என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மவுனம் மிகவும் பலமானது!
- ஒரு மணி நேரமாவது செல்போன், கம்ப்யூட்டர் பார்க்காது இருங்கள்.
- நாளை மூன்று வேலை உணவு, பழங்கள், காய்கறிகளை இன்றே ரெடி செய்து விடுங்கள்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என அன்றாடம் போராடுபவர்கள் ஏராளம். இதில் முயற்சி பலன் அளிக்கவில்லை என்று நொந்து பேசுபவர்கள் ஏராளம். 30 வகையான ஒழுக்க விதிகளை நாம் மேற்கொண்டு சுற்று முயன்றுதான் பார்ப்போமே.
* எப்போதும் எழும் நேரத்தினை விட 15 நிமிடம் முன்னால் எழுந்து பாருங்களேன். பொதுவில் 7 அல்லது 8 மணி நேர தூக்கம் வலியுறுத்தப்படுகின்றது. காலை 6 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது என்றால் 5.45 மணிக்கு எழும் பழக்கத்தினை ஏற்படுத்தி பாருங்களேன்.
* எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் படுக்கையினை தட்டி சீர் செய்வது, போர்வையினை மடிப்பது என்று செய்யுங்கள். பல் சுத்தம் செய்த பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
* நாலு நல்ல வேலைகள் அன்று செய்ய வேண்டியதனை எழுதுங்கள்.
* 5 நிமிடம் நீங்கள் வேலை செய்யும் இடத்தினை சுத்தம் செய்து முறைப்படுத்துங்கள்.
* 5 நிமிடம் யோகா செய்ய வேண்டும்.
* கடந்த வாரம், கடந்த சில நாட்களில் எவை நடந்தது? எவை நடக்கவில்லை? ஏன் நடக்கவில்லை? என்று ஆராயுங்கள்.
* ஒரு மணி நேரமாவது செல்போன், கம்ப்யூட்டர் பார்க்காது இருங்கள்.
* 25 நிமிடம் அதிக கவனத்துடன் கூடிய வேலை, பின்னர் 5 நிமிடம் ஓய்வு என்று பழகுங்கள்.
* நாளை மூன்று வேலை உணவு, பழங்கள், காய்கறிகளை இன்றே ரெடி செய்து விடுங்கள்.
* காலையில் தேவையற்ற விஷயங்களை செல்போனில் பார்ப்பதனை அடியோடு நிறுத்துங்கள்.
* 20 நிமிட நடைபயிற்சி அன்றாடம் கட்டாயம் செய்ய வேண்டும்.
* 5 நிமிடமாவது தியானம் செய்யலாம். எதனையும் நினைக்காது, உடல் அசையாது இருக்கலாம்.
* தள்ளி.... தள்ளி போகும் ஒரு சாதாரண வேலையினை உடனடியாக முடியுங்கள். ஒரு கெட்ட பழக்கம் (உதாரணம்) 4 காபி குடிப்பது போன்றதினை ஒரு நாளாவது நிறுத்திப் பாருங்களேன்.
* இந்த நேரத்திற்குள் இந்த வேலையினை முடிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதனை நிதானமாய், பரபரப்பின்றி முழுமையாய், வெற்றியாய் செய்து முடியுங்கள்.
* மனதார நன்றி சொல்லுங்கள்.
* புது முயற்சியாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம்.
* சமீபத்தில் நீங்கள் செய்த தவறின் மூலம் கற்றுக் கொண்ட பாடத்தினை எழுதுங்கள்.
* காலை, மாலை என வேலையினை பிரித்து செய்யுங்கள்.
* ஒரு வாரத்திற்கான உணவு பட்டியலை யோசித்து தயார் செய்யுங்கள்.
* ஒரு சிறு தர்மம் அன்றாடம் இருக்கட்டும்.
* செல்போனில் மூழ்குவது என்பதனை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் தான் என ஒதுக்குங்கள்.
* உங்கள் முன்னேற்றத்தினை அளவிடுங்கள்.
* பெரிய எண்ணங்கள், உதாரணம் டாக்டர் ஆவது போன்றவை. இவற்றிற்கு அன்றாடம் சிறிது நேரம் கவனம், உழைப்பு தர வேண்டும்.
* நொறுக்கு தீனி ஒன்றினை ஆரோக்யமானதாக மாற்றுங்கள்.
* 30 நிமிடங்கள் அன்றாடம் நல்ல புத்தகம் ஒன்றினை படியுங்கள்.
