என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.
    • பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    யோகா என்றாலே நிறைய ஆசனங்களும், சில மூச்சுப் பயிற்சிகள், தியான முயற்சிகளும் என்று பொதுவாக வழக்கத்தில் உள்ளது. பண்டைய யோக விஞ்ஞானம் ஆழ்ந்த தத்துவங்கள், விதிகள், ஒழுங்குகள், விவரணைகள், தீர்வுகள், பயிற்சிகள் கொண்டதொரு அக தரிசனமாகும். அந்த பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான் ஆசனம். ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, உடலிறுக்கத்தை தளர்த்தவே ஆசனங்கள் பயிலப்படுகின்றன.

    ஆற்றல் உடலெங்கும் முழுமையாகப் பாயாமல் உள்ளுறுப்புகள், தசைகள் இறுகியிருக்கும். அந்த இறுக்கத்தை, ஆற்றல் முடிச்சுகளைக் கரைத்து, ஆற்றலைப் பாயச்செய்ய வேண்டும். நாம் இதனை சட்டெனச் செய்ய முடியாது, மென்மையாகவும், பொறுமையாகவும் இதனைச் செய்யபழக வேண்டும்.

    இறுக்கமான தசைகள் இயங்க, தன்னை தளர்த்திக்கொள்ள அதிக ஆற்றலைக் கோருகின்றன; அவை உடலின் பலத்தை அதிகம் எடுத்துக் கொள்கின்றன. ஆசனப்பயிற்சியின் பொழுது தசைகளை உணர்ந்து கவனமாகப் பயில்வதின் மூலமும், அதன் மீது கவனத்தைக் குவித்து சுவாசிப்பதன் மூலமும் நன்மைகள் வாய்க்கும்.

    இவ்வளவு நன்மைகளைக் கொடுக்கும் ஆசனம் யோகம் என்கிற பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான். ஒன்றின் முழுமையை அறிந்து கொள்ளாமல் அதன் ஒரு தனிப்பகுதியை மட்டும் மக்கள் பயின்று வருகின்றனர்.

    பதஞ்சலி போன்ற மகான்களின் வரையறையின்படி யோகத்திற்கு எட்டு அங்கங்கள், அதில் ஒரு அங்கம்தான் ஆசனம். உடலின் ஒரு அங்கத்தை மட்டுமே நாம் பயன்படுத்தினால் நாம் எவ்வாறு முழுமை பெற இயலாதோ அதுபோலவே இந்த யோகத்தின் ஓரிரு அங்கங்களை மட்டும் செயல்படுத்தினால் நமக்கு முழுமையில்லை. ஆனால் இப்பொழுது ஆசனங்கள் மட்டுமே யோகம் என்று பரவலாகிப் போன நிலையில் ஆசனங்களின் பலன்களைப்பற்றி பார்ப்போம்.

    ஆசனங்கள் உடலின் வெவ்வேறு மண்டலங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இயக்கவியல் மண்டலத்தில்..

    * எலும்பு அமைப்பை மேம்படுத்துகிறது.

    * மையத் தசைகளை வலுப்படுத்துகிறது.

    *முதுகெலும்பை நிமிர்த்தி உறுதிப்படுத்துகிறது.

    * தசை ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து அதன் மூலம் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தி நீட்டுகிறது.

    *இயக்க திறன்களை மேம்படுத்துகிறது

    இரத்த சுற்றோட்ட மண்டலத்தில்..

    * இரத்த ஓட்டம் மற்றும் உள் உறுப்புகளின் இரத்தத்தின் ஊடுருவலை மேம்படுத்துகிறது.

    *இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

    செரிமான மண்டலத்தில்..

    ஆசிரியர் ரகுராம் மெய்யோகம்

     * உள் உறுப்புகளை மசாஜ் செய்து அதன் மூலம் உறுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    * வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * செரிமானத் திறன் மற்றும் கழிவு நீக்கச் செயல்முறையைத் தூண்டுகிறது.

    மூச்சு மண்டலத்தில்..

    * மூச்சு மேலான விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.

    *காற்றுப் பாதைகளைத் திறக்கிறது.

    * மூச்சினை ஆழமாக்குகிறது மற்றும் மூச்சின் கொள்ளளவை மேம்படுத்துகிறது.

    * ஆழமாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் உடலில் அமிலத்தன்மையை மட்டுப்படுத்துகிறது.

    *உயிர்காற்றின் உட்பரவலை அதிகரிக்கிறது.

    நரம்பு மண்டலத்தில்..

    *நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

    *நரம்பு மண்டலத்து இறுக்கத்தை எளிதில் தளர்த்துகிறது.

    * நரம்புப் பாதைகளின் கடத்துந் திறனை மேம்படுத்துகிறது (உணர்வு மற்றும் இயக்க சமிக்ஞைகள் விரைவாக செயலாக்கப்படுகின்றன).

    மனம் மற்றும் உணர்வுச் சூழலில்..

    * மேம்பட்ட கவனக்குவிப்பு திறன்.

    * மேம்பட்ட அறிவாற்றல்.

    * மேம்பட்ட உடல் மேலான விழிப்புணர்வு.

    அறிவு மற்றும் நினைவுத் தளத்தில் ..

    விழிப்புணர்வு சார்ந்த மற்றும் தியானம் சார்ந்த படிப்படியாக பயிற்சியில் ஆசனங்களை ஒருங்கிணைக்கும் பொழுது, சமநிலை, நினைவாற்றல் மற்றும் தன்னைச் சரியாக அறிந்து வெளிப்படுத்துதல் நிகழ்வதால் அன்றாட வாழ்க்கையில், நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.

    ஆன்மிகத் தளத்தில்..

    * பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    * தன்னை அறிதலும், தனது மூலத்தை அறிந்து பின் இந்த பிறப்பு இறப்பு தளையிலிருந்து வெளியேறுதலுக்கான வழிகளும் புலப்படத் தொடங்கும்.

    வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலும் இந்த ஆசனங்கள் இந்தப்பலனைக் கொடுக்கும் என்கிற போக்கில் உள்ளது. ஆசனங்கள் உடலளவில் என்னென்ன செய்கிறது என்று பேசப்படுவதுபோல அதன் பின்னால் உள்ள உளவியல் காரணிகள் பேசப்படுவதில்லை.

    பொதுவாக ஆசனங்கள் உடலியலாக இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    முன்னோக்கிய வளைவுகள்

    பின்னோக்கிய வளைவுகள்

    பக்கவாட்டுச் சாய்வுகள்

    முறுக்கல் நிலைகள்

    தலைகீழ் நிலைகள்

    அமர்வு நிலைகள்

    முன்னோக்கிய வளைவுகள் - (உத்தானாசனா, மார்ஜரியாசனா, ஜானு சிரசாசனா)

    * உடற்கூறியல் பார்வையில், முன்னோக்கிய வளைவுகள் உடலின் பின்புறத்தினை நன்கு நீட்டுவிக்கிறது, கால்களின் பின்புறம் மற்றும் கீழ் முதுகில் உள்ள தசைச் சங்கிலிகள் யாவும் நன்கு நீட்டப்படுகின்றன.

    * முன்னோக்கி உடலை வளைக்கும் பொழுது, குறிப்பாக நின்ற மற்றும் அமர்ந்த நிலையில், வயிறு சுருங்குவதால் உள் உறுப்புகள் தீவிரமாக அழுத்தப்படுகின்றன. இந்த அழுத்தத்தால் அபான வாயு ஊக்கமாகச் செயல்பட்டு முறையாக கழிவு நீக்கம் நடக்கிறது.

    * உளவியலாக முன்னோக்கி ஒருவர் வளைவது பக்தி மற்றும் பணிவினைக்காட்டுகிறது. என் சிந்தனை, திட்டமிடல், நான்தான் பெரிது என்று செருக்கு மேலோங்காமல் நம்மை விட உயர்ந்த, நம் உயர்விற்கு அடிப்படையான ஒன்றின் முன் நாம் தலை வணங்கும் பண்பு நமக்கு வாய்க்கிறது.

    *அந்தச் செருக்கு கர்வம் நீங்கிய நிலையில், நாம் நம்மை ஆராய உட்சூழல் வழி செய்கிறது.

    * முன்னோக்கிய வளைவுகளை, முறைப்படி பயிலுகையில் மனம் மற்றும் ஆற்றல் அமைப்பில் குளிர்ச்சியும், அமைதியும் விளைகின்றன.

    பின்னோக்கிய வளைவுகள் - ( நடராஜாஸனா, உஷ்ட்ராசனா, கபோட்டாசனா)

    * பின்புறம் உடலை வளைப்பதால் அளவு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, முதுகெலும்பின் விறைப்பை, நீட்சியை உறுதிசெய்கிறது. இதனால் முதுகில் கூன் விழுவதும், முதுகுத்தண்டு சிக்கல்களும் குறைகின்றன.

    * பின்புறமாக உடலை வளைக்கும் ஆசனங்கள் ஆற்றல் அமைப்பில் கிளர்ச்சியையும், சுறுசுறுப்பையும், வெப்பத்தையும் உருவாக்குகின்றன; அவை மார்புப் பகுதியை விரிவாக்கி மூச்சினை ஆழப்படுத்துகின்றன.

    * பின்புற வளைவுகள் முதுகினை வலுவாக்க உதவுகின்றன, நேராக நிமிர்ந்து அமர்வதற்கான திறனை வளர்க்கின்றன.

    * நேராக அமர்வதால் நம்முள்ளே நாம் ஆழ்ந்து செல்ல வாய்க்கிறது மற்றும் வாழ்க்கையை உயர் இலட்சியங்களுடனும் நம்பிக்கையுடனும் நகர்த்த உதவுகிறது.

    * இதய வெளியில் ஒரு திறந்த உணர்வை உருவாக்கி, அன்பு, இரக்கம் போன்ற குணங்களை, தன்மீதும் பிறர்மீதும் கொள்ள வகை செய்கிறது.

    பக்கவாட்டுச் சாய்வுகள் - (திரிகோணாசனம், பார்ஸ்வ கோணாசனம், பரிகாசனம்)

    * பக்கவாட்டுச் சாய்வுகள், உடலை இடது வலதாக இரு திசைகளிலும் பயிற்சி செய்யப்படுவதால், அவை முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஆழமான முதுகு தசையை அழுத்தி நீட்டுகின்றன.

    * இந்த அழுத்தமானது நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், குடல் பாதை மற்றும் உதரவிதானம் போன்ற உள் உறுப்புகளைத் தூண்டுகிறது.

    * பக்கவாட்டுச் சாய்வுப்பயிற்சிகள் முதுகெலும்பு மற்றும் உடற்பகுதியின் பல ஏற்றத்தாழ்வுகளை, சமச்சீரற்ற தன்மையை சரிசெய்து தோற்றத்தைச் சீராக்கும்.

    * பக்கவாட்டுச் சாய்வுகளின் எதிரெதிர் இயக்க விசைகளின் காரணமாக, விழிப்புணர்வு உடலின் உள் அச்சுக்கும் மனத்தின் உள் மையத்திற்கும் செல்வது ஆழமாகிறது.

    *பக்கவாட்டுச் சாய்வுப் பயிற்சிகள் சமான வாயுவைத் தூண்டி செரிமானத்தை சீராக்க உதவுகின்றன.

    முறுக்கல் நிலைகள் - (மத்ஸ்யேந்திராசனம், மேரு வக்ராசனம், சர்பாங்காசனம்)

    *முதுகெலும்புகள் தனது நீளமான அச்சை மையமாகக் கொண்டு இரு திசைகளிலும் சுழல்கிறது. உடல் தொடர்ந்து அதன் சுழலும் திறனை இழப்பதால், முதுகெலும்பினை முறுக்கும் நிலைகளை தொடர்ந்து பயிற்சி செய்வது முக்கியம்.

    * முறுக்கல் பயிற்சிகள் தோற்றத்தைச் சரிசெய்கின்றன, உடலின் இடது வலது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றன.

    *முறுக்கல் பயிற்சிகள் உடலை ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிப்பு செய்கின்றன. செரிமானத்தைத் தூண்டி, உணவை ஆற்றலாக மாற்றுவதில் உதவுகின்றன.

    * உடலின் வலது பக்கம் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்க, தீவிரமான அறிவுசார் பக்கமான இடது மூளையுடன் தொடர்புடையது, உடலின் இடது பக்கம் நமது உள்ளுணர்வு, உணர்ச்சி, குளிர்ச்சி, கற்பனை மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்களுடன் தொடர்புடையது. இந்த முறுக்கல் பயிற்சிகள் உள்மையத்தை நோக்கி நம்மைத் திருப்புவதால் உணர்வு/அறிவு சமநிலையை உண்டாக்குகின்றன.

    தலைகீழ் நிலைகள் - (சிரசாசனம், சர்வாங்காசனம், அதோமுக ஸ்வநாசனம்)

    * தலைகீழ் நிலையில் இதயம் தலைக்கு மேலே இருக்கும். இந்நிலையில் ஆழமான, மெதுவான வயிற்று சுவாசம், உதரவிதானம் உள்ளிட்ட உறுப்புகளை பின்னுக்குத் தள்ள அனுமதிக்கிறது, இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * தலைகீழ் பயிற்சிகள் கால்களிலிருந்து நிணநீர் திரவம் திரும்புவதை ஊக்குவிக்கின்றன, இது வீங்கிய பருத்த கால்களுக்கு நன்மை பயக்கும்.

    * இந்தத் தலைகீழ் மாற்றத்தினால் உடல் புத்துணர்வு கொள்வதுபோல, நமது பார்வையும் கண்ணோட்டமும் மாறி மாறுபட்டு நம்மால் சிந்திக்க இயலும். மனதிலும் பெரிய மாற்றம் வாய்க்கும்.

    அமர்வு நிலைகள் - (பதுமாசனம், சித்தாசனம், வஜ்ராசனம்)

    * மேற்கண்ட பல ஆசன நிலைகளில் பயிற்சியை நிறைவு செய்தபின்னர் தியானத்திற்கென அமர்வு நிலைகள் உள்ளன.

    * இது உடலைத் தளர்த்திச் சீராக்கவும், மனதை உள்முகமாகத் திருப்பி அகமுகமாகச் சாதனை செய்யவும் உதவுகின்றன.

    பண்டைய யோக தத்துவ வரையறையின்படி, யோகா என்ற சொல் ஒன்றுதலை, இணைதலைக் குறிக்கிறது. தன்னை அறிதலின் மூலம், தன் மூலத்தை அறிதலின் மூலம் அந்த ஒன்றுதல் நடக்கிறது. ஒன்றுதலின் மூலம் மனவளமும் உணர்வு வளமும் முதலில் வாய்க்கிறது. பின்னர் உயர்ந்த நிலையான முக்தி வாய்க்கிறது. இந்த செயைலச் செய்ய தியான உணர்வைப்பெற வேண்டும். அதற்கு உடலைப்பக்குவப்படுதவே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    ஆக யோக சாதனையில் ஆசனப்பயிற்சிகளின் முதல் நோக்கம் ஆசன சித்தி - இதன் மூலம் ஒருவர் நெடுநேரம் அமர்ந்து தியானிக்கலாம்.

    இரண்டாம் நோக்கம் அங்க இலாகவம் - இதன் மூலம் ஒருவர் உடலில் ஆற்றல் தங்குதடையின்றிப் பாய்கிறது.

    மூன்றாம் நோக்கம் தாதுக்களின் வலிமை - இதன் மூலம் ஒருவர் உடலை நோயிலிருந்து தடுக்கிறார்.

    முதல் நோக்கத்தை ராஜ யோகம் என்றும், மற்ற நோக்கங்களை அடையும் வழியை ஹத யோகம், க்ரியா யோகம் என்றும் அழைப்பது மரபு.

    செல்: 70107 77127

    • நடுவிரலை அல்லது உயரமான விரலை சனி விரல் என்போம் அதற்கு கீழே தான் சனி மேடு உள்ளது.
    • ஆள்காட்டி விரலை குரு விரல் என்போம். அதற்கு கீழே இருப்பது தான் குரு மேடு.

    கடந்த வாரம் கைரேகைகள் குறித்து பார்த்தோம். இப்போது கைகளில் உள்ள கிரக மேடுகள் குறித்து பார்ப்போம்....

    நமது கையில் உள்ள ஐந்து விரல்களில் கட்டை விரல் ஆகாயத்தை குறிக்கிறது. சுண்டு விரலை புதன் விரல் என்போம், அதற்கு கீழே புதன் மேடு இருக்கும். ஆக, சுண்டு விரலில் இருந்து ஆள்காட்டி விரல் வரையில் உள்ள நான்கு விரல்களும் முறையே புதன் விரல், சூரிய விரல், சனி விரல், குரு விரல் என்று அறிக. அதற்கு கீழே இருக்கும் சிறு பகுதிகள் புதன் மேடு, சூரிய மேடு, சனி மேடு, குரு மேடு என்று அறிக. இது கைரேகை சாஸ்திரத்தின் அடிப்படை.

