என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • தோலில் ஏற்படும் லேசான காயங்களுக்கு முதலுதவி மருந்தாகவும் இருக்கிறது.
    • விளம்பரங்களில் காண்பிக்கும் பொருட்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.

    நீங்கள் உடம்புக்கு செத்த எண்ணெய் தேய்ப்பவரா?

    தேங்காய் எண்ணெய் தெரியும்,நல்ல எண்ணெய் தெரியும், விளக்கெண்ணெய் தெரியும், வேப்ப எண்ணெய் கூட தெரியும். ஆனால் அதென்ன செத்த எண்ணெய் என்கிறீர்களா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்! தெரிந்து கொள்வீர்கள்.

    தேங்காய் எண்ணெய் கடந்த தலைமுறை வரை கூட சர்வரோக நிவராணியாக இருந்தது. ஆனால் இந்த தலைமுறைதான் அது ஏன் எதுக்கு என்று கேட்டு எல்லாவற்றையும் ஒதுக்குவது போல தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளும் பழக்கத்தையும் விட்டுவிட்டனர்.

    சிறு குழந்தைகளுக்கு தினமும் உடலில் எண்ணெய் தேய்த்து விடுவது நம்முடைய பல காலத்துப் பழக்கம். அந்த பயன்பாட்டிற்கு, பலருக்கும் பலகாலமாய் முதல் தேர்வாக இருந்தது தேங்காய் எண்ணெய் தான்.

    தேங்காய் எண்ணெயை, பிசு பிசுப்பாக இருக்கிறது, கையில் ஒட்டுகிறது இப்படி பல காரணங்களை சொல்லி ஒதுக்கிவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட அல்லது கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய் வகைகளை இப்போது பயன்படுத்துகிறோம். அவை எல்லாம் தேங்காய் எண்ணெய்க்கு சரியான மாற்றே கிடையாது.

    தேங்காய் எண்ணெயின் ஸ்பெஷல் என்ன?

    தோலில் தேய்க்கப்படும் எல்லா எண்ணெய்களும், கிரீம்களும் பொதுவாக செய்யக் கூடிய ஒரு விஷயம் தோலினுடைய ஈரப்பதத்தை அதிகரிப்பது, தோலின் ஈரப்பதத்தை பாதுகாத்தால் தோல் மென்மையாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணெய் மட்டும் இதைத்தாண்டியும் வேறு நிறைய வேலைகளைச் செய்கிறது. என்னென்ன என்று பார்க்கலாமா? இப்போதும் கேரளாவில் அந்த மக்கள் வெளியே செல்லும் போது, கை கால்களில், தேங்காய் எண்ணெயை பூசிக்கொண்டு செல்வார்கள். முகத்தில் கூட தேங்காய் எண்ணெய் பூசிக் கொள்வார்கள். காரணம் தேங்காய் எண்ணெய், சூரிய ஒளியில் இருந்து அல்ட்ரா வயலட் கதிர்கள் நம் தோல் வழியாக உடலில் ஊடுருவதை தடுக்கிறது என்பதனால், இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.

     

    நம்மூரில் ஒரு நம்பிக்கை உண்டு. தேங்காய் எண்ணெய் பூசி சென்றால் தோல் கருப்பாகும் என்று. அது முற்றிலும் தவறான நம்பிக்கை. தேங்காய் எண்ணெய் தேய்க்காமல் சென்றாலும் கருப்படிக்கத்தான் செய்யும் அது வெய்யிலின் வெகுமதி. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக், கேப்ராயிக், கேப்ராலிக் அமிலங்கள்தோலில் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. இது படை, சொறி சிரங்கு, தோல் அரிப்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. தோளில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது, தோலில் ஏற்படும் லேசான காயங்களுக்கு முதலுதவி மருந்தாகவும் இருக்கிறது.

    அதனுடைய ஆன்டிஆக்சைடு சக்தியால் NICU எனப்படும் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை பிரிவிலும் இப்போது கிரிம்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயையே குறைமாத குழந்தைகளுக்கு பூசுகிறார்கள். தேங்காய் எண்ணெய் தடவப்பட்ட குறைமாத குழந்தைகள் தோல் விரைவாக முதிர்ச்சி அடைவதும், மற்றும் தோல் வழியாக பாக்டீரியா வைரசால் வரக்கூடிய நோய்கள் குறைவாக இருப்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    சிறு குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை கட்டாயம் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை நாம் விட்டுவிடக்கூடாது, அந்த இரண்டு வருடங்களில் தோலுக்கு நாம் கொடுக்கும் சக்தி அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். எனக்கு தெரிந்து குளித்துவிட்டு வந்ததும் உடல் முழுவதம் தேங்காய் எண்ணெயை மிருதுவாக பூசிக்கொள்ளும் பலர் இப்போதும் உள்ளனர். அதில் முதியவர்களும் உண்டு. அவர்களை கேட்டுப்பாருங்கள் தங்களது உடல் கவசமே தேங்காய் எண்ணெய்தான் என்பர்.

    மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா

     

    ரசாயனம் கலந்த வாசனையுள்ள எத்தனையோ எண்ணெய்கள் உண்டு. முக்கியமாக பேபி ஆயில் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான பூசு எண்ணெய்களில், பலவிதம் உண்டு. சிலவற்றில் தேங்காய் எண்ணெய், சிலவற்றில் ஆலிவ், சிலவற்றில் பாதாம் எண்ணெய், சிலவற்றில் மினரல் ஆயில் என்று எழுதி இருக்கும். ஒரு மிகவும் பிரபலமான பேபி ஆயில் தயாரிப்பில் மினரல் ஆயில் என்று மட்டுமே இருக்கும். மினரலாயில் என்பது பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இது தோலுக்கு ஈரப்பதத்தை கொடுத்தாலும், ஒரு துளி கூட தேங்காய் எண்ணெயோடு நாம் இதை ஒப்பிட முடியாது. உயிரற்ற இதுபோன்ற எண்ணெய்களை என்றாவது ஒருநாள் வாசனைக்காக தேய்த்துக் கொள்வது தவறு இல்லை. ஆனால் இதையே பழக்கமாக்கி விடக்கூடாது.

    பொதுவாக நாம் நினைப்பது எல்லா பாக்டீரியாவும் நமக்கு கெடுதலை உண்டாக்கும் என்று. ஆனால் சில நல்ல பாக்டீரியாக்களும் இருக்கின்றன. அதனால் தினமும் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெயிலேயே இருக்கக்கூடிய பிரீ பையாடிக் என்ற நுண்ணுயிர்கள், தோலில் உள்ள ப்ரோ பயோடிக் எனப்படும் நுண்ணுயிரிகளும் அழியாமல் பாதுகாக்கப்படுவதால், மற்றும் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இந்த பிரீ பையாடிக் தான் எண்ணெயை உயிருள்ளதாக வைத்திருக்கிறது.

    ஏதேனும் காயம் பட்டாலும் கூட நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தோல் இரண்டு, மூன்று நாட்களிலேயே அந்த காயத்தை முழுமையாக குணப்படுத்தி விடும். காயத்தில் ஏதேனும் ஒரு கிருமி பிடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. பெண்களுக்கு 40 வயதாகும்போது தோல் மிகவும் வறண்டு போவதை காணலாம். ஹார்மோன் குறைவினால் வறண்டு போக ஆரம்பிக்கும். இது நாள் வரை தேய்க்காவிட்டாலும் அந்த கட்டத்திலாவது தினமும் தேங்காய் எண்ணெயை தடவும்பொழுது தோல் வறண்டு போவது வெகு வேகமாக சுருக்கமாவது மற்றும் தோல் நோய்கள் வருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நீங்கள் உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு கிரீம் எதுவுமே எழுதிக் கொடுப்பதில்லையா?என்று கேட்பது எனக்கு புரிகிறது.

    கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் வரக்கூடிய கோடுகளுக்கு "ஸ்ட்ரையா" என்று சொல்லுவோம். அதற்காக நானும் கிரீம்களை எழுதிக் கொடுப்பதுண்டு. ஆனால் கிரீம்கள் மட்டுமல்லாது அத்துடன் தேங்காய் எண்ணெய். ஆலிவ் எண்ணெய். பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பூசிக்கொள்ளச் சொல்லுவேன்.

    அதுவும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல இயற்கையான உயிர் உள்ள எண்ணெய்யை விட்டுவிட்டு அதிக விலை கொடுத்து செத்த எண்ணெய்களை வாங்கி தேய்த்துக் கொள்ளும் முட்டாள்களாக நாம் இருக்கக் கூடாது. நம் நாட்டில் விளையும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்துவதால், நம் தென்னை விவசாயிகளுக்கும் உதவி செய்கிறோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய பல பொருட்களுக்கு எந்த விதமான விளம்பரமும் கிடையாது. விளம்பரங்களில் காண்பிக்கும் பொருட்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.

    எந்த பொருட்களை வாங்கினாலும் அதில் உள்ள பொருட்கள் என்ன? இன்கிரிடியன்ஸ் என்ன என்பதை க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தோ! அல்லது எழுதி இருப்பதை தெளிவாக படித்தோ தெரிந்து கொண்டு பிறகு உபயோகிக்க வேண்டும். தோலுக்காக உள்ள பல அழகு சாதன பொருட்களில் நம் உடலுக்கு ஒவ்வாத வேண்டாத பல ரசாயனங்கள் கெமிக்கல்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருப்பதை, அதை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். எனவே விழிப்புடன் இருங்கள்.

    தேங்காய் எண்ணெயிலேயே பல வகைகள் உண்டு. தேங்காய் எண்ணெயை சுத்திகரிக்கும் பொழுது பல மாற்றங்களை அடைந்து விடும். எனவே முடிந்தவரை எந்த ரசாயனங்களும் கலக்காத செக்கு எண்ணையாக பயன்படுத்துவது நல்லது. அதுவும் வெர்ஜின் ஆயில் எனப்படும் தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் கெமிக்கல்கள் எதுவும் கலக்கப்படாமல் சுத்தமாக கிடைத்தால் மிகவும் நல்லது.

    இன்று தேங்காய் எண்ணெயை விட்டு விலகும் நாம், அடுத்த தலைமுறைக்கு அதை அறிமுகப்படுத்தாமலேயே தொலைத்து விடக்கூடிய தவறை செய்கிறோம்.

    வழி வழியாக உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைவிட்டு விடாதீர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள். எனவே தேங்காய் எண்ணெய் தேய்ப்போம்.! தோல் நலம் காப்போம்!

    இது போன்ற பல நல்ல விஷயங்களை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்.

    வாட்ஸ்அப்: 8925764148

    • முதலீட்டுக்கு இவ்வளவு என்று மனதளவிலாவது ஒரு கணக்கு வைத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
    • பணம் வளர்க்கும் கலை பற்றிய புத்தகங்களும், வலைத்தளங்களும் நிறைய உள்ளன.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள்! முயற்சி செய்தால் எந்த வயதிலும் செல்வம் என்ற சிம்மாசனத்தில் ஏற முடியும் என்பது குறித்து பேசி வருகிறோம். நாம் ஏற வேண்டிய வழியில் இருக்கும் ஆறு சிறு தடைக்கற்களை சென்ற வாரம் கண்டோம். மீதியை இன்று காணலாம்.

    7.செயல்பாடுகளைத் தள்ளிப் போடும் பழக்கம்

    நண்பர் ஒருவர் இருந்தார். செலவைக் குறைக்கும் வழிகள், சேமிப்பை அதிகரிக்கும் முயற்சிகள் பற்றியெல்லாம் முழுவதுமாக விசாரித்துத் தெரிந்துகொண்டார். நாளைக்கே அந்த வங்கியில் இந்தக் கணக்கை ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லிப் போனார். இரண்டு தினங்கள் கழித்து கேட்டபோது, "பேஸ்புக் பார்ப்பது, வாட்சப் மெசேஜ்களுக்கு பதிலளிப்பது, நண்பர்களுடன் அரட்டை என்று பொழுது கழிந்துவிட்டது. நாளை பார்க்கிறேன்" என்று கூறினார். இவர் போலத்தான் நம்மில் பலர் இருக்கிறோம். நேரம்தான் நழுவுகிறதே தவிர, வேலைகள் முடிந்தபாடில்லை. தள்ளிப் போடுதல் தவறு என்று தெரிந்தாலும் அதையே செய்கிறோம்.

    செய்யவேண்டியது: ஒவ்வொரு நாட்களும் மூன்று வேலைகளை கண்ணுக்குத் தெரியும்படி எழுதி வைத்துக்கொண்டு, கண்டிப்பாக அவற்றை செய்து முடிக்கவேண்டும். கடினமான வேலைகளை முதலில் செய்யவேண்டும். வேலைகளை முடிக்கும்வரை செல்போனை கைக்கெட்டாத தூரத்தில் வைக்கவேண்டும்.

    8.குற்ற உணர்வில் குடும்பத்தாருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு அளவுக்கதிகமாக செலவழித்தல்

    இது முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்களிடம் காணப்படும் ஒன்று. அதிக நேரம் குழந்தையைப் பிரிந்த வருத்தத்தில், வரும்போதே அதற்குப் பிடித்த தின்பண்டங்களை வாங்கி வரும் பழக்கத்தை நிறையத் தாய்மாரிடம் பார்க்கலாம். அதேபோல் குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் பலர் சம்பாதித்த பணத்தில் பாதியை அநாவசிய செலவுகளில் சூறை விடுவதையும் காண்கிறோம். குடும்ப நலனுக்குத்தான் சம்பாதிக்கிறோம் என்றாலும், அதை நீண்ட கால முதலீடுகளாக மாற்றாமல் ஆசைக்கான செலவுகளாக ஊதித்தள்ளுவதில் என்ன பலன் இருக்கமுடியும்?

    செய்யவேண்டியது: குடும்பத்தைப் பிரிந்து உள்ளூரிலோ, வெளியூரிலோ வேலைக்கு செல்லும் அனைவரும் "இதனை நாம் குடும்ப நலனுக்காகத்தான் செய்கிறோம்" என்பதை திடமாக மனதில் இருத்தி, குடும்பத்தாருக்கும் புரியும்படி எடுத்துக்கூற வேண்டும். அப்படி சம்பாதித்த பணத்தில் இன்னின்ன செலவுக்கு இவ்வளவு, சேமிப்புக்கு இவ்வளவு, கடனுக்கு இவ்வளவு, முதலீட்டுக்கு இவ்வளவு என்று மனதளவிலாவது ஒரு கணக்கு வைத்துக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.

    9.குறிக்கோளின்றி வாழ்வது

    நம்மில் பலரும் இந்தப் பழக்கத்துக்கு அடிமை. நல்ல உடல் நலமும், வாய்ப்புகளும் இருப்பவர்கள் கூட அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும் என்ற உணர்வும், அதற்கான முயற்சிகளும் இல்லாமல் செய்ததையே செய்துகொண்டு, இயந்திரத்தனமாக வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். கேட்டால், "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து; கிடைத்ததைக் கொண்டு திருப்தியாக வாழப் பழகவேண்டும்" என்றெல்லாம் பொன்மொழிகளை உதிர்ப்பார்கள். ஆனால் சற்று ஆழமாக சிந்தித்தார்களானால், தங்கள் இளவயதுக் கனவுகள் எல்லாமே இன்னும் கனவாகவே இருப்பதையும், எதுவுமே கைக்கு வராததையும் உணரலாம். இன்று நினைத்தால் கூட கழுத்தளவு கடனில் இருந்து வெளிப்பட்டு தங்கள் குறிக்கோள்களை அடைய இவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

    சுந்தரி ஜகதீசன்

     

    செய்யவேண்டியது: உங்கள் கால்விலங்குகள் நீங்களே போட்டுக் கொண்டவை என்று உணர்ந்து, அவற்றைக் கழற்றி எறியுங்கள். உங்களைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு, செயலில் இறங்குங்கள். உங்கள் சிறிதும், பெரிதுமான கனவுகளைப் பட்டியலிட்டு, அவற்றை அடையும் வழிகளை சிந்தியுங்கள். உங்களை முன்னேறவிடாமல், தேவையற்ற கேளிக்கைகளில் ஈடுபடுத்தும் நபர்களைப் புறக்கணியுங்கள். 'ஏதோ எழுந்தோம், படுத்தோம், இன்றைய பொழுது கழிந்தது' என்று இல்லாமல், ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு செலவழியுங்கள்.