* உங்கள் முன்னேற்றங்களை கர்வமின்றி மனதில் கொண்டாடுங்கள்.
இவையெல்லாம் உடல் இளைப்பிற்கு உதவுமா? என்றால் உதவும். ஒழுக்கமான ஒவ்வொரு பழக்கமும் உடலுக்கும், மனதிற்கும் நிறைந்த ஆரோக்கியத்தினைத் தரும். நீங்களே ஒவ்வொரு வரியினையும் படித்து சிந்தித்துப் பாருங்கள்.
மேற்கூறிய அறிவுரைகளை ஆய்வு கட்டுரையாக ஒரு மருத்துவர் வெளியிட்டுள்ளார்.
பலர் உடல் எடை குறைப்பிற்காக இரவில் பசி எடுத்தால் பச்சை காய்கறி 'சாலட்' எடுத்துக் கொள்கின்றனர். இவை பலருக்கு செரிமான கோளாறு, வயிறு உப்பிசம் போன்றவற்றினை ஏற்படுத்தி விடுகின்றது.
கமலி ஸ்ரீபால்
காலை, மதிய உணவில் இவ்வாறு எடுத்துக் கொள்ளும் பொழுது பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. காரணம் சீரண மண்டலம் அப்பொழுது நன்கு இயங்குகின்றது. பொதுவில் 'சாலட்' என்பது சிறிதளவு எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு, சீரக தூள், மிளகு தூள், புதினா, கொத்தமல்லி இலை இவை கலந்து சாப்பிடுவது நல்லது.
* ஏன் நம் உடம்பில் கொழுப்பு குறையாது இருக்கின்றது. எடை குறையாது இருக்கின்றது என்பதற்கு கீழ் கண்டவையும் காரணமாக இருக்கலாம்.
* போதுமான அளவு தூக்கமின்மை. உணவில் போதுமான அளவு நார்சத்து இன்மை. போதிய அளவு நீர்சத்து இன்மை.
* அதிக எண்ணெய் சேர்த்து பொரித்த, வறுத்த உணவுகளை உட்கொள்ளுதல் தேவையான அளவு புரதம் இன்மை.
* முறையான அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சி இன்மை.
* அதிக கலோரி சத்து உள்ள உணவுகள். அதிக சர்க்கரை உணவு. அதிக பதப்படுத்தப்பட்ட உணவு. அதிக கார்போஹைட்ரேட் உணவு ஆகியவையும் முக்கிய காரணங்கள் ஆகின்றன.
* சிலர் உணவுக்குப் பின் பழங்களை உட்கொள்ளும் போது உப்பிசம், காற்று என்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. உணவுக்கு அரை மணி நேரம் முன்பு பழங்களை எடுத்துக் கொள்ளும் போது ஆரோக்கிய குடல், சக்தி, நச்சு நீங்குதல், போன்ற நன்மைகள் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கூறுகின்றது.
* ஆரோக்கியம் என்பது 80 சதவீதம் முறையான சரியான உணவிலும், 20 சதவீதம் முறையான, சரியான உடற்பயிற்சியிலும் உள்ளது.
* வளமை என்பது 80 சதவீதம் குணம், பழக்க வழக்கங்களாலும், 20 சதவீதம் கணக்காக வாழ்வதிலும் இருக்கின்றது.
* பேச்சு என்பது 80 சதவீதம் பிறர் பேசுவதை கவனிப்பதிலும், 20 சதவீதம் தேவையான அளவு பேசுவதிலும் இருக்கின்றது.
* கற்பது என்பது 80 சதவீதம் புரிந்து கொள்வதிலும், 20 சதவீதம் படிப்பதிலும் உள்ளது.
சாதிப்பது என்பது 80 சதவீதம் உழைப்பிலும் 20 சதவீதம் அதனைப் பற்றிய எண்ணத்திலும் இருக்கின்றது.
* உறவு என்றாலே 80 சதவீதம் கொடுப்பதும், 20 சதவீதம் பெறுவதும் ஆகும்.
* முன்னேற்றம் என்பது 80 சதவீதம் விடா முயற்சியும், 20 சதவீதம் அதனைப் பற்றிய சிந்தனையிலும் இருக்கின்றது.
இதெல்லாம் செய்கின்றோமா?
ஒருவரோடு பிரச்சினை என்றால் அந்த எதிர் நபர் மீது மென்மையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரச்சினையை கடுமையாக கையாண்டு நீக்கி விட வேண்டும்.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாடத்தினை நமக்கு சொல்லித் தருவதற்காகவே வருகின்றார்கள்.
