என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த காலக்கட்டத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி ஐ.பி.எல். போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கி விட்டன.
சென்னை அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி தாமதம் ஆனது. நாளை முதல் சி.எஸ்.கே. அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.
ஐ.பி.எல். தொடங்குவதற்கு இன்னும் 16 தினங்கள் உள்ள நிலையில் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அட்டவணை வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்கள். இனதால் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் பொருளாளர் அருண்துமால் கூறியதாவது:-
அனைத்து சி.எஸ்.கே. வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி வருகிறார்கள். பார்வையாளர்கள் இல்லாமல் ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. எனவே எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல், அமெரிக்காவின் பிராட்லி கிளானை எதிர்கொண்டார். 2 மணி 12 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சுமித் நாகல் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிராட்லியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பிராட்லி 10 ஏஸ் சர்வீஸ் வீசிய போதிலும், பந்தை அதிகமுறை வெளியே அடித்துவிட்டு (40 முறை) தவறிழைத்து சரிந்து போனார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவர் வெற்றி காண்பது கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாமில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். முதல் சுற்று வெற்றியின் மூலம் டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகலுக்கு ரூ.45 லட்சம் பரிசு உறுதியாகி இருக்கிறது.
உலக தரவரிசையில் 124-வது இடம் வகிக்கும் சுமித் நாகல் அடுத்து 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) இன்று சந்திக்கிறார். பலம் வாய்ந்த டொமினிக் திம்மை அவர் சமாளிப்பது கடினமே. 23 வயதான சுமித் நாகல் கூறுகையில், ‘கிராண்ட்ஸ்லாமில் எனது முதல் வெற்றியை பெற்றிருக்கிறேன். இது எனக்கு சிறப்பு வாய்ந்த, மகிழ்ச்சியான தருணமாகும். இந்த ஆட்டத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன். சிறப்பாக செயல்பட வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.’ என்றார்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவுடன் மோதினார். முதல் இரு செட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளான ஆன்டி முர்ரே அதன் பிறகு எதிராளியின் ஒரு மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்தும் தன்னை காப்பாற்றிக்கொண்டு ஒரு வழியாக எஞ்சிய 3 செட்டுகளை போராடி தன்வசப்படுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டார். 4 மணி 39 நிமிடங்கள் மல்லுகட்டிய முர்ரே 4-6, 4-6, 7-6 (7-5), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்தார்.
டேனில் மெட்விடேவ் (ரஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), பெரேட்டினி (இத்தாலி), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மரின் சிலிச் (குரோஷியா) ஆகிய நட்சத்திர வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

அதே சமயம் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், 3 முறை சாம்பியனான பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.