    10.பொருளாதார அறிவு இல்லாமல் இருப்பது

    ஒரு உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பொருளாதார அறிவு நமக்கு சற்றுக் குறைவுதான். விவசாய நாடாக இருந்தவரை அதற்கான தேவை நமக்குப் பெரிய அளவில் இருக்கவில்லை. ஆனால் தொழில்சார்ந்த நாடாக மாறியபின்னும் நமக்கு பள்ளியிலும்,, கல்லூரிகளிலும், சம்பளம் தரும் வேலைகளைப் பெறுவது எப்படி என்று கற்றுத் தந்தார்களே தவிர, வரும் பணத்தை எப்படி பெருக்குவது,

    எப்படி அதன் உதவியுடன் வாழ்வை வளமாக்குவது என்பதெல்லாம் குறித்து எதுவும் கூறவில்லை. பொருளாதார அறிவு இல்லாததால் நம் முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதை நாம் அறிந்தாலும் அது குறித்து எந்த முயற்சியையும் பெரிதாக எடுப்பதில்லை. யாராவது இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு நம்மை நிம்மதியாக வாழவிடுவார்களா என்று தேடி, கண்ணில் பட்டவர்களிடம் பணத்தை ஒப்படைக்கத் துடிக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் – உங்கள் பணத்துக்கு நீங்களே பொறுப்பு.

    செய்யவேண்டியது: இன்று பல பொருளாதார ஆலோசகர்கள் தங்கள் அறிவை, பல வருட அனுபவத்தை யூட்யூபில் கொட்டிக் கொடுக்கிறார்கள். தினமும் அவற்றில் இரண்டையாவது பார்க்க முனைவது நல்லது. பணம் வளர்க்கும் கலை பற்றிய புத்தகங்களும், வலைத்தளங்களும் நிறைய உள்ளன. இவற்றின் உதவியோடு நம் செல்வத்தை எளிதாக வளர்க்கலாம்.

    வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் சென்ற கட்டுரையிலும், இந்தக் கட்டுரையிலுமாக நாம் பார்த்த 10 தடைகள் மட்டுமின்றி, இன்னும் சில ஆங்காங்கே தலைதூக்க வாய்ப்புண்டு. நம் பயணத்தின் போது அவை குறித்தும் பேசுவோம். மேலே பார்த்த தடைகள் எல்லாம் நம்முள் இருந்து எழுபவை. இவை தவிர வெளியில் இருந்தும் நம் பணத்தைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

    யானையை வசமாக்குவது போல் மனித மனதை வசமாக்கும் வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. 2500 வருடங்களுக்கு முன்பே கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் மனித மனத்தை வசமாக்கி, வெற்றி கொள்ளும் வித்தைகள் பற்றி பேசியுள்ளார். இன்று அவற்றை முறையாகக் கற்றுத் தர கல்வி நிலையங்களும், கற்றுத் தேர்ந்தவர்களுக்கு வேலை தர பல கம்பெனிகளும் வந்துவிட்டன. இவர்களில் பலரின் நோக்கமும் ஒன்றே – நாம் அறியாமலேயே நம் மனதுக்குள் புகுந்து எண்ணங்களை வசப்படுத்தி, அட்டைப் பூச்சி போல வலி தெரியாமல், நம்மிடமிருக்கும் பணத்தை உறிஞ்சுவதுதான். அதற்காக எந்த விதத்தில் காய் நகர்த்தினால் இந்தப் பட்சி விழும் என்று திட்டமிட்டு செயலாற்றுகின்றனர். அவர்கள் உபயோகப் படுத்தும் யுக்திகளில் சில பற்றி தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

    பற்றாக்குறை மனப்பான்மையை ஏற்படுத்துதல்

    நம் ஊர்களில் பஞ்சத்துக்கு நெஞ்சடைப்பு என்ற சொலவடையை நீங்கள் கேட்டிருக்கலாம். ஏதாவது ஒரு பொருள் சற்று பற்றாக்குறையாக இருக்கிறது என்று தோன்றினால், அதை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏனோ மனிதமனத்தில் தோன்றிவிடுகிறது. கொரோனா லாக்டவுனில் அமெரிக்க மக்கள் டாய்லெட் பேப்பரை பண்டில், பண்டிலாக வாங்கி பதுக்கியதை மறக்க முடியுமா? தங்கத்தின் விலை உச்சம் என்று தெரிந்தாலும், அக்ஷய திரிதியை, அது, இது என்று ஏதேதோ பெயர்களில் வாங்கிக் கொண்டேதானே இருக்கிறோம்? மனித மனத்தின் இந்தப் போக்கை தங்கள் வசதிக்காக சரியான விதத்தில் பயன்படுத்துவோர் பலர்.

    உதாரணமாக, பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மென்ட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போதே "இரண்டே வீடுகள்தான் விற்பனைக்கு உள்ளன. மீதி எல்லாம் ஏற்கெனவே விலை போய்விட்டன" என்பதுபோல் ஒரு அறிவிப்பு வெளியே தொங்கும். இது, "அய்யோ! அத்தனையும் விற்றுப் போகும்முன் வாங்கிவிடவேண்டும்" என்ற துடிப்பை நம்முள் ஏற்படுத்தும். நகைக் கடைகளில் கூட நாம் தேர்ந்தெடுக்கும் டிசைனில் ஒன்றே ஒன்றுதான் பாக்கி இருக்கிறது என்று கூறுவார்கள். அவ்வளவு ஏன்? "போனால் வராது; இப்போதே வாங்குங்கள்" என்று கூவித்தானே பலபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன? இது நம் ஆசையைத் தூண்டும் உத்தி என்று புரிந்துகொண்டால் நாம் இந்த வலையில் இருந்து தப்பலாம்.

    மனதை அள்ளும் நடத்தை:

    தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்டுகள் இவற்றில் இருந்து வந்து உங்களை சந்திக்கக்கூடிய நபர்கள் நல்ல அறிவாற்றலும், பழகுவதற்கு இனிய நடத்தையும் உடையவர்களாக இருப்பார்கள். உங்கள் நலனில் நிஜமான அக்கறையும் இருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய முக்கிய நோக்கம் தங்கள் கம்பெனிக்கு லாபம் தேடித் தருவதுதான். கம்பெனிக்கு உண்மையாக இருக்க எண்ணும் அவர்களை குற்றம் சொல்ல முடியாது. ஆனால் அளவுக்கு அதிக கமிஷன், பீஸ் போன்ற செலவினங்கள் உங்கள் முதலுக்கு மோசம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

    பரிசுப் பொருட்கள் தருதல்:

    யாராவது ஒரு பொருளைப் பரிசாக தந்துவிட்டால், அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணுவது மனித சுபாவம். நகைக் கடைகளில் காபி அல்லது கூல்டிரிங்க் கொடுத்து உபசரித்தார்கள் என்றால், அங்கிருந்து ஏதாவது வாங்காமல் கிளம்ப மனம் வருவதில்லைதானே?

    சில இயக்கத்தினர் ஐந்து ரூபாய் பெறுமான மலர்களைப் பரிசாகத் தந்து, டொனேஷன் பெற்றுச் செல்வதும் இந்த அடிப்படையில்தான். இப்படி மென்மையான மனங்களை உடையவர்கள் பரிசுப் பொருட்களை ஏற்பதைத் தவிர்க்கவேண்டும். அல்லது அதை யதார்த்தமாக ஏற்றுக் கொண்டு, தங்கள் முடிவில் உறுதியாக இருக்கவேண்டும்.

    இப்படி நம் மனத்தின் மீதும், பணத்தின் மீதும் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் பலவிதத் தாக்குதல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் உங்களை யார், எவ்விதம் ஏமாற்ற முயன்றார்கள்? அதில் இருந்து எப்படி தப்பினீர்கள்? இது குறித்து குடும்பத்தினரிடம் பேசினீர்களா?

    • உலகத் திருக்குறள் உயராய்வு மையம் இவருக்கு `குறள் ஆய்வுச் செம்மல்` என்ற பட்டம் வழங்கியது.
    • தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பெருமையும் அவருக்கு உண்டு.

    முல்லை முத்தையா தமிழறிஞர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட. முல்லைப் பூக்களைச் சரம் சரமாய்த் தொடுத்ததுபோல் இலக்கிய மணம் கமழும் சொற்றொடர்கள் அவர் மேடைப் பேச்சில் இயல்பாக வந்து விழும்.

    தங்குதடையற்றுச் சலசலத்துப் பாயும் தெளிந்த நீரோடை போன்ற பேச்சு அவருடையது. செயற்கைப் பூச்சில்லாமல் மிக இயல்பாகப் பேசும் ஒரு தனி ஆற்றல் அவரிடமிருந்தது.

    முத்தையா பெற்ற விருதுகளும் பெருமைகளும் பலப்பல. திருக்குறள் நெறிபரப்பு மையம் நடத்திய விழாவில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் முன்னிலையில் நாவலர் நெடுஞ்செழியன் இவருக்கு `திருக்குறள் நெறித்தோன்றல்` என்ற பட்டம் அளித்தார். கல்லை தே. கண்ணன் தலைமையில் `வள்ளுவர் வழி வாசகர் வட்டம்` நடத்திய விழாவில் தஞ்சைப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சி. பாலசுப்பிரமணியம் `திருக்குறள் சீர் பரவுவார்` என்ற பட்டத்தை வழங்கினார்.

    உலகத் திருக்குறள் உயராய்வு மையம் இவருக்கு `குறள் ஆய்வுச் செம்மல்` என்ற பட்டம் வழங்கியது. `பாவேந்தர் சீர் பரவுவார்` என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை கம்பன் கழக விழாவில் நீதிபதி மு.மு. இஸ்மாயீல் இவருக்கு மர்ரே எஸ். ராஜம் நினைவுப் பரிசை வழங்கிப் பெருமைப்படுத்தினார். பாவேந்தர் விழாவில் கலைஞர் கருணாநிதி இவருக்கு சால்வையளித்துப் பாராட்டிப் பேசியுள்ளார். இவர் பெற்ற பெருமைகள் இன்னும் பற்பல.

    முத்தையா தாம் செய்த தொழிலால் பதிப்பாளர் என்று அறியப்பட்டவர். ஆனால் அவரைப் பதிப்பாளர் என்ற சின்னச் சிமிழில் அடைத்துவிட முடியாது.

    அடிப்படையில் பழந்தமிழ், நவீனத் தமிழ் இரண்டிற்கும் அவர் மாபெரும் ரசிகராக இருந்தார். தி. ஜானகிராமன், லா.ச.ரா. உள்ளிட்ட பல அண்மைக்கால இலக்கியவாதிகளின் எழுத்துக்கள் பற்றி அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் அந்தப் புத்தகத்தின் நயங்கள் பற்றி ஒரு முழுமையான ஆய்வுபோலத் தம் பேச்சை நிகழ்த்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.

    அவர் பேசிவிட்டு அமர்ந்தால் ஓர் இனிமையான சங்கீதக் கச்சேரி நிறைவு பெற்றதுபோல் தோன்றும். கச்சிதமான வடிவமைப்போடு பேசும் ஆற்றல் கொண்டவர். லா.ச. ராமாமிருதம் உள்ளிட்ட பலர் அவரது பேச்சைப் பாராட்டியிருக்கிறார்கள்.

    முழுநேரப் பேச்சாளராக இயங்கும் தகுதி அவருக்கு இருந்தும் அவர் பேச்சுத் துறையில் புகழ்பெறும் வகையில் அதிக மேடைகளில் பேசியதில்லை.

    பதிப்புத் தொழில்தான் தன் தொழில் எனத் தேர்வு செய்துகொண்டிருந்தார். அந்தத் துறையில் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்டினார்.

    திருப்பூர் கிருஷ்ணன்

     

    புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பேரன்பைப் பெற்ற மிகச் சிலரில் ஒருவர். பாவேந்தரின் ஆதரவில் "முல்லை" என்ற இலக்கிய மாத இதழை நடத்தியதன் காரணமாகத்தான் அவருக்கு முல்லை முத்தையா என்ற பெயர் ஏற்பட்டது.

    'அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, நல்ல தீர்ப்பு, காதல் நினைவுகள், தமிழியக்கம்' உள்ளிட்ட, பாரதிதாசனது பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டவர் அவரே. அவ்வகையில் தற்காலக் கவிதை இலக்கியத்தில் என்றும் நிலைத்து நிற்கும் புத்தகங்களை வெளியிட்ட பெருமை அவருடையது.

    புதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு வீடு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான். அந்த வீடுதான் தற்போது அரசு அருங்காட்சியகமாக விளங்குகிறது.

    தமிழ்நாடு பதிப்பாளர் சங்கத்தைத் தொடங்கிய பெருமையும் அவருக்கு உண்டு. அதன் செயலாளராக இருமுறை பணியாற்றியுள்ளார்.

    முல்லை இதழ் மட்டுமல்ல, பஞ்சாயத்து நகராட்சி நலனுக்காக `நகரசபை` என்ற மாதம் இருமுறை இதழும் அவரால் வெளியிடப்பட்டது.

    பஞ்சாயத்து நிர்வாகம் பற்றி `பஞ்சாயத்துச் சட்டம், பஞ்சாயத்தை நடத்துவது எப்படி?` என்பன போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய ஒன்பது புத்தகங்களை அக்கால அமைச்சர்கள் பலர் பாராட்டியுள்ளனர். பெருந்தலைவர் காமராஜ், அவரது பஞ்சாயத்து நிர்வாகம் தொடர்பான நூல்களை மனமாரக் கொண்டாடியுள்ளார்.

    தமிழ்ப் பற்றும் கல்வியிலும் கலைகளிலும் பற்றும் மிக அதிகமாக முல்லை முத்தையாவிடம் இருந்ததில் வியப்பு எதுவுமில்லை. மாபெரும் கல்வியாளரான வித்துவான் நாகப்பச் செட்டியார் முத்தையாவின் தந்தைவழித் தாத்தா. முத்தையாவின் தீவிர தமிழ்ப் பற்றுக்கான ஊற்றுக்கண் அங்கிருந்து வந்திருக்கலாம்.

    புத்திக் கூர்மையில் முத்தையாவை மிஞ்ச ஆளில்லை. அஷ்டாவதானக் கலையில் தேர்ச்சி பெற்று அதனாலேயே அஷ்டாவதான சிவசுப்பிரமணியச் செட்டியார் எனப் பெயர் பெற்றிருந்தவர் அவரது தாய்வழித் தாத்தா என்பதால் தாய் வழியிலும் புத்திசாலிப் பரம்பரை அவருடையது.

    பழனியப்பச் செட்டியாருக்கும் மனோன்மணி ஆச்சிக்கும் 1920 ஜூன் 7 அன்று மகனாகப் பிறந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டைதான் பிறந்த ஊர். பதினைந்து வயதில் தந்தையின் கடையை நிர்வகிப்பதற்காக பர்மா சென்றார். அந்தக் காலகட்டத்தில்தான் நிறையப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார்.

    இரண்டாம் உலகப் போர் மூண்ட தருணம் அது. முல்லை முத்தையா, வெ. சாமிநாத சர்மா, கண. முத்தையா, க.அ. செல்லப்பன் உள்ளிட்ட பலர் பர்மாவிலிருந்து நடந்தே இந்தியா திரும்பினார்கள்.

    பர்மாவில் இருந்தபோதே பாவேந்தர் பாரதிதாசன் எழுத்துகளை விரும்பிப் படித்த முத்தையா தமிழகம் வந்ததும் பாவேந்தரை அவர் இல்லத்திற்குச் சென்று அடிக்கடிச் சந்திக்கலானார். பாரதிதாசனின் இலக்கியத்தின்மேல் கொண்ட ஈடுபாட்டால் பாரதிதாசனுக்கென்றே ஒரு பதிப்பகம் தொடங்க நினைத்தார்.

    கமலா பிரசுராலயம் என்ற பெயரில் பதிப்பகம் தொடங்குவதாக முத்தையா கூறியதும், `கமலா என்ற பெயர் எதற்கு? முல்லை என்று வையுங்கள்!` என்றார் பாரதிதாசன்.

    அப்படி பாரதிதாசனால் பெயர்பெற்ற முல்லைப் பதிப்பகம் விறுவிறுவென பதிப்பகத் துறையிலும் பெயர்பெற்றது. இவர் முல்லை முத்தையா எனப் பெயர்பெறவும் அதுவே காரணமாக அமைந்தது.

    பாரதிதாசன் நூல்களை மட்டுமல்ல, மூதறிஞர் ராஜாஜி நூல்களையும் முல்லைப் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டது. சுயமுன்னேற்றக் கட்டுரையாளரான எம்.எஸ். உதயமூர்த்தியின் தொடக்க கால நூல்களையும் முல்லைப் பதிப்பகமே வெளியிட்டது.

    முத்தையா கற்ற கல்வி பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் கற்றதுதான். உயர்நிலைப் பள்ளி வரைதான் படித்தார். இரண்டு ஆண்டுகள் சமஸ்கிருதத்தையும் பயின்றார். ஆனால் தம் வாழ்நாளில் அவர் வாசித்த நூல்கள் கணக்கில் அடங்காதவை. வாசிப்பே தம் தொழில் என்பதுபோல வாசித்துத் தள்ளினார் அவர்.

    உழைப்புக்கு அஞ்சாதவர். முன்னூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்தவர். பதிப்பாளர் என்ற வகையில் மட்டுமல்ல, எழுத்தாளர் என்ற வகையிலும் பெயர்பெற்றார்.