    புதன் மேடு:

    புதன் மேட்டை கொண்டு ஒருவரது அனுபவ அறிவு, வியாபாரத்தில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு, கலைதுறையில் அவருக்கு இருக்கும் ஆற்றலை அறிந்து கொள்ளலாம்.

    சூரிய மேடு:

    மோதிர விரலை சூரிய விரல் என்போம். அதற்கு கீழே தான் சூரிய மேடு உள்ளது. சூரிய மேட்டை கொண்டு ஒருவர் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் புண்ணிய காரியங்கள் பூர்வீக சொத்துகள் சம்மந்தமான ரகசியங்கள் ஆன்மீகத்தில் ஒருவருக்கு இருக்கும் ஈடுபாடு போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

    சனி மேடு:

    நடுவிரலை அல்லது உயரமான விரலை சனி விரல் என்போம் அதற்கு கீழே தான் சனி மேடு உள்ளது. சனி மேட்டை வைத்து ஒருவர் வாழ்வில் ஏற்பட இருக்கும் அனுபவம், சமூக அந்தஸ்து, கடன், வியாதிகள் போன்றவற்றை பற்றிய ரகசியங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

    குருமேடு:

    ஆள்காட்டி விரலை குரு விரல் என்போம். அதற்கு கீழே இருப்பது தான் குரு மேடு. ஒருவரது குரு மேட்டை கொண்டு ஒருவருக்கு வர இருக்கும் வரவுகள், செல்வ நிலை செல்வாக்கு, அரசு ஆதரவு, பதவிகள் பாராட்டுக்கள் போன்ற அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

    சுக்கிரமேடு:

    இவை தவிர ஆயுள் ரேகையை ஒட்டிய பகுதியை சுக்கிர மேடு என்பர். அதாவது கட்டை விரலுக்கு கீழே உள்ள பகுதி. சுக்கிர மேட்டை கொண்டு ஒருவரது கலைதிறன் காதல் விவகாரங்களில் ஒருவர் காட்டும் தீவிரம். எதிர்பாராத விதத்தில் பொருள் சேர்த்தல் நல்ல புத்தி நல்ல சிந்தனை போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.

    சந்திரமேடு:

    சுக்கிர மேட்டிற்கு நேர் எதிரே அந்த பக்கம் இருப்பது சந்திர மேடு. சந்திர மேட்டை கொண்டு ஒருவரது கற்பனை திறன் கவிதை திறன் காதல் விவகாரங்களில் அவர்கள் காட்டும் தீவிரம். அவருக்கு கிடைக்க இருக்கும் அதிர்ஷ்டம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    அ.ச.இராமராஜன்


    செவ்வாய்மேடு:

    செவ்வாய் மேடு... கீழ் செவ்வாய் மேடு - மேல் செவ்வாய் மேடு என்று இரு மேடுகளாய் பிரிந்து இருக்கும். மேல் செவ்வாய் மேட்டை கொண்டு ஒருவரது லட்சியம், பணம் சம்பாதிக்கும் திறமை, எதிர்காலத்தில் உடல் ரீதியான. பிரச்சினைகள், சொத்துக்கள், அரசு ஆதாயம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    கீழ் செவ்வாய் மேட்டை கொண்டு ஒருவரது தைரியம், ஆளுமை திறன், மனநிலை, ஒருவருக்கு ஏற்பட இருக்கும் விபத்துக்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உடலியல் ஆசைகள் போன்ற அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

    ராகு மேடு:

    ராகு மேட்டை கொண்டு ஒருவரது சரீர சுகங்களில் காட்டும் அளவு கடந்த ஈடுபாடு, திடீர் என்று ஏற்படும் விபரீத ராஜயோகம், பெரிய மனிதர்களின் ஆதரவு, வீரம், எதிரிகளை சமாளிக்கும் திறமை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

    கேது மேடு: கேது மேட்டை கொண்டு ஒருவரின் உழைக்கும் திறன், வாழ்வில் ஒருவர் பெறும் மகிழ்ச்சி, ஒருவரின் தனிப்பட்ட இயல்புகள், ஒருவரின் மன அலைகள் எண்ணங்கள், பகுத்தறிவு போன்ற அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.

    அதே போல ராகு / கேதுக்களுக்கு உரிய மேடும் கூட மேலே காட்டப்பட்டு உள்ளது. இப்படியாக 9 கிரகங்களின் மேடுகளும் மேலே காட்டப்பட்டு உள்ளது.

    கிரக மேடுகள் என ரேகை சாஸ்திரத்தில் சொல்லப்படுபவை ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றதை கணிப்பதை போன்றதாகும். உதாரணம்: சூரிய மேடு உப்பி பலமாக இருந்தால் சூரியன் பலமாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் அதில் கருப்புப் புள்ளிகள் ஏதும் இல்லாத பட்சத்தில் அரசு ஆதாயம் உண்டு என்று பலன் கூற வேண்டும். இதன் படிப் பார்த்தால் கைகளில் கிரக மேடுகள் பலமாக இருக்க, இருக்க அந்தக் கையின் சொந்தக் காரருக்கு அதனால் யோகம் உண்டு என்று பலன் கூற வேண்டும்.

    இதே போல, இன்னொரு உதாரணம் ஒருவருக்கு சுக்கிரன் அவர் சொந்த ஜாதகத்தில் கெட்டு இருக்கும் பட்சத்தில் அந்த நபரின் உள்ளங்கையில் சுக்கிர மேடு தாழ்ந்து அதிக குறுக்குக் கோடுகளுடன் காணப்படும். சுக்கிர மேடு ஒருவருக்கு கெட்டு இருந்தாலோ அல்லது அதில் நிறைய கரும் புள்ளிகள் இருந்தாலோ பொருளாதார ரீதியாக நன்மையான பலன்கள் கிட்டாது. அது மட்டும் அல்ல அவரது குடும்ப வாழ்வு கடுமையாக இருக்கும் என்கிறது கைரேகை சாஸ்திரம்.

    நல்ல சுக்கிர மேடு என்பது (அதாவது கட்டை விரலுக்கு கீழ் உள்ள மேடு) நன்கு பருத்து சின்னச் சின்ன கோடுகள் இன்றித் தூய்மையாகக் காணப்படும். கிரக மேடுகள் நன்கு பருத்து இருக்க... இருக்க... அதிலும் அதிக கோடுகள் இன்றித் தூய்மையாக இருக்கும் பட்சத்தில் அந்தந்த கிரகங்களால் நன்மை உண்டு.

    செல்: 9965799409

    • வேளாண்மையில் இயந்திரமுறையைப் புகுத்தி அதீத விளைச்சல் காணும் முறையை பரவலாக்கி வந்தார்கள்.
    • உணவு விற்பனைக் கடுமையாக பாதித்து விடும் என்று எந்த உணவகத்தாரும் உணவை சும்மா கொடுக்கமாட்டார்கள்.

    கோதுமை. 1960 வரை தமிழகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் ஓர் அந்நிய உணவுப் பொருளாகவே இருந்தது. அவ்வாண்டுகளில் அமெரிக்கா போன்ற பெருநிலப்பரப்பில் அதீத கோதுமை விளைச்சல் இருந்தது. அதுவும் அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முந்தைய பலப் பத்தாண்டுகளிலும் தான் அந்நாட்டின் மரபார்ந்த வேளாண்முறையில் இருந்து மாறுபட்டு நெல், மக்காச்சோளம், பருத்தி, கோதுமை ஆகியவற்றை மட்டுமே விளைவிக்கும் முறைக்கு மாறியிருந்தார்கள்.

    அதுவும் வேளாண்மையில் இயந்திரமுறையைப் புகுத்தி அதீத விளைச்சல் காணும் முறையை பரவலாக்கி வந்தார்கள். ஆகையால் கோதுமை விளைச்சல் அவர்களது உணவுத் தேவைக்கு மிகுதியாகவும், வணிகத்தில் விற்றுத் தீர்க்க முடியாத அளவிற்கு மித மிஞ்சியும் இருந்தது. அவ்வாறு மிஞ்சியதை சேமித்துப் பாதுகாத்து வைப்பதே பெரும் பொருட்செலவு மிக்கதாக இருந்தது.

    ஆகவே மிகுந்து விட்ட பல லட்சம் டன் கணக்கான கோதுமையை கப்பல் கப்பலாக ஏற்றிக் கடலில் கொண்டுபோய்க் கொட்டுவது என்று முடிவுசெய்தது, அமெரிக்க அரசாங்கம். கொட்டவும் செய்தது. நாடுகள் பலவற்றில் மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் வாடிக் கொண்டிருக்க கோதுமையைக் கடலில் கொட்டப்படுவதை பலநாடுகள், உலக சமூகம் கண்டித்தது. குறிப்பாக ஐக்கியநாடுகள் சபை கோதுமையை பயனுள்ள வகையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறு வலியுறுத்தியது.

    இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுறுத்திப் பார்க்க வேண்டும். அன்றாடம் உணவகங்களில் விற்பனைக்காக உணவுகள் சமைத்து வைக்கிறார்கள். மீந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். உடனே அக்கம் பக்கம் உள்ள உணவற்ற ஏழை மக்கள் உண்பதற்காகக் கொடுப்பார்கள். அவ்வாறு கொடுத்தால் தினசரி அப்படிக் கொடுக்கப்படும் உணவுகளைப் பெறுவதற்கே ஒரு கூட்டம் கூடி விடும், அதைச் சமாளிப்பதே பெரும்பாடு, போக காசுகொடுத்து சாப்பிடுவதை விட விற்பனை முடிந்த பிறகு சும்மா கொடுக்கும் உணவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று காத்திருக்க ஒருசாரார் தயாராகி விடுவார்கள்.

    உணவு விற்பனைக் கடுமையாக பாதித்து விடும் என்று எந்த உணவகத்தாரும் உணவை சும்மா கொடுக்கமாட்டார்கள். அனாதை இல்லங்களுக்கும் கூட அனுப்பி வைக்க மாட்டார்கள். வணிகர்களுக்கு சமூகப் பயன்பாடு அக்கறை இருக்காது. வணிக மனம் மேலும் மேலும் காசுபார்ப்பது குறித்து மட்டுமே சிந்திக்க முடியும். அப்படியான எண்ணப் போக்குதான் அமெரிக்க அரசாங்கத்திடமும் உருவானது. ஏனென்றால் அமெரிக்காவானது இன்றுவரை பெரும் வணிக நாடு.

    அதனால் தான் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அவ்வளவு செல்வ வளம் மிக்க நாடாகத் திகழ்கிறது. அதே நோக்கத்துடன் தான் கோதுமையைக் கடலில் கொண்டுபோய்க் கொட்டியது. உலக மக்களின் கண்டனக் குரலுக்குச் சற்றே பணிந்து இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டது. அதன் பின்னணியிலும் இந்தியாவிடம் வேறுசில லாபக் கணக்கு வைத்திருக்கும் என்பதை நாமிங்கு சொல்ல வேண்டியதில்லை. அதுதனி. அவ்விதமாக அனுப்பப்பட்ட கோதுமையைத் தான் அப்போது பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருந்த மதிய உணவுத் திட்டத்திற்கு தமிழக அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. அப்போது தான் முதன் முதலாகத் தமிழகத்து மக்கள் கூட அல்ல, பள்ளிக் குழந்தைகள் கோதுமை உணவை சாப்பிடத் துவங்கினார்கள்.

    இன்று நமக்கு கோதுமை என்றதும் சப்பாத்தி தான் நினைவிற்கு வரும். ஆனால் அன்று பள்ளியில் கொடுக்கப்பட்ட கோதுமை உணவோ வெறும் கோதுமைச் சோறு. ஆம் அரிசியில் எப்படிச் சோறு சமைக்கிறோமோ அதுபோல கோதுமையை உடைத்துப் புழுங்கல் ஆக்கி அதனை உப்புப் போட்டு வேகவைத்தால் போதும் மென்று தின்னும் அளவிற்குச் சோறாகி விடும். அப்படித் தான் கோதுமைச் சோறாக்கி பள்ளி மதியவுணவில் பிள்ளைகளின் தட்டுகளில் போட்டார்கள். நானெல்லாம் ஆரம்பப் பள்ளிகளில் கோதுமைச் சோறும், மக்காச்சோள ரவை உப்புமாவும் சாப்பிட்டு வளர்ந்தவன் தான்.

    அமெரிக்காவில் இருந்து கோதுமை, மக்காச்சோளம், சோயா எண்ணை போன்றவை நமக்கு ஏற்றுமதி ஆவது நாளடைவில் குறைந்து நின்று விட்டது. ஆனால் தமிழ்ச் சமூகம் 1970 களின் முற்பகுதியில் 1973, 74 காலகட்டத்தில் மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட வறட்சி, உணவுப் பற்றாக்குறைக் காலத்தில் அரிசி விளைச்சலும், தானிய விளைச்சலும் இல்லாமல் உண்ண உணவு இன்றித் தவித்தனர். அவ்வாண்டுகளில் பொதுவிநியோகக் கடைகளில் (ரேசன் கடை) அரசு கோதுமையைத் தனது மத்திய தொகுப்பில் இருந்து அளித்தது. அப்போது அளிக்கப்பட்ட கோதுமை புழுங்கல் அல்ல, பச்சை. எனவே அதனை சோறாக ஆக்க முடியாது. ஆகவே மாவாகத் திரித்து, சப்பாத்தி, தோசை, கோதுமைப் புட்டு என மக்கள் விதவிதமாகச் சமைத்து உண்டார்கள். அப்படித்தான் கோதுமை இங்கு பரவலாகியது.

    போப்பு


    சப்பாத்தியை அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது உண்கிறப் பழக்கம் உள்ள நம்மில் பலரும் கோதுமை வயலைக்கூடப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அது தென்னிந்தியாவில் விளைகிற தானியமே அல்ல. கோதுமை விளைச்சலுக்கு வெயில் ஆகாது. சப்பாத்தி உண்டால் எப்படி நமக்கு அடிக்கடித் தண்ணீர் தவிக்குமோ அதுபோல கோதுமைப்பயிருக்கு, நெல்லைப் போல தண்ணீரைக் கட்டி வைக்க முடியாது, அவ்வப்போது விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மேலே சுள்ளென்ற வெயிலும் ஆகாது. அது மிதமான வெப்பச் சூழலில் விளைவிக்கும் தானியமாகும்.

    ஆனால் கோதுமையை உண்டால் அவ்வளவாகப் பசி தெரியாது. வருடத்தில் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் குளிர்ச்சி நிலவும் வட இந்திய மாநிலங்களில் தான் கோதுமை விளைச்சலும் அதிகம், பயன்பாடும் அதிகம். பொதுவாகவே ஒரு நிலப்பகுதியில் என்ன பொருள் விளைகிறதோ அதுதான் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் உடலுக்குப் பொருத்தமான உணவாக இருக்கும். ஏனென்றால் அப்பகுதியில் நிலவும் தட்ப வெப்பத்திற்கு ஏற்ற வகையில் விளைவிக்கப்படும் உணவு வகைகளையே ஏற்கும் தன்மையை இயற்கை நம் உடலுக்கு அளிக்கிறது. நம்முடைய வளர்சிதை மாற்ற உடலமைப்பும், செரிமானத் தன்மையும் அதையொட்டியே தகவமைக்கப்பட்டிருக்கும்.

    கோதுமை இங்கே அறிமுகம் கண்டபோது மக்கள் கடும் மறுப்புணர்வுடனே அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அது தரும் உடல் உபாதைகள் அப்படி. கோதுமைச் சப்பாத்தியை உண்டு பழக்கமற்ற நம் மக்களுக்கு அதனை உண்டால் உடல் வலி, மலச்சிக்கல், அதீத நாவறட்சி என அதுவரை எதிர்கொண்டிராத பல உடல் உபாதைகளைச் சந்தித்து அவதியுற்றனர். ஆனால் வானம் பொய்த்து வழக்கமான தானிய விளைச்சலற்ற காலங்களில் வேறுவழி…. உயிர் பிழைத்திருக்க வேண்டுமேயென மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டு கொஞ்சங்கொஞ்சமாகப் பழகிக் கொண்டனர்.

