என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நிருவாகத்தில் வன்மையும் மென்மையும்!
- மென்மை என்பது ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது
- 'அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள்' என்று ஒரு பழமொழிகூட வன்மைக்கு ஆதரவாக இருக்கிறது.
ஒரு காரியத்தைச் சாதிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய அணுகு முறை மென்மையா? அல்லது வன்மையா? என்பதை அறிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
ஒரு நாட்டின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, ஓர் அலுவலகத்தின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, ஒரு குடும்பத்தின் நிருவாகமாக இருந்தாலும் சரி!, அதில் தலைமைப் பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள், தம் உடன் இருக்கக் கூடியவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டுமா? அல்லது மென்மையாக நடந்து கொள்ள வேண்டுமா?. இல்லத்தில் பெற்றோர் தொடங்கி, பள்ளி, கல்லூரி, அலுவலகம், காவல் துறை, நீதிமன்றம், அரசாங்கத்தை ஆட்சி செய்வோர் வரை எல்லா இடங்களிலும் சற்றுக் கடுமையாக நடந்துகொண்டால்தான் எண்ணிய காரியம் எண்ணியதைவிட விரைவாகவே நடக்கிறது; சரியாகவே நடக்கிறது என்று சிலர் வன்மைக்கு ஆதரவாகக் கூறலாம். இனிமையாக எடுத்துக் கூறி, அன்போடு சாதக பாதகங்களை எடுத்து விளக்கி வேலை வாங்கினால் நடக்காத காரியம்கூட அன்புக்குக் கட்டுப்பட்டு நடக்கும் என்று சிலர் மென்மைக்கு வக்காலத்து வாங்கலாம்.
'அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டார்கள்' என்று ஒரு பழமொழிகூட வன்மைக்கு ஆதரவாக இருக்கிறது. 'அடியாத பிள்ளை படியாது' என்று அந்தக் காலப் பள்ளிக்கூடங்களில், அடிக்கு ஆதரவாகக் கூடப் பழமொழிகள் உண்டு. சேட்டை செய்யும் மாணவரின் பெற்றோரே ஆசிரியரிடம் நேரில் வந்து, 'கண்ணு மூக்கு காது தவிர உடம்பின் மற்ற எல்லா பாகங்களின் தோலையும் உரியுமளவுக்கு அடியுங்கள் ஆசிரியரே' என்று சொந்தப் பிள்ளையை அடித்துக் கண்டிக்க ஆசிரியருக்கு அனுமதி வழங்கிய காலங்களும் உண்டு.
ஆனால், இன்று பள்ளிக் கூடங்களில் அடி மட்டுமல்ல; கடுமையான வாசகங்களைப் பேசித், திட்டிவிடக்கூடக் கூடாது என்பது நடைமுறை உத்தரவாக இருக்கிறது; ஆசிரியர் வகுப்பறைக்குள், அளவெடுக்க அடிஸ்கேலை எடுத்துச் சென்றால்கூட அது பெருங்குற்றம் என்று கூறப்படுகிறது.
வீடுகள் ஒரு காலத்தில் அடி உதைகளின் ஏகபோகக் குடியிருப்பாக இருந்தது. கணவன் மனைவியை அடிப்பது; மனைவி கணவனை அடிப்பது, பெற்றோர் பிள்ளைகளை அடிப்பது; இளையோர் மூத்தோர்மீது கை ஓங்குவது… என இப்படிச் சகல நிலைகளிலும் அடி உதைகள் வீடுகளில் கூடிக் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தன.
இன்று குரலை உயர்த்தித் திட்டினாலே அது குடும்ப வன்முறைக் கணக்கில் சேர்ந்து விடுகிறது. "நீ எடுத்திருக்கிற மதிப்பெண்களுக்கு, எதிர்காலத்தில் நீ மாடுதான் மேய்ப்பாய்!" என்று பெற்றோர்கள் திட்டுவதுகூட பிள்ளைகள் திருந்தி நல்ல நிலைக்கு மாற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பின் காரணமாகத்தான். ஆனால் அந்தத் திட்டுதலைக்கூட அவமானமாக எடுத்துக் கொண்டு, பிள்ளைகள் எதிர்மறையான போக்கில் எதிர்வினை ஆற்றினால் என்ன செய்வது?.