    `தமிழ்ச்சொல் விளக்கம், பெர்னாட்ஷா வாழ்வும் பணியும், அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள், புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள், நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு` உள்ளிட்ட இன்னும் பற்பல நூல்களை எழுதியிருக்கிறார். முல்லை முத்தையாவின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப் பட்டிருக்கின்றன.

    லியோ டால்ஸ்டாயின் `அன்னா கரீனினா`, மாக்சிம் கார்க்கியின் `தாய்`, குஸ்தாவ் பிளாபர் எழுதிய `மேடம் பவாரி` போன்ற புகழ்பெற்ற நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சுருக்கி எல்லோரும் வாங்கும் மலிவு விலையில் வெளியிட்டவர். `தாய், அன்னா கரீனினா` ஆகிய இரு புதினங்களும் தமிழ் வாசகர்களிடையே தமிழ்ப் புதினங்களைப் போலவே இன்றளவும் புகழ்பெற்று விளங்குகின்றன என்றால் அதற்கு முல்லை முத்தையா அன்றைக்கு இட்ட அடித்தளம்தான் முக்கியக் காரணம் என்று சொல்லவேண்டும்.

    தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்., நாவலர் சோமசுந்தர பாரதியார், தனித்தமிழ்த் தந்தையான வேதாசலம் என்கிற மறைமலை அடிகள், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, அறிஞர் அண்ணா, புதுமைப்பித்தன், பரலி.சு. நெல்லையப்பர், அறிஞர் வ.ரா., தில்லானா மோகனாம்பாள் நாவல் மூலம் பெரும்புகழ் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன், கவியரசர் கண்ணதாசன் போன்ற பல முன்னோடிப் படைப்பாளிகளுடன் நெருங்கிய நட்புறவு கொண்டவராய் இருந்தவர் முத்தையா.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் தீவிர அன்பராக இருந்தாலும், கடவுள் பக்தி நிறைந்தவர். பழந்தமிழின் பக்தி இலக்கியத்திலும் இவருக்கு வற்றாத ஈடுபாடு இருந்தது. அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம் நூலுக்கு உரை எழுதியிருக்கிறார். இந்த உரைநூல் சென்னை கந்தசாமி கோயிலில் வெளியிடப்பட்டது.

    "அகலிகை" பற்றி புதுமைப்பித்தன், கு.ப.ர.., ச.து.சு. யோகியார் போன்ற தற்கால இலக்கியப் படைப்பாளிகள் எழுதிய படைப்புகளையெல்லாம் தொகுத்து, 'தொன்ம வளர்ச்சியில் அகலிகை' என்ற கண்ணோட்டத்தில் நூல் வெளியிட முனைந்தார். அந்த முயற்சி இவர் வாழ்நாளில் வெற்றி பெறவில்லை.

    இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் க. கைலாசபதி, இவரது முயற்சியைப் பாராட்டி, ஆனால் அந்த நூல் வெளிவராதது பற்றி வருந்தி தமது 'அடியும் முடியும்' என்ற புத்தகத்தில் குறிப்பு எழுதியுள்ளார்.

    பின்னர் அந்தத் தொகுப்பு நூல் இவரது புதல்வரும் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் பேரன்பைப் பெற்றவருமான மு. பழநியப்பன் அவர்களால் வெளியிடப்பட்டது.

    முத்தையாவுக்கு மூன்று புதல்வர்களும் மூன்று புதல்விகளும் உண்டு. மாபெரும் தமிழ் அறிஞராய் இலக்கியப் பெருவாழ்வு வாழ்ந்த முல்லை முத்தையா 2000ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதியன்று காலமானார்.

    முல்லை முத்தையா நிறுவிய புகழ்பெற்ற முல்லை பதிப்பகம் அவரது புதல்வர் மு. பழனி மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தாம் எழுதிய நூல்களிலும் தாம் பதிப்பித்த புத்தகங்களிலும் தம் எழுத்துகள் வழியே தொடர்ந்து வாழ்கிறார் தமிழறிஞர் முல்லை முத்தையா.

    தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

    • கடுமையான உடல் உழைப்பு செலுத்தக் கூடியவர்கள் பசைத்தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளுதல் தவறாகாது.
    • சப்பாத்தியை உண்பதால் ஏற்படும் வறட்சி தோன்றாது.

    கோதுமை என்றாலே சப்பாத்தி தான் நாம் அறிந்த உணவாக இருக்கிறது. அதிலும் சப்பாத்தியை மெத்தென்று மிருதுவாகத் தயாரிக்க மாவினை முட்டை ஊற்றிப் பிசைதல், நெய்யூற்றிப் பிசைதல், கடைகளில் டால்டா ஊற்றிப் பிசைதல் என டிசைன் டிசைனாக இறங்கி விடுகிறார்கள் நம் மக்கள்.

    உண்மையில் சப்பாத்தியை விரும்பிச் சாப்பிடுபவர்கள் அதையே முதன்மை உணவாகக் கொண்டவர்கள் அந்தமாவினை இந்தப்பாடுபடுத்துவதில்லை. தண்ணீர் தெளித்துத் தெளித்துப் பிசைகிறார்கள். பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம் ஊறவிடுகிறார்கள். தேய்த்து சூடேற்றிய வறண்ட கல்லில் போட்டு எடுக்கிறார்கள்.

    அது சீறும் பாம்பினைப் போல புஷ்சென்று உப்பிக் கொண்டு வருகிறது. இரண்டு மூன்று அடுக்குகளாகப் பிரிந்து வருகிறது. மென்று சாப்பிட மெத்தென்றும், சுவையாகவும் இருக்கிறது. மாவைப் பிசையும்பொழுது சேர்க்கிற நீரின் அளவும், அதன் பதத்தன்மையும் சரியாக இருந்தால் போதும் அது உப்பிக் கொண்டுதான் வரும். நாம் அதில் கூடுதல் வித்தைகள் எதையும் காட்ட வேண்டியதில்லை. ஆனால் நாம் கோதுமை விளைகிற நிலப்பரப்பிற்கு மாறுதலான வெப்பச் சூழலில் வசிப்பவர்கள் என்பதால் சப்பாத்தி சற்றே ஈரத் தன்மையுடனும், அதன் வறள்பண்பை நீக்கும் எண்ணைத் தன்மையுடனும் விரும்புவது சரியானதே.

    புறச்சூழலில் குளிர்ச்சி நிலவும் வடயிந்தியப் பகுதிகளில் அதனை வறண்டத் தன்மையில் உண்பதையே விரும்புவார்கள். எதுயெப்படியானாலும் கோதுமையின் பசைப்பண்பு அதனைச் சமைக்கிற பொழுது உப்பி வருவது இயல்பானதே. கோதுமையின் பசைப்பண்பு அதன் புரதச்சத்தின் வெளிப்பாடே ஆகும். அது தசைநார்களுக்கு ஆற்றலை வழங்கக்கூடியதாகும். பொதுவாக பசைத்தன்மை என்றாலே அதுயேதோ உடலுக்கு ஆகாத கெட்ட கூறு என்ற கற்பிதம் பொதுவாக பரவியுள்ளது. நம்முடைய உணவில் நார்த்தன்மை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதால் மாவுத்தன்மையே மிகுந்து கொண்டு வருவதால் பசைத்தன்மை கூடாது என்ற கருத்தோட்டம் பரவலாகி விட்டது.

    ஆனால் கடுமையான உடல் உழைப்பு செலுத்தக் கூடியவர்கள் பசைத்தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளுதல் தவறாகாது. நடுத்தர வர்க்கத்தினர், உடல் உழைப்பு இல்லாதவர்கள் பசைத்தன்மை உள்ள உணவைத் தவிர்ப்பது சரி என்பதால், நடுத்தர வர்க்கத்தினரே கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் என்பதால் பசைத்தன்மை ஆபத்தானது என்ற போக்கு பரவலாகி விட்டது. கோதுமை தன்னளவில் பசைத்தன்மையுடன் இருப்பதோடு அதன் மேலோடு நார்த்தன்மையுடன் தான் இருக்கிறது. இந்த மேலோடு நீக்கப்படாமல் மிகவும் மென்மையாக அரைக்கப்படாமல் சற்றே குருணைப் பதத்தில் (ரவைக்கு அடுத்த நிலையில்) அரைத்து சப்பாத்தியாக சமைத்து துணை உணவாகக் காய்கறி, தேங்காய் அரைத்து விட்ட சொதிபோன்ற ஒன்றைச் சமைத்து உண்டால் அது முற்றிலும் சத்தான உணவாகவே இருக்கும்.

    வட இந்தியர்களைப் போல உருளைக்கிழங்கு, பருப்பு மட்டுமே துணை உணவாக எடுத்துக் கொள்ளுதல் நமக்கு அவ்வளவு பொருத்தமாக இராது.

    கோதுமை மாவின் பசைத் தன்மையையும், புரதச் சத்தினையும் சமன் செய்யும் விதமாக வெங்காயத்தை தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

    கோதுமை மாவினைச் சப்பாத்திப் பதத்தில் பிசைந்து அதனோடு வெங்காயத்தைச் சன்னமாக அரிந்து உடன் சேர்த்துக் கொள்ளலாம். நல்ல நாட்டுக் கொத்துமல்லித் தழையையும் அதனோடு பொடியாக அரிந்து மாவுடன் பிசைந்து சப்பாத்திக்கு உருட்டி சற்றே நெய் அல்லது வெண்ணை காட்டி சுட்டு எடுத்தால் மெத்தென்றும் இருக்கும்.

    நல்ல சுவையும், சத்தும் தரக்கூடியதாக இருக்கும். துணைவுணவு இன்றியே சாப்பிடலாம். இச்சப்பாத்தியை ஆறுமணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை எனில் உடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்துக் கொள்ளலாம். உடன் ஏதும் கலக்காத மாவைச் சப்பாத்தியாகச் சுட்டு எடுத்துக்கொண்டு வெறும் பச்சை வெங்காயம், பொடியாக அரிந்த தக்காளி, மேற்சொன்னவாறு கொத்துமல்லித் தழை, சிறிதளவு இடித்த மிளகு, சீரகம் பச்சையாகவே பிசைந்து விரும்பினால் தேங்காய்ப்பூ கலந்து இந்தக் கலவையைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி சாப்பிட்டால் செரிமானம் நன்றாக இருக்கும்.

    போப்பு

    சப்பாத்தியை உண்பதால் ஏற்படும் வறட்சி தோன்றாது. சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்களுக்கு மேற்படி அவசரத் தயாரிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். காலில் பித்தவெடிப்பு உள்ளவர்கள், சிறுநீர்ப் பிரிதலில் சரளத் தன்மை இல்லாதவர்கள், சிறுநீரகக் கல், பித்தப்பைக் கல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சப்பாத்தி சாப்பிடுவதையே தவிர்த்து விடுவது நல்லது. கோதுமைச் சப்பாத்தி தவிர்த்து இன்று பரவலாகி விட்ட கோதுமை உணவு உப்புமா. கோதுமையைக் குருணையாக உடைத்து அதில் உப்புமா, பொங்கல் போன்றவை சமைத்து உண்பது பரவலாகி வருகிறது.

    ரத்தத்தில் சர்க்கரையை நிதானமாக ஏற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு கோதுமை உப்புமா அல்லது பொங்கல் பொருத்தமான உணவாகும். அதிலும் பொங்கலுக்கு தோல் நீக்கிய பாசிப்பருப்பை விட தோலுடன் கூடிய பாசிப்பருப்பு சேர்த்து சமைப்பது நல்ல பலனைக் கொடுக்கும். வயிற்று உப்பிசம், வாயுப்பிடிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும், சாப்பிட்டவுடன் தூக்கம், மயக்கவுணர்வு போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு பொங்கல் மிகவும் நல்லது. இதற்குத் துணையாக தேங்காய் பொட்டுக்கடலை, இஞ்சி சேர்த்து அரைத்த சட்னி மிகவும் நல்லது.

    உடலில் சர்க்கரைச் சத்து மிகுந்து விட்டதாகக் கருதுபவர்கள் தேங்காயைக் கண்டாலே ஒவ்வாமை கொள்கிறார்கள். இதுவெற்றுப் பீதியே ஆகும். உடலின் உடனடி ஆற்றலுக்கும், ஆற்றல் சேமிப்பிற்கும் தேங்காய் ஓர் முக்கியமான உணவாகும். தேங்காயைப் பூவாகவும், மென்மையாக அரைத்துச் சேர்க்காமல் குருணைப்பதத்தில் அரைத்து எந்த உணவுடனும் சமையலில் சேர்த்துண்பது எதிர்விளைவுகளைத் தராது. அடிக்கடி ஆற்றல் பற்றாக்குறையில் நடுக்கம் கொள்ளும் மேற்படி வகையினர் தேங்காயின் மூலம் நல்ல பலனை அடையலாம். தேங்காய் குறித்தும் சர்க்கரை மிகுந்தவர்கள் என்று அடையாளமிடப்பட்டோர் குறித்தும் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். கோதுமையின் மேலோட்டினை நீக்கி அரைத்தால் கிடைப்பதே மைதா. மைதா மாவில் சமைத்த உணவு இன்று வெகுவாகப் பரவலடைந்து உள்ளது. இன்று ஊருக்கு ஊர் கேக், ப்ரட் போன்ற மைதாமாவுப் பண்டங்கள் விற்கும் பேக்கரிகள் பெருகி விட்டன.

    இத்தகைய பண்டங்களில் மைதா மாவினால் ஏற்படும் உடலுக்கு எதிர் விளைவுகள் ஒருபுறமிருக்க, மேற்படி கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும் இனிப்பு, நிறமி, ரசாயன பதனிகள் (prerservatives) போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளும் மிக அதிகமாகும். பேக்கரி பண்டங்கள் குறித்து அவ்வளவாக எச்சரிக்கை கொள்ளாதவர்கள் தான் பரோட்டா என்றதும் பீதியடைகிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினர் கேக் போன்ற பேக்கரிப் பண்டங்களை கிட்டத்தட்டத் தினமும் எடுத்துக் கொள்கின்றனர். மென்மையாக அரைக்கப்பட்ட மைதாமாவுடன் மற்ற பலமாவுகளும் கலக்கப்படுவதால் சுவையூட்டி, நிறமூட்டிகளும் மண்ணீரல் தொடங்கி சிறுநீரகம் வரை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கும்.

    இதனால் அடுத்த பத்தாண்டுகளில் தேசிய வளமே குன்றும் அளவிற்கு அபாயகரமான பண்டங்கள் இன்று பரவலாகி வருகின்றன. இதுகுறித்த பெரும் விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். அரசின் சுகாதாரத்துறையின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

    கோதுமை தானியத்தின் மேலடுக்கில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டுக் கிடைக்கும் மைதா மாவினால் ஏற்படும் உடல் நலக்கேடு குறைவுதான். ஆனால் மைதா மாவினை வெளுப்பேற்றப் (bleach) பயன்படுத்தும் ரசாயனங்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளே அதிகம். தசைநார்களை முறுக்கிப் பிழியும் விதமாக கடின உழைப்பை மேற்கொள்ளும் உழைப்பாளர்களுக்கு பரோட்டா ஒருவகையில் சாத்தியமான எளிய உணவே ஆகும்.

    ஆனால் உடலுழைப்பு இல்லாதவர்கள் அடிக்கடி பரோட்டா உண்பது மலச்சிக்கல், மூலநோய், சதை இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளை உருவாக்கும்.

    மலச்சிக்கல் தொடர்ந்து நீடித்தால் பித்தப்பைக் கல், சிறுநீரகக்கல் போன்ற பிரச்சனைகள் அடுத்தடுத்து தோன்ற ஆரம்பித்து விடும். இவையெல்லாம் இன்று பதின்ம வயதைக் கடந்த இளைஞர்களுக்கே ஏற்பட்டு விடுகிறது. அபாயகரமான இத்தகைய உடல் உபாதைகள் சிறுவயதில் தோன்றினால் அடுத்தடுத்த உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்க வாய்ப்பு அதிகம். எனவே கோதுமையைப் பயன்படுத்தும் விதத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவும் கவனக்குறைவுடன் பயன்படுத்தினால் அதுவே ஆபத்தான உணவாகவும் மாறிவிடும் அபாயமும் உள்ளது. மிக எளிய முறையில் ஆரோக்கியமான முறையில் கோதுமையைப் பயன்படுத்துவது குறித்துத் தொடர்ந்து பார்க்கலாம்.

    செல்- 96293 45938

    • சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் வேகமாக குறையும்.
    • கர்ப்பப்பை எடுத்ததால் ஹார்மோன் உடனடியாக குறைவாகும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு உடல் அளவில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளுக்காக மருத்துவர்கள் கர்ப்பப் பையை அகற்றுகிறார்கள். கர்ப்பப் பையை அகற்றும்போது சினைப்பையை சேர்த்து எடுப்பார்களோ என்கிற சந்தேகம் பல பெண்களுக்கு இருக்கிறது. அதுபற்றிய விளக்கங்களையும், கர்ப்பப்பையை எடுத்த பெண்கள், பாலியல் உறவில் ஆர்வம் ஏற்பட என்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

    கர்ப்பப்பையை எடுக்கும்போது நிறைய பெண்கள் டாக்டரிடம் கேட்பார்கள், டாக்டர் கர்ப்பப்பையை மட்டும் எடுப்பீர்களா அல்லது சினைப்பையையும் சேர்த்து எடுப்பீர்களா என்பார்கள். பெண்களுக்கு 45 வயதுக்கு பிறகு சினைப்பைகளின் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். 60 வயதுக்கு மேல் சினைப்பையில் புற்றுநோய் வரலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டால் கர்ப்பப்பையை எடுக்கும்போது சினைப்பையையும் எடுத்து விடுவோம்.