    கோதுமை நம்மூர் உணவாக பழக்கத்திற்கு வந்து விட்டாலும் நாமெல்லோரும் அடிக்கடி அதனை உண்பதில்லை. நகரவாசிகளேக் கூட வாரத்தில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே ஒருவேளைக்கு விசேச உணவாக தடபுடலான மசாலா குருமா வைத்து அதன் தயவில் தான் உள்ளே கொண்டு செலுத்துகிறார்கள். அதிலும் கூடச் சப்பாத்திக்கு மாவு பிசையும் போது எண்ணை, முட்டை, பால் என்று பண்டத்தை மிருதுவாக்குவதற்காக அவரவர் பேரறிவிற்கு எட்டிய வகையில் நிறையத் துணைப்பொருட்கள் சேர்க்கின்றனர். இன்று நமது மண்டபத் திருமண விருந்தில் உங்களை அசத்துகிறேன் என்று புல்கா, நான் என்று விதவிதமாகச் சமைத்து தொட்டுக் கொள்ள பன்னீர் மசாலா, சென்னா மசாலா என்று சேற்றைப் போல சொதசொதவென்று முந்திரிப் பருப்பு, தேங்காய் போன்றவற்றைப் போட்டு அரைத்து கலர்ப்பொடியைக் கலந்து மிரட்டலான ஒன்றைத் தொடுகறியாக வைக்கிறார்கள்.

    அதை உண்பவர்களுக்கு வயிற்றால் போவது, வயிறு உப்புசம், ஏப்பம் என்று என்னென்னவோ முன்பின் விளைவுகள் ஏற்படுகின்றன. உணவினைச் சிறப்பாகச் செய்ய விரும்புவோர் யாரும் இன்று உண்கிற மக்களைப் பற்றியும், அவர்களது உடல் நலனைப் பற்றியும் கவனத்தில் கொள்வது கிடையாது. அதனை எப்படி ஆடம்பரமாக அலங்காரமாகச் செய்வது என்றுதான் மெனக்கெடுகிறார்கள். தொடர்ந்து நம்முடைய மரபான உணவுவகைகளுக்கு மாறானவற்றையே உண்பதால் தான் நம்மில் பலருக்கும் செரிமானம் – மலம் கழித்தல் தொடர்பான பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன.

    பொருள் போக்குவரத்தும் ஊடக வழிச் செய்திகளும் பரவலாகி விட்ட இன்றைய காலகட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒருமூலை உணவும் கூட நாம் சுவைத்துப் பார்க்கும் உணவாகி விட்டது. ஆனால் இவை எவற்றிலும் நம்முடைய உடலின் ஏற்புத் திறன் குறித்த அடிப்படையான பார்வை கூட இல்லை. இது பெரிதும் வருந்தத்தக்க விசயம் ஆகும். நம்முடைய உடல்சார் தொல்லைகளுக்கு உணவு குறித்த நம்முடைய கண்ணோட்டமும் முக்கியமான காரணம் ஆகும். கோதுமையை உணவாக ஏற்றுக் கொள்வது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அதனைச் சமைக்கும் முறையில் நமக்குச் சற்றுக் கூடுதல் கவனம் இருந்தால் அதனை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் தயாரித்துக் கொள்ள முடியும். சொல்லப்போனால் அதனை மருந்துணவாகக் கூட எடுத்துக் கொள்ள முடியும்.

    தொடர்ந்து சுவைப்போம்... 

    செல்- 96293 45938

    • 1954இல் புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்க வேண்டும் என ஒரு பேரியக்கம் உருவாயிற்று.
    • புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்குவதற்கு மன்னர் மன்னனும் ஒரு காரணம் எனலாம்.

    தமிழறிஞர் மன்னர்மன்னன் புதுவைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் கருத்து உரைஞராகப் பணியாற்றியவர்.

    பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே புதல்வர் என்ற பெருமைக்கு உரியவர். அவையத்து முந்தி இருக்கச் செய்த தம் தந்தை வழியை எழுத்திலும் தொடர்ந்த வாரிசு. தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற தம் தந்தையைப் போலவே தாமும் அளவற்ற மொழிப் பற்றுடன் வாழ்ந்தவர்.

    தமிழறிஞரும் இதழியலாளரும் எழுத்தாளருமான மன்னர்மன்னனுக்கு தந்தையின் சாயல் தென்படும் முகம். முகத்திற்குக் கீழே உள்ள மீசையிலும் சரி, மூளைக்குள் பதிந்துள்ள கருத்துகளிலும் சரி, தந்தையின் தீவிரத் தாக்கம். முழுமையாகத் தந்தையின் தாக்கம் பெற்ற இத்தகைய புதல்வர்கள் அபூர்வம் என்றே சொல்ல வேண்டும்.

    கண்களில் தந்தையைப் போன்றே கண்ணாடி. அந்தக் கண்ணாடியால் பார்க்கும் கண்பார்வை மட்டுமல்ல, சமுதாயத்தைப் பார்க்கும் சமூகப் பார்வையும் கூட அப்பாவுடையதே போன்ற பகுத்தறிவுப் பார்வைதான்.

    பாவேந்தர் பாரதிதாசனைப் பாராதவர்கள் அவர் புதல்வரான மன்னர்மன்னனைப் பார்த்தால் பாவேந்தர் தோற்றத்தில் இப்படியேதான் இருப்பார் என்று புரிந்து கொள்ளலாம்.

    பாரதிதாசனைப் பிரதியெடுத்தது போன்ற மன்னர்மன்னனின் தோற்றம் பாரதிதாசனைப் பார்த்தவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தும்.

    கொள்கையில் மட்டுமல்லாமல், எழுத்து, பேச்சு, இதழியல் ஆர்வம் என அனைத்திலும் தம் தந்தையைப் போன்றே வாழ்நாள் முழுதும் பிடிப்புக் கொண்டிருந்தார்.

    1944இல் முரசு என்றொரு கையெழுத்து இதழ் நடத்தினார். மன்னர்மன்னனின் முரசு மன்னர் முரசாக இல்லாமல் மக்கள் முரசாகத்தான் ஒலித்தது. மொழிப் பற்று தேவை என்பதை அந்தக் கையெழுத்து இதழ் முரசறைந்து பேசியது.

    அது மட்டுமல்ல, வாழ்வில் அவசியம் கைக்கொள்ள வேண்டிய பற்பல விழுமியங்களை அது முன் நிறுத்தியது. முக்கியமாக இந்திய தேசத்தின் விடுதலைக்காக அது அச்சமற்றுத் துணிச்சலாக ஓங்கிக் குரல்கொடுத்தது.

    மோசிகீரனார் முரசு கட்டிலில் அயர்ந்து துயின்றபோது, அந்தத் தமிழ்ப் புலவருக்குக் கவரி வீசும் பெருந்தன்மை சங்ககாலத்தைச் சார்ந்த தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனுக்கு இருந்தது எனத் தமிழ் இலக்கிய வரலாறு சொல்கிறது.

    ஆனால் மன்னர்மன்னனின் பத்திரிகையான முரசை சகித்துக் கொள்கிற சகிப்புத் தன்மை பிரஞ்ச் அரசுக்கு ஒருசிறிதும் இருக்கவில்லை. மன்னர்மன்னன் அரசுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து எழுத்தில் வெளியிட்டு வருகிறார் என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

    கவிஞர் தமிழ்ஒளியுடன் இணைந்து மன்னர்மன்னன் அந்த இதழை வெளியிட்டு வந்ததால், தமிழ் ஒளிமேலும் குற்றம் சாட்டப்பட்டது.

    இருவரில் மன்னர்மன்னனுக்கு அப்போது பதினான்கு வயதுதான் என்பதால் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். அதன்பின் கோபதி என்ற தம் இயற்பெயரை மாற்றிக் கொண்டு மன்னர்மன்னன் என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார்.

    இப்படி ஒருமுறையல்ல, பலமுறை மன்னர்மன்னன் மீது குற்றம் சாட்டப்படுவதும் அவர் நீதிமன்றம் செல்வதும் வழக்கமாயிற்று. எதன் பொருட்டும் மன்னர்மன்னன் தம் துணிச்சலை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை.

    1947 இல் பிரஞ்ச் ஆட்சியினரை எதிர்த்து மாணவர் இயக்கங்கள் நடைபெற்றன. ஏற்கெனவே தீராத விடுதலை வேட்கை கொண்டிருந்த மன்னர் மன்னன், அந்த இயக்கங்களில் தீவிரமாய்ப் பங்கு கொள்ளலானார். பல ஊர்வலங்களுக்கு அவர் தலைமை வகித்தார்.

    அண்ணாதுரை தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுவை மாநிலக் கிளையை 1949இல் தோற்றுவித்த ஐவரில் தமிழறிஞர் மன்னர்மன்னனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் கிருஷ்ணன்


    1954இல் புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்க வேண்டும் என ஒரு பேரியக்கம் உருவாயிற்று. விறுவிறுவென்று பரவிய அந்த இயக்கத்தில் மனம்விரும்பிப் பங்கேற்று அந்த இயக்கத்திற்கு வலிமை சேர்த்தார் மன்னர் மன்னன். இன்று புதுவை ஒரு தனி மாநிலமாக விளங்குவதற்கு மன்னர் மன்னனும் ஒரு காரணம் எனலாம்.

    1965இல் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தோன்றியது. தீ பரவுவதுபோல் எல்லா ஊர்களிலும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் பேரணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

    அந்தக் கிளர்ச்சியில் பங்கேற்றார் மன்னர்மன்னன். அரசு அவரைக் கைது செய்தது. மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டதன் பொருட்டு மன்னர்மன்னன் 45 நாள் சிறைவாசம் செய்ய நேரிட்டது.

    சிறைவாசத்தை அவர் பொருட்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, அதன்பொருட்டு அவர் தனிப் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.

    தமிழ் முரசு இதழில் துணையாசிரியர், வானம்பாடி என்ற சிறுவர் இதழின் ஆசிரியர், வழிகாட்டி என்ற சமுதாயச் சீர்திருத்த இதழின் ஆசிரியர் என இவரது இதழியல் பணிகள் இன்னும் பல.

    வாழ்நாள் முழுதும் ஏராளமான வார மாத இதழ்களில் பொதுவாகவும் தம் தந்தையின் இலக்கியம் தொடர்பாகவும் நிறையக் கட்டுரைகள் எழுதி வந்தார். பல மாத இதழ்களின் தீபாவளி மலர்களை இவரது கட்டுரைகள் தொடர்ந்து அலங்கரித்தன.

    சுயமரியாதை நிறைந்த இவர் எந்தப் பெருமையையும் தேடிச் செல்லவில்லை. என்றாலும் பல பெருமைகள் தாமே இவரைத் தேடிவந்தன.

    தமிழ்நாடு தமிழ்க் கவிஞர் மன்றக் கேடயம், பாரதி நூற்றாண்டு விழாப் பட்டயம், இயற்றமிழ்ச் செல்வர் பட்டம் போன்ற பல பெருமைகளை இவர் பெற்றார். உயர்தரத் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

    சிறந்த மரபுக் கவிஞரும் கூட. தம் தந்தையான பாரதிதாசனைப் போலவே ஓசை நயத்தோடு இலக்கணம் பிறழாமல் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் நிறைந்தவர். பல கவியரங்கங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.

    மேடைகளில் தங்கு தடையின்றிப் பழந்தமிழ் இலக்கியம் குறித்தும் பாவேந்தர் இலக்கியம் குறித்தும் ஒருமணி நேரத்திற்கு மேல் பேசக் கூடிய சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர்.

    பாரதிதாசனைப் பற்றி யாரும் அறிந்திராத புதிய புதிய தகவல்களைத் தம் பேச்சினிடையே அவர் சொல்லிக் கைதட்டல் பெறுவதுண்டு.

    மன்னர்மன்னன் பலதுறை சார்ந்து மொத்தம் பதினாறு நுல்களை எழுதியிருக்கிறார். பழந்தமிழில் மட்டுமல்லாமல், நவீன இலக்கியத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதன் வெளிப்பாடாகப் பற்பல சிறுகதைகள் எழுதினார். அவை `நெஞ்சக் கதவுகள்` என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.

    கச்சிதமான வடிவ நேர்த்தியோடு கூடிய சிறந்த இலக்கியக் கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    நாடக ஆசிரியர். பற்பல வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார். நாடக நடிகரும் கூட.

    புதுச்சேரி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். பின்னர் சென்னை வானொலி நிலையத்திலும் பணியாற்றினார். தம் இருபதாண்டு கால வானொலிப் பணியில் பல உயர்பதவிகளை வகித்தார். வானொலி மூலம் தமிழறிஞர்கள் பலரின் புலமை வெளிப்படக் காரணமாக இருந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    `கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்` என்ற தலைப்பில் தந்தையைப் பற்றி எழுதி தமிழக அரசின் பரிசைப் பெற்ற வாழ்க்கை வரலாற்று நூலைத் தம் மனைவி திருமதி சாவித்திரியின் நினைவுக்குத்தான் காணிக்கை ஆக்கியிருந்தார். பாவேந்தர் பற்றிய படிக்கப் படிக்கத் திகட்டாத அழகிய சொற்சித்திரம் அது.

    பாரதிதாசனின் இலக்கியம் குறித்து அவர் எழுதிய `பாவேந்தரின் இலக்கியப் பாங்கு` என்ற நூல் புதுவை அரசின் பரிசைப் பெற்றது. புதுவை சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகளை `நிமிரும் நினைவுகள்` என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

    தம் தந்தையின் புகழைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டிருந்தார். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பாரதிதாசனின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டார்.

    `பாவேந்தர் படைப்புப் பாங்கு, பாவேந்தர் உள்ளம்` என்றெல்லாம் பாரதிதாசனைப் பற்றிப் பற்பல நூல்களை எழுதினார். பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள உறவு பற்றி `பாட்டுப் பறவைகள்` என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார்.

    இவரது தமிழ்ப் புலமைக்காக இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும் பற்பல. புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது, திரு.வி.க விருது போன்றவை அவற்றில் சில.

    தொண்ணூற்றிரண்டு வயது நிறைவாழ்வு வாழ்ந்தவர் மன்னர் மன்னன். புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அந்தக் காலகட்டத்தில் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் எழக் காரணமாக இருந்தார். பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டவர் இவரே.

    பாவேந்தர் நினைவுகளின் தொகுப்பாக மன்னர்மன்னன் எழுதிய பல நூல்களில் ஒரு நூலின் தலைப்பு `குயில் கூவிக்கொண்டிருக்கிறது` என்பது. தம் தந்தையின் பெருமையை மன்னர்மன்னன் என்ற குயில் தொடர்ந்து கூவிக் கொண்டிருந்தது. புதுச்சேரியில் வாழ்ந்துவந்த மன்னர்மன்னன் தம் 92ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

    `மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல்எனும் சொல்` என்ற திருக்குறளின் விளக்கமாக அமைந்த வாழ்வு மன்னர்மன்னனுடையது. இலக்கியத் தந்தையரை வாரிசுகள் எப்படிப் போற்றவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் தமிழறிஞர் மன்னர்மன்னன் எனலாம்.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • சில பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகிறது.
    • கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது.

    பெண்கள் பலருக்கு பல்வேறு காரணங்களால் கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு கர்ப்பப்பையை எடுத்தவுடன் பல நேரங்களில் பல்வேறு பிரச்சினைகள் வரலாம். பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்காக மருத்துவர்கள் கர்ப்பப்பையை அகற்றுகிறார்கள்.

    அதாவது அவர்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி வந்திருக்கலாம், புற்றுநோய்க்கான ஆரம்பம் ஏற்பட்டு இருக்கலாம், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டு அவர்களின் உடல் நிலையை பாதிக்கின்ற அளவில் பெரிய பிரச்சினை இருந்திருக்கலாம், கர்ப்பப்பை வீக்கமாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காக அவர்களின் கர்ப்பப்பையை அகற்றுகின்ற நிலை ஏற்படுகிறது.

    பெண்களுக்கு கர்ப்பப்பையை அகற்றும் முறைகள்:

    கர்ப்பப்பையை அகற்றும்போது பெண்கள் பொதுவாக டாக்டர்களிடம் கேட்பது சில விஷயங்கள் தான். டாக்டர் நான் எவ்வளவு நாட்களுக்கு பிறகு எழுந்து நடக்கலாம்? நான் எவ்வளவு நாட்கள் கழித்து என்னென்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னென்ன வேலை செய்யலாம் என்பது போன்ற விஷயங்களை தான் கேட்கிறார்கள். அது அவர்களுக்கு என்னென்ன முறைகளில் கர்ப்பப்பையை அகற்றுகிறோம் என்பதை பொருத்தது.

    குறிப்பாக கர்ப்பப்பை அகற்றுவதை லேப்ராஸ்கோபி மூலமாக செய்வார்கள். மற்றொரு வகையாக அடிவயிறு, யோனி எனப்படும் பெண்ணுறுப்பு (வஜினா) வழியாக திறந்தவெளி அறுவை சிகிச்சையாகவும் செய்வதுண்டு.

    கர்ப்பப்பை அகற்றும் விதங்களை பொருத்து தான் அவர்கள் எவ்வளவு நாட்களில் குணம் அடைவார்கள். அதன் பிறகு அவர்கள் எவ்வளவு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண் எப்படி ஆறும் ஆகிய விவரங்கள் தெரியவரும். இந்த விவரங்களை தான் கர்ப்பப்பை அகற்றும் பெண்களும், அவர்களின் குடும்பத்தி னரும் டாக்டர்க ளிடம் கலந்து ஆலோசிக்கின்ற விஷயங்கள் ஆகும்.

