என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அயர்லாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார்.
    • டி20 போட்டிகளில் சாட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.

    நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஐரோப்பா செல்ல உள்ளது. இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான வில்லியம்சன், கான்வே, டிம் சவுத்தி, டிரண்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடி கொண்டிருப்பதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த மாதம் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார். ஜுலை 10-ந் தேதி நடக்கும் 3 டி20 போட்டிகளில் சாட்னர் கேப்டனாக செயல்படுகிறார்.

    ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இரண்டும் டி20, 1 ஒருநாள் போட்டிகளும், நெதர்லாந்திற்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.

    3 அணிகளுக்கும் இடையேயான தொடரில் ஆல்ரவுண்டர் மைக்கெல் ரிப்பன் அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளார்.

    நியூசிலாந்து அணி வீரர்கள் விபரம்:

    டாம் லாதம் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேன் கிளீவர், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், மாட் ஹென்றி, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, பிளேயர் டிக்னர்,

    மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் ரிப்பன், பென் சியர்ஸ் ஆகியோர் அயர்லாந்து போட்டிகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியில் இணைவார்கள்.

    • முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • ஒரு டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    8 அணிகள் இடையிலான 6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரை நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் வருகிற 23-ந் தேதி இரவு 7.15 மணிக்கு நெல்லை சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும்.

    முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சங்கர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரையும் டிக்கெட் விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் இன்று நடக்கிறது.
    • இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ரோட்டர்டாம்:

    9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தியா-அமெரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாமில் இன்று நடக்கிறது.

    இந்த போட்டியில் ஏற்கனவே அர்ஜென்டினா அணி (42 புள்ளிகள்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி விட்டது. இந்திய அணி 24 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்க அணி கடைசி இடத்தில் இருக்கிறது. ஜூலை 1-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இந்திய அணி இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • அஸ்வினுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது அஸ்வின் தனிமைபடுத்தப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது.

    கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் , பந்து வீச்சு பயிற்சியாளர் மாம்ரே ஆகியோர் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் லீசெஸ்டரில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்று அடைவார்கள்.

    இந்த நிலையில் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.  அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் வீரர்களுடன் செல்லவில்லை.

    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அஸ்வின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

    அஸ்வின் முழு குணமடைந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் இருந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட முடியும். டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் குணமடைந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

    35 வயதான அஸ்வின் 86 டெஸ்டில் விளையாடி 442 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 23 முறை 4 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். 140 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.

    • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமனில் முடிந்தது.
    • சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும்.

    பெங்களூரு:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக இந்தியாவின் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

    முன்னதாக, ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற பல வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் காம்பினேஷன், வேகப் பந்துவீச்சு என அனைத்தும் உறுதியாகிவிட்டது.

    சூர்யகுமார் யாதவ் - ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரிடையே 4ம் வரிசை பேட்டிங்கிற்கான போட்டி நிலவுகிறது.

    மேலும், ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பிவரும் வேளையில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிவருவதால் விக்கெட் கீப்பர் யார் என்பதும் கேள்வியாக உள்ளது.

    இந்நிலையில், தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேசிய சுனில் கவாஸ்கர், ஷிகர் தவான் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை. டி20 உலக கோப்பைக்கான அணியில் ஷிகர் தவானை எடுப்பதாக இருந்திருந்தால் இங்கிலாந்து தொடரிலாவது அவர் இடம்பெற்றிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் இல்லை. எனவே டி20 உலக கோப்பைக்கான அணியில் அவருக்கு இடம் இருக்காது. என்னைப் பொறுத்தமட்டில் ரோகித்தும் கே.எல்.ராகுலும் தொடக்க வீரர்களாக இறங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • செஸ் ஒலிம்பியாட் சுடர் ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்படவுள்ளது.
    • செஸ் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாமல்லபுரம், பூஞ்சேரியில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா.ப.கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.

    இந்த ஆய்விற்கு பின், அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    44-வது செஸ் ஒலிம்பியாட் இதுவரை எந்த நாட்டிலும் இதுபோன்ற போட்டி நடத்தப்படவில்லை என உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பிரதமர் 19.06.2022 அன்று டெல்லியில் இப்போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக் சுடர் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரிடம் போட்டி நடைபெறுகின்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

    இப்போட்டிக்காக சர்வதேச தரத்திலான 52-ஆயிரம் சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கெனவே உள்ள 22- ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கமும் நவீனப்படுத்தப்படுகிறது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. மின் வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினை தமிழ்நாடு முதலமைச்சர் அமைத்துள்ளார்.

    இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் இந்தியாவிலிருந்து 4 அணிகள் , பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொளப்படும்.

    தமிழ்நாடு முதலமைச்சர், இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூபாய் 2 இலட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் சீலர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டார்.
    • பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    அம்ஸ்டர்டம்:

    நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டார். இந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவினை அறிவித்து உள்ளார்.

    பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கோப்பையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் 10 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது.
    • இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

    5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யு-23, 23 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டப்ளின், 23 வயதுக்குட்பட்டோருக்கான 5 நாடுகள் பங்கேற்கும் யூனிபர் யூனிபர் யு-23 ஹாக்கி போட்டிகள் அயர்லாந்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஹாக்கி தொடரில் பங்கேற்க, இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணி அயர்லாந்து சென்றுள்ளது. இப்போட்டியின் லீக் சுற்றில் இந்திய அணி அயர்லாந்து, நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் உக்ரைன் அணிகளுடன் விளையாடுகிறது. யூனிபர் யு-23 ஹாக்கி போட்டி தொடரில், நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.

    மேலும், மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு, அயர்லாந்து அணியை மீண்டும் எதிர்கொண்டது. இப்போட்டியில், இந்திய ஜூனியர் பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து, இன்று நடைபெறும் ஆட்டத்தில், நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தியா. அதன்பிறகு ஜூன் 22-ம் தேதி உக்ரைனை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.இறுதிப் போட்டி ஜூன் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

    • பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கம்யூனிட்டி மீல் ஷேர் குழுவினருடன் இணைந்து தே நீர் மற்றும் பன்கள் வழங்கினோம்.
    • உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடமோ அல்லது 1900 உதவி எண்ணுக்கோ போன் செய்யுங்கள்.

    கொழும்பு:

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக் கடி நிலவுகிறது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.400-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோசன் மகனாமா மனித நேயத்துடன் உதவிகளை செய்கிறார்.

    அவர் தேநீர் மற்றும் பன் கொடுத்து பரிமாறி உபசரித்துள்ளார். இதனை மகனாமா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பகிர்ந்துள்ளார்.

    பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கம்யூனிட்டி மீல் ஷேர் குழுவினருடன் இணைந்து தே நீர் மற்றும் பன்கள் வழங்கினோம். நாளுக்கு நாள் வரிசையின் நீளம் நீண்டு கொண்டே போகிறது. மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் வரிசையில் நிற்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு மற்றும் நீர் ஆகாரத்தை கையுடன் எடுத்து செல்லுங்கள். உங்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடமோ அல்லது 1900 உதவி எண்ணுக்கோ போன் செய்யுங்கள். இந்த கடின சூழலில் நம்மை நாம் தான் கவனித்தக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மகனாபானா 1986-முதல் 1999 வரையிலான காலக்கட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடினார். 213 ஒரு நாள் போட்டியிலும் 52 டெஸ்டில் விளையாடி உள்ளார். 

    • ரிஷப்பண்ட் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை.
    • ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    கராச்சி:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு 24 வயதான ரிஷப்பண்ட் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    முதல் 2 போட்டியிலும் தோற்றதால் இந்திய அணி தொடரை இழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் 3-வது மற்றும் 4-வது போட்டியில் தொடர்ந்து இழப்பில் இருந்து தப்பியது.

    தொடரை இழக்காமல் ரிஷப்பண்ட் விமர்சனத்தில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் அவரது பேட்டிங் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் 5 ஆட்டத்தில் 58 ரன்களை எடுத்தார். அவரது சராசரி 14.50 ஆகும்.

    இந்த மோசமான பேட்டிங்கால் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப்பண்டின் இடம் குறிந்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிக உடல் எடையுடன் இருப்பதால் விக்கெட் கீப்பிங் செய்வது பிரச்சினையாக இருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கால்பந்து வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



                                                                                                        டேனிஷ் கனேரியா

     ரிஷப்பண்டின் கீப்பிங் குறித்து பேச உள்ளேன். வேகப்பந்து வீரர்கள் பந்து வீசும் போது அவர் குனியாமல் நின்றுகொண்டே இருக்கிறார். அவர் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக செயல்பட முடியவில்லை. அவரது உடல்நலத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். முதலில் அவர் உடல் தகுதியுடன் இருக்கிறாரா?

    ரிஷப்பண்ட் தனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அல்லது விர்த்திமான் சஹாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ரிஷப்பண்டுக்கு ஓய்வு கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • அயர்லாந்து தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுடன் 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது.

    முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 48 ரன்னிலும், 4-வது ஆட்டத்தில் 82 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    தொடரை நிர்ணயம் செய்வதற்கான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் கூட்டாக கோப்பையை பகிர்ந்து கொண்டன.

    இந்திய அணி அடுத்து அயர்லாந்துக்கு சென்று இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி வருகிற 24- ந் தேதி அயர்லாந்து புறப்பட்டு செல்கிறது.

    முதல் போட்டி 26-ந் தேதியும், 2-வது ஆட்டம் 28-ந் தேதியும் டூப்ளின் நகரில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்வதில் இந்த தொடரும் முக்கிய பங்கு வகிக்கும்.

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியினரின் விளையாட்டு திறனை நேரில் பார்வையிடுவது, தேர்வு குழு தலைவரும், முன்னாள் வேகப்பந்து வீரருமான சேட்டன் சர்மாவும் வீரர்களோடு செல்கிறார். இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்க தொடரில் ஆடிய ரிஷப்பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு அயர்லாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இந்த தொடரில் ஆடவில்லை. காயத்தில் இருந்து குணமடையாததால் லோகேஷ் ராகுலும் ஆடவில்லை. இதனால் அயர்லாந்து பயணத்துக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த தொடரில் விளையாடும் ஒரே புதுமுக வீரர் ராகுல் திரிபாதி ஆவார். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

    ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), புவனேஷ்குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், அக்ஷர் படேல், உம்ரான் மாலிக். 

    ×