search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்த காட்சி.
    X
    நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்த காட்சி.

    ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை மில்கா சிங்குக்கு அர்ப்பணிக்கிறேன் - நீரஜ் சோப்ரா உருக்கம்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கத்தை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்குக்கு அர்ப்பணிப்பதாக ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 11 வீரர்களை பின்னுக்கு தள்ளி விட்டு 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை மகசூல் செய்தார். டோக்கியாவின் தற்போதைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அதிக தூரம் ஈட்டி எறிவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தடகளத்தில் இந்தியாவின் தங்கப்பதக்க கனவை நிறைவேற்றியுள்ளார்.

    ஒரே நாளில் இந்தியாவின் ஹீரோவாக உருவெடுத்துள்ள 23 வயதான நீரஜ் சோப்ரா எளிய விவசாய குடும்பத்்தில் பிறந்தவர். அரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில் உள்ள காந்த்ரா அவரது சொந்த ஊராகும்.

    சிறு வயதில் ஜாலியாக உயரமான இடத்தில் உள்ள தேனீகூட்டை கல்லால் எறிந்து கலைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதை கவனத்தில் கொண்ட அவரது தந்தை சதீஷ்குமார் அவரை ஒழுக்கமானவராக வளர்க்க விரும்பி ஈட்டி எறிதல் விளையாட்டில் பழக்கப்படுத்தினார். 2011-ம் ஆண்டில் இருந்து ஈட்டி எறிதலில் பயிற்சியை தொடங்கி படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.

    2016-ம் ஆண்டு உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் (20 வயதுக்குட்பட்டோர்) 86.48 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி சாம்பியனாகி வியக்க வைத்தார். இந்த போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் இவர் தான். அதன் பிறகு 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கம் வென்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார். 2019-ம் ஆண்டு முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்தாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதித்து இருக்கிறார்.

    இந்த வெற்றியை நீரஜ் சோப்ராவின் சொந்த ஊரில் திருவிழா போல் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நீரஜ் சோப்ரா ராணுவத்தில் பணியாற்றுவதால் ராணுவ வீரர்களும் உற்சாகத்தில் திளைத்தனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தேசிய கொடிகளை அசைத்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் கொண்டாடினர்.

    தங்கப்பதக்கத்தால் உள்ளம் குளிர்ந்து நெகிழ்ந்து போய் உள்ள நீரஜ் சோப்ரா இந்த பதக்கத்தை சமீபத்தில் மறைந்த தடகள ஜாம்பவான் மில்கா சிங்குக்கு அர்ப்பணிப்பதாக கூறி உணர்ச்சி வசப்பட்டார்.

    ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியர் பதக்கம் வெல்வதை பார்க்க வேண்டும் என்பதே தனது கனவு என்று மில்கா சிங் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மில்கா சிங் கடந்த ஜூன் மாதம் மறைந்தார். அவர் எங்கிருந்தாலும் இந்த போட்டியை பார்த்து இருப்பார் என்று நம்புகிறேன் என்றும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘இந்த வெற்றி நம்ப முடியாத உணர்வை தருகிறது. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கும், தேசத்துக்கும் பெருமை மிக்க தருணமாகும்.’ என்றார்.

    Next Story
    ×