    ஆனால் கர்ப்பப்பை அகற்றும் பெண்கள் பலர், ஒரு முக்கியமான பிரச்சினையை பற்றி பல நேரங்களில் மருத்துவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இருக்கும் தயக்கம் காரணமாக கேட்க மாட்டார்கள். பெரும்பாலான டாக்டர்களும் இதைப்பற்றி அவர்களிடம் சொல்ல மாட்டார்கள். ஒருவேளை சில மருத்துவர்கள் இதைப்பற்றி சொன்னாலும், கர்ப்பப்பை அகற்றிய சில பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ காதுகொடுத்து கேட்க மாட்டார்கள்.

    கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பெண்களின் தாம்பத்திய வாழ்க்கை:

    ஆனால் இது ஒரு முக்கியமான விஷயம். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு அவர்களுடைய தாம்பத்திய வாழ்க்கை பற்றியதாகும். கணவன், மனைவி இடையேயான பாலியல் உறவுகள் பற்றியதாகும். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பாலியல் உறவுகள் எந்த அளவுக்கு பாதிப்பு அடையும் என்பது பற்றி அவர்கள் கேட்பது இல்லை. ஆனால் அதுபற்றி பெண்கள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் கர்ப்பப்பை என்பது பெண்களுக்கு எல்லா விதத்திலும் அவர்களின் பெண்மையை குறிக்கின்ற ஒரு உறுப்பாகும். இப்படித்தான் பல பெண்கள் நினைக்கிறார்கள். பெண்கள் பலரும் கர்ப்பப்பையை அகற்றிய பின்பு பலவிதமான பாலியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதுபற்றி சிகிச்சைக்கு வரும் பல பெண்கள் கூறுவதுண்டு, டாக்டர் எனக்கு கர்ப்பப்பையை அகற்றிய பிறகு எனது பாலியல் உணர்ச்சி குறைவாக இருக்கிறது. பாலியல் உறவுக்கான ஆர்வம் குறைந்து விட்டது. யோனி பகுதி ரொம்பவும் உலர்வு தன்மையுடன் இருக்கிறது. பல நேரங்களில் பாலியல் உறவின்போது உச்சக்கட்டம் அடைவதில் எனக்கு கஷ்டங்கள் இருக்கிறது என்பார்கள். இவை கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினைகளாக கருதப்படுகிறது.

    எனவே கர்ப்பப்பையை அகற்றிய பிறகு பெண்கள் பாலியல் உறவு கொள்ளும் போது, என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் பெண்கள் சராசரியாக 60 வயது முதல் 70 வயது வரை வாழ்கின்றனர்.

    அவர்களுக்கு 50 வயதில் கர்ப்பப்பையை அகற்றிவிட்டால் அதன்பிறகு 10 முதல் 20 வருடங்கள் வரை வாழவேண்டும். அப்படி வாழ்க்கையில் தாம்பத்திய உறவுகளுடன் அவர்கள் வாழும்போது, பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட்ட பிறகு அதைப்பற்றி யோசித்து கஷடப்படுவதை விட, முன்பே அதைப்பற்றி தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    பாலியல் உறவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கர்ப்பப்பை:

    கர்ப்பப்பை என்பது குழந்தை பிறப்பு, மாத விலக்கு வருவது ஆகியவற்றுக்கெல்லாம் முக்கியமான விஷயங்கள் ஆகும். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு விஷயம், பாலியல் உறவு முறைகளில் இந்த கர்ப்பப்பை ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதாவது, தாம்பத்திய உறவின் போது ஒரு பெண் உச்சகட்டம் அடையும் போது, கர்ப்பப்பை சுருங்கி விரிதல் என்பது இதன் ஒரு முக்கியமான பகுதி ஆகும். தாம்பத்திய உறவில் இது ரொம்ப முக்கியமான விஷயம்.

    குறிப்பாக பாலியல் உறவு கொள்ளும்போது ஏற்படுகிற கர்ப்பப்பை சுருங்கி விரியும் தன்மையை பல பெண்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பையை அகற்றி விட்டால், அந்த உணர்வானது சரியான முறையில் இல்லை என்று பல பெண்கள் சொல்கின்றனர். அந்த வகையில் இதுபோன்ற விஷயங்களை பற்றி அவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை.

    சில பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது, அதிகமாக உதிரப்போக்கு ஏற்படுகிறது அல்லது கர்ப்பப்பை சுருங்கவில்லை என்கிற காரணத்துக்காக கர்ப்பப்பையை அவசரமாக எடுக்கும்போது, கர்ப்பவாயை மட்டும் விட்டுவிட்டு ரத்தப்போக்கு ஏற்படும் பகுதியை மட்டும் கர்ப்பப்பையில் துண்டித்து விடுவார்கள்.

    குறிப்பாக இந்த கர்ப்பவாய் என்பது, பாலியல் உறவின்போது பெண்களின் உணர்வு பூர்வமான தூண்டுதலுக்கு முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் கர்ப்பப்பையும், கர்ப்பவாயும் இணையும் இடத்தில் தான் நிறைய நரம்புகள் இருக்கிறது. கர்ப்பப்பையை எடுக்கும் போது, இந்த பகுதியை துண்டிக்கும்போது, இங்கிருக்கும் நரம்புகளும் துண்டிக்கப்படுகிறது

    பெண்ணுறுப்பான யோனியில் தான் பாலியல் உறவு என்பதே நடக்கிறது. கர்ப்பப்பையை எடுத்த பிறகும் யோனி இருக்கும். ஆனால் கர்ப்பப்பை இல்லாத நிலையில் அந்த யோனியை தூண்டும்போது ஏற்படுகிற உணர்வுகள் ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறது.

    கர்ப்பப்பையை அகற்றும்போது பாலியல் குறைபாடு வருவதற்கான காரணங்கள்:

    பொதுவாக பாலியல் உறவு கொள்ளும்போது யோனி விரிவடைகிறது. அது விரிவடையும்போது உச்சக்கட்டம் ஏற்படும் நேரங்களிலோ அல்லது அவர்கள் தொடர்ந்து உறவு கொள்ளும்போதோ, அந்த யோனியின் மேல் பகுதி ஒரு பலூன் போல விரிவடையும் செயல் முறையானது இயற்கையாக நடக்கிற ஒரு விஷயமாகும்.

    உதாரணத்துக்கு செரிமானம் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஒவ்வொருவரும் உணவு சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகிறது. அதுபோல பாலியல் உறவு கொள்ளும்போது, இதுபோன்ற மாற்றங்கள் பெண்களின் கர்ப்பவாயிலோ அல்லது கர்ப்பப்பையிலோ இருக்கும். பெண்களுக்கு இந்த பகுதியை துண்டிக்கும் போது, அதாவது கர்ப்பப்பையை அகற்றும்போது அந்த யோனியின் மேல் பகுதியை துண்டிப்பார்கள்.

    அதை துண்டித்து தான் கர்ப்பப்பையை வெளியே எடுக்க முடியும். ஏனென்றால் கர்ப்பப்பை, யோனி எல்லாமே ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்கிறது. இதனால் அந்த யோனியின் மேல்பகுதியை துண்டித்து தையல் போடுவார்கள். அந்த பகுதியில் தான் பெண்ணுறுப்புக்கான முக்கியமான நரம்புகள், அதனுடன் தொடர்புடைய ரத்தக்குழாய்கள் நிறைய இருக்கிறது. அந்த பகுதிதான் பாலியல் உறவு கொள்ளும்போது விரிந்துகொடுக்கும்.

    இந்த மாதிரியான விஷயங்கள் கர்ப்பப்பையை எடுத்த பெண்களுக்கு சீராக நடப்பது இல்லை. எனவே கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் பாலியல் உறவு கொள்வதில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

    யோனியில் ரத்தக்குழாய்கள், நரம்புகள் எல்லாமே ரொம்ப குறைவாக இருக்கும். ஆனால் அதன் மேல் பகுதியில் ரத்தக்குழாய்கள், நரம்புகள் எல்லாமே ரொம்ப அதிகமாக இருக்கிறது. இதுதவிர அந்த யோனியில் லூப்ரிகேஷன் சுரப்பு என்பது, மேல்பகுதியில் இருந்து வருகிற தூண்டுதலின் வெளிப்பாடுதான். அதில் இருந்து தான் இந்த சுரப்பு நிறைய வரும். ஆனால் கர்ப்பப்பையை எடுக்கும்போது இந்த லூப்ரிகேஷன் சுரப்பு பாதிப்பு அடையும். இதுவும் பாலியல் உறவுகள் குறைவாவதற்கு காரணம் ஆகும்.

    கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றிய விளக்கங்களையும், கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் பாலியல் உறவில் ஆர்வம் ஏற்பட என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • ரேவதி என்றால் மிகுதியான செல்வம் என்ற சமஸ்கிருத பொருள் உள்ளது.
    • அறிவு சார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழி நடத்தும் திறமை மிகுந்தவர்கள்.

    ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் அமைந்துள்ளது. இதற்கு கடை நட்சத்திரம் என்ற பெயர் உண்டு.

    இதன் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் சுக்கிரன். ரேவதி என்றால் மிகுதியான செல்வம் என்ற சமஸ்கிருத பொருள் உள்ளது.

    கால புருஷ சக்கரத்தின் கடைசி நட்சத்திரம் ரேவதி. வானில் இது தோணி மற்றும் மீனைப் போல் காணப்படுவதால் இதன் தமிழ் பெயர் தோணி என்பதாகும். பாதுகைகள், பாதச்சுவடுகள் என்பது ரேவதி நட்சத்திரத்தின் வடிவமாகும்.

    இதன் வசிப்பிடம் பூங்காவனம், தோட்டமாகும். ரேவதி நட்சத்திரத்தின் பொது வான பலன்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவு, ராஜதந்திரம், புத்திக் கூர்மை, விவேகம் நிபுணத்துவம் என சகல வல்லமையும் நிறைந்தவர்கள். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடை போடுவதில் வல்லவர்கள். நினைக்கும் காரியங்களை புத்தி சாதுர்யத்தால் சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள். காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு இணையாக காதல் பாடம் கற்பிப்பவர்கள்.

    அறிவு சார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழி நடத்தும் திறமை மிகுந்தவர்கள்.

    எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஜோதிடம், வங்கிப் பணி, ஆசிரியர் பணி, தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகம். திறமையான பேச்சாளிகள். எழுத்துப் பணி, அரசியல் துறையில் நன்கு பிரகாசிப்பார்கள்.பேனா நண்பர்கள் அதிகம் உடையவர்கள். அதிர்ஷ்டம் மிகுந்தவர்கள். பொது ஜன ஆதரவு உண்டு. பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். எந்த படிப்பு அறிவும் இல்லாத இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் பன்னாட்டு வணிகத்தில் சாதனை படைத்து இருக்கிறார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்தவர்களுக்கு கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது.

    அரசாங்க பள்ளியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் பலர், பிழை இல்லாமல் தெளிவாக ஆங்கிலத்தில் எழுதுவார்கள், பேசுவார்கள்.

    உள்ளுணர்வு நிரம்பியவர்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை நல்ல நிலையில் இருக்கும். இவர்களிடம் கடன் வாங்கும் போது இவரின் வீட்டிற்கு அலைந்தவர்கள், கடனை திருப்பி பெறுவதற்கு இவர்களை அலைய வைத்து விடுவார்கள். அடிக்கடி இட மாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு நிம்மதியாக வாழ்பவர்கள் போல் இருந்தாலும் மனதில் துக்கம், துயரம் நிறைந்தவர்கள். மண வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். சிலருக்கு முறையற்ற காதல் விவகாரங்களால் வம்பு. வழக்கு ஏற்படும். தோல் வியாதி, அலர்ஜி தொல்லை உண்டு.

    கல்வி

    கணிதம் சார்ந்த அனைத்தும், ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள், பத்திரிக்கை துறை, மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை தகவல் தொடர்பு துறை, ஓவியம், பெயிண்டிங், ஜோதிடம் போன்ற படிப்புகளை புதன் தருகிறது.

    ஐ.ஆனந்தி

     தொழில்

    தாமும் சுய தொழில் செய்ய வேண்டும் என்று ஓர் உந்து சக்தி இவர்கள் மனதில் இருக்கும். இவர்கள் கையை ஊன்றி கரணம் போட்டு, பல உருட்டல், பிரட்டல்கள் செய்து சொந்தமாக கடை, தொழிற்சாலை கான்ட்ராக்டர், ஏஜென்சி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள்.

    அதே நேரத்தில் இவர்களுக்கு தனி ஆளாக செயல்பட முடியாது. யாரையாவது கூட்டாக சேர்ந்து தொழில், வியாபாரம் செய்து முன்னேறுவார்கள். சிலர் சுயமாக தொழில் தொடங்கி அதன் பிறகு நம்பிக்கைக்கு உரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் நடத்துவார்கள்.

    நிலையான ஏற்றமான தொழில், வியாபாரம் என்பது இயற்கையாக உருவாகிவிடும். சிலர் முதலீடு இல்லாத வார்த்தை ஜாலத்தால் பொருள் ஈட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக் கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது போன்றவற்றில் வெற்றிவாகை சூடுகிறார்கள். வாக்கு சாதுர்யத்தால் உடல் உழைப்பு இல்லாமல் மூளையை பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கிறார்கள்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்

    முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பெற்றோரின் காலத்திற்கு பின் முறையாக இவர்களை சென்று அடையும்.

    இல்வாழ்க்கை ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என்று குழம்புவார்கள். முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற இறக்கமான வாழ்க்கை வாழுகிறார்கள். பலர் பல விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது.

    கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் பண இருப்பு இல்லாத அமைப்பும் ஏற்படும். பலருக்கு இரண்டு திருமணம் நடக்கிறது. சிலருக்கு காலம் தாழ்ந்த திருமணம் நடக்கிறது.

    தசா பலன்கள்

    புதன்தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 17 ஆண்டுகள். ஜென்ம கால பிறந்த நேரத்திற்கு ஏற்ப தசா இருப்பு மாறுபடும்... இது கண்டாந்த நட்சத்திரம் என்பதால் ரேவதி 4-ல் பிறந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது. சில குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு மிகுதியாக இருக்கும்.

    கேது தசா: இது இரண்டாவதாக வரக் கூடிய தன தாரரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 7 ஆண்டுகள். சுய ஜாதகத்தில் கேதுவும் அதற்கு வீடு கொடுத்த கிரகமும் சுப பலம் பெற்று இருந்தால் பெற்றோர்களுக்கு நிம்மதி கூடும் விதமான முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் பள்ளி கல்லூரி படிக்கும் வயதில் இருந்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

    பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்க ளின் நல்லாசிகள் கிடைக்கும்.

    சுக்ர தசா: இது மூன்றாவதாக வரக் கூடிய விபத்து தாரையின் தசாவாகும்.

    இதன் தசா ஆண்டுகள் 20 ஆண்டுகள்.

    எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல் மூலம் அனைத்து நன்மைகளையும் அடைவார்கள். காதல், கல்யாணம், குழந்தை தொழில் என தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு கிடைக்கும் தொட்டது துலங்கும். நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடி வரும்.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. சுக்ரன் பலம் குறைந்தால் முன்னேற்றம் தடைபடும்.

    சூரிய தசா: இது நான்காவதாக வரக் கூடிய சேஷமதாரையின் தசாவாகும்.

    இதன் தசா வருடம் 6 ஆண்டுகள். இது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து இன்பங்களையும் வழங்கும் காலம். இதுவரை தடைபட்ட அனைத்து நல்ல விசயங்களும் நடக்கும். பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உணரும் வலிமை உண்டாகும். கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள்.

    சந்திர தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 10 வருடம். பணத்தால் பிரிந்த குடும்பங்கள், பல உண்டு. பிறருக்கு பணத்தை நம்பி கொடுத்து, ஜாமீன் கொடுத்து ஏமாறுவார்கள். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால் கவுரவம் குறையும் என்று பிறர் பிரச்சினையை தன் தலையில் சுமப்பார்கள். பிள்ளைகளால் குடும்ப உறவுகளால் மன அழுத்தம் இருக்கும்.

    செவ்வாய் தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம் பெற்றால் தொட்டது துலங்கும். ஜாதகர் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார். இந்த தசா பலருக்கு பெரிய திருப்புமுனையை தந்து இருக்கிறது.

    ஆனால் வயோதிக கால நோயால் எதையும் சரிவர அனுபவிக்க முடியாது.

