மேட்ரிச்சை எதிர்கொண்டார். இதில் ஸ்வியா டெக் 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசா பெட்டாவை வீழ்த்தினார். விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), சுவிட்டோலினா (உக்ரைன்), ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 32-ம் நிலை வீராங்கனை மரியா பவுஸ்கோவா (செக் குடியரசு) 7-6, (7-4), 4-6, 7-5 என்ற கணக்கில் கார்சியாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்)-அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்) மோதினர். இதில் நடப்பு சாம்பியனான ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாலை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் பிரான்சின் கார்சியா 3-6, 6-4, 7-6 (10-6) என்ற செட் கணக்கில் கனடாவின் பெர்னான்டசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பென்சிக் (சுவிட்சர்லாந்து), வெக்கிச் (குரோஷியா), லினெட் (போலந்து) பொடா போலா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் டிமிட்ரோவ் (பல்கேரியா) சக நாட்டு வீரர் இவாஷ்காவுடன் மோதினார். அதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் தியாபோ (பிரான்ஸ்), பெல்லா (அர்ஜென்டினா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), லாஸ்லோ டிஜெரே (செக் குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.
- விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் உக்ரைன் எலினா ஸ்விடோலினோ எலிஸ் மெர்டென்சுடன் மோதினார்.
எலினா ஸ்விடோலினா 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் எலிஸ் மெனர்டென்சை தோற்கடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனை சேர்ந்த ஜூலி நீமைர் 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை சென்றவரான கரோலினா முச்சோவை தோற்கடித்தார்.
இதேபோல், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் போடோரோஸ்கோவை வீழ்த்தினார்.
- ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 2-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தாம்சனை எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 8-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 7-5, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மேனை தோற்கடித்தார்.
பெண்கள் பிரிவில் முதல் வரிசையில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலாந்து) 2-வது சுற்றில் சாரா டோராமாவை (ஸ்பெ யின்) எதிர் கொண்டார்.
இதில் ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- விம்பிள்டன் டென்னிஸ் நடைபெறும் இடத்தில் தியானத்திற்கான அறை உள்ளது
- தியான அறைக்கு ரசிகர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என நிர்வாகம் வேண்டுகோள்
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் ஒன்று. இந்த போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக உலக ரசிகர்கள், தலைவர்கள் வருவதுண்டு.
விம்பிள்டன் டென்னிஸ் பல மைதானங்களில் (கோர்ட் என அழைக்கப்படும்) நடைபெறும். கோர்ட் அருகே ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்ய அறைகள் உள்ளன.
கடந்த வருடம் 12-வது கோர்ட் அருகே உள்ள அறையில் ஒரு ஜோடி உடலுறவு கொண்டதாகவும், ரசிகர்கள் முகம் சுழித்ததாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து விம்பிள்டன் நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.
பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கான இடத்தில் இப்படி செய்யலாமா?, அந்த இடத்தை ரசிகர்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்திற்காக பயன்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வாய்ப்பாக அந்த இடம் உள்ளது. அதை சரியான வழியில் பயன்படுத்துவதை எதிர் பார்க்கிறோம். அந்த இடத்திற்கான மதிப்பை ரசிகர்கள் வழங்க வேண்டும்'' என இங்கிலாந்து டென்னிஸ் கிளப்பு நிர்வாக தலைவர் சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.
''ஒரு ஜோடி அறையில் இருந்து மிகப்பெரிய புன்னகையுடன் வந்ததாகவும், பெண் கோடைக்கால ஆடை அணிந்திருந்ததாகவும், உள்ளே வேறு என்ன நடந்திருக்கும்'' என ரசிகர் ஒருவர் புகார் கூறியதாகவும், மற்றொரு ரசிகர் ''நெருக்கமாக இருக்கும்போது வெளிப்படும் சத்தம்'' கேட்டதாகவும் புகார் அளித்ததாக சாலி பால்டன் தெரிவித்துள்ளார்.
அந்த அறையில் சேர், மடிக்கக் கூடிய மேஜை, சார்ஜ் செய்யும் வசதி ஆகியவை உள்ளன.






