என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி  நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்டன. கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின. 

    போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.  இன்று மட்டும் அமெரிக்கா 3 தங்கம் வென்றது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது.

    போட்டியை நடத்தும் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை ஜப்பான் கைப்பற்றி உள்ளது.  ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.
    வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற வாழ்வா? சாவா? போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் லீக் ஆட்ட போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்துவிடும்.

    மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இரண்டு அணிகளும் தலா ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளன. நெல்லை ராயல் கிங்ஸ் 3 வெற்றியும், லைகா கோவை கிங்ஸ் 2 வெற்றிகளும் பெற்றுள்ளன.

    நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றால் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறும். லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் 3 வெற்றிகள் பெறும். இரு அணிகளும் தலா 3 வெற்றி, ஒரு போட்டி முடிவில்லை என்பதன் மூலமாக ஏழு புள்ளிகளுடன் ஒரே இடத்தை பிடிக்கும். அப்போது ரன் ரேட் கணக்கிடப்பட்டு இரண்டில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
    டோக்கியோவில் இந்தியாவிற்காக களமிறங்கும் போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது என மதுரை வீராங்கனை ரேவதி கூறியுள்ளார்.

    அவனியாபுரம்:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தாயகம் திரும்பிய மதுரை வீராங்கனை ரேவதி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தாய், தந்தை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் பாட்டி பராமரிப்பில் வளர்ந்தேன். பள்ளிப்படிப்பு தொடர்ந்த போது எனது விளையாட்டு ஆர்வத்தை கண்டு பலர் ஊக்குவித்ததினால் தொடர்ந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு செயல்பட்டேன்.

    தற்போது எனது நான்கு ஆண்டு கனவாக இருந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறியிருக்கிறது. டோக்கியோவில் இந்தியாவிற்காக களமிறங்கும் போது எனது கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

    ஒலிம்பிக் போட்டியில் கலப்பு இரட்டையர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றது பெருமையாக இருந்தது. சிறிய தவறினால் பதக்க வாய்ப்பை தவற விட்டேன். இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்து இந்தியாவுக்காக பதக்கம் பெற வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருக்கிறது.

    மதுரையில் உள்ள தடகள மைதானம் சீர்படுத்த வேண்டும் இதன் மூலம் மதுரையில் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராவார்கள் என்றும் தெரிவித்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட் டிங்காமில் உள்ள டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன் குவித்தது.

    95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்திருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 303 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 209 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் ஜோரூட் சதம் அடித்தார். அவர் 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும், முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும், முகமது ‌ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    209 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 52 ரன் எடுத்து இருந்தது. ராகுல் 26 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா, புஜாரா தலா 12 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை. கைவசம் 9 விக்கெட் உள்ளது.

    இதனால் இந்த டெஸ்டில் இந்தியா வெற்றிபெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான கட்டத்தில் இருக்கும் இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்குக்கு அர்ப்பணிப்பதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 11 வீரர்களை பின்னுக்கு தள்ளி விட்டு 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை மகசூல் செய்தார். டோக்கியாவின் தற்போதைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அதிக தூரம் ஈட்டி எறிவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தடகளத்தில் இந்தியாவின் தங்கப்பதக்க கனவை நிறைவேற்றியுள்ளார்.

    ஒரே நாளில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்துள்ள 23 வயதான நீரஜ் சோப்ரா எளிய விவசாய குடும்பத்்தில் பிறந்தவர். அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா அவரது சொந்த ஊராகும்.

    சிறு வயதில் ஜாலியாக உயரமான இடத்தில் உள்ள தேனீகூட்டை கல்லால் எறிந்து கலைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதை கவனத்தில் கொண்ட அவரது தந்தை சதீஷ்குமார் அவரை ஒழுக்கமானவராக வளர்க்க விரும்பி ஈட்டி எறிதல் விளையாட்டில் பழக்கப்படுத்தினார். 2011-ம் ஆண்டில் இருந்து ஈட்டி எறிதலில் பயிற்சியை தொடங்கி படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.

    2016-ம் ஆண்டு உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் (20 வயதுக்குட்பட்டோர்) 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி சாம்பியனாகி வியக்க வைத்தார். இந்த போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் இவர் தான். அதன் பிறகு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார். 2019-ம் ஆண்டு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதித்து இருக்கிறார்.

    இந்த வெற்றியை நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரில் திருவிழா போல் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீரஜ் சோப்ரா ராணுவத்தில் பணியாற்றுவதால் ராணுவ வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தேசிய கொடிகளை அசைத்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.

    தங்கப்பதக்கத்தால் உள்ளம் குளிர்ந்து நெகிழ்ந்து போய் உள்ள நீரஜ் சோப்ரா இந்த பதக்கத்தை சமீபத்தில் மறைந்த தடகள ஜாம்பவான் மில்கா சிங்குக்கு அர்ப்பணிப்பதாக கூறி உணர்ச்சி வசப்பட்டார்.

    ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் பதக்கம் வெல்வதை பார்க்க வேண்டும் என்பதே தனது கனவு என்று மில்கா சிங் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மில்கா சிங் கடந்த ஜூன் மாதம் மறைந்தார். அவர் எங்கிருந்தாலும் இந்த போட்டியை பார்த்து இருப்பார் என்று நம்புகிறேன் என்றும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘இந்த வெற்றி நம்ப முடியாத உணர்வை தருகிறது. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கும், தேசத்துக்கும் பெருமை மிக்க தருணமாகும்.’ என்றார்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார்.
    சென்னை:

    டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    அத்துடன் அவரை கவுரவப்படுத்தும் விதமாக 8758 (ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த தூரம் 87.58 மீட்டர் ஆகும்) என்ற எண் கொண்ட சிறப்பு சீருடை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
    வங்காளதேசத்திற்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்வெப்சன் 4 ஓவர் வீசி 12 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார்.
    டாக்கா:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்காளதேசம் அணி வென்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில், 4-வது 20 வது ஓவர் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நயீம் 28 ரன்கள் எடுத்தார்.

    நயீம்

    இதையடுத்து, 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து  3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி வரும்  9-ம் தேதி நடைபெற உள்ளது. 
    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ ஒரு கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.  இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்று வரை முதல் இடத்தில் நீடித்து வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் தட்டி சென்றார்.

    அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.  அவரது சொந்த ஊரிலும் மக்கள் ஆரவாரமுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பி.சி.சி.ஐ. ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. வெள்ளி வென்ற 
    மீராபாய் சானு மற்றும் ரவிகுமார் தஹியாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

    வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, லோவ்லினா, பிவி சிந்து ஆகியோருக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    ஒலிம்பிக்கில் 41 ஆண்டுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு 1.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    நாட்டிங்காம்:

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கே.எல்.ராகுல் 84 ரன், ரவீந்திர ஜடேஜா 56 ரன் எடுத்து அவுட்டாகினர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 28 ரன்கள் சேர்த்தார்.

    இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னும், டாம் சிப்லி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    சதமடித்த ஜோ ரூட்

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பொறுமையாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 32 ரன்னும், பேர்ஸ்டோவ் 30 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாகுர் தலா 2 விக்கெட்டும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் கே எல் ராகுல் 26 ரன்னில் வெளியேறினார்.

    நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 12 ரன்னும், புஜாரா 12 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இறுதி நாளில் 157 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
    சேலம் அணியில் அதிரடியாக ஆடிய முருகன் அஷ்வின் 12 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின. சேலம் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
     
    அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 47 ரன்னில் அவுட்டானர். அதிரடியாக ஆடிய முருகன் அஷ்வின் 30 ரன்னும், கேப்டன் பெராரியோ 30 ரன்னும் எடுத்தனர்.

    மதுரை அணி சார்பில் சிலம்பரசன், கவுதம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியில் அனிருத் சீதா ராம் மட்டும் தாக்குபிடித்து ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வென்றது. ஆட்ட நாயகன் விருது விஜய் சங்கருக்கு அளிக்கப்பட்டது.
    ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு பல வருட கடின பயிற்சி மற்றும் பலரின் ஆதரவு உதவியாக இருந்ததாக நீரஜ் சோப்ரா கூறினார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. அத்துடன், ஒலிம்பிக் தடகளத்தில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. 

    இந்த சாதனை குறித்து தங்க மகன் நீரஜ் சோப்ரா கூறியதாவது:-

    ஒலிம்பிக் தடகளத்திலும், டோக்கியோ ஒலிம்பிக்கிலும் நாம் தங்கப் பதக்கத்தை வெல்லவில்லை என்பதால், நான் தங்கம் வெல்ல வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆனால் நான் களத்தில் இருக்கும்போது, அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை, ஈட்டியை வீசுவதில் மட்டும் கவனம் செலுத்தினேன். இதனால்தான்  அழுத்தம் இருப்பதாக நான் உணரவில்லை.

    தங்கப் பதக்கத்துடன் நீரஜ் சோப்ரா

    ஒலிம்பிக்கில் எந்த ஒரு போட்டியும் ஒரு நாளில் முடியக்கூடிய நிகழ்வல்ல. நான் இந்த சாதனையை அடைவதற்கு, பல வருட கடின பயிற்சி மற்றும் பலரின் ஆதரவு எனக்கு உதவியாக இருந்தது. 

    நான் வென்றுள்ள இந்த பதக்கத்தால், குறிப்பாக ஈட்டி மற்றும் தடகள விளையாட்டில் நிச்சயம் வித்தியாசமான மாற்றம் நிகழும்.
    இந்திய தடகள சம்மேளனம் ஈட்டி எறிதல் விளையாட்டை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன், ஏனென்றால் இந்தியாவில்  திறமைக்கு பஞ்சமில்லை.

    இன்று நான் இந்த பதக்கத்தை வென்றுள்ளதால், நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். இன்னும் அதிகமான வீரர்களுக்கு இந்திய தடகள கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.
    அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசிய விவேக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பப்னா 52 ரன்கள் எடுத்தார். சித்தார்த் 36 ரன்கள் சேர்த்தா.

    திண்டுக்கல் தரப்பில்  ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்டுகளும், விக்னேஷ், குர்ஜாப்னீத் சிங், எம்.சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் சுரேஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் ஹரி நிசாந்த்- மணி பாரதி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஹரி நிஷாந்த் 33 ரன்களும், மணி பாரதி 24 ரன்களும் எடுத்தனர். சீனிவாசன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 65 ரன்கள்.

    அதன்பின்னர் ஹரிஹரன்-விவேக் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. ஹரிஹரன் 29 ரன்களும் (நாட் அவுட்), அதிரடியாக ஆடிய விவேக் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதனால் திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    ×