    மீனம் ராசியின் சிறப்பு அம்சங்கள்

    மீன்கள் வசிக்கும் நீர் நிலையை குறிப்பது மீன ராசி என்பதால் இந்த நட்சத்திரத்தில் கிணறு, குளம் வெட்ட, சமுத்திர யாத்திரை செல்ல உகந்த நட்சத்திரமாகும். இதில் உச்சம் பெறும் கிரகம் சுக்கிரன் என்பதால் முதலீடுகள் வங்கிக் கணக்குகள் துவங்க, லாக்கரில் பணம் நகைகள் வைக்க, ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்ள உகந்த நட்சத்திரமாகும். ரேவதி நட்சத்திரம் வரும் நாளில் மகாலட்சுமியை பூஜித்து வழிபட கையில் பணம் இருப்பு, சேமிப்பு போன்றவை அதிகமாகும்.

    நட்சத்திர பட்சி: வல்லூறு

    யோகம்: வைதிருதி

    நவரத்தினம்: மரகதம்

    உடல் உறுப்பு: கணுக்கால்

    திசை: வடக்கு

    பஞ்சபூதம்: ஆகாயம்

    அதிதேவதை: சனீஸ்வரன்

    நட்சத்திர மிருகம்: பெண் யானை

    நட்சத்திர வடிவம்: முரசு

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை

    சம்பத்து தாரை: அசுவினி, மகம், மூலம்

    சேம தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

    சாதக தாரை: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    பரம மிக்ர தாரை: உத்திரட்டாதி, பூசம், அனுஷம்

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரம் வரும் நாளில் மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசிக்க செல்வம் பெருகும். மேலும் சத்திய நாராயண பூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரம். இதன் அதிபதி புதன் என்பதால் வித்யா ஆரம்பம் செய்யலாம், பூந்தோட்டம் அமைக்கலாம்.

    ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் குருமார்களின் பாதுகைகள் அல்லது தெய்வ உருவங்களின் பாதுகைகளை வழிபட, காலணிகளை தானம் வழங்க வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும்.

    செல்: 98652 20406

    • ராமருடன் இணைந்து புகழ்பெற்ற குகன் பல்வேறு சிறப்புகளை கொண்டவர்.
    • ஒரு கால கட்டத்தில் ராமர் மீதான நினைவு குகனை ஆக்கிரமித்தது.

    கம்ப ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களில் குகன் பாத்திரம் மிகவும் வித்தியாசமானது. வலுவானது. ராமருடன் இணைந்து புகழ்பெற்ற குகன் பல்வேறு சிறப்புகளை கொண்டவர்.

    ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல கங்கை கரைக்கு வந்தபோது அவரை குகன் வரவேற்று அழைத்து சென்றார். கங்கை ஆற்றின் கரையில் சிருங்கிபேரம் என்ற இடத்தை தலைமை இடமாக கொண்டு குகன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

    குகனின் மூதாதையர்கள் மலைவாழ் இன மக்களில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். அவர்கள் வேட்டுவர் குலத்தினர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள்தான் கங்கை கரையில் உள்ள மலைவாழ் இன மக்களுக்கு அரசர்கள் போல திகழ்ந்தனர்.

    எனவே கங்கை கரையோரத்தில் குகன் மூதாதையர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. பாரம்பரியமாக அவர்களுக்கு சிருங்கிபேரத்தில் மிக பிரமாண்டமான அரண்மனை இருந்தது. அங்கு அவர்கள் முருகப்பெருமானுக்கு மிகப்பெரிய ஆலயம் அமைத்து வழிபட்டு வந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.

    கங்கை கரையோரத்தில் ஏராளமான மலைவாழ் இன மக்கள் உள்ளனர். அவர்களில் இவர்கள் பில் என்ற உயர்ந்த வகையை சார்ந்தவர்களாக கருதப்பட்டனர். எந்த செயலை தொடங்கினாலும் முருகா... என்று சொல்லி விட்டு தான் அவர்கள் தங்கள் பணியை தொடங்குவார்கள்.

    அந்த அளவுக்கு அவர்களுக்கு முருகன் மீது பக்தி இருந்தது. "ஓம் முருகா" என்று ஒரு தடவை சொன்னாலே பிரம்மகத்தி தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் நிலவியது.

    குறிப்பாக ஒவ்வொரு நாளும் ஓம் முருகா என்று சொல்லி வந்தால் பிறவிப் பெருங்கடலை மிக எளிதாக கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்பட்டது. இதனால் இந்த வேட்டுவர் இன மக்கள் வாழ்வியல் நடைமுறைகள் முழுக்க முழுக்க முருக கடவுளை சார்ந்தே இருந்தது.

    அதனால்தான் அந்த வேட்டுவர் குல மக்கள் தங்களது வாரிசுகளுக்கு முருகனின் பெயரையே சூட்டி அழைத்தனர். அவர்களில் ஒருவராகதான் குகன் இருந்தார். குகையில் முருகனை வழிபட்டதால் இந்த பெயர் முருகனுக்கு ஏற்பட்டதாக சொல்வார்கள்.

    குகன் வேட்டுவர் குல தலைவனாக இருந்த போது கங்கை கரைகளில் முருக வழிபாடு உச்சம் பெற்று இருந்தது. இதை ராமனின் மூதாதையர்கள் அறிந்து இருந்தனர். எனவேதான் அவர்கள் ராமரை குகன் வரவேற்று உபசரிப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கங்கை கரையில் ராமரை சந்தித்த குகன் அவரை தனது இல்லத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தார். ராமர், சீதை, லட்சுமணன் மூவருக்கும் உணவாக தேனும், மீனும் கொடுத்து உபசரித்தார். அவரது அன்பிலும், பாசத்திலும் ராமபிரான் உருகிப் போனார்.


    ராமருக்கு தேவையான ஒவ்வொன்றையும் குகன் பார்த்து பார்த்து செய்தார். அதனால்தான் ராமாயணத்தில் குகனை "தாயினும் நல்லான்" என்று கம்பர் புகழ்ந்து பாடி இருப்பார். சிருங்கிபேரத்தில் இருந்த சில நாட்களிலேயே ராமரின் உள்ளத்தில் குகன் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். அதனால்தான் குகன் பற்றி சொல்லும்போது, "நாங்கள் குகனோடு ஐவரானோம்" என்று ராமர் சொன்னதாக கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சில நாள் விருந்துக்கு பிறகு சிருங்கி பேரத்தில் இருந்து கங்கையை கடந்து காட்டுக்கு செல்ல ராமர், லட்சுமணர், சீதைக்கு தனது படகுகளை குகன் கொடுத்து உதவினார். அதோடு அடர்ந்த காட்டுக்குள் சென்று ராமரையும், சீதையையும் விட்டு விட்டு வந்தார்.

    சிறிது நாட்கள் கழித்து ராமரை தேடி பரதன் வந்தார். அவர் குகனிடம் ராமரை காட்டுக்குள் எங்கு அழைத்து சென்றாய் என்று கேட்டார். இதை கேட்டதும் குகனுக்கு சந்தேகம் வந்து விட்டது. ராமரை கொல்வதற்காக ரகசிய திட்டத்துடன் பரதன் வந்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்.

    எனவே பரதனுடன் போர் நடத்த ஆயத்தமானார். ஆனால் அதன் பிறகு பரதனின் நல்ல குணம் குகனுக்கு தெரிய வந்தது. பரதனுக்கும் அவர் உதவி செய்தார்.

    14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமரை பிரிந்த பிறகு அவரது நினைவோடு குகன் வாழ்ந்து வந்தார். ராமர் எப்போது திரும்பி வருவார்? அவரை எப்போது பார்க்க போகிறோம்? என்று ஏங்கி தவித்து போனார்.

    ஒரு கால கட்டத்தில் ராமர் மீதான நினைவு குகனை ஆக்கிரமித்தது. உணவு உண்ணாமல் எப்போதும் ராமா.... ராமா... என்று சொல்லியபடியே இருந்தார். தூக்கமும் இல்லாமல் போய் விட்டது. இதனால் அவரது உடம்பு மெலிந்து செயலிழக்க தொடங்கியது.

    குகனின் உதடுகள் மட்டும் ராமா... ராமா... என்று சொன்னபடியே இருந்தன. ராமரை பார்ப்பதற்கு யாராவது உதவி செய்யுங்கள் என்று குகன் வேண்ட தொடங்கினார். குறிப்பாக தனது குல தெய்வமான முருகனிடம் மன்றாடி வேண்டினார்.

    குகனின் வேண்டுதலை கேட்ட முருகனின் இரு சக்திகளில் ஒருவரான வள்ளிக்கு இரக்கம் ஏற்பட்டது. குகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வள்ளிதேவி முடிவு செய்தாள். குகன் ராமா... ராமா... என்று புலம்பியபடி இருப்பதை முருகனுக்கு காட்டினார். இதனால் குகன் மீது முருகனுக்கும் இரக்கம் ஏற்பட்டது.

    அப்போது முருகனை பார்த்து வள்ளிதேவி, "சுவாமி இவர் ராமர் மீது நிகரற்ற பாசம் வைத்திருக்கிறார். அதே சமயத்தில் இவரது குல தெய்வம் நீங்கள்தான். உங்களது திருப்பெயர்களில் ஒன்றைதான் அவர் தாங்கி இருக்கிறார். ஆகையால் அவரை காப்பாற்றுங்கள். அவரது ஆசையை நிறைவேற்றி வையுங்கள். உங்களையே நம்பி இருக்கும் வேட்டுவர் இன தலைவனை கைவிட்டு விடாதீர்கள்" என்று கோரிக்கை விடுத்தாள்.

    அப்போது அருகில் இருந்த தெய்வானையும் அதை ஆமோதித்தார். குகனுக்கு எந்த வழியிலாவது உதவி செய்யுங்கள் என்று தெய்வானையும் கேட்டுக் கொண்டாள். வள்ளி-தெய்வானையின் இரக்கம் மிகுந்த தாய் உள்ளத்தை முருகப்பெருமான் புரிந்து கொண்டார்.

    குகனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனம் தீர்மானித்தது. அதே சமயத்தில் முருகப்பெருமானுக்கு மற்றொரு யோசனையும் எழுந்தது. குகன் ராமரைதானே பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அப்படி இருக்கும்போது நாம் காட்சி கொடுத்தால் குகன் மனம் திருப்தி அடையுமா? என்று யோசித்தார்.

    அடுத்த வினாடி அவர் மனதில் மற்றொரு மாற்று திட்டம் தோன்றியது. அதன்படி முருகப்பெருமான் ராமனாக மாற முடிவு செய்தார். ராமனாக மாறி விட்டார். அவர் கையில் இருந்த வேல் மறைந்து வில் தோன்றியது.

    அவரது இரு சக்திகளான வள்ளியும், தொய்வானையும் சீதையாகவும், லட்சுமணராகவும் உருவம் மாறினார்கள். அவர்கள் மூவரும் சாட்சாத் ராமர், சீைத, லட்சுமணர் போலவே இருந்தனர். அந்த கோலத்தில் குகன் முன்ப 3 பேரும் தோன்றி காட்சி அளித்தனர்.

    இதை கண்டதும் குகன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராமா வந்து விட்டாயா? என்று கண்ணீர் விட்டு கதறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஓடி சென்று ராமர் வடிவில் இருந்த திருச்செந்தூர் முருகனின் கால்களில் விழுந்து வணங்கினார்.

    குகனை வாரி அணைத்த முருகப்பெருமான் அவனை ஆறுதல் படுத்தினார். குகனே கவலைப்படாதே... என்னை நினைத்து நீ வருந்தக் கூடாது... நீ வருந்தி... வருந்தி... உன் உடல்நலத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறாய்? இனி உடல்நலத்தை பார்த்துக் கொள் என்று முருகன் தேற்றினார்.

    அது மட்டுமின்றி குகனிடம் அவர், "எங்களுக்கு இன்னும் சிறிது காலத்துக்கு வனத்தில் முக்கிய பணிகள் உள்ளன. அதை செய்து முடிக்க இன்னும் காலம் கைகூடி வரவில்லை. வெகுகாலம் அதற்காக நாங்கள் காட்டுக்குள் இருக்க வேண்டும். அதுவரை நீ எங்களுக்காக இப்படி மனமுருகி கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உன் உடல்நலத்தை பார்த்துக் கொள்" என்றார்.

    மேலும், "வனவாசம் முடிந்ததும் நாங்கள் இங்குதான் திரும்பி வருவோம். உன் இல்லத்தில் சிறிது நாட்கள் இருப்போம். அதன் பிறகு நீ எங்களுடன் அயோத்திக்கு வரலாம்" என்று ராமர் வேடத்தில் இருந்த திருச்செந்தூர் முருகன் அருளினார். இதை கேட்டதும் குகன் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெற்றான்.

    இனி கவலைப்படாமல் இருப்பதாக உறுதியும் அளித்தான். அவனுக்கு ஆசி வழங்கிய முருகப்பெருமான் வாழ்த்தி விட்டு விடைபெற்றார். அதன் பிறகு குகன் நிம்மதியாக வாழ்ந்தான் என்று புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

    திருச்செந்தூர் புராணத்திலும் குகனின் இந்த கதை சுவாரசியமாக இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர் புராணத்தில் இதுபற்றி இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில்....

    சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும்

    காட்டிஞான

    முந்திய பிரம்மானந்த சித்தியும்

    கொடுத்து வேத

    மந்திரக் குகச் சுவாமி என்னவும்

    வாய்த்தது பேர்

    குகனைக் காத்ததால் குகசுவாமி என்று

    பேர் வாய்த்ததோ....

    என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் யுகங்களை கடந்த திருச்செந்தூர் முருகன் செய்து இருக்கும் அற்புதங்கள் நமக்கு தெரிய வருகிறது.

    இதே போன்று இன்னொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • வாழ்க்கையில் வெற்றிபெற 75 சதவீதம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
    • அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    வாழ்க்கையில்...

    என்ன நடக்கும்?

    வாழ்க்கை எப்படி இருக்கும்...?

    -இதில் எதையும் நம்மால் தீர்மானிக்க முடிவதில்லை. எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள்... கண்டுபிடிப்புகள்... ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க பிரமிப்பாக தெரிகிறது.

    எல்லாவற்றையும் தன் அறிவால், ஆற்றலால் தீர்மானிக்க முடிந்தாலும் தன் வாழ்க்கையை மட்டும் தீர்மானிக்க முடிவதில்லை.

    அதுதான் வாழ்க்கையின் விளையாட்டு.

    அஞ்சு வயதில் கேமரா வெளிச்சத்துக்குள் வந்தேன். எதைப் பற்றியும் நான் திட்டமிட்டது இல்லை. ஆனால் நான் சந்தித்த விஷயங்களையும் சாதித்த விஷயங்களையும் திரும்பி பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கும்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் மீனாவால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் கதாநாயகி என்ற அந்தஸ்துடன் எப்படி நிலைத்து நிற்க முடிகிறது?

    இப்போதும் 'திரிஷ்யம்-3' படத்தின் நாயகியாக ஒத்துக் கொண்டிருக்கிறேன். மீனா உங்களின் இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? என்பதுதான் பலரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி. அதற்கு நான் சொல்வது 'கடின உழைப்பு+ அதிர்ஷ்டம்' என்பது தான்.

    கலைத் துறையில் என்னைவிட திறமையானவர்கள் பலர் உண்டு. ஆனாலும் அவர்களால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாமல் போகிறதே! அது ஏன்?

    வாழ்க்கையில் வெற்றிபெற 75 சதவீதம் கடின உழைப்பு இருக்க வேண்டும். 25 சதவீதம் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இல்லாமல் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாது. நேரம் நல்லா இருக்கே என்று வெறுமனே அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி உழைப்பை கைவிட்டாலும் வெற்றியைருசிக்க முடியாது. இது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட அனுபவம்.

    வாழ்க்கையில் நாம் நினைத்ததெல்லாம் நடப்பதில்லை. நினைக்காதது எல்லாம் நடக்கவும் செய்யும். எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.

    நான் பெற்ற இந்த அனுபவங்களால் என் மகள் விஷயத்தில் கூட அவள் இப்படி வரணும், அப்படி ஆகணும் என்று எதைப் பற்றியும யோசிக்க வில்லை. என் ஆசையை அவள் மீது திணிப்பதும் கிடையாது. அவளுடைய ஆர்வத்தை பொறுத்தே அவளுக்கு ஊக்கம் அளித்து வருகிறேன். இரண்டு அடிப்படையான விஷயங்களை மட்டும் தவறாமல் சொல்லி தருகிறேன். ஒன்று வாழ்க்கையில் படிப்பு ரொம்ப முக்கியம். இன்னொன்று நல்ல மனிதராக வாழ பழகிக் கொள் என்பதுதான்.

