என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ள நிலையில் ஐபிஎல் கோப்பையை பெங்களூர் அணி வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த அணியின் கேப்டர் விராட் கோலி கூறியுள்ளார்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.

    முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ்- பெங்களூர் அணியும் மோதுகின்றன.

    இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர். பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி நேற்று சென்னை வந்தார். அவர் ஓட்டலில் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபடுகிறார்.

    ஏற்கனவே வந்த பெங்களூர் அணி வீரர்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் விராட்கோலி பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

    நாங்கள் மீண்டும் இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். வேறுபட்ட அமைப்பில் இருந்தாலும், வேறு வழியில் இருந்தாலும் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஒரு நல்ல உணர்வு இருக்கிறது.

    இது ஒரு நீண்ட பயணம்- பெங்களூர் அணிக்கு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஐ.பி.எல். போட்டியை நேற்றுதான் நாங்கள் முடித்தது போல் உணர்கிறோம். கடந்த போட்டியின் உத்வேகத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.

    அணியில் சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். பழைய வீரர் பெயர்களும் உள்ளன. அவர்களை நான் பல ஆண்டுகளாக அறிந்து இருக்கிறேன்.

    டேனியல் கிறிஸ்டியன் இதற்கு முன்பு பெங்களூர் அணியில் இருந்திருக்கிறார். மேக்ஸ்வெல், முதல் முறையாக இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரை நாம் அனைவரும் அடிக்கடி ஐ.பி.எல். போட்டியில் பார்த்து இருக்கிறோம்.

    நாங்கள் ஒன்றாக இணைந்து நிறயை ஆட்டங்களில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இறுதி நாளில் இலங்கை அணி 348 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீசுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 126 ரன்னும், ரகீம் கார்ன்வால் 73 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது. திரிமானே 55 ரன் எடுத்தார். சண்டிமால் 34 ரன்னும், தனஞ்செய டி சில்வா 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது. 3ம் நாள் முடிவில் இலங்கை 8 விக்கெட்டுக்கு 250 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும், நிசாங்கா 49 ரன்னும் எடுத்தனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. நிசாங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார்.
    இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னில் ஆட்டமிழந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டும், அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    96 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேம்ப்பெல் 10 ரன்னிலும், பிளாக்வுட்18 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கேப்டன் பிராத்வெயிட் அரை சதம் கடந்தார். அவர் 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கைல் மேயர்ஸ் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜேசன் ஹோல்டர் அரை சதம் அடித்தார்.  

    வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஹோல்டர் 71 ரன்னும், ஜோஷ்வா டி சில்வா20 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 377 ரன்களை இலக்காக கொண்டு இலங்கை அணி களமிறங்கியது. நான்காம் நாள் முடிவில் இலங்கை விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
    விராட் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது என சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போதெல்லாம், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும். இதற்கு காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றதும், விராட் கோலி ஒரு முறை கூட வென்றதில்லை என்பதும்தான்.

    இதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மாற்ற முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சரண்தீப் சிங் கூறுகையில் ‘‘கேப்டன் சிறப்பாக விளையாடாத நேரத்தில்தான் கேப்டன் பதவியை பிரித்து வழங்க வேண்டியது தேவையானது. ஆனால், விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ஒரு வடிவிலான போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், அவர்மீது நெருக்கடி கொடுத்து, கேப்டன் பதவியை மற்றொருவரிடம் வழங்கலாம்.

    விராட் கோலி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பதற்காக, இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாது. அவர் சிறந்த கட்டுக்கோப்பான வீரர் மற்றும் கேப்டன். அவர் இல்லாத நேரத்தில் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால், விராட் கோலியை மாற்றுவதற்கான எந்த காரணமும் இல்லை’’ என்றார்.
    ஒரு வீரரால் ஒட்டுமொத்த ஆடும் லெவன் கலவையை முற்றிலுமாக மாற்ற முடியும் என ஆர்சிபி முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி இரு அணிகளுக்காகவும் விளையாடியவர் பார்தீவ் பட்டேல். தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    வருகிற 9-ந்தேதி ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் ஏலத்தின்போது மொயீன் அலியை ஆர்சிபி அணி விடுவித்தது.