பொறுமையாய், நிறுத்தி நிதானமாய், நேராக பார்த்து, தன்னம்பிக்கையுடன் பேசுகின்றோமா?
பிறரை முக்கியத்துவம் வாய்ந்தவராய் நடத்துகின்றோமா?
பிறரின் பெயரினை ஞாபகம் வைத்து அழைக்கின்றோமா?
மற்றவர் முன் ஒருவரை பாராட்டி, தனிமையில் அவரது தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துகின்றோமா?
அலுவலகமோ, வீடோ அவர்களின் செயல்களுக்கு கருத்து கூறும் பொழுது அவரை கவனிக்கின்றோம் என்ற உணர்வு ஏற்படும். செய்கின்றோமா?
பிறருக்கு உதவுகின்றோமா?
ஒருவர் அழைத்தால் அதற்கு பதில் அளிக்கின்றோமா?
குற்றம், குறைகள் என சதா கூறாமல் இருக்கின்றோமா?
பிறருக்கு உண்மையாக இருக்கின்றோமா?
அதிகமாக, மிக அதிகமாக நண்பர்களை நம்புவதனை கட்டுப்படுத்து கின்றோமா?
தேவையை விடவும் கூட அளவாக பேசுகின்றோமா?
எதிலும் மிகவும் சரியானவன், நேர்த்தியானவன் என்று காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோமா?
நேரத்தினை சரியாக கையாளுகின்றோமா?
செயல்கள் மூலமே வெற்றி, தாக்கத்தின் மூலம் அல்ல என்பதனை கடைபிடிக்கின்றோமா?
நாம் இல்லாததனை அங்குள்ளவர்கள் இல்லையே என ஏங்குகின்றார்களா? அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்களா?
மற்றவர்களுடன் இருக்கும் போது நம் நாக்கு நல்ல கட்டுப்பாட்டில் நன்கு இருக்கின்றதா?
தனிமையில் நம் மனம் நன்கு நம் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா?
* கோபம் தலைக்கேறி ஆடாது இருக்கின்றோமா?
* கண்ட நேரத்தில் உணர்ச்சி கொந்தளிக்காது இருக்கின்றோமா?
* நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட, வசதியான, மகிழ்ச்சி காலத்தில் மண்டை கனம் பிடித்து ஆடாமல் இருக்கின்றோமா?
இந்த பதில்கள் உங்கள் மன நலனையும், உடல் நலனையும் தீர்மானிக்கின்றது.
மேலும் மன நலம் என்பது மிக முக்கியமானது. நம் மரியாதையை நாம் காப்பாற்றிக் கொண்டாலே நம் மன நலம் நன்று இருக்கும்.
ஆகவே * யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாதீர்கள். ஆனால் கெஞ்சுவது இறைவனிடம் இருக்கட்டும். சித்தர்களிடம் மன்றாடுங்கள், கெஞ்சுங்கள்.
* பிரபஞ்சத்திடம் கையேந்துங்கள். உங்கள் ஆத்மாவோடு அழுது பேசுங்கள். உங்கள் தன்னம்பிக்கையினை விடாது பிடித்துக் கொள்ளுங்கள்.
* யார் உங்களை மதிக்கவில்லையோ அவர்களை திரும்பி கூட பார்க்க வேண்டாம்.
* உங்கள் உடல் நலம், உங்கள் தேவை இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
* மரியாதை இல்லாத இடம் நம் நிழல் கூட படக்கூடாத இடம்தான்.
* சுத்தமான ஆடை, சீவிய தலை, சுத்தமான நகங்கள் என நல்ல தோற்றத்தோடு இருங்கள்.
* பிறரைப் பற்றிய ஊர் வம்பினை கிட்ட வர விடாதீர்கள்.
* பிறர் உழைப்பில் வாழாதீர்கள்.
* வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள்.
* மவுனம் மிகவும் பலமானது. வார்த்தைகள் பலவீனமானவை.
* நம்பிக்கை உடைந்து விட்டால் மன்னிப்பு வேண்டுதல் அங்கு எடுபடாது.
* நாம் உண்மையாய் இருந்தாலே போதும். வேண்டாதவர்கள் நம்மை விட்டு விலகி விடுவார்கள்.
* அதிகமாக எதற்கும் எரிமலை ஆக வேண்டாம். இவை இருந்தால் மனநலம் நன்றாக இருக்கும்.