     

    புற்றுநோய் அபாயம் இருந்தால் சினைப்பையை எடுக்க வேண்டும்:

    வயதான பெண்கள், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சினைப்பையை அகற்றினால் கூட, அதில் இருந்து சில ஹார்மோன்கள் வருகிறது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் வருகிறது. இது ஆண்களுக்கான ஆன்ட்ரோஜன் போன்ற ஒரு ஹார்மோன் ஆகும். இந்த டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு சினைப்பையில் இருந்து வருகிறது. அவர்களுக்கு சினைப்பையில் வருகிற ஈஸ்ட்ரோஜன் நின்று விடுகிறது.

    குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ் வந்து விட்டாலே ஈஸ்ட்ரோஜன் குறைவாகி விடும் அல்லது ஈஸ்ட்ரோஜன் இல்லாமலே போய்விடும். மெனோபாஸ் வந்த பெண்களுக்கு சினைப்பையில் டெஸ்டோஸ்டிரோன் தான் சுரக்கும். இதை நாம் அகற்றுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகி, இந்த பெண்களுக்கு பாலியல் உறவு கொள்வதற்கான தூண்டுதல் ரொம்பவும் குறைவாகிறது. அதில் உள்ள ஆர்வமும் மிகவும் குறைகிறது.

    ஏனென்றால் இந்த பாலியல் ஆர்வமும், அதற்கான தூண்டுதலும் வருவதற்கு முக்கியமான ஹார்மோன் அடிப்படையே டெஸ்டோஸ்டிரோன் தான்.

    இதில் அடுத்த விஷயம், பல நேரங்களில் சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் குறைபாடுகள் உடனடியாக ஏற்படும். 42 வயதாகும் பெண்களுக்கு இன்னும் 4 வருடங்கள் சினைப்பை செயல்படும்.

    ஆனால் ஏதோ ஒரு காரணத்துக்காக அல்லது புற்றுநோய்க்கான ஆரம்ப நிலை என்றால் அந்த சினைப்பையை எடுக்க வேண்டும். குழந்தைப் பேறு வந்துவிட்டது. இனி குழந்தை பெற வேண்டியது இல்லை என்கின்ற நிலையில் அந்த பெண்களுக்கு சினைப்பையை எடுப்பார்கள்.

    சினைப்பையை எடுக்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் வேகமாக குறையும். இதைத்தான் துல்லியமான மெனோபாஸ் என்று சொல்வோம். இந்த மெனோபாஸ் வரும்போது ஹார்மோன் தகவமைப்பில் நிறைய பிரச்சினைகள் உருவாகி பெண்களுக்கு யோனி பகுதியில் உலர்வு தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் பாலியல் உறவு பாதிக்கப்படுகிறது. அந்த பெண்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகிறது.

    கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் எப்போது உறவு கொள்ளலாம்?

    கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் பல நேரங்களில் பாலியல் உறவு குறித்து மருத்துவர்களிடம் வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நான் தெளிவாக சொல்லி விடுவேன். கர்ப்பப்பையை அகற்றிய பிறகு எப்போது உறவு கொள்ளலாம்? உறவு கொள்ளும்போது என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பது பற்றி எடுத்து சொல்வேன்.

    கர்ப்பப்பையை அகற்றிய பிறகு கூடுமானவரை 6 முதல் 8 வாரங்கள் கழித்து பாலியல் உறவு கொள்ளலாம். அப்போது அவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக அறுவை சிகிச்சைக்கு முன்பே சொல்லும்போது, அந்த பெண்கள் தம்பதிகளாக வந்து கேட்கும்போது நல்ல ஒரு தெளிவு கிடைக்கிறது.

    இதனால் அவர்களுக்கு ஏற்படுகின்ற பயம், பெண்மை குறைந்து விடுமோ என்கிற சந்தேகம், மன அழுத்தம் ஆகியவை குறைவாகிறது.

    அடுத்ததாக பாலியல் உறவின்போது உச்சக்கட்டம் அடைவதற்கு முக்கியமான உறுப்பாக பெண்ணுடைய கர்ப்பப்பை வேண்டும் அல்லது கர்ப்பவாய் வேண்டும். இவை இல்லாமல் அவர்களுக்கு பாலியல் உறவுக்கான தூண்டுதல் குறைவாக இருக்கிறது, சுருங்கி விரியும் தன்மையும் குறைவாக இருக்கிறது.

    ஒருவேளை நீங்கள் கேட்கலாம், பாலியல் உறவுக்கு முக்கியமான விஷயம், யோனி பகுதிக்குள் உணர்வை ஏற்படுத்தும் ஜி ஸ்பாட் மற்றும் கிளிட்டோரிஸ் ஆகியவை தானே? அது பெண்களுக்கு பாதிப்பு அடையாதே என்று கேட்கலாம். அது கண்டிப்பாக பாதிக்காது.

    அந்த வகையான தூண்டுதல், எப்போதுமே பாலியல் உறவுக்கு ஆர்வத்தை கொடுப்பதற்கு நல்ல ஒரு வழி முறையாக இருக்கும்.

    குறிப்பாக ஜி ஸ்பாட், கிளிட்டோரிஸ் ஆகிய அனைத்துமே பெண்களின் பாலியல் உறவுகளை தூண்டுவதற்கும், அதற்கான ஆரோக்கியத்தை கொடுப்பதற்கும் முக்கியமான உறுப்புகள் ஆகும். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையின்போது இவை கூடுமானவரைக்கும் பாதிக்கப்படுவது இல்லை.

    ஏனென்றால் பல நேரங்களில் புற்றுநோய்க்காக சில அறுவை சிகிச்சைகளை செய்வார்கள். அப்போது கிளிட்டோரிஸ் பகுதிக்கு வருகிற நரம்புகளை மருத்துவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். கர்ப்பப்பையை அகற்றும்போது கூட இந்த நரம்புகளை துண்டிக்க மாட்டார்கள். அந்த வகையில் இதனால் ஏற்படும் பாலியல் உணர்வுகள் என்றுமே மாறாதது. அதுபற்றி பெண்கள் அச்சப்பட தேவையில்லை.

    கர்ப்பப்பை எடுத்த பெண்களுக்கு பாலியல் கவுன்சிலிங்:

    முக்கியமாக பெண்கள் இதில் கவலைப்பட வேண்டியது 2 விஷயங்கள் தான். இவர்களுக்கு கர்ப்பப்பை எடுத்ததால் ஹார்மோன் உடனடியாக குறைவாகும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது வந்தால் நமக்கு ஏதோ பிரச்சினை என்று நினைப்பதை விட்டுவிட்டு, இயற்கையாக வரக்கூடிய விஷயம், இதை நாம் எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக இந்த பிரச்சினைகளுக்கு அவர்களால் தீர்வு காண முடியும்.

    இரண்டாவது முக்கியமான விஷயம், இந்த பெண்களுக்கு இதைப்பற்றி தெளிவாக சொல்ல வேண்டும்.

    அவர்கள் எந்த வகையில் உறவு கொள்வார்கள், என்ன மாதிரியான தூண்டுதல் அவர்களுக்கு தேவை, எது அவர்களை பாதிக்கும், எதனால் பிரச்சினைகள் வரலாம் என்பதை பற்றி தெளிவாக சொல்லும்போது, அவர்களுக்கு இதைப்பற்றி உள்ள பயம், சந்தேகம் எல்லாம் குறைந்து, இதற்கு என்ன தீர்வு என்கிற விஷயத்துடன் அறுவை சிகிச்சைக்கு அவர்கள் தயார் ஆவார்கள்.

    இப்படி தயாராகும் பெண்களுக்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு இருக்கின்ற மன அழுத்தம், பயம், கணவனின் உறவில் மாறுபாடு வந்து விடுமோ என்கிற கவலை ஆகிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் முழுமையான தீர்வு கிடைக்கும். எல்லா வற்றுக்கும் மேலாக இந்த பெண்களுக்கு இதைபற்றி தெளிவான ஒரு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

    முதலிலேயே அவர்களின் உறவுகளை பற்றி சொல்ல வேண்டும். எப்பொழுது உறவு கொள்ளலாம் என்று சொல்ல வேண்டும். இவர்கள் உறவு கொள்ளும்போது என்னென்ன பிரச்சினையை எதிர்கொள்வார்கள்? அதாவது எந்த அளவு தூண்டினாலும் கூட லூப்ரிகேஷன்ஸ் குறைவாக இருக்கலாம். அதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல வேண்டும்.

    இதற்காக லூப்ரிகேஷன் ஜெல் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும்போது எரிச்சல் குறைவாகும், விரிந்து கொடுக்கும் தன்மை வரும். மேலும் அவர்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்றுநோய் கண்டிப்பாக வரும். இதை சரி செய்வதற்கு அவர்கள் பெண் உறுப்பின் சுகாதாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும். தேவைப்பட்டால் சில மருந்துகள் மூலமாக இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    தேவையில்லாத சந்தேகங்கள், மனக்குழப்பங்களில் இருந்து தெளிவு:

    அந்த வகையில் கர்ப்பப்பையை எடுத்த பிறகு தனது பாலியல் உறவு பற்றி யோசிக்க கண்டிப்பாக பெண்கள் நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் மருத்துவரிடம் சென்று அதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    நிறைய நேரங்களில் கர்ப்பப்பையை எடுக்கும்போது யோனியின் நீளம் குறைந்து விடும். அதனால் அவர்களுக்கு உறவு கொள்வதில் பிரச்சினைகள் வரும். அதனால்தான் கர்ப்பப்பையை எடுக்கும்போது யோனியில் நீளம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். யோனி பகுதியை துண்டிக்க வேண்டாம் என்று பெரும்பாலான மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    கர்ப்பப்பையை எடுத்த பிறகு முதலில் உறவு கொள்ளும்போது தூண்டுதலில் ஏற்படுகிற திரவ சுரப்பு குறைவாக இருக்கும். இந்த காலகட்டங்களில் ஜெல் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஜெல் பயன்படுத்துவதால் அவர்களுக்கு உலர்வு தன்மை குறைவாகும். பாலியல் ஆர்வம் கூடும். உறவு கொள்ளும்போது கஷ்டங்கள், வலிகள் இருக்காது. இந்த மாதிரியான விஷயங்களை அவர்களுக்கு முதலிலேயே தெளிவாக சொன்னால் அவர்களுக்கு இதை பற்றிய ஒரு விழிப்புணர்வு மற்றும் பக்குவம் ஏற்படுகிறது. தேவையில்லாமல் இதைப் பற்றி ஏற்படுகிற சந்தேகங்கள் மற்றும் மனக்குழப்பங்கள் தெளிவாகிறது. கர்ப்பப்பையை எடுத்த பெண்கள் தங்களது உடல் மன ஆரோக்கியத்தை விட, முக்கியமாக உறவு கொள்ளும் விஷயங்களில் கவனம் செலுத்தி, தேவைக்கேற்ப மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அதற்கான வழிமுறைகளை சீராக்கும்போது அந்த பெண்களுக்கு கர்ப்பப்பையை எந்த காரணத்துக்காக எடுத்தாலும், அதனால் வருகின்ற பின்விளைவுகள், பாதிப்புகள் என்பது ரொம்ப ரொம்ப குறைவாகும்.

    மேலும் கர்ப்பப்பையை எடுத்த பிறகு அந்த பெண்களுக்கு ரத்தப்போக்கு இருக்காது, வலி இருக்காது, மன அழுத்தம் இருக்காது. அவர்களுக்கு பாலியல் உறவில் ஆர்வம் அதிகமாகும். இது அவர்களுக்கு மாறுபாடான நல்ல ஒரு வாழ்க்கை முறையை கொடுக்கும். 

    • சிவ வழிபாட்டின் ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது.
    • ஞாயிற்று கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள்.

    உலக இயக்கத்தை கட்டுப்படுத்த நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அச்சக்திக்கு பெயர் இறைவன் கடவுள். அந்த இறைவனை அவரவருக்கு தெரிந்த முறையில் மரியாதை செலுத்தி வழிபடுவது பூஜையாகும். அதாவதுபக்தியின் வெளிப்பாடு பூஜை. இந்து மதத்தில் மிகவும் முக்கியமான சடங்கான பூஜை ஆன்மீக வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இறை தொடர்பான பூஜை மூலம் கடவுளிடம் தங்கள் அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் பெற முடியும்.

    பூஜை மூலம் கடவுளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதாக நம்புகிறார்கள். இதில் மந்திரங்கள் ஓதி வழிபடுவது, மலர்கள் அணிவித்து பிரார்த்திப்பது, தீபம் ஏற்றுதல் மற்றும் தான தர்மங்கள் வழங்குதல், போன்ற செயல்கள் அடங்கும். சில பூஜைகள் வீடுகளில் செய்யப்படுகின்றன, சில கோவில்களில் செய்யப்படுகின்றன, சில பொது இடங்களில் செய்யப்படுகின்றன. கோவிலில் செய்யப்படும் பூஜைகளில் மிகப் பிரசித்தி பெற்றது பள்ளியறை பூஜை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதன் பொருள், கோவில்கள் இல்லாத ஊரில் வசிப்பது நல்லது அல்ல.

    கோவில்கள் ஒரு ஊரின் சமூக மற்றும் கலாச்சார மையங்களாக கருதப்படுகிறது அங்கு மக்கள் கூடி, விழாக்கள் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பழகினால் ஊரின், சமூக பிணைப்பு அதிகமாகி அமைதியும் சுபிட்சமும் பெருகும்.

    பள்ளியறை பூஜை என்பது சிவாலயங்களில் நடைபெறும் விசேஷமான பூஜை. சிவா லயங்களில் இரவு நேர பூஜைகளில், குறிப்பாக அர்த்த ஜாம பூஜையின் போது, பள்ளியறை பூஜை நடத்தப்படுகிறது. இரவில் கோவில் நடை சாற்றும் முன்பு சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறையில் ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடி பூஜிக்கும் ஒரு வகை பூஜை . இது சிவ வழிபாட்டின் ஒரு முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது, குறிப்பாக கணவன், மனைவி ஒற்றுமை மற்றும் குடும்ப நல்வாழ்வுக்காக இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில், சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் பள்ளியறையில் உள்ள ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டு, பூஜித்து வணங்கப்படும்.

    ஐ.ஆனந்தி

     

    இந்த பூஜையின் போது, சுவாமி பல்லக்கில் எழுந்தருளி தாயார் சன்னதிக்கு வலம் வருவார். இந்த பூஜையை தரிசிப்பதால், குடும்ப ஒற்றுமை, திருமண யோகம், குழந்தைப்பேறு, நோய்கள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. நாம் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களின் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் அந்த ஊரை காவல் காக்கும் நற் சக்திகளின் நல்லாசிகள் கிடைக்கும். நான் பல பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் பள்ளியறை பூஜை பார்த்திருக்கிறேன். சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் சிவலோக வாத்தியங்கள் முழங்க தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜை காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். கைலாயமே பூலோகத்திற்கு வந்து விட்டதோ என்று வியக்கும் வகையில் இருக்கும்.

    இறைவனும் இறைவியும் ஒன்றாக மகிழ்சியாக இருக்கும் நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு தீராத தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. ஒவ்வொரு நாள் பள்ளியறை பூஜைக்கு ஒரு சிறப்பு உள்ளது. அதை கிழமை வரிசையாக பார்க்கலாம்.

    ஞாயிற்று கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். இது சிவ பூஜைக்கு மிக உகந்த நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பள்ளியறை பூஜை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அன்று சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும் சூரிய தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு/கேது தோஷம். கிரகண தோஷம் அகலும். ராகு திசையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் நீங்கும். தந்தை மகன் உறவில் சுமூகம் ஏற்படும். இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் அகலும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் செய்யலாம்.

    சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாளான திங்கட்கிழமையில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் மன சஞ்சலம், மன அமுத்தம் , மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திர தசை, புத்தி நடப்பவர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன்+ கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண் , மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மேலும் பலன் பெற திங்கள் கிழமை பச்சரிசியால் செய்த உணவு தானம் செய்ய வேண்டும்.

