என் மலர்
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ரன்கள் குவித்தார்.
ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-
* 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ரன் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ரன்னாக இருந்தது.
* 218 ரன் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ரன்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.
* ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.
* கேப்டன் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து கேப்டனும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.
* கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ரன்னும் (228+1), 2-வது டெஸ்டில் 197 ரன்னும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ரன்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.
* சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.
* 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ரன்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.
3 டெஸ்டிலும் 150 ரன்னுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் குல்தீப் யாதவ். கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அனுபவம் குறைந்த சபாஷ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதல் டெஸ்டில் குல்தீவ் யாதவை சேர்க்காதது தவறான முடிவாகும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
குல்தீப் யாதவை அணியில் சேர்க்காமல் எடுத்த முடிவு தவறானது. இது ஒரு அபத்தமான முடிவாகும். இப்போது அவர் விளையாடாவிட்டால் எப்போதுதான் ஆடப்போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை மட்டுமே இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் திணறினார்கள். 89.3 ஓவர் வரை வீசி 3 விக்கெட்தான் எடுக்க முடிந்தது.
சேப்பாக்கம் ஆடுகளம் தொடக்கத்தில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றுவது மிகவும் கடினமானது.
கொரோனா பாதிப்பு காலம் என்பதால் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பந்தை பளபளக்க செய்வதற்காக வீரர்கள் எச்சிலை பயன்படுத்துவார்கள்.
பந்து நன்றாக பளபளப்பாக மாறினால் மட்டுமே வேகப்பந்து வீரர்களால் பந்தை சுவிங் செய்ய முடியும். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பந்தில் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் ரிவர்ஸ் சுவிங் செய்வது பாதிக்கப்பட்டது என்று இந்திய அணி வேகப்பந்து வீரர் பும்ரா கூறுகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆடுகளம் சமநிலையாக இருந்தது. புதிய விதிமுறையால் பந்தை பளபளக்க செய்ய முடியவில்லை. இதனால் பந்தை ரிவர்ஸ் சுவிங் செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டோம். கொரோனா காலம் என்பதால் இந்த விதிமுறை சரியானது.
ஜோரூட் சிறப்பாக ஆடினார். சுழற்பந்தை அபாரமாக எதிர்கொண்டார். இலங்கையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கும் அதே திறமையுடன் ஆடினார்.
பாராட்டு எல்லாம் ஜோரூட்டை சாரும். அவர் சிறந்த இன்னிங்சை ஆடினார்.
இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.
பும்ரா நேற்றுதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாடினார். அவரது 17 டெஸ்டும், வெளிநாட்டு மைதானத்தில் தான் நடந்தது. 18-வது டெஸ்டில்தான் சொந்த மண்ணில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் நேற்று 18.3 ஓவர்கள் வீசி 40 ரன் கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.