    பொதுவாக யாரையும் காயப்படுத்தும்படி பேசக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். உதாரணத்துக்கு ஒரு படத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒட்டுமொத்தமாக பிடிக்காமல் இருந்தால் கூட அதில் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பற்றி பேசலாம். அதைவிட்டு அடுத்தவர்களை காயப்படுத்தி மகிழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    வாழ்க்கையில் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளக்கூடாது என்று தான் நினைப்பேன். சொல்வேன். ஆனாலும் சில நேரங்களில் மனம் யோசிக்க வைத்து விடுகிறது. அந்த மாதிரி நேரங்களில் காய்த்த மரம் கல்லடிபடும் என்கிறார்களே... அது இதுதானோ என்று என்னை நானே ஆறுதல் படுத்தி கொள்வேன்.

    மீனா உன் வாழ்க்கை பயணத்தை பற்றி சொல்லேன். அடுத்து உன்னுடைய திட்டம் என்ன? என்றால்... அப்படி எதுவும் இல்லை. வாழ்க்கை போகும் பாதையில் நானும் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான் நிஜம். இந்த உலகம் விசித்திர மானது.

    அதில் வாழும் மனிதர்களும் விசித்திரமானவர்கள் தான். அவர்களுடன் வாழும் நாமும் நம்பிக்கையுடன் வாழ்க்கை பயணத்தை தொடருவோம்.

    இதுவரையிலான எனது வாழ்க்கை பயண அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொணடதில் மனதில் நிறைவான மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

    நன்றி!!!

    • வாழ்க்கையே போர்தான். அதுவும் உடலையும், உள்ளத்தினையும் பாதுகாப்பது மிகப்பெரிய போர்.
    • ரத்த அழுத்தம் குறையும் போது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இருதய பாதிப்பு ஏற்படலாம்.

    உடலில் நச்சு கூடும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படும். இங்கு நச்சு என்பது விஷம்அல்ல. தீயது செய்யும் எந்த உணவும் விஷம்தான். செரிமான மின்மை, உடல் உறுப்புகள் பாதிப்பு. கழிவுப் பொருட்கள் சரிவர வெளியேறாமை போன்றவையும் நச்சுத் தன்மை வாய்ந்தவைதான். இந்த நேரத்தில் உடல் காட்டும் அறிகுறிகளைப் பார்ப்போம்.

    * நோய் வாய் படுதல் * நோய் வாய் பட்டது போன்ற உணர்வு * வயிற்றுப் போக்கு. * வயிற்று வலி * மயக்கம், பலவீனம் *காய்ச்சல் * குளிர் (நடுங்குதல்) * பசியின்மை * தலைவலி ஆகியவை ஆகும்.

    இப்போது வெயில் கடுமையாய் இருக்கின்றது. பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்வதை தவிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை, தொப்பி அணிதல், தேவையான நீர் பருகுதல், கறுப்பு கண்ணாடி அணிதல் இவை அவசியம் ஆகின்றது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். வயதானோர் சர்க்கரை நோய் பாதிப்பு உடையோர், மற்ற உடல் நல பாதிப்பு உடையவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

     

    ரத்த அழுத்தம் குறையும் போது ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இருதய பாதிப்பு ஏற்படலாம். இப்படி தொடர் சங்கிலி போல் ஒன்றிலிருந்து அடுத்தது, அதில் இருந்து அடுத்தது என பாதிப்புகள் ஏற்படுகின்றன. அனைவருக்குமே ஏதோ ஒரு காரணத்தினால் உடலில் நச்சுத்தன்மை கூடலாம்.

    * தசைகளில் வலி * உடல் ஓய்ந்து விடுவது * எந்த முயற்சி செய்தும் உடல் எடை குறைவதில் கடினம் * குழப்பம் * தலைவலி * தூக்கமின்மை * எரிந்து விழும் தன்மை * சரும பாதிப்பு * உடல் துர்நாற்றம் * மலச்சிக்கல் இவைகளும் உடலில் நச்சுத்தன்மை கூடியுள்ளதன் வெளிப்பாடுகளே. கவனம் தேவை.

    * நம் மீது நமக்கு அன்பு இருக்க வேண்டும். நம்மை நாமே நன்றாக கவனித்துக் கொள்ளாமல் பிறர் நம்மை கவனிப்பார்கள் என்று எண்ணுவது தவறாகும்.

    * வாழ்க்கையே போர்தான். அதுவும் உடலையும், உள்ளத்தினையும் பாதுகாப்பது மிகப்பெரிய போர். அதனை கூச்சலின்றி, பிரச்சினை இன்றி அமைதியாய் வெற்றி பெறும் ஒரு வழி அவ்வப்போது உடல் நச்சினை நீக்குவதும் ஆகும்.

    இந்த வாழ்வெனும் பாதையில் நல்லதோடு தீயதும் வரும். நாம் தான் தீயதினே நீக்கி நடக்க வேண்டும்.

    வாழ்வினில் நடக்கும் துரோகங்கள் நிறையதான் உள்ளன. துரோகம் செய்தவரை மன்னித்து விடலாம். (இல்லையெனில் அது சுமை) ஆனால் நிகழ்வுகள் நாம் படித்த பாடம். அதனை மறக்க வேண்டாம்.

    மக்கள் மாறுவார்கள், காலம் நிறைய மாற்றம் தரும். ஆனால் வாழ்க்கை சென்று கொண்டேதான் இருக்கும். நாம் எதையும் மறுத்தாலும் அதனுடன் பயணிக்கத்தான் வேண்டும். யாரையும் அண்டி கெஞ்சாது வாழும் வாழ்க்கை இருந்தால் அவர் அதிர்ஷ்டசாலி.

    யாருக்காகவும் உங்களை சுருக்கி கொள்ள வேண்டாமே.

    நமக்கென்று பேச பரந்து விரிந்த உலகம் இருக்கின்றதே. எது உங்கள் நிம்மதியை குலைக்கிறதோ அது தேவையே இல்லை. யாரும் இது தான் நீங்கள் என எல்லை வகுத்து எடை போடும்படி எளிதாய் இருக்க வேண்டாம். தனிமை மிகப் பெரிய பலம் (உறுதியான மனம் இருந்தால்). யாரிடமும் எதையும் எதிர்பார்க்கக் கூடாது.

    நாம் முன்னேறுவது, நம்மை சரிசெய்து கொள்வது நமக்காக மட்டுமே. நாம்தான் நமக்கு சிறந்த நண்பன். நாமே நமக்கு சிறந்த நலம் விரும்பி. வந்ததும் தனியாகத்தான் போவதும் தனியாகத்தான். மருந்து சாப்பிடுவதில் எந்த சந்தோஷமும் இல்லை. ஆகவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

    காய்ச்சி ஆறிய நீர் குடியுங்கள், பகலில் 30 நிமிட ஓய்வு, கனமில்லாத அதாவது அதிக கொழுப்பு, உப்பு, மசாலா என்று இல்லாத எளிய உணவு உண்ணுதல், தினம் 10 ஆயிரம் அடிகள் நடத்தல், காலையில் வெறும் வயிற்றில் நீர் குடித்தல், உணவுக்கு பிறகு 30 நிமிட நிதான நடை, படபடப்பின்மை, 15 நிமிட தியானம், தேவையான சூரிய வெளிச்சம் இவைேய நிறைவான, மகிழ்ச்சியினை தந்து விடும்.

    சாப்பிட்டவுடன் நிறைய நீர் குடிப்பது என்பது சரியல்ல. அதாவது சாப்பிட்டவுடன் மிக அதிக அளவு நீர் வேண்டாம். சிறிது நேரம் சென்று குடிக்கலாம்.

    கமலி ஸ்ரீபால்

     * கண்ட நேரத்தில் காபி, டீ என குடிப்பது கூடாது.

    * உணவு, பழம் இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

    * பிளாஸ்டிக் கப், டப்பாக்களை அதிகம் பயன்படுத்துவது கூடாது. அவை உடல்நலத்தினை பாதித்து மகிழ்ச்சியைக் குறைக்கும்.

    * தினம் 10 நிமிடம் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடந்து பழகுங்கள். மூட்டுகள் வலுப்பெறும்.

    * எலுமிச்சை சாறு + இஞ்சி சாறு கலந்த நீர் அல்லது மோர் குடியுங்கள்.

    * குளிர்ந்த ஷவர் குளியல் நல்லது.

    * வெறும் காலில் சுத்தமான புல்வெளியில் 10 நிமிடங்கள் நடக்கலாம்.

    நிறங்களுக்குக் கூட நம் உடலை ஆக்கப்பூர்வமாகவோ, அழிவுப் பூர்வமாகவோ பாதிக்கும் திறன் உண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றனவாம். அதனையும் தெரிந்து கொள்வோமே.

    சிகப்பு நிறம்:

    * அட்ரினல் சுரப்பி, நரம்புகளை தூண்ட வல்லது.

    * அதிகம் இந்த நிற சூழலில் இருந்தால் ஸ்ட்ரெஸ் ஏற்படுமாம்.

    * கோபம், ெவறுப்பு கூட அதிகரிக்குமாம்.

    * சக்தி தரும் நிறம்.

    * உடலின் செயல்பாட்டுத் திறனைக் கூட்ட வல்லது.

    * மூச்சு கூடும். ரத்த அழுத்தம் கூடலாம்.

    மஞ்சள் நிறம்:

    * சொடோனின் எனும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும்.

    * மகிழ்ச்சி தரும்.

    * உடன் செயல்பாட்டுத் திறன் கூடும்.

    * ஆனால் சிறு குழந்தைகள் மஞ்சள் நிற அறையில் அதிகம் அழுவார்களாம்.

    ஊதா நிறம்:

    * ஆன்மீக நாட்டம் அதிகம் இருக்கும்.

    * ஆழ்சிந்தனைகளும் இருக்கும்.

    * மன இறுக்கமான சோகமான உணர்ச்சிகள், உணர்வுகள், எண்ணங்கள் ஏற்படலாம்.

    க்ரே நிறம் (சிமெண்ட் நிறம்): எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும்.

    வெள்ளை நிறம்:

    * அமைதி தரும்.

    * வெற்றியின் ஆரம்பம் எனலாம்.

    நீலநிறம்: அமைதி தரும். நிதானம் இருக்கும். அதிக நேரம் இந்நிற சூழலில் இருந்தால் மனச்சோர்வு ஏற்படும். பசி இருக்காது.

    பச்சை நிறம்: கண்ணுக்கு குளிர்ச்சி. உடலுக்கு இதம். பார்வை திறன் கூடுமாம். சுத்தம், சாந்தம் இருக்கும்.

    ஆரஞ்சு நிறம்: மூளை செயல்திறன் கூடும். பசியை தூண்டும். மூளைக்கு ஆக்சிஜன் செல்வது கூடுமாம்.

    பிங்க் (அ) ரோஸ் நிறம்: கோபம், படபடப்பு இருக்காது. மென்மை தன்மை இருக்கும்.

    கறுப்பு நிறம்: ஆழ்ந்து சிந்தித்தல். கறுப்பு நிறம் அணிபவரை ஒல்லியாகக் காட்டும்.

    ஆக எதிலும் ஒரு அர்த்தம். கருத்து இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

    (இன்றைய கால கட்டத்தில் அநேகர் 80-90 வயதினைக் கடந்து வாழ முடிகின்றது. மருத்துவம், உணவு முறை, விழிப்புணர்வு இவை முக்கிய காரணமாகின்றது. இருப்பினும் சிலவற்றினை அவர்கள் நினைவில் கொள்வது உடல் நோய் வாய் படாது இருக்க உதவும்.

    குறைத்துக் கொள்ள வேண்டியவை

    உப்பு, சர்க்கரை, மைதா (வேண்டவே வேண்டாம்). பால் சார்ந்த உணவுகள், பதப்படுத்திய உணவுகள்.

    தேவையான உணவுகள்: காய்கறி, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், முட்டை, பழங்கள், தேவையான அளவு சிறிதளவு -மருத்துவர் பரிந்துரைக்கும் எண்ணெய்.

    கவலைப்படக் கூடாதவை- * வயது * கடந்த காலம் * சில உடல் நல பிரச்சினைகள் (உடல் பிரச்சினைகளுக்கு கவனிப்பு கொடுங்கள். கவலை வேண்டாம்)

    தேவை- * குடும்ப உறவுகள் * நண்பர்கள் * ஆக்கப் பூர்வ சிந்தனைகள் * சுத்தமான சூழ்நிலை இத்தோடு- அதிக நேரம் வெளிச்சம் இல்லாத அறையில் இருக்க வேண்டாம்.

    * அதிகமான அதாவது அறிவுப்பூர்வமான செய்திகளை படித்து, கேட்டு, தலையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

    * அதிக தனிமை மன வலிமை அற்றவர்களுக்கு வேண்டாம். * காது, மண்டை பிளக்கும் அளவு சத்தமான இசை வேண்டாம்.

    * இடிப்புளி போல் அசையாது ஒரே இடத்தில் காலை முதல் இரவு வரை அமர்ந்திருக்க வேண்டாம்.

    * போன், டி.வி.யில் வாழ்வினை செலவழிக்க வேண்டாம். * இனிப்பு உணவில் ஊற வேண்டாம். இவையும் ஒருவருக்கு அநேக நன்மைகளைப் பயக்கும்.

    • 'நல்லதுக்குக் காலமில்லை' என்கிற வாசகமும் நமது வாழ்வில் அன்றாடம் பழகிப்போன ஒன்றாக ஆகி விட்டது.
    • சில அதிர்ஷ்டங்கள் இல்லையென்றால், அவனுக்கு நற்பலன்கள் விளைவதே இல்லையே! அது ஏன்?".

    'நல்லது செய்யுங்கள்! நல்லதே நடக்கும்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள அருமை வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    வாழ்க்கையில் எவ்வளவு முயன்று நல்லது செய்தாலும் அதற்குப் பிரதிபலனாக நல்லது நடக்காமல், பொல்லாததே நடக்கிறதே! அதற்கு என்ன செய்வது? என்று அன்றாடம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவரா நீங்கள்?. ஆம்! என்றால் இந்தக் கட்டுரை உங்களுக்காகத் தான்!. " நல்லதுக்குப் பொல்லாப்பு!" என்கிற வாசகம் பலருக்கு இயல்பாகவே நடந்துவரும் செயலாக மாறிப்போய் விட்டது. அதனால்தான் 'நல்லதுக்குக் காலமில்லை' என்கிற வாசகமும் நமது வாழ்வில் அன்றாடம் பழகிப்போன ஒன்றாக ஆகி விட்டது.

    பொதுவாகவே, "தினை விதைத்தவன் தினை அறுப்பான்! வினை விதைத்தவன் வினை அறுப்பான்!" என்கிற கோட்பாடு, 'நல்லது செய்தால் நல்லது விளையும்! தீயது செய்தால் தீயதே விளையும்!' என்பதை விளக்க வந்த உறுதியான வாசகமாகும். இதில் இம்மியளவு பிசகு நடந்தாலும், உலகின் இயங்கியல் கோட்பாட்டில் தவறு உண்டாகிக், கீழது மேலாக மேலது கீழாக எல்லாமே தலைகீழாக மாறிப்போகும்; வாழ்வியல் நியதி இப்படி இருக்கையில், உலகியலின் நடப்பியல் நியதி வேறு மாதிரி இருக்கிறதே! என்ன செய்ய? என்று சிலர் கேட்கலாம். ஒரு திரைப்படப் பாடலில், நன்மை செய்து துன்பங்களையே பரிசாகப் பெறும் ஒரு நல்லமனிதன், பகவான் கண்ணனைப் பார்த்து, 'நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்' என்று பாடுவதாக ஒரு வரி வருகிறது. நன்மைக்குப் பலன் தீமையும் துன்பமும் என்றால், எதற்காக நல்லவராக வாழவேண்டும்?. எதற்காக நன்மைகளையே செய்யவேண்டும்? என்கிற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழத்தானே செய்யும்?.

    மனிதன் நல்லவனாக வாழ்வது என்பது, அவன் செயலில் மட்டும் நல்லது செய்வது என்பதை வலியுறுத்துவதற்காக மட்டுமன்று. அவன் இயல்பிலேயே அன்பு மிக்கவனாக, கருணையும் கனிவும் செறிந்தவனாகவும், எப்போதும் நேர்முறைச் செயலூக்கம் வாய்ந்தவனாகவும் திகழ வேண்டும் என்பதற்காகவே ஆகும். இவ்வகை நற்குணங்கள் மனிதனை, தாராள மனமுள்ளவனாகவும், சுயநல குணம் இல்லாதவனாகவும், பொதுநல அக்கறையோடு, உலகில் உடன் வாழும் உயிரினங்கள் அனைத்தினோடும் உயிர் இரக்கம் மிக்கவனாகவும் மாற்றி விடுகின்றன. பொது நலத் தொண்டே நற்தொண்டு என்று ஆகிப்போனால், விளைவுகள் சுயநலமற்றவையாக இருக்கும் போது, நன்மை தீமைகளைப் பற்றி மனிதன் ஏன் கவலைப்பட வேண்டும்?. அதனால்தான் கீதை, 'கடமையைச் செய்! பலனை எதிர் பாராதே!' என்று கட்டளை வாசகம் செப்புகிறது.