    இந்த நாளில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். செவ்வாய் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்து, கண்டம் அகலும்.விளையாட்டு வீரர்கள், ராணு வம், போலீஸ் துறையினரின் ஏற்றம் மிகுதி யாகும். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபி விருத்தி ஏற்படும். விருச்சக லக்னம், ராசியினருக்கும் செவ்வாய் தசை, செவ்வாய் புத்தி நடப்ப வர்களுக்கு ஜனன ஜாதக ரீதியான தோஷம் அகலும். செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் அகலும்.கடன் நிவர்த்தி ஆகும்.உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்களில் இருந்து மீள முடியும். பலனை அதிகரிக்க மாதுளை சாறால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    புத பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளான புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

    மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் புதன் தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக குற்றம் நீங்கும். புதன் நீசம் பெற்றதால் வரும் கெடு பலன் நீங்கும்.

    கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளைகளும் படிக்கும். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். கணக்கு பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இள வயது குழந்தைகளின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும்.

    காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும்.தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்பு நீங்கும். ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்து வரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமின் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

    புதனை வலிமைப் படுத்த பச்சை பயிறு சுண்டல் தானம் நல்ல பலன் தரும்.

    குரு கடாட்சம் மிளிரும் நாளான வியாழக்கிழமையில் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் வாழ்வாதாரம் உயரும். தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும் குரு தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக நீதியான தோஷம் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீசம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடு பலன் குறையும். தர்மகர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும்.

    கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சிினை தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்யம் சீராகும். குடும்பத்தில் சுப மங்கல நிகழ்வுகள் ஏற்படும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகை மீண்டு வரும். பொன் பொருள் ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும்.

    மேலும் பலனை அதிகரிக்க மஞ்சள் நிற லட்டை தானம் தர வேண்டும்.

    சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் லட்சுமி கடாட்சம் கூடும். ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் சுக்கிர தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக குற்றம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருள்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

    சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள். சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டால் ஜாதக ரீதியான சகல விதமான தோஷங்களும் விலக்கும். மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் சனி தசை, புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும்.

    பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குல தெய்வ குற்றம் அகலும். கடன் வாங்கி வட்டியும் அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும், எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கர்ம வினை தாக்கம் குறையும். தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.

    ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயினால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் சேருவார்கள் எதிரி தொல்லைகள் விலகும்.

    வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள், வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நிறைவேறும்.முன்னோர்கள் செய்த பாவமும் குலத்திற்கு ஏற்பட்ட சாபமும் நீங்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம, முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்களால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலை, வறுமை நிலை, இயற்கையால் பாதிப்பு அறவே நீங்கும். ஒவ்வொருநாளும் தன்னுடைய பல கடமைகளுக்காக ஒடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையை எளிமையாக்குவது ஜோதிடம்.

    மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்ற செல்வமாகும். இத்தகைய செல்வம் ஒரு மனிதனின் முன்வினை பயனுக்கு ஏற்ப அமைகிறது. விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவைகள் இருந்தாலும் பலர் வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள், மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இதை பள்ளியறை பூஜை வழிபாட்டால் சரி செய்ய முடியும்.

    மனித வாழ்க்கை பயணம் சுமூகமாக ஜோதிடம் கூறும் தீர்வு பள்ளியறை பூஜை.தினமும் அரை மணி நேரம் இறை வழிபாட்டிற்கு ஒதுக்கி வைத்தால் வாழ்க்கை இலகுவாகும்.

    செல்: 98652 20406

    • சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் அவரை தெய்வமாகப் போற்றினார்.
    • சுவாமிகளும் சுருக்கமான நூலை இயற்றி அதற்குக் கந்தபுராணச் சுருக்கம் என்று பெயர் சூட்டினார்.

    திருநெல்வேலியில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் சம்பந்த சரணாலயர் ஆவார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள தருமபுர ஆதீன மடாலயத்தில் வெள்ளியம்பலவாண தம்பிரான் சுவாமிகளிடம், வடமொழி, தென்மொழி ஆகியவற்றை ஐயமின்றிக் கற்றுணர்ந்தவர். தருமபுர ஆதீனத்து ஆறாவது பட்டமாக விளங்கிய திருஞான சம்பந்த தேசிகரிடம் சைவ சந்நியாசம் மற்றும் ஞானோபதேசம் பெற்று அவரிடம் நீங்காத அன்பு கொண்டு விளங்கினார்.

    இதனால் இவர் சம்பந்த சரணாலயர் என்று அழைக்கப்பெற்றார். இவரது இயற்பெயர் மறைந்து சிறப்புப் பெயரே நிலைத்தது.

    புலமையாலும் ஒழுக்கத்தாலும் ஞானத்தாலும் சிறந்து விளங்கிய சம்பந்த சரணாலயரின் புகழ் தமிழ்நாட்டையும் கடந்து பல்வேறு இடங்களில் பரவியது. அந்த வகையில் இவரது பெருமையை அறிந்த மைசூர் மாமன்னர் மகாராஜா இரண்டாம் தொட்ட தேவராஜ உடையார் இவரோடு பழக விரும்பினார். அவர் விருப்பத்தின்பேரில் சுவாமிகள் மைசூர் சென்றார்.

    அங்கு மைசூர் மாமன்னரைச் சந்தித்தார். தமிழ்மொழிப் பற்றும் தெய்வப்பற்றும் மிக்க மன்னர், சம்பந்த சரணாலயரைத் தம்முடன் நீண்டநாள் தங்கும்படி கேட்டுக்கொண்டார். மன்னரின் அளவிடமுடியாத அன்பிற்குக் கட்டுப்பட்ட சுவாமிகள் அதற்குச் சம்மதித்தார். தினமும் கந்தபுராணத்தின் உரையை அவர் மூலமாக கேட்டு வந்த மன்னர், இப்புராணம் மிகவும் நீண்டதாக உள்ளதால், கந்தபுராணத்தைச் சுருக்கி, சுருக்கமாக ஒரு நூல் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சுவாமிகளும் சுருக்கமான நூலை இயற்றி அதற்குக் கந்தபுராணச் சுருக்கம் என்று பெயர் சூட்டினார்.

    கச்சியப்ப சிவாச்சார்யர் இயற்றிய கந்தபுராணம் சொற்பொருள் நயமும் பக்திச் சுவையும் மிகுந்தது. தமிழ்ப் புலவர்களாலும், முருகப் பெருமானின் அடியார்களாலும் விசேஷமாகப் போற்றப்படுகின்றது. கந்த சஷ்டி விழாவின் 6 நாட்களிலும் அதனைப் பாராயணம் செய்வது மரபு. கந்தபுராணம் 6 காண்டங்கள் 141 படலங்களுடன் 10,346 செய்யுட்கள் கொண்டது. கச்சியப்பர் பாடிய கந்தப் புராணத்தில் உள்ள வரலாறுகளை 1048 செய்யுட்களில் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை ஆறு பகுதிகளாக இயற்றியுள்ளார் சம்பந்த சரணாலயர்.

    தமது விருப்பப்படி சம்பந்த சரணாலயர் இயற்றிய சுந்தபுராணச் சுருக்கம் நூலை எங்கே அரங்கேற்றம் செய்யலாம் என்று மன்னர் கேட்ட போது சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூரில் அரங்கேற்றம் செய்வது மிகவும் சிறப்பு என்றார் சுவாமிகள். அதற்கான ஏற்பாடுகள் தயாரானது.

    அதற்கு முன்னதாக கந்தபுராணச் சுருக்கம் நூலின் பெருமையையும், மகிமையையும் அறிந்த மைசூர் மன்னர், சுவாமிகளுக்குக் காணிக்கையாகப் பொன்னும் மணியும் வழங்கினார். பற்றற்றவராக வாழ்ந்து வந்த சாமிகள், இவை எம் குரு மூர்த்திகளின் திருவடிகளுக்கு ஆகுசு என்று அதை வைத்துவிட்டார் மன்னரும் மீண்டும் பொன்னும் மணியும் அளிக்க இவை முருகப்பிரானுக்கு ஆகுக என்றார் மன்னர் விடவில்லை.

    மூன்றாவது முறையும் பொன் பொருள் கொடுத்தார். அவற்றை இவை அடியார்களுக்கு ஆகுக என்று வைத்துவிட்டார் சுவாமிகள். அவரின் வைராக்கிய சிறப்பைக் கண்ட மன்னர். சம்பந்த சரணாலய சுவாமிகளைச் சிவிகையில் எழந்தருளச் செய்து நகர்வலம் செய்விக்க விரும்பினார், அதை அறிந்த சுவாமிகள், குருநாதர் திருவுள்ளக் கருத்தறியாமல் இதனைச் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். மன்னரும் தரும்புர ஆதீன பண்டார சனனதிகளைத் தொடர்பு கொண்டு, அவரது சம்மதம் பெற்று நகர்வலம் செய்வித்து மகிழ்ந்தார்.

    பிறகு தமது குருநாதரின் ஆசியடன் திருச்செந்தூர் முருகள் ஆலயத்தை அடைந்த சம்பந்த சரணாலயர் கந்த புராணச் சுருக்கம் நூலை அரங்கேற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து சில காலம் மைசூரில் இருந்த சுவாமிகள், அந்த நாட்டு மன்னரிடமும் மக்களிடமும் விடைபெற்று திருத்தல யாத்திரை புறப்பட்டார். குன்று தோறாடும் குமரன் தலங்களை வழிபட்டுத்துதித்தவர் தரும்பரத்தை அடைந்தார், தருமை ஆதீன குருமூர்த்திகள் இவரது பணியைப் பாராட்டி வாழ்த்தினார். அங்கே தங்கியிருந்த காலத்தில் அந்த ஆதீனத்தின் முதல் ஞானாசார்யராகிய ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் மீது கொரத்தினமாலை என்ற நூலை இயற்றினார் சுவாமிகள்.

    முருகப்பெரு மானுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட சம்பந்த சரணாலயர் இயற்றிய கந்தபுராணச் சுருக்கம் நூல், தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த அணிகலன்களில் ஒன்றாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கருணை பொழியும் இருகடைக் கண்ணால் பார் புகழும் ஞான சம்பந்தன் எந்தை பரமன் என்று தமது குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ திருஞான சம்பந்த தேகெரைத் துதிக்கும் சம்பந்தன் சரணாலயர் தமது குருவின் திருவருளாலேயே இந்த நூலை பாடியதாகச் சொல்றார் இவ்வளவு பெரிய நூலைச் சுருக்கி குன்றாமல் செய்வதற்குரிய தகுதி என்பால் இவ்லை எனக்கும் இதற்கும் எத்தனையோ தூரம் என்று அவர் கூறுவது அவரது தன்னடக்கத்தை காட்டுகிறது.

    ஒரு சமயம் சம்பந்த சரணாலயரின் கரிய உருவத்தைப் பார்த்த மன்னர், "அண்டங்காக்கை போல் உள்ளாரே". என்று நகைத்தார். அதற்கு சுவாமிகள், சற்றும் மனம் கோணாது புன்னகைத்து, "தாங்களே அண்டங்காக்கைக்குப் பிறந்தவர்", என்று சாதுரியமாகக் கூறினார். அதன் சொல் நயத்தையும் பொருள்நயத்தையும் கண்டு மன்னர் மகிழ்ந்தார். அண்டம் என்பது உலகையும், காக்கை என்பது காவல் புரிபவர் என்பதைக் குறிக்கும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. இதன்மூலம் சுவாமிகள் கரிய நிறம் கொண்டவர் என்பதையும், நுண்ணறிவு மிக்கவர் என்பதையும் அறிய முடிகிறது.

    சுவாமிகளின் அறிவாற்றலால் மனம் மகிழ்ந்த மைசூர் மன்னர், தமது சமஸ்தானத்திலேயே அவரைப் பலகாலம் வைத்திருந்து மரியாதை செய்துவந்தார். என்றாலும், சுவாமிகள் முற்றும் துறந்த முனிவர் என்பதால், என்றுமே மாதுகரி பிச்சை எடுத்து உண்பார். மாதுகரி பிச்சை என்பது சைவ சந்நியாசிகளுக்குரிய பிச்சைகளுள் ஒன்றாகும். பிறரை அணுகாமல், பலரிடம் சிறுகச் சிறுக அன்னம் வாங்கிப் புசிப்பது ஆகும். மாபெரும் சமஸ்தானத்தில் விருந்தினராக இருந்தபோதிலும், தமக்கென எந்தவிதப் பற்றுமின்றித் தம் வாழ்நாளை இறைவழிக்கே பயன்படுத்தி வந்தார்.

    சம்பந்த சரணாலயரின் பேச்சிலும் செயல்பாட்டிலும் தனிச்சிறப்பைக் கண்ட மன்னர் அவரை தெய்வமாகப் போற்றினார். அவரைச் சிலகாலம் தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். மன்னரின் விருப்பப்படி சம்பந்த சரணாலயரும் அங்கே தங்கினார். அவ்வாறு இருந்த காலத்தில் தமக்கென்று எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தினமும் பிச்சை எடுத்து உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது வைராக்கியம் மன்னருக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. வெள்ளியம்பலவாண தம்பிரான் சுவாமிகளிடமும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடமும் இவர் பயின்றவர் என்பதால், இவரது காலம் 17-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கருதப்படுகிறது.

    இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.

    • எளிமையான வாழ்க்கை முறை மிக ஆரோக்கியமானது.
    • வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அந்த தனி நபரின் உணர்ச்சிகளுக்காக உலகம் நிற்காது.

    உங்களைப் பற்றி நீங்களே நன்கு அறிந்து கொள்ள கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள். இந்த சுய பரீட்சை ஆரோக்கியத்திற்கு அவசியம்.

    * என்னுடைய பலம் என்ன? * நான் எதனைப் பற்றி அதிகம் கவலைப் படுகின்றேன்? * எனது குறுகிய கால குறிக்கோள் என்ன? * எனது நீண்ட கால குறிக்கோள் என்ன? * என்னை எது அதிகம் பாதிக்கின்றது? * எனக்கு உதவுபவர்கள் யார்? * எதனைச் செய்ய நான் சங்கடப்படுகின்றேன்? * எதனை நான் விரும்பி செய்ய முற்படுகின்றேன்? * எதில் எனக்கு நம்பிக்கை அதிகம்? * எதற்கு நான் அதிக மதிப்பு கொடுக்கின்றேன்? * நான் எங்கு பாதுகாப்பாக உணருகின்றேன்? * யார் எனக்கு ஆதரவு, நிம்மதி கொடுக்கின்றனர்? * என் வாழ்வில் எது என்னுடைய மிகப்பெரிய தோல்வி? * எனக்கு பயம் என்ற ஒன்று இல்லையென்றால் நான் எதையெல்லாம் செய்வேன்? * என் வேலை, தொழிலில் நான் மிகவும் விரும்புவது என்ன? * என் வேலை, தொழிலில் நான் விரும்பாதது என்ன? * என் மனதில் நிலையாய் இருக்கும் மகிழச்சியான சம்பவம் எது? * நான்அதிகம் ரசித்த புத்தகம் எது? *எதனைப் பற்றி, யாரிடம் அதிக நன்றி உள்ளவனாக இருக்கின்றேன்? * தனிமை எனக்கு அமைதி கொடுக்கின்றதா? * என்னிடம் எனக்குப் பிடித்தது என்ன? * எது இல்லை என்று நான் வருந்துகின்றேன்? அது வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? * என்னிடம் இருக்கும் அழிவுப்பூர்வமான எண்ணங்கள், செயல்கள் என்ன? * எனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் அறிவுரை என்ன?

    இந்த கேள்விகளுக்கு உண்மையாய் பதிலை நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். இதனை அடிக்கடி படியுங்கள். உங்கள் வாழ்க்கை தானே வளமாய் மாறும்.

    ஆரோக்கியமான இதயம் பெற:

    * தினம் இருமுறை கிரீன் டீ குடிக்கலாமே. இருதய பாதிப்பு. பக்க வாதம் போன்ற தாக்குதல்கள் வெகுவாய் குறையும் வாய்ப்புகள் உண்டு.

    * சுமார் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட இருதய நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். இருதய பாதிப்பினையும், பக்கவாதத்தினையும் குறைக்கும். எனவே மருத்துவர் மூலம் அறிவுரை பெற்று இதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * கெட்ட கொழுப்புகள் உணவில் வேண்டாம்.

    * தினம் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் நல்ல பலன் இருக்கும்.

    * எதனையும் நம்பிக்கை இன்றி அரைகுறையாகச் செய்யாதீர்கள்.

    * ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், மகிழ்ச்சியுடன் இருப்பதும் அதிசயங்களைச் செய்யும்.

    * சர்க்கரை உணவு வேண்டாமே.

    * புகை, மதுவை அகராதியில் இருந்தே நீக்கி விட வேண்டும்.

    * பூசணி விதை, ஆளி விதை, சியா விதைகளை அன்றாட உணவில் அவசியம் இடம் பெறச் செய்யுங்கள்.

    இது மக்னீசியம் குறைபாட்டினை நீக்கும். மக்னீசியம் ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும். வீக்கத்தினை குறைக்கும். இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * குடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

    கமலி ஸ்ரீபால்

     * யோகா, பிராணாயாமம் இயற்கையிலேயே உடலை அமைதிப்படுத்தும்.