    இந்த நிலையில் அவர் அணியில் இருந்திருந்தால் ஆர்சிபி முற்றிலும் மாறுப்பட்ட ஆடும் லெவன் அணியாக திகழ்ந்திருக்கும் என் பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பார்த்தீவ் பட்டேல் கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏலம் குறித்து ஏராளமான கேள்விகளுக்கு ஆர்சிபி பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் மொயீன் அலி அணியை விட்டுச் செல்வார் என்று நினைக்கவில்லை. ஆனால் சென்றுவிட்டார். மொயீன் அலி ஆர்சிபி அணியில் இருந்திருந்தால் முற்றிலும் மாறுபட்ட ஆடும் லெவன் அணியாக இருந்திருக்கும். ஒரு வீரரால் உண்மையிலேயே ஆடும் லெவன் அணி கலவையை மாற்ற முடியும்.

    விராட் கோலி, ஏபிடி-ஐ தவிர்த்து அவர்கள் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், அதில் வெற்றி பெற அணிக்குள்ளேயே அவர்கள் எப்படி முயற்சி செய்கிறார்கள என்பது முக்கியமான விசயம்.

    சென்னையில் விளையாடும்போது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்கள் வீசுவார். பொல்லார்டு மிதவேகமாக ஆடுகளத்திற்கு ஏற்றவாறு பந்து வீசுவார்.

    ராகுல் சாஹர் உள்ளார். குருணால் பாண்ட்யா உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். மேலும் இந்திய அணியில் இருவரும் இடம்பிடித்திருந்தனர்’’ என்றார்.
    பின் ஆலன் 29 பந்தில் 71 ரன்கள் விளாச, 3-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. மழைக்காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீரர்கள் மார்ட்டின் கப்தில் 19 பந்தில் 44 ரன்களும், பின் ஆலகன் 29 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்களும் விளாசினர்.

    பின்னர் 10 ஓவரில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்காளதேசம் 9.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஆஸ்லே

    டிம் சவுத்தி 3 விக்கெட்டும், டாட் ஆஸ்லே 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 29 பந்தில் 71 ரன்கள் விளாசிய பின்  ஆலன் ஆட்டநாயகன் விருதையும், கிளென் பிலிப்ஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களான ஏபி டி வில்லியர்ஸ், விராட் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டியில் விளையாடுவதற்கான இரண்டு அணி வீரர்களும் சென்னை வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சென்னை வந்ததும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின் விளையாட்டுக்குத் தயாராவார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று சென்னை வந்தடைந்தார். அதேபோல், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸும் இன்று சென்னை வந்தடைந்தார். இருவரும் ஆர்சிபி அணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

    ஒருவாரம் முடிவடைந்த பின்னர் அணி வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொள்வார்.
    வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட் 126 ரன்னும், ரகீம் கார்ன்வால் 73 ரன்னும் எடுத்தனர். லக்மல் 4 விக்கெட்டும் , சமீரா 3 விக்கெட்டும், பெர்ணான்டோ, லசீத் தனஞ்செய டி சில்வா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து இருந்தது. திரிமானே 55 ரன் எடுத்தார். சண்டிமால் 34 ரன்னும், தனஞ்செய டி சில்வா 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. 218 ரன்கள் பின்தங்கி கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இலங்கை தொடர்ந்து ஆடியது.

    நேற்றைய ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. 7 முறை மழையால் ஆட்டம் தடைபட்டது.

    சண்டிமால் 44 ரன்னும், தனஞ்செய டி சில்வா 39 ரன்னும், நிசாங்கா 49 ரன்னும் எடுத்தனர். அல் ஜாரி ஜோசப் , ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டும், கேமர் ரோச், கேப்ரியல், கெய்ல் மேயர்ஸ், பிளாக்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சென்னை வந்ததையொட்டி அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று முன்தினம் முதல் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் பயிற்சியை தொடங்கியது.

    யசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், தேஷ் பாண்டே, முகமது அசாருதீன், சச்சின் பேபி உள்பட 11 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கேப்டன் விராட் கோலி இன்று சென்னை வருகிறார்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னை வந்தனர்.

    கேப்டன் ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தாரே உள்ளிட்ட வீரர்களும், பயிற்சியாளர்களும், ஊழியர்களும் வந்தனர்.

    சென்னை வந்ததையொட்டி மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    ‘வணக்கம் சென்னை. மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்‘ என்று அவர் தமிழில் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹசில்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
    சென்னை:

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்  ஹசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், ஹசில்வுட் திடீரென போட்டியில் இருந்து விலகி உள்ளார்.  வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆஷஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகியதாக கூறி உள்ளார். 

    வேகப்பந்து வீச்சாளரான ஹசில்வுட் விலகியது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
    மியாமி:

    மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 58-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் இத்தாலியின் லோரென்ஜோ சோனிகோவை வெளியேற்றனார். இதே போல் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த சீசனில் ரூப்லெவ் பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

    அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் 3-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 20 வயதான செபாஸ்டியன் கோர்டாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் சபலென்காவை (பெலாரஸ்) சந்தித்தார். 2 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் சபலென்காவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    இன்னொரு கால்இறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவாவை பந்தாடி முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார்.

    அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி-ஸ்விடோலினா மோதுகிறார்கள். இதில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொள்வார். மாறாக ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதியில் தோல்வி கண்டு ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை சொந்தமாக்குவார்.
    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர்.

    இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், சுப்மான் கில், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்களுக்கு அவர்களது சாதனையை பாராட்டி கார் பரிசாக வழங்கப்படும் என்று மஹிந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார்.

    இதன்படி அந்தந்த வீரர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் ஷோரூம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழக வீரரான சேலத்தை சேர்ந்த டி.நடராஜன் காரை பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் மற்றொரு தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு நேற்று கார் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் உள்ள அந்த நிறுவன ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் காருக்குரிய சாவியை மஹிந்திரா சார்பில் அதன் மண்டல மேலாளர் வி.ஹரி வழங்கினார். நிகழ்ச்சியில் வாஷிங்டன் சுந்தரின் தந்தை சுந்தர், சகோதரி ஷைலஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆஸ்திரேலியா தொடரில் நெட் பவுலர்கள் அபாரமாக பந்து வீசியது, மாற்றத்திற்கான வேலை சீராக நடைபெறும் என்பதை காட்டுகிறது என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ் இல்லாமலேயே இளம் வீரர்கள் அசத்தினார்கள்.

    டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் நெட் பவுலர்களான அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் டெஸ்ட் போட்டியில் அசத்தினார்கள்.

    இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இளம் வீரர்கள் எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். நாங்கள் ஓய்வு பெறும்போது இது நடக்கும். அதிகமாக விளையாடும்போது, சிறந்த திறனை பெறுவார்கள். நாங்கள் போட்டியை முடிக்கும்போது மாற்றம் சீராக நடைபெறும்.

    ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்றாலும், இந்திய அணி தடுமாற்றம் அடையாது. வெளியில் இருக்கும் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அனுபவம் எப்போதும் தேவைப்படுகிறது. இளைஞர்கள் அதை சரியான நேரத்தில் பெறுவார்கள்.

    பாதுகாப்பு வளையம் காரணமாக அதிகமான பந்து நெட் பவுலர்களை கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அது அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களை வெளிப்படுத்தவும் உதவியது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. சீனியர் பவுலர்கள் இல்லாமல் இதை நம்மால் செய்ய முடிந்தது என்றால், இளைஞர்களை பயன்படுத்த முடியும் என்பதை காட்டுகிறது’’ என்றார்.
    ×