    ஒரு குருநாதரிடம் ஒரு சீடன் ஒரு கேள்வி கேட்டான். "குருநாதரே! ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் எவ்வளவு விருப்பத்துடன் அடுத்தவர்களுக்கு அளவற்ற நன்மைகள் செய்தாலும், அவனுக்கு எனச் சில அதிர்ஷ்டங்கள் இல்லையென்றால், அவனுக்கு நற்பலன்கள் விளைவதே இல்லையே! அது ஏன்?".

    "நல்லவன் எந்தச் சூழ்நிலையிலேயும் வீழ்வதே இல்லை. 'நல்லவன் வாழ்வான்!'என்பதே ஆகச் சிறந்த வாசகம். நற்காரியங்கள் ஆற்றும்போது, இடையிடையே சிறு சிறு தடைகள், பின்னடைவுகள் தோல்விகள் ஏற்படத்தான் செய்யும். அவையெல்லாம் தற்காலிகமானவையே தவிர நிரந்தரத் தோல்விகள் அல்ல; இதை விளக்க உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்!" என்று கதையை ஆரம்பித்தார் குருநாதர்

    ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் இருந்தார். சிந்தனை செயல் அனைத்திலும் அடுத்தவரது நன்மையையே கவனத்தில் வைத்துக்கொண்டு அவர் செயலாற்றி வந்தார். ஊர்மக்கள் அனைவரும் அவர்மீது மட்டில்லாத மரியாதையும் அன்பும் வைத்திருந்தனர். அவரது நல்ல குணத்திற்கு, அவர் இறப்பிற்குப் பின்னர், மேலோகத்தில் சொர்க்கத்திற்கே போவார்; அங்கே அவர் சுகமாக வாழ்வார் என்று ஊர்மக்கள் ஒருமனதாகப் பேசிக் கொண்டனர். ஒருநாள் அந்த நல்ல மனிதர் காலமாகி விட்டார். நேராக மேலுலகம் புகுந்தார்.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    அங்கே மேலுலக நுழைவு வாயிலில் ஒரு தேவதை பரபரப்பாகக் கணினி போன்றதொரு கருவியோடு அமர்ந்திருந்தார். அவர்தான் மேலுலக வரவேற்பு அதிகாரி. மேலே வருகிற மனித ஆத்மாக்களின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து, அவற்றிற்கு சொர்க்கமா? நரகமா? என்று முடிவு சொல்லி அனுப்பி வைக்கும் பொறுப்பானவர். நமது நல்ல மனிதர் அந்த வரவேற்பாளர் முன் நின்ற போது, வேறு ஏதோ வேலைப் பரபரப்பில், இவரைப்பற்றிய புண்ணியக் கணக்குகளை அந்தத் தேவதை சரிவரப் பார்க்கவில்லை. அவரைக் கண்ணை மூடிக்கொண்டு நரகத்திற்கு அனுப்பி வைத்துக் கணக்கை முடித்தது.

    நமது நல்ல மனிதருக்கு சொர்க்கமென்ன? நரகமென்ன? இரண்டும் ஒன்றுதான். நரகத்திற்குள் சென்று வழக்கம்போலத் தம்மால் முடிந்த நல்ல செயல்களை அடுத்தவர்களுக்கு முயன்ற வரை செய்து வந்தார். ஒருமாதம் ஆயிற்று; நரகத்தில் குழப்பம் பெருகிப் புயலாய் வீசத் தொடங்கியது. நரகத்தின் தலைவனாக இருக்கிற பூதம், நமது நல்ல மனிதரை அழைத்துக்கொண்டு, பாவ புண்ணியக் கணக்குப் பார்க்கும் வரவேற்பு அதிகாரியிடம் வந்தது. "என்ன கணக்குப் பார்த்து, இவரை நரகத்திற்கு அனுப்பி வைத்தாய்?.

    இவர் நரகத்திற்கு வந்த இந்த ஒருமாதத்தில் நரகத்தை நரகமாக நடத்த என்னால் முடியவில்லை. நரகத்தில் பார்க்கிற மனிதர்களையெல்லாம் இவர் அன்பொழுகப் பார்க்கிறார்; கருணையோடு கட்டித் தழுவுகிறார். அவர்களது வலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறார்; பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு ஆறுதலாய் ஏதாவது நாலு வார்த்தைகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இவரது செயல்களில் மயங்கி நரகர் அனைவரும் நல்லவர்களாக மாறிவிடுவார்களோ என்கிற அச்சம் இப்போது என்னைப் பற்றிக் கொண்டு விட்டது. ஒழுங்கு மரியாதையாக இவரைச் சொர்க்கத்தில் போட்டுவிடு!; அப்போது தான் என்னால் நரகத்தில் என்னுடைய வேலையை நரகத்தனமாக நான் செய்ய முடியும்!" என்று கூறி, நமது நல்ல மனிதரை சொர்க்கத்தில் தள்ளிவிட்டு, நரகத்தை நோக்கி நடந்தது நரகத்தின் தலைவனான பூதம்."

    குருநாதர் இப்போது சீடனைப் பார்த்து மேலும் கூறினார், " நீ நல்லவனாக, நல்லதே செய்துவந்தால், சில இயந்திரக் கோளாறு அல்லது தேவதைக் கோளாறு காரணமாக நரகத்திற்கே மாறிச் செல்ல நேர்ந்தாலும், நரகத்தின் தலைமைப் பூதத்தால் நீ சொர்க்கத்திற்கு நல்லபடியாகத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவாய். உண்மை என்றும் தோற்றுப் போகாது!; நன்மை என்றும் அழிந்து போகாது. இந்த வகையில் நன்மை வாழ்வதற்குத் தீமையும் உறுதுணையாக நிற்கும்!". குருநாதர் சீடனிடம் கூறிய கதை, மேலோகம் வரை சென்று நல்லது செய்தவருக்கு நியாயம் பெற்றுத் தந்தாலும், அது பூலோகத்திலேயே நல்லவருக்கு மானுடப் பிழைகளால் நிகழும் சில தீமைகளுக்கும் தீர்வுகள் கிட்டும் என்கிறது.

    நற்செயல்கள் செய்வது, மனிதரை முழுமை மனிதராய்த் தன்னிறைவு பெற்றவராக மாற்றுகிறது. மனமெங்கும் அன்பு பெருகித் ததும்பியிருந்தால்தான் அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் உணர்வு பெருக்கெடுக்கும். அன்புபெருக ஒரு செயலைச் செய்யும்போது. சிந்தையில் முழுமையான திருப்தி நிறைந்து நிற்கும். திருப்தி பரவப் பரவ நாம் வாழ்வதன் உண்மையான பொருள் ஒளிரத் தொடங்கி விடும்.

    அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது தேவைப்படுவோருக்குத், தேவைப்படும் தருணத்தில் செய்வது ஆகும். அது அன்புதவியாக இருக்கலாம்; பணம், பொருள் உதவியாக இருக்கலாம்; செயல் உதவியாக இருக்கலாம். எவ்வகை உதவியாக இருந்தாலும் மானுடம் தழைக்க ஆற்றுகிற பிரபஞ்ச உதவியாக அது போற்றப்படும். மற்றவர்களுக்குச் செய்கிற உதவியென்னும் நற்காரியம், தினையளவு இருந்தாலும், அதன் பயனைப் புரிந்து கொள்பவர்கள் அதனைப் பனையளவாக எண்ணிக் கொண்டாடுவார்கள். இந்த உலகம் நன்றியறிதல் மிக்க உலகமாகச் செழித்து வளரும். மக்கள் தனி நபர்களாகத் திகழ்ந்தாலும் இவ்வகை உதவிக் கைமாறுகள் மூலம் உலக மக்கள் முழுவதும் உறவுச் சமூகத்தினராய் மாறி உன்னத நிலையை எட்டுவர்.

    சக மனிதர்மீது அன்பு காட்டுவது, கருணை மற்றும் கனிவோடு நடந்துகொள்வது, எந்த எல்லைக்கும் சென்று உதவி செய்வது ஆகிய செயல்கள் மனிதர்களின் உள்ளத்தை நலமுள்ளதாகவும் வலிவுள்ளதாகவும் ஆக்குவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். நம்முடைய மனப் பரபரப்பையும், மன அழுத்தத்தையும் தணிக்கும் செயல்களை நாம் ஆற்றும் நற்காரியங்கள் சாதித்துக் காட்டுகின்றன. நல்ல செயல்கள் நம் மனமெங்கும் நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவதால், மன நலம் மட்டுமல்லாமல் உடல்நலமும் பெருகிச் சிறக்க நற்செயல்கள் உதவுகின்றன.

    'நல்லதே செய்ய வேண்டும்!' என்கிற உறுதியோடு ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலைச் செய்து முடிக்கும் வரை 'நல்லதே நடக்கும்!' என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு ஈடுபட வேண்டும். நம்பிக்கையற்ற சலனங்களோடு நல்ல செயல்கள் மட்டுமல்ல, கெட்டவற்றைச் செய்தாலும் அது எண்ணியபடி நடவாமல் போய்விடும். எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும்! அதுவும் திண்ணியதாக இருக்க வேண்டும். இரண்டும் சரியாக இருந்தால் செயல் முடிவும் நல்லதாகவே வெற்றியை எட்டும். தொடர்ந்து ஏற்படுகிற ஒன்றிரண்டு தோல்விகள் மனம் தளர்ந்துபோக வைத்து விடும். நம்பிக்கை இழப்பு மனிதனைக் குறுக்கு வழிக்குச் செல்லத் தூண்டிவிடும்; ஆனால் அப்போதும் தோல்வியே பரிசாக வந்து நிற்கும். உலகில் எந்தக் குறுக்கு வழியும் வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச் செல்வதில்லை என்பதே கண்கண்ட உண்மை.

    ''அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

    நாடி இனிய சொலின்"

    என்னும் வள்ளுவ வாக்கு, தொடர்ந்து நல்ல சொற்களைச் சிந்தனைகளாக நெஞ்சில் தேக்கி, நல்லவை நடப்பதற்காகத் திட்டங்கள் வகுத்து ஈடுபட்டால், தீயவையே நிகழாது!; அல்லவை தேய்ந்து போக அறம் பெருகிவிடும். மனிதனை அற மனிதனாக மாற்றிவிடும்.சமூகம் அறச்சமூகமாக மலர்ந்து விடும் என்கிறது.

    எந்தவொரு செயலையும் நேர்முறைச் சிந்தையோடு தொடங்குவதே வெற்றியின் முதல்படி. நல்லது செய்தால் தீயதுதானே விளைகிறது என எதிர்மறைச் சிந்தையில் புலம்பித் தவிக்காமல், "நல்லதே நடக்கும்!" என நம்பிக்கையோடு செயல்பட்டால், நல்லதே நடக்கும்! நமக்கு மட்டுமல்ல! ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்!

    தொடர்புக்கு 9443190098

    • உடலுக்கென்று இயல்பான கட்டுப்பாட்டு முறைமைகள் உள்ளன.
    • உணவு என்பது உடலுக்கான கட்டுமானப் பொருள்.

    இயற்கை மருத்துவம் என்பது –உடலையும் மனதையும் சமநிலையில் பராமரித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் உன்னத சிகிச்சை முறையாகும்.

    உங்களின் உடல்நலனுக்காக யார் மிகவும் கவலைப்படுவார்கள்? நீங்களா..? இல்லையென்றால் உங்கள் குடும்பத்தினரா?

    இல்லை... ஒரு நிமிடம் யோசிக்கவும்!

    உங்கள் உடல்நலத்துக்காக அதிகமாக கவலைபடுவது வேறு யாரும் இல்லை, –உங்கள் சொந்த உடலே!

    ஆம், நீங்கள் தவறான வாழ்க்கை முறை கொண்டிருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் கொண்டவராக இருந்தாலும், கூட, உங்கள் உடல் எப்போதும் உங்களைப் பாதுகாக்கவும் உங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும்.

    எனவே நமது உடலுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அதனை மதித்து போற்றி உடல் நலத்துக்கு உறுதுணையாக இருக்க வழிகாட்டுவதே இயற்கை மருத்துவம் ஆகும்.

    இயற்கை மருத்துவ சிகிச்சையின் நம்பிக்கை என்னவென்றால், உடல் இயற்கையாகவே நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது. அதற்கான சரியான சூழலை நம்மால் உருவாக்க முடியுமானால், உடல் தானாகவே குணமடையும் என்ற கோட்பாட்டை கொண்டது.

    உடலுக்கென்று இயல்பான கட்டுப்பாட்டு முறைமைகள் உள்ளன–. அவை உணவு, ஓய்வு, தூக்கம். இவற்றை நாம் முறையாக பின்பற்ற வேண்டும்.

    இயற்கை மருத்துவத்தில் மூலிகைகள், சுவாசப் பயிற்சி, யோகாசனம், உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்தல், வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தல், நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, உள்ளிட்ட அம்சங்கள் மூலம் இயற்கை முறையில் நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    நோயின் அடிப்படை காரணத்தை நிவர்த்தி செய்வது (Treating the Root cause):

    ஒரு இயற்கை மருத்துவர், உடலை தனித்தனி உறுப்புகளாகப் பார்க்க மாட்டார். அது ஒரு முழுமையான அமைப்பாகவே கருதப்படுகிறது.

    ஒரு நோயாளர் மைகிரேன் தலைவலியுடன் வருகிறார் எனில், முதலில் கேட்கப்படும் கேள்வி என்னவாக இருக்கும் தெரியமா?

    "அவரிடம் ஜீரணம் எப்படி உள்ளது என்று தான் கேட்போம்.?"

    ஏனெனில் பெரும்பாலான மைகிரேன் நோயாளிகள், அஜீரண கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

    ஆகவே, தலைவலிக்கு மருந்து கொடுக்க மாட்டோம். –வயிற்றை சரி செய்வோம். தலைவலி தானாகவே போய்விடும்.

    மற்றொரு எடுத்துக்காட்டு:

    சாலையில் ஒரு வாழைப்பழத் தோல் வீசப்பட்டுள்ளது. அதன் மீது ஏராளமான ஈக்கள் மொய்க்கின்றன. நாம் என்ன செய்வோம்?

    ஈக்களை கொன்று பிரச்சினையை தீர்த்துவிட முடியுமா?

    இல்லை! அது தற்காலிக தீர்வு மட்டுமே.

    சரியான தீர்வு – வாழைப்பழத் தோலை அகற்றுவதே.

    அதுபோலவே, நோயின் வேர் காரணத்தை கண்டறிந்து, தனிப்பட்ட முறையில் தீர்வளித்து, நீடித்த குணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

    நமது நோக்கம் நோயாளி குணமடைய வேண்டும் என்பதுடன், நோயாளிகளே தங்களின் மருத்துவராக மாற்றும் வகையிலான தெளிவை கொடுப்பதாகும்.

    இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள்:

    உடல் தானாகவே குணமடையும்,

    குணமாக்கும் சக்தி வெளியில் இருந்து வருவதல்ல; உடலுக்குள்ளே உள்ளது.

    நோய்க்கு முக்கிய காரணம் – சரியான முறையில் ரத்த ஓட்டம் இல்லாமை மற்றும்– சரியான முறையில் கழிவுகள் வெளியேற்றப்படாமல் உடலிலேயே சேருவது.

    டாக்டர் நிஷா


     உதாரணம்:

    சரியாக ஜீரணமாகாத உணவால் யூரிக் அமிலம் தேக்கமாகுதல்

    பித்தம் அதிகரிப்பு காரணமான காமாலை ஏற்படுதல்.

    குறுகிய காலத்திற்கு வரும் நோய்கள் என்பது உடலை சுத்தமாக்கும் ஒரு செயல்முறை ஆகும்.

    உதாரணம்:

    மூக்கோட்டம். வயிற்றுப் போக்கு – இவை உடலிலுள்ள விஷப்பொருட்களை வெளியேற்றும் இயற்கை வழிகள்.

    உணவு என்பது உடலுக்கான கட்டுமானப் பொருள். ஆனால் அதன் நன்மைகள் உடலின் உயிர்தன்மை மீது சார்ந்துள்ளது. உணவின்றி உடலுக்கு ஓய்வளிப்பது உடல், மனம் மற்றும் உடலியல் ரீதியாக சுத்தமாக வைத்திருக்கும். நோய்களுக்கு கூறப்படும் காரணம் கிருமிகள் அல்ல, கிருமிகள் நோய் ஏற்பட்ட பிறகு காணப்படுகின்றன. உடல் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், கிருமிகள் இருந்தாலும் நோய்பட வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

    உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    உட்புற சிகிச்சைகள் குறிப்பாக உணவின்றி உடலுக்கு ஓய்வளிப்பது, வெளிப்புற சிகிச்சைகளைவிட (மசாஜ் போன்றவை) முக்கியமானவை.