    * அளவான எடை அவசியம்.

    * ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அவ்வளவுதான். உங்கள் இருதயம் ஆரோக்கியமாக இருக்குமே.

    இது மட்டும் இருதயத்திற்குப் போதுமா? மேலும் கொஞ்சம் ஆரோக்கியம் கூட்டுவோமே. இது சாத்தியமா? என்று தோன்றலாம். முயற்சி செய்வோமே.

    * யாரையும் வெறுக்கக் கூடாது. அவர்கள் எத்தனை கெடுதல்களை நமக்கு செய்திருந்தாலும் அவர்களை வயிறெரிந்து திட்டுவது. கெடுதல் நினைப்பது கூடாது.

    * எளிமையான வாழ்க்கை முறை மிக ஆரோக்கியமானது.

    * நம்மை நாமே மன்னிக்க வேண்டும். புழுங்கி, புழுங்கி வேதனைப்படுவது ஆரோக்கியத்தினை வெகுவாய் கெடுக்கும்.

    * இறைவனை பிரார்த்திக்கும் போது உலகத்தில் அனைவரும் நன்கு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.

    * வாழ்வில் வெற்றியோ, தோல்வியோ அந்த தனி நபரின் உணர்ச்சிகளுக்காக உலகம் நிற்காது. சுழன்று கொண்டேதான் இருக்கும். ஆக எதிர்பார்ப்புகள் வேண்டாம்.

    * ஒருவர் வாழ்வின் போக்கு 100 சதவீதம் அவர் கையில் மட்டுமே.

    * அலுவலகமோ, வீடோ நம் தலையில்தான் அத்தனை பொறுப்பும். நான் இல்லையென்றால் கடினம் என்று நினைக்க வேண்டாம். நொடியில் நாம் மாற்றப்படலாம். வேலைகள் இயல்பாய் தொடங்கலாம். எதற்கு இந்த மார் தட்டிய வீர வசனம்? மாரடைப்பு தான் வரும்.

    * பிறரை கடுமையாக பேசுபவர்கள், வேதனைப் படச் செய்பவர்கள் தங்கள் குறைகளை மறக்கவே இவ்வாறு செய்கின்றனர். இவர்களே மன நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்தான்.

    * 24 மணி நேரமும் கடுமையாய் உழைத்தேன். பலனில்லை என முடங்குபவர்கள் சரியான பாதையில் அந்த உழைப்பு சென்றதா? என்று சோதனை செய்ய வேண்டும்.

    * வெற்றி, தோல்விகளால் மட்டுமே ஒருவர் கணிக்கப்படும் உலகம் ஆகி விட்டது. ஒருவரின் நல்ல எண்ணங்களும், முயற்சிகளும் எங்கும் மதிப்பினை பெறுவதில்லை.

    * ஒரு மணி நேரம் வீணே கழிந்தாலும் அது பெரிய இழப்புதான்.

    * இந்த எண்ணங்களும், செயல்பாடுகளும் இருதய ஆரோக்கியத்திற்கு அவசியம்தான்.

    * இத்தோடு அதிக சிரிப்பு, குறைந்த கோபம், அதிக நடை, இவையெல்லாம் ஆரோக்கியத்தின் விதிமுறைகள் தானே.

    இன்றைக்கு அடிக்கடி பேச வேண்டிய பாதிப்புகளில் சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டு இருக்கின்றது. ஆகவேத்தான் சில அறிகுறிகளை தவற விடக்கூடாது.

    * அடிக்கடி சிறுநீர் செல்லுதல் * அதிகம் தாகம்-திடீரென காரணம் இன்றி உடல் இளைத்தல் * அடிக்கடி பசி, கலங்கிய மங்கிய பார்வை * சோர்வு * மெதுவாய் ஆறும் புண்கள். அடிக்கடி கிருமி தாக்குதல் இவையெல்லாம் சர்க்கரை நோய் தாக்குதலின் அறிகுறிகளாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆக இவற்றில் கவனம் தேவை. ஏனெனில் சர்க்கரை நோய்

    * பக்க வாதம் பாதிப்பு ஏற்படுவதை 4 மடங்கு அதிகரிக்கின்றது.

    * மூச்சு காற்றில் ஒருவித வாசனை போன்று உணர்வது சர்க்கரை நோய் பாதிப்புன் வீரியத்தினைக் குறிப்பிடுகின்றது.

    * உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து ரத்த குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இருதய பாதிப்பு அதிகரிக்கின்றது.

    * நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

    * சிகிச்சை இல்லாத நீரிழிவு பாதிப்பு உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தலாம்.

    * கண் பாதிப்பு பார்வை இழப்பு வரை நிகழலாம்.

    * வறண்ட சருமம் போன்ற பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது, மருத்துவர் ஆலோசனை பெற்று நடப்பது போன்றவை நன்மை பயக்கும்.

    10 ஆயிரம் அடிகள் தினமும் நடந்து செல்லுங்கள்

    இந்த வார்த்தைகளை இப்போது நாம் அடிக்கடி கேட்கின்றோம். சிலர் தினமும் 20 நிமிடம் அல்லது 40 நிமிடம் நடை பயிற்சி, உடற்பயிற்சி என செய்து விட்டு மீதி நேரம் சற்றும் அசையாது அமர்ந்த இடத்திேலயே அமர்ந்து இருப்பர். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கே. ஆகவேத் தான் வீடோ, அலுவலகமோ ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்கச் சொல்கின்றனர்.

    இந்த நடை கலோரி சத்தினை எரிக்கின்றது. எடை குறைப்பிற்கு உதவுகின்றது. உடலின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகின்றது. செரிமானம் சீராகின்றது. வயிறு உபாதைகளை குறைக்கின்றது. இருதயத்தினை பலப்படுத்துகின்றது. உயர் ரத்த அழுத்தம் குறைய உதவுகின்றது. உடலின் சக்தி கூடுகின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றது. தொப்பை கரைய உதவுகின்றது. தூக்கம் சீராய் இருக்கும். மனநலம் நன்கு இருக்கும். ஸ்ட்ரெஸ் குறையும். கால்கள், மூட்டுகள் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும்.

    இப்போது எல்லாம் கடிகாரம் போல் ஒன்று விற்கப்படுகின்றது. அதனை கையில் கட்டிக் கொண்டால் காலை முதல் இரவு வரை நீங்கள் நடந்த அடி எண்ணிக்கை தெரிந்து விடும். செயல்படுத்தி பயன் பெறுவோமே.

    வாழ்வின் விதிகள்: கடந்த கால நிகழ்வுகளில் அமைதி கொள்ளுங்கள். நிகழ்காலம் குழப்பம் இன்றி இருக்கும்.

    * காலம் எல்லாவற்றினையும் ஆற்றும். அதற்கு அவகாசம் கொடுங்கள்.

    * பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    * பிறர் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிடுவது வேண்டாமே.

    * ரொம்ப, ரொம்ப அதிகமாக யோசிக்காதீர்கள். சில கேள்விகளுக்கு விடை தெரியா விட்டால் பரவாயில்லை.

    * நம் மகிழ்ச்சிக்கு நாம் மட்டுமே பொறுப்பு. எனவே புன்னகையுங்கள். உலகின் அத்தனை பிரச்சினைகளுக்கும் நீங்கள் பொறுப்பல்ல.

    • அறம் என்பது மற்றொரு நிலையில் 'தர்மம்' என்பதற்கும்.
    • பாவ புண்ணியம் அறிந்து வாழும் செம்மையான வாழ்க்கையை நாள்தோறும் விரும்பிடும் வாசகப் பெருமக்களே! வணக்கம்.

    அன்றாட உலகியல் வாழ்க்கையில் 'நல்லது' என்றும் 'கெட்டது' என்றும் நாம் பகுத்து வாழும் கோட்பாடுகளை ஆன்மீகவியல் நோக்கில் 'புண்ணியம்' என்றும் 'பாவம்' என்றும் குறிப்பிடுகிறோம். ஆன்மீகவியல் நோக்கில் எவையெவை நல்லவை என்று குறிப்பிடப்பட்டுள்ளனவோ, அவற்றிலிருந்து சற்றும் பிறழாமல் செயல்படுவதைப் 'புண்ணியச் செயல்கள்' என்று குறிப்பிடுகிறோம். இந்தச் செயல்கள் அனைத்திற்கும் ஏறுக்கு மாறான முறைகளில் மாறுபட்டுச் செயல்படுவோமேயானால் அவை 'பாவச் செயல்கள்' ஆகும்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறாவது அறிவாய்ப் 'பகுத்தறிவு' வழங்கப்பட்டிருக்கிறது. பகுத்தறிவின் துணைகொண்டு எது நல்லது? எது தீயது? என்று பகுத்தறிந்து செயல்படவேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சமூகவியல் நோக்கில், வாழ்க்கை என்பது 'நன்மை' 'தீமை' என மாறிமாறி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது; ஆன்மீகவியல் நோக்கில் இந்த மானுட உடம்பு 'அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால்' கட்டப்பட்டிருப்பதாக மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். நல்லது, கெட்டது தெரிந்துகொண்டு, பாவ புண்ணியம் புரிந்துகொண்டு, தரப்பட்டுள்ள வாழ்க்கையைச் செம்மையாகச் செலுத்த வேண்டும் என்று அற நூல்கள் வலியுறுத்துகின்றன.

    மகாகவி பாரதியைப் போன்று பக்தியில் ஆழ்ந்து போனவர்களோ,

    "நல்லது தீயது நாம் அறியோம் அன்னை!

    நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!"

    என எல்லாப் பாரத்தையும் தெய்வத்தின் மீது போட்டுவிட்டு வாழ்க்கைக் கடமையாற்றக் கிளம்பி விடுகிறார்கள். ஆன்மீகச் சார்புடைய வாழ்வியல் செயல்பாடு இயல்பாகவே அறம், பாவம் குறித்த செயல்களுக்கு அஞ்சி நடப்பதாகவும், இயல்பாகவே நன்மையானதை மட்டும் செய்வதற்கு ஆர்வம் மிக்கதாகவும் ஆகிப்போகும். அறம் என்பது மற்றொரு நிலையில் 'தர்மம்' என்பதற்கும். 'தர்மம்', 'புண்ணியம்' என்பதற்கும் இணையான நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை ஆகும். அறச்சிந்தனை வாய்ந்த மனது என்பதற்கும் ஆன்மீகச் சிந்தனை நிறைந்த மனது என்பதற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அழுக்கற்ற நற்சிந்தனைகள் நிறைந்திருப்பதே 'புண்ணிய ஆத்மா'வாகவும், 'நல்ல மனம்' ஆகவும் திகழுகின்றது. திருவள்ளுவரும், "மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்" என்று வலியுறுத்திக் கூறுகிறார். ஒருவன் அடிப்படையில், மனத்தளவில் குற்றமற்றவனாக இருந்துவிட்டால் போதும்; அவன் உலக அளவில் அற மனிதனாகப் பேறுபெற வாழலாம்.

    திருக்குறள் முதலான அற நூல்கள், ஞானியர் வாக்குகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல்கள், சமயக் கோட்பாடுகள் போன்றவை வலியுறுத்துகிற அறக்கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் வழிச், சிந்திப்பதும், செயல்படுவதும் 'புண்ணியம்' ஆகும். குறிப்பாக அன்பாக நடந்து கொள்ளுதல், சக உயிர்களிடம் கருணை இரக்கத்தோடு பழகுவது, அடுத்தவர்களுக்குப் பிரதிபலன் கருதாமல் தாராள குணத்தோடு உதவி செய்வது, நீதி மற்றும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்க்கையைச் செலுத்துவது, சுயநலம் தவிர்ந்த பொதுநல நோக்கோடு சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, பிறந்து வளர உதவிடும் பூமியை எந்தக் காயமுமின்றி, எந்த மாசுமின்றிக் காத்து வளம்குறையாது செழிக்கப் பாடுபடுவது, முன்னோர் மரபை மீறாமல் மரபைப் பேணும் வகையில் மரபுசார்ந்த வாழ்க்கை வாழ்வது, உண்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்வது போன்றவை புண்ணியச் செயல்கள் ஆகும்.

    சுந்தர ஆவுடையப்பன்


     

    இதுபோன்ற புண்ணியச் செயல்கள் செய்து வாழ்கிற வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. நற் செயல்களால் வாழும் மனிதன், எப்போதும் குறையாத மகிழ்ச்சிக்குச் சொந்தக்காரனாக இருக்கிறான். நேர்மையான வாழ்க்கை, மனச் சலனமற்ற மன நிலையை அவனுக்குள் நிரந்தரமாக ஏற்படுத்தி விடுகிறது. எதிர்மறையான அபசகுணச் சொற்கள் அவனது வாயிலிருந்து உதிர்வதே இல்லை. புண்ணியம் செய்திடும் மனிதர்களைக் காணும் போதெல்லாம், ஒரு நேர்முறையான, நம்பிக்கை தருகிற மகிழ்ச்சி அதிர்வலைகள் காணும் அனைவருக்குள்ளும் பரவிப் பரவசம் ஏற்படுத்தும். அவர்களிடமிருந்து வெளியாகும் சிந்தனை, சொல், செயல் எல்லாமே உயர்வானதாகவே இருக்கும்; ஏனெனில் அவர்கள் உயர்வானவையோடு மட்டுமே உறவும் தொடர்பும் வைத்திருப்பவர்கள்.

    ' பாவம்' என்பது எவையெல்லாம் 'நல்லவை' என்று வலியுறுத்தப் படுகின்றனவோ அவையனைத்தும் அல்லாத 'அல்லவை' செய்தல் ஆகும். தீயவை என்பதைத் திருவள்ளுவர் 'அல்லவை' என்கிறார்.. உலகில் நல்லவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லாவற்றிற்கும் எதிராக உள்ள அல்லாதவையை 'அல்லவை' என்கிறார். "நல்லவை நாடி இனிய சொன்னால் அல்லவை தேய அறம் பெருகும்' என்கிறார். பேசுகிற பேச்சில் தூய்மையும் இனிமையும் இல்லாமல் பொய் சொல்வது 'பாவம்' ஆகும். ஏமாற்றுவது, திருடுவது, பொறாமைப்படுவது, வஞ்சனை செய்வது, கோபப்படுவது, சொந்த உழைப்பின்றி அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி உண்பது, கொலை செய்வது, கொள்ளையடிப்பது என நல்லொழுக்கங்களுக்கு எதிராகச் செய்யப்படும் எச்செயல்களும் பாவச் செயல்களாகும்.

    'பாவம்' செய்கிற மனிதன், மரணத்திற்குப் பின் செல்லுகிற மறு உலகில் மட்டுமல்ல, இவ்வுலகில் வாழும்போதே நரகத் துன்பங்களை அனுபவிப்பான் என்பது கண்கூடு. " முற்பகலில் அடுத்தவர்க்குச் செய்த துன்பங்களை, மனிதன் பிற்பகலிலேயே அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பது வள்ளுவச் சட்டமாகும். பாவம் என்பது குற்றமாகும்போது, குற்றத்திற்கான தண்டனையையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். அவன் செய்த பாவங்களே மனிதனைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி அன்றாடம் எதிர்மறை மனிதனாகச், சமூக மதிப்பின்றி உலவ விடும்.

    எதிரிகள் யாரும் இல்லாமலேயே அவனது வீழ்ச்சிக்கு அவனது பாவங்களே காரணம் ஆகி விடும். சமூக நன்மைகள் புண்ணியம் செய்பவர்களால் நிகழும் என்றால், சமூகத் தீமைகள் பாவம் செய்பவர்களால் நடைபெறுவதாக மக்கள் நம்புகின்றனர். " நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் மழை பெய்யும்" என்று நம்புகிற மக்கள், "பாவம் செய்பவர்கள் தலையிலே இடிவிழும்" என்றும் நம்புகின்றனர். இயற்கை நிகழ்வுகளுக்கும் பாவ புண்ணியம் செய்தவர்களைக் காரண கர்த்தாக்களாக வைத்து மதிக்கவும் தூற்றவும் செய்கின்றனர்.

    ஒரு சிறு கிராமம்; மொத்தம் 200 குடிசைவீடுகளே அவ்வூரில் உண்டு; அந்த வீடுகளில் சரியாக 300பேர் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஒரு சமயம் அவ்வூரில் விடாத அடைமழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஒரு வாரத்திற்கும் மேலாக நிற்காத மழை பெய்து கொண்டிருப்பதால், கிராமத்திலுள்ள எல்லாக் குடிசைகளும் ஒழுகத் தொடங்கி விட்டன. ஊரின் நடுவில் ஒரு பெரிய கல்மண்டபத்தோடு கூடிய அழகான கோயில் ஒன்று உண்டு; மழைக்காலங்களில் அந்தக் கோயில் மண்டபமே அவ்வூர் மக்களுக்குப் புகலிடமாக விளங்கும். ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து கல்மண்டபத்திற்குள் நின்று கொண்டார்கள்.

