என் மலர்
விளையாட்டு
சென்னை:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் உள்ளூர் மைதானத்தில் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டம் மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னையில் நேற்று பயிற்சியை தொடங்கியது. ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் அடுத்த 9 நாட்களுக்கு அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.
யசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், தேஷ் பாண்டே, முகமது அசாருதீன், சச்சின் பேபி உள்பட 11 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அணியின் இயக்குனர் மைக்கெசன், தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச், பேட்டிங் ஆலோசகர் சஞ்சய் பாங்கர் ஆகியோரது மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்
இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
அவர் பயிற்சிக்காக நாளை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிமை காலம் முடிந்தபிறகு வீராட் கோலி அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்.
ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. தற்போது வீரர்கள் மும்பையில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
சி.எஸ்.கே. தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை ஏப்ரல் 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பையில் நடக்கிறது.
இந்த ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. சாப்ட் சிக்னல் அவுட் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர விதிகளில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பரான இளம் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி உள்ளது.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரிஷப்பண்ட் சிறந்தவர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.
ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கு டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடினார். காயம் காரணமாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். பஞ்சாப்பை சேர்ந்த 32 வயதான ஹர்மன்பிரீத் கவுருக்கு கடந்த 4 நாட்களாக லேசான காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் டாக்டர்களின் அறிவுரையின்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர் விரைவில் களம் திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், கடந்த ஆண்டு ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 39-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ஹங்கேரியின் மார்டோன் புக்சோவிச்சை 52 நிமிடத்தில் விரட்டியடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆண்டில் ரூப்லெவ் சுவைத்த 18-வது வெற்றி இதுவாகும்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 17-ம் நிலை வீராங்கனையான எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) துவம்சம் செய்து தொடர்ச்சியாக 23-வது வெற்றியை ருசித்ததுடன், முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.
நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார்.
இன்னொரு ஆட்டத்தில் 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜாவை (ஸ்பெயின்) சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இதேபோல் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சரிவை சமாளித்து 2-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பெட்ரா கிவிடோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மரியா சக்காரி (கிரீஸ்), செவஸ்தோவா (லாத்வியா), சபலென்கா (பெலாரஸ்), சாரா சோரிப்ஸ் டோர்மோ (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
9 அணிகள் இடையிலான 2-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடக்கிறது. முன்னதாக இந்திய அணி வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் அர்ஜென்டினா அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. அத்துடன் 13, 14 ஆகிய தேதிகளிலும் அந்த அணியுடன் விளையாடுகிறது. ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்த ஆட்டங்களில் இந்திய அணி களம் காணுகிறது.
புரோ ஆக்கி லீக் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் 22 பேர் கொண்ட இந்திய அணியை, இந்திய ஆக்கி சங்கம் நேற்று அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய தொடரில் இருந்து தனிப்பட்ட காரணத்துக்காக விலகிய கேப்டன் மன்பிரீத் சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் அனுபவம் வாய்ந்த ரூபிந்தர் பால்சிங், வருண்குமார் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி பெங்களூருவில் இருந்து இன்று புறப்பட்டு செல்கிறது.
இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-
ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதாக், அமித் ரோஹிதாஸ், குரிந்தர் சிங், ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால்சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, ஜஸ்கரண் சிங், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ராஜ்குமார் பால், சுமித், நீலகண்ட ஷர்மா, ஷம்ஷெர் சிங், குர்ஜந்த் சிங், தில்பிரீத் சிங், மன்தீப் சிங், லலித்குமார் உபத்யாய், ஷிலானந்த் லக்ரா.