    நோயாளியின் நம்பிக்கையும் தீர்மானமும் குணப்படுவதற்குத் தீவிரமாக தேவை.

    இயற்கை மருத்துவம் பஞ்சமகா பூதங்களின் அடிப்படையில் அமைந்தது:

    அதாவது,

    ஆகாயம் (Ether / Space)

    வாயு (Air)

    அக்னி (Fire)

    நீர் (Water)

    பூமி (Earth)

    இவை அனைத்தும் நமது உடலின் இயற்கையான அமைப்புகளை பிரதி நிதித்துவப் படுத்துகின்றன.

    உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சிகிச்சைக்கும் இவை அடிப்படை அம்சங்கள் ஆகின்றன.

    பஞ்சமகாபூதங்களின் சமநிலைதான் நம் ஆரோக்கியத்தின் மையக் கொள்கை!

    பஞ்சபூதங்களின் சமநிலை தான் நம் உடல்நலம், மனநலம் மற்றும் ஆன்ம நலனுக்கான அடித்தளம்.

    இந்த மூலதத்துவங்களில் ஏதேனும் ஒன்று சமநிலை இழந்தால், அது நோய்களை உருவாக்குகிறது.

    இந்த சமநிலை மாற்றத்தை சரி செய்யும் சிகிச்சைகள்:

    ஆகாய தத்துவம்:

    சிகிச்சை: உணர்வோடு சுவாசிப்பது

    விழிப்புணர்வு

    கற்பனை முறைகள்

    வாயு தத்துவம் :

    சிகிச்சை: சுவாசப் பயிற்சிகள்

    பிராணாயாமம்

    அக்னி தத்துவம்:

    சிகிச்சை:

    சக்திவாய்ந்த உடற் பயிற்சிகள் இஞ்சி, மிளகு, பூண்டு போன்ற தீவிர உணவுகள்

    நீர் தத்துவம்:

    சிகிச்சை:

    நீர் சிகிச்சை

    நீராவி குளியல்.

    பூமி தத்துவம்:

    சிகிச்சை:

    காந்த சிகிச்சை.

    மண் சிகிச்சை.

    கொரோனா காலத்தில் நாமெல்லாம் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால், நாமே உருவாக்கிக் கொண்ட வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் –நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை காரணமாக, ஒவ்வொரு 8 விநாடிக்குமே ஒரு உயிர் பறிக்கப்படுகின்றது!

    இதற்காக யாரும் எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லையே?

    இது மரபணு காரணமல்ல, நமது கவனக்குறைவு மற்றும் அறியாமையே காரணம். இந்த நோய்கள் தவிர்க்கக்கூடியவை!

    வலி ஏற்படும் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் விழாதீர்கள்.

    எடை கூடும் வரை சுகாதாரமற்ற உணவுகளை தவிர்ப்பதை ஒத்திவைக்காதீர்கள்.

    மலச்சிக்கல் ஏற்படும் வரை தண்ணீர் குடிப்பதை அலட்சியம் செய்யாதீர்கள்.

    தோல் நோய்கள் ஏற்படும் வரை குடலை சுத்தம் செய்வதை ஒதுக்கிவைக்காதீர்கள்.

    முன்னதாகவே உடல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் (பாஸ்டிங் போன்றவை) மேற்கொள்ள வேண்டும்.

    மழை வரும் நேரத்தில் தான் குடை வாங்குவது போல் இருந்து விடாதீர்கள்!

    இயற்கை மருத்துவத்தில் இது ஒரு சுருக்கமான அறிமுகம் மட்டுமே.

    வரவிருக்கும் வாரங்களில், இயற்கை மருத்துவத்தின் மூலம் பலவகையான நோய்களுக்குரிய சிகிச்சைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

    செல்: 88258 05858

    • மு.வ. பற்றிய அவரின் நெகிழ்ச்சியான நினைவுகள் பதிவாகியுள்ளன.
    • பழந்தமிழ் அறிஞரான மு.வ. தாம் எழுதிய புதினங்கள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் தடம் பதித்தவர்.

    ம.ரா.போ. என்று பலரால் பிரியத்தோடு அழைக்கப்பட்டவர் மாபெரும் தமிழறிஞர் ம.ரா.போ. குருசாமி. அவரது பெயரின் விரிவாக்கம் `மம்சாபுரம் ராக்கப்பிள்ளை போத்தலிங்கம் குருசாமி` என்பது. ராஜபாளையம் அருகேயுள்ள மகமது சாகிப் புரம் என்கிற மம்சாபுரம் கிராமம்தான் ம.ரா.போ. குருசாமியின் சொந்த ஊர்.

    ஆனால் தம் பெயரைப் பற்றி அவர் விந்தையான விளக்கம் சொல்வார். `பற்பல அறிஞர்களின் ஆராய்ச்சிக் கருத்துகளை நான் ஒப்புக் கொள்வதில்லை. அவர்களின் கருத்துக்கு முற்றிலும் மாறாக நான் கருத்துத் தெரிவிப்பேன்.

    எனவே நான் அவர்கள் கருத்துக்கு மாறாகப் போகும் குருசாமி என்பதால்தான் என்னை மா.ரா.போ. குருசாமி என்கிறார்கள்` என்று நகைத்தவாறே சொல்வார் அவர்.

    1922 ஜூன் 15-ந் தேதி பிறந்தவர். மறைந்தது 2012 அக்டோபர் 6. தொண்ணூறு வயது நிறைவாழ்வு வாழ்ந்த பெருமகன். எப்போதும் கதர் ஆடையே அணிந்த காந்தியவாதி. அவரது உச்சரிப்பு மிகத் திருத்தமாக இருக்கும். சற்றுக் குள்ளமானவர். அவர் மேடையேறும்போது எந்த பந்தாவும் இருக்காது. என்ன பேசிவிடுவார் இவர் என்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

    ஆனால் பேசத் தொடங்கிய சில கணங்களிலேயே மழைபோல் ஆய்வுக் கருத்துகளைக் கடகடவென்று கொட்டத் தொடங்குவார். கணீரென்ற குரலில் தம் கருத்துகளை பகுத்தும் தொகுத்தும் அவர் நிறுவும்போது சபை முற்றிலுமாக அவர் வயப்பட்டிருக்கும். கைதட்டவும் மறந்து அமர்ந்திருப்பார்கள் பார்வையாளர்கள்.

    பழைய இலக்கியம்தான் அவரது பேசுபொருள். முக்கியமாக சிலப்பதிகாரத்தை அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    *பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் இரண்டாண்டுகள் பயின்றார். பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பயிலும் வாய்ப்புப் பெற்றார்.

    குருசாமியின் `குரு - சாமி` டாக்டர் மு. வரதராசனார்! ஆம். தமிழறிஞர் மு.வ.வின் மாணவர் அவர். அதில் அவருக்கு அளவுகடந்த பெருமிதம் இருந்தது. தம் ஆசிரியரான மு.வ. பற்றி `மு.வ. முப்பால், மூவா நினைவுகள்` என்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் மு.வ. பற்றிய அவரின் நெகிழ்ச்சியான நினைவுகள் பதிவாகியுள்ளன.

    பழந்தமிழ் அறிஞரான மு.வ. தாம் எழுதிய புதினங்கள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் தடம் பதித்தவர். அவரது மாணவரான குருசாமி தம் ஆசிரியர் அளவு படைப்பிலக்கியம் படைக்கவில்லை என்றாலும் `இட மதிப்பு` போன்ற தலைப்புகளில் ஒருசில சிறுகதைத் தொகுதிகளைத் தம் பங்களிப்பாக வெளியிட்டிருக்கிறார்.

    குருசாமி பெரியபுராண அறிஞரான அ.ச. ஞானசம்பந்தனின் மாணவரும் கூட. தமக்குப் பிடித்த மாணவர் எனக் கூறி அ.ச.ஞா அவர் முதுகில் தட்டிக் கொடுத்ததுண்டு. அ.மு. பரமசிவானந்தம், துரை அரங்கனார் போன்ற பேரறிஞர்களிடமும் தமிழ் பயிலும் வாய்ப்பு ம.ரா.போ.வுக்கு கிட்டியது.

    ஆக பற்பல உயர்நிலைத் தமிழ் அறிஞர்களால் பட்டை தீட்டப் பட்டவன் நான் எனத் தமக்குத் தமிழ் கற்பித்தவர்கள் பெயரையெல்லாம் நன்றியோடு அடிக்கடி நினைவு கூர்வார்.

    இளைஞராயிருந்தபோது தமிழ்த் தென்றல் திரு.வி.க.விடம் நெருங்கிப் பழகித் தமிழ் கற்ற பெருமையும் கூட இவருக்கு உண்டு. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானமின் தமிழரசுக் கழகக் கொள்கைகளோடு உடன்பாடு உடையவராயிருந்தார் குருசாமி. தம் அரசியல் சிந்தனைகளுக்கான வழிகாட்டியாக ம.பொ.சி.யையே அவர் கொண்டிருந்தார்.

    `ஆழமும் அகலமும்` என்ற தலைப்பில் அவர் ம.பொ.சி. பற்றி நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு பின்னர் புத்தகமாக வெளிவந்தது. சிலப்பதிகாரம் குறித்து ம.ரா.போ. எழுதிய `சிலப்பதிகாரச் செய்தி, சிலம்புவழிச் சிந்தனை` போன்ற நூல்கள் மிக முக்கியமான நூல்கள்.

    பத்திரிகையாளராக இருந்த அனுபவமும் ம.ரா.போ.வுக்கு உண்டு. ம.பொ.சி.யின் செங்கோல் இதழில் சிறிதுகாலம் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். கோவையில் இருந்து கலைக்கதிர் என்ற சிறப்பான அறிவியல் இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. அந்த இதழில் சிறிதுகாலம் பணிபுரிந்திருக்கிறார். புகழ்பெற்ற பதிப்பாளரான சக்திவை. கோவிந்தனின் சக்தி அலுவலகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றித் தமிழ்த் தொண்டு செய்திருக்கிறார்.

    திருப்பூர் கிருஷ்ணன்


    தமிழ் சார்ந்து பல்வேறு உயர்நிலைப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். கோவைக் கம்பன் கழகத்தின் துணைத் தலைவராகவும் கோவை நன்னெறிக் கழகத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.

    *கதரே அணிந்து வாழ்ந்த காந்தியவாதி அவர். காந்தியச் சிந்தனைகளைத் தாங்கிய `சர்வோதயம்` என்ற மாத இதழிலும் பணிபுரிந்திருக்கிறார்.

    ஒவ்வோர் இதழிலும் ஒவ்வொரு பக்கத்திலும் காந்திய மணம் கமழும் சர்வோதயம் இதழ் தமிழில் தடம் பதித்த இதழ்களில் ஒன்று. தூய காந்திய வாழ்க்கை வாழ்ந்துவந்த குருசாமியின் பணியால் சர்வோதயம் பெருமை பெற்றது. *அவர் எதையும் மிக நுணுக்கமாக அணுகுபவர். பல சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கையெழுத்து இடும்போது, `ம.ரா.போ. குருசாமி` எனக் கையெழுத்திட்டு அடைப்புக் குறிக்குள் `பேராசிரியன்` என்றுதான் எழுதுவார். பேராசிரியர் என்று ஒருபோதும் எழுத மாட்டார்.

    ஏன் என்று கேட்டால், `எனக்கு நானே எப்படி மரியாதை கொடுத்துக்கொள்ள முடியும்? அது பண்பாடில்லையே? மற்றவர்கள் என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் அப்படி எழுதலாம்` என விளக்கமளிப்பார்.

    மெத்தப் படித்த படிப்பாளியான அவரிடம் புலமை உண்டு. ஆனால் புலமைச் செருக்கு அறவே கிடையாது.

    *கோவை சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் துணை முதல்வராகப் பணிபுரிந்தார். கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர்.

    தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பதிப்புத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

    மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் தம்மை வந்து சந்திக்கலாம் என்றும் எந்த சந்தேகத்தையும் கேட்கலாம் என்றும் சொல்வார். ஏராளமான மாணவர் சூழவே அவர் வாழ்ந்தார்.

    எந்த நேரத்தில் எந்த மாணவர் வந்து தமிழ் தொடர்பாக எந்த சந்தேகம் கேட்டாலும், அந்த மாணவருக்கு எழுந்த ஐயத்தை நீக்கிவிட்டுத் தான் அடுத்த பணியைப் பார்ப்பார். தமிழ் கற்பிப்பதை ஒரு வேள்விபோல் நிகழ்த்தியவர். தமிழே வாழ்வாக வாழ்ந்தவர்.

    வகுப்புக்கு மிகச் சரியான நேரத்தில் வருவது, அன்று எதைக் கற்பிக்கிறாரோ அதை முன்கூட்டியே தம் இல்லத்தில் தயார் செய்து கொண்டு வந்து வகுப்பெடுப்பது, தான் எடுத்த வகுப்பு தொடர்பாக நூலகத்தில் என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என ஒவ்வொரு வகுப்பு முடியும்போதும் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்வது, மாணவர்கள் அச்சமின்றித் தன்னிடம் கேள்வி கேட்கும் வகையில் அவர்களிடம் நட்போடு பழகுவது என்று இவ்விதமெல்லாம் இயங்கிய லட்சிய ஆசிரியர் அவர். ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர்.

    மாணவர்களுடன் நட்போடு பழகினாலும், கல்வி கற்பிப்பதில் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அவர் என அவரிடம் பயின்ற மாணவர்கள் சொல்கிறார்கள்.

    *அவரது பதிப்பாசிரியப் பணி குறிப்பிடத்தக்கது. `கபிலம்` என்ற தலைப்பில் சங்க இலக்கியத்தில் உள்ள கபிலர் எழுதிய எல்லாப் பாடல்களையும் தொகுத்து ஒவ்வொரு பாடலுக்கும் உரையெழுதி நூலாக வெளியிட்டார். கோவை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணப் பதிப்பிலும் ம.ரா.போ. குருசாமியின் பங்களிப்பு உண்டு.

    சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயம் என்ற கவிதை நாடகம் இப்போது பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து வரிகளை உள்ளடக்கியது. அந்த நாடக நூலையும் பதிப்பித்துள்ளார் குருசாமி.

    *`பாரதியார் ஒரு பாலம், கம்பர் முப்பால்` '(ஏவி.எம். அறக்கட்டளைச் சொற்பொழிவு), வா.செ. குழந்தைசாமியின் கவிதைகள் குறித்து `குலோத்துங்கன் கவிதைகள் ஒரு திறனாய்வுப் பார்வை` என 25-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

    சாகித்ய அகாதமியின் `இந்திய இலக்கியச் சிற்பிகள்` வரிசையில் `மாபெரும் தமிழறிஞர்களான மா. ராசமாணிக்கனார் குறித்தும், திரு.வி. கல்யாண சுந்தரனார் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்.

    பாரதி கவிதைகளைத் தொகுத்து ஓர் ஆய்வுப் பதிப்பு நூல் வெளியிட்டுள்ளார். இவரது இலக்கியக் கட்டுரைகள் பல தொகுப்பு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் இலக்கியச் சுவை, இலக்கியச் சிந்தனை, கம்பர் கலைப்பெட்டகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

    *இவரைத் தேடி எண்ணற்ற விருதுகள் வந்தன. அவற்றில் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வழங்கிய பேரவைச் செம்மல் விருது, இளையராஜா அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சேக்கிழார் விருது, கலைஞர் விருது, சென்னைக் கம்பன் கழகம் வழங்கிய பேராசிரியர் ராதாகிருஷ்ணன் விருது, குலபதி முன்ஷி விருது, ஸ்ரீராம் அறக்கட்டளை வழங்கிய பாரதி விருது, ஆதித்தனார் விருது போன்றவை குறிப்பிடத்தக்கவை. பற்றற்ற ஆன்மிக மனம் படைத்தவர். விருதுகள் அவரைத் தேடி வந்தனவே தவிர, விருதுகளைத் தேடி அவர் ஒருபோதும் சென்றதில்லை.

    *முருகப் பெருமானே அவர் வழிபடும் தெய்வம். அவர் முருகனைப் பற்றி மரபுக் கவிதை நூல் ஒன்றை எழுதிய மரபுக் கவிஞரும் கூட. தம் இறுதிக் காலத்தை முருகப் பெருமானின் சிந்தனையில் தோய்ந்தே கழித்தார்.

    பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் பட்டு எழுத்தில் மட்டுமல்லாமல் பேச்சிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட தமிழறிஞர்களின் வரிசையில் நிச்சயம் மா.ரா.போ. குருசாமிக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. பழந்தமிழ் ஆர்வலர்கள் ம.ரா.போ.குருசாமியின் தமிழ்ப் புதையல்களாக விளங்கும் நூல்களைத் தேடிப் படித்துப் பயனடையலாம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com.

    ×