    'மழை எப்போது விடுவது; நாம் எப்போது அவரவர் சொந்தக் குடிசைகளுக்குத் திரும்புவது?' என்கிற கவலை அவர்கள் எல்லோருக்கும். பெரும் சத்தத்தோடு மழை பெய்து கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்த 300 பேரில் ஒருவர்," நம்ம ஊரிலும் புண்ணியம் செய்த யாரோ ஒரு மகராசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது!; அதுதான் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது!" என்றார். "அப்படியா! புண்ணியம் செய்தவருக்காக மழை பெய்யுமா? நல்லது. பாவம் செய்தவர் இருந்தால் அவருக்காக என்ன நடக்கும்?" கொஞ்சம் இடக்கான கேள்வியைக் கேட்டான் ஒரு இளைஞன். "நல்லவர் தலையிலே மழை பெய்து வாழ வைக்கும்!; கெட்டவர் தலையிலே இடி விழுந்து அவர்களை அழிக்கும்!. மழைக்காலம் இந்த இரண்டு காரியங்களையுமே செய்யும்!" என்று அனுபவப் பட்டவர் போல ஒரு பெரியவர் பேசினார். உடனே கல் மண்டபத்திற்குள் அடைந்து கிடந்த கிராம மக்கள் அனைவரும் சலசலவெனப் பேசத் தொடங்கிவிட்டனர்.

    'நமக்குள் எத்தனை பேர் பாவம் செய்தவர்கள்?; எத்தனைபேர் புண்ணியம் செய்தவர்கள்?' என்று எப்படித் தெரிந்துகொள்வது? எப்படிப் பிரித்துப் பார்ப்பது?' என்பது அவர்களுக்குள் விவாதப் பொருள் ஆகி விட்டது. ஒரு பேரச்சமும் பற்றிக்கொண்டது. "நாம் எல்லாருமே புண்ணியம் செய்தவர்களாக இருக்க முடியாது; ஒன்றிரண்டு பாவ ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்வார்கள்; கெட்டவர்கள் மீது இடி விழும் என்னும்போது, அந்த ஒன்றிரண்டு பேரைக் குறிவைத்து, நமது கல்மண்டபத்தில் இடிவிழுந்தால், அவர்கள் மட்டுமா சாவார்கள்? மண்டபத்தில் இருக்கும் பாவம் செய்யாத மற்றவர்களும் அல்லவா செத்துப் போவார்கள்?. இதைத் தவிர்க்க நாம் ஒரு உபாயம் கண்டுபிடித்தாக வேண்டும்" என்கிற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

    ஒரு பெரியவர் ஒரு வழி சொன்னார். " நமது கல்மண்டபத்திற்கு எதிரே நூறு மீட்டர் தொலைவில் இருக்கிற பனைமரத்தை, இந்தக் கல்மண்டபத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் மழையில் நடந்துகொண்டே சென்று தொட்டு, இரண்டு நிமிடம் நின்று திரும்பி வரவேண்டும். இடி எப்போதும் பச்சை மரத்தின்மீதுதான் விழும். அவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால் அங்கேயே இடிவிழுந்து அவர்கள் அந்தப் பச்சைமரத்தோடு எரிந்து போவார்கள்; மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நாம் இங்கு மண்டபத்தில் பாதுகாப்பாக இருப்போம்" என்றார். பெரியவரின் ஆலோசனைப்படி கூட்டத்திலிருந்த 299 பேர்கள் பனைமரம்வரை சென்று தொட்டுத் திரும்பினார்கள்; எவர்மீதும் இடி விழவே இல்லை; கடைசியாக ஒரே ஒருவர் பாக்கி இருந்தார்; நான் சென்று, நான்தான் பாவி என்று என்மீது இடி விழுந்தால் என்ன செய்வது? என்று கலக்கத்தோடு தயங்கினார். எல்லாரும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    அந்தக் கடைசி நபர் மழையில் நனைந்துகொண்டே சென்று அந்தப் பனை மரத்தைத் தொட்டார். அவ்வளவுதான்; பலத்த சத்தத்தோடு பெரும் இடி விழுந்தது!; பனை மரத்தின் மீது அல்ல; அந்த 299 பேர்களும் இருந்த கல்மண்டபத்தின்மீது!. உண்மையில் யார் புண்ணியவான்கள்?.

    நம்மில்பலர் நாம் செய்கிற பாவங்கள் எல்லாம் பாவங்கள் அல்ல என்று நினைக்கிறோம்; தெய்வங்களையோ, ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களையோ பரிகாரங்களாக எண்ணிப் பங்குகளைச் செலுத்திவிட்டால் பாவங்கள் எல்லாம் புண்ணியங்களாகப் புனிதப் பட்டுப்போகும் என நம்புகிறோம். உண்மையில் எது பாவம் என்பதும் எது புண்ணியம் என்பதும் நம் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும். உள்ளத்தால் நல்லனாக வாழ்வதே அற வாழ்க்கை.

    தொடர்புக்கு- 9443190098

    • உடல் வலுப்பெற உடல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
    • யோகா பயிற்சியை மேற்கொள்ள எந்த உபகரணமும் தேவையில்லை என்பது அதன் தனிச்சிறப்பு.

    நலம்தானா நலம்தானா…

    உடலும் உள்ளமும் நலம்தானா… இந்த இரண்டையும் நலமாக வைத்திருப்பது எத்தனை பேர்?.

    திணறும் உலக சமுதாயம்

    உலக மனித சமுதாயம் இன்று மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கிறது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. சிறு சிறு பிரச்சினைகளுக்கும் பெருங்கோபம் பொங்குகிறது. பேராசை விடாமல் துரத்துகிறது. உணர்ச்சிகள் பல விலங்கிடுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஸ்மார்ட் போன் அடிமைப்படுத்தி விட்டது. இவற்றில் இருந்து விடுபட வழி தெரியாமல் மனித சமூகம் விழிபிதுங்கி நிற்கிறது.

    இதற்கு மத்தியில் பூங்கா போன்ற பொது இடங்களுக்கு பலர் தரைவிரிப்புகளுடன் (மேட்) வருகிறார்கள். ஆரவாரமின்றி அமைதியாக அமர்ந்த இடத்தில் இருந்து உடலை வளைக்கிறார்கள். ஆசனங்களை செய்து வித்தை காட்டுகிறார்கள். மூச்சு பயிற்சி, தியானம் என அவர்களின் பயிற்சி நீள்கிறது. இந்த பயிற்சியை செய்ய தொடங்கியவர்கள் அதை விடாமல் உடும்பு பிடியாக பிடித்து பலனை அறுவடை செய்கிறார்கள்.

    உடல், மனப்பயிற்சி

    உடற்பயிற்சிக்கு எத்தனையோ கலைகள் உள்ளன. ஜிம்முக்கு சென்றால் உடலை முறுக்கி கொள்ளலாம். நடைபயிற்சி செய்தால் நன்மைகள் பல கிடைக்கிறது. ஆரோக்கியம் காக்க விதவிதமான பயிற்சிகள், விளையாட்டுகள் உள்ளன. பின்னர் ஏன் யோகா பயிற்சி செய்ய வேண்டும்?. அப்படி என்னதான் அதற்குள் புதைந்து இருக்கிறது?.

    உடல் வலுப்பெற உடல் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுகள் சிறந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் யோகா என்பது உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றிற்கும் ஆன கலையாகும். எனவே தான் யோகாவை உடல் மற்றும் மனப்பயிற்சி கலை என்று அழைக்கிறோம். யோகா ஆசனங்களை செய்ய தொடங்கியவர்கள், சில வாரங்களிலேயே உடலிலும், உள்ளத்திலும் மாற்றங்களை உணர தொடங்குகிறார்கள்.

    உடல் பயிற்சி மூலம் உள்ளுறுப்புகள் 20 சதவீதம் தூண்டப்படுகிறது என்றால், அது யோகா பயிற்சியில் 80 சதவீதமாக இருக்கிறது என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் நோயற்ற வாழ்வை யோகா உறுதி செய்கிறது.

    வயிறு சுருங்கி மார்பு விரிவதுதான் மனித தோற்றத்துக்கு அழகு. சூரிய நமஸ்காரம் மற்றும் சில ஆசனங்களை தொடர்ந்து செய்து வந்தாலே இது சாத்தியம். யோகா பயிற்சியை மேற்கொள்ள எந்த உபகரணமும் தேவையில்லை என்பது அதன் தனிச்சிறப்பு. உடலும், மனதும் தான் அதன் உபகரணங்கள்.

    பதஞ்சலி முனிவர்

    பண்டைய காலத்தில் யோகாவை பெரும்பாலான இந்திய மக்கள் செய்ததாக நம்பப்படுகிறது. பின்னர் அது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றோருடன் அடக்கம் ஆகி விட்டது. எதிர்பாராத விதமாக இந்த கலை இந்தியாவை விட வெளிநாடுகளில் பிரபலமாக தொடங்கியது. அதன் பிறகுதான் பாரதம் விழித்துக்கொண்டது. கடந்த 100 ஆண்டுகளாக நாம் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி இருக்கிறோம்.

    இன்று உலகம் போற்றும் கலையாக திகழும் யோகா, இந்தியாவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கருதப்படுகிறது. யோகா கலையின் கடவுளாக சிவபெருமான் அறியப்படுகிறார். சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தான் யோகாவை எளிமைப்படுத்தி முறையாக வகுத்து கொடுத்தார். எனவே அவர் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார்.

     

    சர்வதேச தினம்

    யோகாவை உலகெங்கும் பரப்ப எடுத்த பெரும் முயற்சி பிரதமர் நரேந்திர மோடியை சாரும். 2014-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் பெருமைகளை எடுத்துக்கூறி, அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தார். அதற்கு 177 உறுப்பு நாடுகள் பேராதரவு அளித்ததன் பலனாக 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது. முதல் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திலேயே ஏராளமான நாடுகள் பங்கு பெற்றன.

    தற்போது யோகாவில் தலைசிறந்த 20 நாடுகளாக இந்தியா, கனடா, பிரேசில், வியட்நாம், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, சுவீடன், நியூசிலாந்து, அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், டென்மார்க், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை விளங்குகின்றன. சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

     

    உலகை ஆளும் கலை

    இந்தியாவில் 15 கோடி மக்களும், அமெரிக்காவில் 3½ கோடி பேர், கனடாவில் 7.6 லட்சம் பேர், ஆஸ்திரேலியாவில் 15 லட்சம் பேர் யோகா பயிற்சியை செய்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகம் முழுவதும் சுமார் 30 கோடி மக்கள் இந்த பயிற்சியை தங்கள் வாழ்வின் அங்கமாக்கி கொண்டதாகவும் அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மதத்தை கடந்து உலக மக்களின் மனதை வென்று விட்டதை இது உணர்த்துகிறது.

    11-வது சர்வதேச யோகா தினத்தை இன்று கொண்டாப்படுகிறது. பாரதம் கடந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய யோகா தற்போது உலக மக்களின் வாழ்க்கை கலையாகவும், உலகை ஆளும் கலையாகவும் மாறி இருக்கிறது. ராணுவ பயிற்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட, யோகா பயிற்சியில் இன்னும் தீவிர ஆர்வம் காட்டினால் உலகெங்கும் அமைதி ஓங்கும்.

    • மலச்சிக்கல் என்றால் என்ன, அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி ஆழமாகப் பார்ப்போம்.
    • முதலில் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணம் மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் சேரும் கழிவுகள் தான் நோயை உண்டாக்குகின்றன என்று இயற்கை மருத்துவத்தில் கூறுகிறோம்.

    மலச்சிக்கல் என்பது அஜீரணத்தால் ஏற்படுகிறது. இதனால் வயிறு வீக்கம், மூல நோய், பவுத்தரம், தோல் நோய்கள், முடி உதிர்தல், அல்சைமர் நோய், மனச்சோர்வு, பதட்டம் என பல தொல்லைகள் உண்டாகிறது.

    இன்று மலச்சிக்கல் என்றால் என்ன, அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி ஆழமாகப் பார்ப்போம். முதலில் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நாம் உண்ணும் உணவு, உணவுக் குழாயில் நுழைந்து வயிற்றை அடைகிறது. வயிற்றில் சுரக்கும் ஒரு வலுவான அமிலம் உணவில் உள்ள புரதத்தை ஜீரணிக்கவும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சவும் உதவுகிறது.

    இந்த உணவு அடுத்தக் கட்டமாக சிறுகுடலுக்குள் நுழைந்த பிறகு ஒரு முக்கியமான நிகழ்வு நடக்கிறது. அதாவது பித்தப்பையில் இருந்து பித்த நீர் சுரப்பை தூண்டுகிறது.

    பித்தநீர் நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு செரிமானத்திற்கு உதவுகிறது, மேலும் கணையத்திலிருந்து செரிமான நொதிகள் சுரப்பதைத் தூண்டுகிறது.

    நம் உடலில் பித்த நீர் முறையாக சுரந்தால் தான் நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்பு நன்கு சீரணமாகும். அதாவது பித்தநீர், கணையத்திலிருந்து நொதிகளைத் தூண்டி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்கச் செய்கிறது. மேலும் குடலில் அசைவுகளை ஏற்படுத்தி உணவை செரிமாணம் செய்ய அடுத்தடுத்த நிலைகளுக்கு நகர்த்தும் செயலை செய்கிறது.

    பித்த நீர் குறைபாடு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. முழுமையாக சீரணிக்கப்படாமல் கழிவுகள் தேங்குவதால் வாயுத் தொல்லை ஏற்படுகிறது. அதிகப்படியான பித்தம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

    இதற்கு அடுத்து சிறுகுடலில் இருந்து உணவு பெருங்குடலுக்குள் நுழைகிறது. பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் தான் மலத்தை உருவாக்க உதவுகின்றன, அவை இறுதியில் வெளியேற்றப்படுகின்றன.

    மலச்சிக்கலுக்கான காரணங்கள்:

    மேற்கூறிய எந்தவொரு வழிமுறையிலும் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம். அதாவது வயிற்றில் குறைவாக அமிலம் சுரப்பது, குறைந்தளவு பித்த நீர் சுரப்பது, பெருங்குடலில் நல்ல நுண்ணுயிரிகள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பது மலச்சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

    டாக்டர் நிஷா


    எனவே மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க, மூல காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஒரு நபர் ஆன்டிபயாடிக் எடுத்திருந்தால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்,

    ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் மலச்சிக்கல் உண்டாகலாம். அப்படி இருந்தால், நாம் ஊட்டச்சத்தை சரிசெய்ய வேண்டும், ஏனெனில் வைட்டமின் பி1 போன்ற சில ஊட்டச்சத்துக்கள் பெருங்குடலின் இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர் ஆரோக்கியமற்ற உணவை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    மன அழுத்தம் காரணமாகவும் செரிமானம் பாதிக்கப்படும். எனவே மன அழுத்தம் மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மனத்தளர்வு மற்றும் ஓய்வு உதவும். எனவே நாம் காரணத்தைப் புரிந்துகொண்டு அதை நிவர்த்தி செய்ய வேண்டும்

    மலச்சிக்கலுக்கான தீர்வுகள்:

    ஒருவருக்கு மலச்சிக்கல் நீண்ட காலமாக இருந்தால், ஸ்கேன் எடுத்து பெருங்குடலில் ஏதேனும் கட்டமைப்பு அசாதாரணம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்

    தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும், ஆனால் எலக்ட்ரோலைட்டுகள் கொண்ட திரவங்களை குடிப்பது உதவும். உதாரணமாக, எலுமிச்சை நீர், மோர், பால், சர்க்கரை இல்லாத பழச்சாறுகள், இளநீர் போன்றவை. உடல் எப்போதும் நன்கு நீரேற்றமாக இருக்க வேண்டும். வாய் மற்றும் தொண்டை ஒருபோதும் வறண்டதாக உணரக்கூடாது.

    உணவு செரிமானத்தில் முக்கிய பங்காற்றும் வயிற்று அமிலத்தன்மை மற்றும் பித்தத்தை அதிகரிப்பது எப்படி?

    கசப்பான உணவுகளை உண்ணுங்கள்...

    இஞ்சி, மிளகு ஆகியவற்றை உணவில் சேர்க்கவும்...

    உடற்பயிற்சி செய்யவும்...

    பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்...

    நன்றாகமென்று சாப்பிடுங்கள்...

    சமச்சீரான உணவை உண்ணுங்கள்...

    நிதானமாக இருங்கள்...

    உணவில் நல்ல கொழுப்பைச் சேர்க்கவும்...

    நார்ச்சத்து மிகுந்த வெண்டை, கோவைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், தேங்காய், ஆளிவிதை, வெந்தயம், பாதாம் பிசின், தேங்காய் எண்ணெய், போன்றவற்றை உணவில் சேர்க்கவும். கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் மற்றும் திராட்சை போன்ற பழங்கள் மலச்சிக்கலுக்கு சிறந்தவை.

    வீட்டில் தயாரித்த நெல்லிக்காய் ஊறுகாயை தினமும் சாப்பிடலாம்.

    இந்திய கழிப்பறைகள்:

    இந்திய பாணி கழிப்பறைகள் மலத்தை சிறப்பாக வெளியேற்ற உதவுகின்றன.

    மேற்கத்திய கழிப்பறை என்றால் சிறிய பலகைகளை பயன்படுத்தி முழங்கால்களை இடுப்பை விட உயரமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

    வயிற்று மசாஜ் மற்றும் சூடான பானங்கள் குடிப்பது பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க சரியான அளவு தூக்கம், சரியான உணவு மற்றும் நிறைவான மனதுடன் ஒரு நல்ல வாழ்க்கை முறையைப் பின்பற்றுவோம்.

    செல்: 88258 05858

    • நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.
    • பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    யோகா என்றாலே நிறைய ஆசனங்களும், சில மூச்சுப் பயிற்சிகள், தியான முயற்சிகளும் என்று பொதுவாக வழக்கத்தில் உள்ளது. பண்டைய யோக விஞ்ஞானம் ஆழ்ந்த தத்துவங்கள், விதிகள், ஒழுங்குகள், விவரணைகள், தீர்வுகள், பயிற்சிகள் கொண்டதொரு அக தரிசனமாகும். அந்த பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான் ஆசனம். ஆனால் எதார்த்தத்தில் பெரும்பாலும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, உடலிறுக்கத்தை தளர்த்தவே ஆசனங்கள் பயிலப்படுகின்றன.

    ஆற்றல் உடலெங்கும் முழுமையாகப் பாயாமல் உள்ளுறுப்புகள், தசைகள் இறுகியிருக்கும். அந்த இறுக்கத்தை, ஆற்றல் முடிச்சுகளைக் கரைத்து, ஆற்றலைப் பாயச்செய்ய வேண்டும். நாம் இதனை சட்டெனச் செய்ய முடியாது, மென்மையாகவும், பொறுமையாகவும் இதனைச் செய்யபழக வேண்டும்.

    இறுக்கமான தசைகள் இயங்க, தன்னை தளர்த்திக்கொள்ள அதிக ஆற்றலைக் கோருகின்றன; அவை உடலின் பலத்தை அதிகம் எடுத்துக் கொள்கின்றன. ஆசனப்பயிற்சியின் பொழுது தசைகளை உணர்ந்து கவனமாகப் பயில்வதின் மூலமும், அதன் மீது கவனத்தைக் குவித்து சுவாசிப்பதன் மூலமும் நன்மைகள் வாய்க்கும்.

    இவ்வளவு நன்மைகளைக் கொடுக்கும் ஆசனம் யோகம் என்கிற பரந்துவிரிந்த ஆலமரத்தின் ஒரு விழுதுதான். ஒன்றின் முழுமையை அறிந்து கொள்ளாமல் அதன் ஒரு தனிப்பகுதியை மட்டும் மக்கள் பயின்று வருகின்றனர்.

    பதஞ்சலி போன்ற மகான்களின் வரையறையின்படி யோகத்திற்கு எட்டு அங்கங்கள், அதில் ஒரு அங்கம்தான் ஆசனம். உடலின் ஒரு அங்கத்தை மட்டுமே நாம் பயன்படுத்தினால் நாம் எவ்வாறு முழுமை பெற இயலாதோ அதுபோலவே இந்த யோகத்தின் ஓரிரு அங்கங்களை மட்டும் செயல்படுத்தினால் நமக்கு முழுமையில்லை. ஆனால் இப்பொழுது ஆசனங்கள் மட்டுமே யோகம் என்று பரவலாகிப் போன நிலையில் ஆசனங்களின் பலன்களைப்பற்றி பார்ப்போம்.

    ஆசனங்கள் உடலின் வெவ்வேறு மண்டலங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    இயக்கவியல் மண்டலத்தில்..

    * எலும்பு அமைப்பை மேம்படுத்துகிறது.

    * மையத் தசைகளை வலுப்படுத்துகிறது.

    *முதுகெலும்பை நிமிர்த்தி உறுதிப்படுத்துகிறது.

    * தசை ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து அதன் மூலம் தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    * எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தி நீட்டுகிறது.

    *இயக்க திறன்களை மேம்படுத்துகிறது

    இரத்த சுற்றோட்ட மண்டலத்தில்..

    * இரத்த ஓட்டம் மற்றும் உள் உறுப்புகளின் இரத்தத்தின் ஊடுருவலை மேம்படுத்துகிறது.

    *இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

    செரிமான மண்டலத்தில்..

    ஆசிரியர் ரகுராம் மெய்யோகம்

     * உள் உறுப்புகளை மசாஜ் செய்து அதன் மூலம் உறுப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

    * வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * செரிமானத் திறன் மற்றும் கழிவு நீக்கச் செயல்முறையைத் தூண்டுகிறது.

    மூச்சு மண்டலத்தில்..

    * மூச்சு மேலான விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.

    *காற்றுப் பாதைகளைத் திறக்கிறது.

    * மூச்சினை ஆழமாக்குகிறது மற்றும் மூச்சின் கொள்ளளவை மேம்படுத்துகிறது.

    * ஆழமாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம் உடலில் அமிலத்தன்மையை மட்டுப்படுத்துகிறது.

    *உயிர்காற்றின் உட்பரவலை அதிகரிக்கிறது.

    நரம்பு மண்டலத்தில்..

    *நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

    *நரம்பு மண்டலத்து இறுக்கத்தை எளிதில் தளர்த்துகிறது.

    * நரம்புப் பாதைகளின் கடத்துந் திறனை மேம்படுத்துகிறது (உணர்வு மற்றும் இயக்க சமிக்ஞைகள் விரைவாக செயலாக்கப்படுகின்றன).

    மனம் மற்றும் உணர்வுச் சூழலில்..

    * மேம்பட்ட கவனக்குவிப்பு திறன்.

    * மேம்பட்ட அறிவாற்றல்.

    * மேம்பட்ட உடல் மேலான விழிப்புணர்வு.

    அறிவு மற்றும் நினைவுத் தளத்தில் ..

    விழிப்புணர்வு சார்ந்த மற்றும் தியானம் சார்ந்த படிப்படியாக பயிற்சியில் ஆசனங்களை ஒருங்கிணைக்கும் பொழுது, சமநிலை, நினைவாற்றல் மற்றும் தன்னைச் சரியாக அறிந்து வெளிப்படுத்துதல் நிகழ்வதால் அன்றாட வாழ்க்கையில், நம் செயல்பாடுகளில் அதிக உள் அமைதியையும் ஆழமான வலிமையையும் வருகிறது.

    ஆன்மிகத் தளத்தில்..

    * பயிற்சியின் போக்கில் ஆன்மீக விளைவுகள் படிப்படியாகவும், மிகவும் தனிதன்மையானதாகவும் தோன்றும்.

    * தன்னை அறிதலும், தனது மூலத்தை அறிந்து பின் இந்த பிறப்பு இறப்பு தளையிலிருந்து வெளியேறுதலுக்கான வழிகளும் புலப்படத் தொடங்கும்.

    வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் பெரும்பாலும் இந்த ஆசனங்கள் இந்தப்பலனைக் கொடுக்கும் என்கிற போக்கில் உள்ளது. ஆசனங்கள் உடலளவில் என்னென்ன செய்கிறது என்று பேசப்படுவதுபோல அதன் பின்னால் உள்ள உளவியல் காரணிகள் பேசப்படுவதில்லை.

    பொதுவாக ஆசனங்கள் உடலியலாக இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.

    முன்னோக்கிய வளைவுகள்

    பின்னோக்கிய வளைவுகள்

    பக்கவாட்டுச் சாய்வுகள்

    முறுக்கல் நிலைகள்

    தலைகீழ் நிலைகள்

    அமர்வு நிலைகள்

    முன்னோக்கிய வளைவுகள் - (உத்தானாசனா, மார்ஜரியாசனா, ஜானு சிரசாசனா)

    * உடற்கூறியல் பார்வையில், முன்னோக்கிய வளைவுகள் உடலின் பின்புறத்தினை நன்கு நீட்டுவிக்கிறது, கால்களின் பின்புறம் மற்றும் கீழ் முதுகில் உள்ள தசைச் சங்கிலிகள் யாவும் நன்கு நீட்டப்படுகின்றன.

    * முன்னோக்கி உடலை வளைக்கும் பொழுது, குறிப்பாக நின்ற மற்றும் அமர்ந்த நிலையில், வயிறு சுருங்குவதால் உள் உறுப்புகள் தீவிரமாக அழுத்தப்படுகின்றன. இந்த அழுத்தத்தால் அபான வாயு ஊக்கமாகச் செயல்பட்டு முறையாக கழிவு நீக்கம் நடக்கிறது.

    * உளவியலாக முன்னோக்கி ஒருவர் வளைவது பக்தி மற்றும் பணிவினைக்காட்டுகிறது. என் சிந்தனை, திட்டமிடல், நான்தான் பெரிது என்று செருக்கு மேலோங்காமல் நம்மை விட உயர்ந்த, நம் உயர்விற்கு அடிப்படையான ஒன்றின் முன் நாம் தலை வணங்கும் பண்பு நமக்கு வாய்க்கிறது.

    *அந்தச் செருக்கு கர்வம் நீங்கிய நிலையில், நாம் நம்மை ஆராய உட்சூழல் வழி செய்கிறது.

    * முன்னோக்கிய வளைவுகளை, முறைப்படி பயிலுகையில் மனம் மற்றும் ஆற்றல் அமைப்பில் குளிர்ச்சியும், அமைதியும் விளைகின்றன.

    பின்னோக்கிய வளைவுகள் - ( நடராஜாஸனா, உஷ்ட்ராசனா, கபோட்டாசனா)

    * பின்புறம் உடலை வளைப்பதால் அளவு மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, முதுகெலும்பின் விறைப்பை, நீட்சியை உறுதிசெய்கிறது. இதனால் முதுகில் கூன் விழுவதும், முதுகுத்தண்டு சிக்கல்களும் குறைகின்றன.

    * பின்புறமாக உடலை வளைக்கும் ஆசனங்கள் ஆற்றல் அமைப்பில் கிளர்ச்சியையும், சுறுசுறுப்பையும், வெப்பத்தையும் உருவாக்குகின்றன; அவை மார்புப் பகுதியை விரிவாக்கி மூச்சினை ஆழப்படுத்துகின்றன.

    * பின்புற வளைவுகள் முதுகினை வலுவாக்க உதவுகின்றன, நேராக நிமிர்ந்து அமர்வதற்கான திறனை வளர்க்கின்றன.

    * நேராக அமர்வதால் நம்முள்ளே நாம் ஆழ்ந்து செல்ல வாய்க்கிறது மற்றும் வாழ்க்கையை உயர் இலட்சியங்களுடனும் நம்பிக்கையுடனும் நகர்த்த உதவுகிறது.

    * இதய வெளியில் ஒரு திறந்த உணர்வை உருவாக்கி, அன்பு, இரக்கம் போன்ற குணங்களை, தன்மீதும் பிறர்மீதும் கொள்ள வகை செய்கிறது.

    பக்கவாட்டுச் சாய்வுகள் - (திரிகோணாசனம், பார்ஸ்வ கோணாசனம், பரிகாசனம்)

    * பக்கவாட்டுச் சாய்வுகள், உடலை இடது வலதாக இரு திசைகளிலும் பயிற்சி செய்யப்படுவதால், அவை முதுகெலும்பைச் சுற்றியுள்ள ஆழமான முதுகு தசையை அழுத்தி நீட்டுகின்றன.

    * இந்த அழுத்தமானது நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல், குடல் பாதை மற்றும் உதரவிதானம் போன்ற உள் உறுப்புகளைத் தூண்டுகிறது.

    * பக்கவாட்டுச் சாய்வுப்பயிற்சிகள் முதுகெலும்பு மற்றும் உடற்பகுதியின் பல ஏற்றத்தாழ்வுகளை, சமச்சீரற்ற தன்மையை சரிசெய்து தோற்றத்தைச் சீராக்கும்.

    * பக்கவாட்டுச் சாய்வுகளின் எதிரெதிர் இயக்க விசைகளின் காரணமாக, விழிப்புணர்வு உடலின் உள் அச்சுக்கும் மனத்தின் உள் மையத்திற்கும் செல்வது ஆழமாகிறது.

    *பக்கவாட்டுச் சாய்வுப் பயிற்சிகள் சமான வாயுவைத் தூண்டி செரிமானத்தை சீராக்க உதவுகின்றன.

    முறுக்கல் நிலைகள் - (மத்ஸ்யேந்திராசனம், மேரு வக்ராசனம், சர்பாங்காசனம்)

    *முதுகெலும்புகள் தனது நீளமான அச்சை மையமாகக் கொண்டு இரு திசைகளிலும் சுழல்கிறது. உடல் தொடர்ந்து அதன் சுழலும் திறனை இழப்பதால், முதுகெலும்பினை முறுக்கும் நிலைகளை தொடர்ந்து பயிற்சி செய்வது முக்கியம்.

    * முறுக்கல் பயிற்சிகள் தோற்றத்தைச் சரிசெய்கின்றன, உடலின் இடது வலது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றன.

    *முறுக்கல் பயிற்சிகள் உடலை ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிப்பு செய்கின்றன. செரிமானத்தைத் தூண்டி, உணவை ஆற்றலாக மாற்றுவதில் உதவுகின்றன.

    * உடலின் வலது பக்கம் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்க, தீவிரமான அறிவுசார் பக்கமான இடது மூளையுடன் தொடர்புடையது, உடலின் இடது பக்கம் நமது உள்ளுணர்வு, உணர்ச்சி, குளிர்ச்சி, கற்பனை மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்களுடன் தொடர்புடையது. இந்த முறுக்கல் பயிற்சிகள் உள்மையத்தை நோக்கி நம்மைத் திருப்புவதால் உணர்வு/அறிவு சமநிலையை உண்டாக்குகின்றன.

    தலைகீழ் நிலைகள் - (சிரசாசனம், சர்வாங்காசனம், அதோமுக ஸ்வநாசனம்)

    * தலைகீழ் நிலையில் இதயம் தலைக்கு மேலே இருக்கும். இந்நிலையில் ஆழமான, மெதுவான வயிற்று சுவாசம், உதரவிதானம் உள்ளிட்ட உறுப்புகளை பின்னுக்குத் தள்ள அனுமதிக்கிறது, இது செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

    * தலைகீழ் பயிற்சிகள் கால்களிலிருந்து நிணநீர் திரவம் திரும்புவதை ஊக்குவிக்கின்றன, இது வீங்கிய பருத்த கால்களுக்கு நன்மை பயக்கும்.

    * இந்தத் தலைகீழ் மாற்றத்தினால் உடல் புத்துணர்வு கொள்வதுபோல, நமது பார்வையும் கண்ணோட்டமும் மாறி மாறுபட்டு நம்மால் சிந்திக்க இயலும். மனதிலும் பெரிய மாற்றம் வாய்க்கும்.

    அமர்வு நிலைகள் - (பதுமாசனம், சித்தாசனம், வஜ்ராசனம்)

    * மேற்கண்ட பல ஆசன நிலைகளில் பயிற்சியை நிறைவு செய்தபின்னர் தியானத்திற்கென அமர்வு நிலைகள் உள்ளன.

    * இது உடலைத் தளர்த்திச் சீராக்கவும், மனதை உள்முகமாகத் திருப்பி அகமுகமாகச் சாதனை செய்யவும் உதவுகின்றன.

    பண்டைய யோக தத்துவ வரையறையின்படி, யோகா என்ற சொல் ஒன்றுதலை, இணைதலைக் குறிக்கிறது. தன்னை அறிதலின் மூலம், தன் மூலத்தை அறிதலின் மூலம் அந்த ஒன்றுதல் நடக்கிறது. ஒன்றுதலின் மூலம் மனவளமும் உணர்வு வளமும் முதலில் வாய்க்கிறது. பின்னர் உயர்ந்த நிலையான முக்தி வாய்க்கிறது. இந்த செயைலச் செய்ய தியான உணர்வைப்பெற வேண்டும். அதற்கு உடலைப்பக்குவப்படுதவே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    ஆக யோக சாதனையில் ஆசனப்பயிற்சிகளின் முதல் நோக்கம் ஆசன சித்தி - இதன் மூலம் ஒருவர் நெடுநேரம் அமர்ந்து தியானிக்கலாம்.

    இரண்டாம் நோக்கம் அங்க இலாகவம் - இதன் மூலம் ஒருவர் உடலில் ஆற்றல் தங்குதடையின்றிப் பாய்கிறது.

    மூன்றாம் நோக்கம் தாதுக்களின் வலிமை - இதன் மூலம் ஒருவர் உடலை நோயிலிருந்து தடுக்கிறார்.

    முதல் நோக்கத்தை ராஜ யோகம் என்றும், மற்ற நோக்கங்களை அடையும் வழியை ஹத யோகம், க்ரியா யோகம் என்றும் அழைப்பது மரபு.

    செல்: 70107 77127

    ×