சுந்தர ஆவுடையப்பன்
அரசாங்கங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரும், அலுவலகங்களில் நிருவாகத் தலைமைகளில் இருப்போரும், தங்களுக்குக் கீழே பணியாற்றக் கூடியவர்களிடமிருந்து, உரிய நேரத்தில், உரிய காரியங்கள் நடந்தாக வேண்டும் என்பதற்காகக், கடிந்து கொள்வது, விளக்கக் குறிப்புக் கேட்டு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவர். ஒரு பெரிய நிருவாகத்தில், தனித்தனியே மென்மையாக நடந்து கொண்டாலும், ஒட்டு மொத்தமாகக் கடுமையாக நடந்துகொள்வதே எதிர்பார்க்கும் பலனை அளிக்கும்.
எனவே மென்மையும் வன்மையும் செயலின் தன்மை மற்றும் செயலாற்றுவோரின் குணாதிசயம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபட்டு அமையவும் வாய்ப்புண்டு. திருவள்ளுவர், கல்லையும் பிழிந்து அதிலிருந்து தண்ணீர் கசியச் செய்யவேண்டும் என்கிற நிலையிலுள்ள கடின ஆசாமிகளிடம் நிருவாகத்தில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பின்வரும் குறளில் எடுத்துரைக்கிறார்.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்
அதாவது நிருவாகத்தில், ஒருவர் இழைத்து விட்ட தவறுக்கு தண்டனை வழங்க வேண்டிய சூழல் வந்து விட்டாலும், ஓங்கி அடிக்கக் கை ஓங்குவதுபோல ஓங்கிப், பிறகு மெல்லத் தட்டுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார். இந்த இடத்தில் வள்ளுவர் வலியுறுத்துவது, நிருவாகத்தில் ஒன்றைச் சரிசெய்வதற்கு, வன்மையைக் கையில் எடுப்பதுபோல எடுத்து, மென்மையான முறையில் அதனை முடித்து வைக்க வேண்டும் என்கிறார்.
வன்மைக்கும் மென்மைக்கும் என்ன வேறுபாடு?.
ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்காமல் உறுதியோடு இருப்பது வன்மை ஆகும். வன்மையான செயல்களில் அல்லது சொற்களில் காயங்கள் உடலிலும் மனத்திலும் உண்டாகலாம்; மேலே உள்ளவர்களுக்கும் கீழே உள்ளவர்களுக்கும் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வேறு என்ன செய்ய? நிருவாகத்தில் எனக்குக் காரியம் நடந்தாக வேண்டுமே? அதற்காகக் கடுமையாகப் பேசித்தான் ஆகவேண்டும். கடுமை என்பது நிருவாகம் சார்ந்ததே தவிரத் தனிப்பட்ட முறையில் அதனை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சிலர் கூறுவர்.
மென்மை என்பது ஒரு பொருளோ அல்லது ஒரு செயலோ எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது; எந்த வடிவத்திற்கும் மாறிவிடக்கூடியது; எதற்கும் உருகிவிடக் கூடியது; இலகுத் தன்மையும், எளிதில் துண்டுபடக் கூடியதுமாகிய மிருதுத் தன்மையும் கொண்டது. எதிலும் எளிதில் கரைந்துவிடக் கூடியது; கையாளக் கடினமற்றது. வன்மையை உறுதியான கல்லுக்கு உதாரணமாகக் கூறினால், மென்மையை மிருதுவான மலருக்கு இணையாகக் காட்டலாம்.
நிருவாகத்தில் கல் நெஞ்சம் தேவையா? அது கக்குகின்ற எரிமலை வார்த்தைகள் தேவையா?. அல்லது மலர்போன்ற மெல்லிய இதயம் வேண்டுமா? அது பிலிற்றுகின்ற தேனினிமை வார்த்தைகள் வேண்டுமா?. வன்மையா? மென்மையா?.
ஒரு நாட்டின் அரசன் அறிவிற் சிறந்தவன்; தன் காலத்திற்குப்பிறகு தன்நாட்டை நிருவாகம் பண்ணத் தனது மகனுக்குப் பயிற்சிதர விரும்பினான். அறிந்த அமைச்சர், அந்த நாட்டிலுள்ள தலைசிறந்த வில் வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம், யானையேற்றம், தேர்ப்படை ஆகியவற்றின் வீரர்களைக் கொண்டுவந்து அரசன்முன் நிறுத்தினான்.
பார்த்த அரசன் அமைச்சரிடம் கூறினான்," இந்தப் பயிற்சிகளை எடுப்பதற்குமுன் ஒரு முக்கியமான பயிற்சி இருக்கிறது; அதற்கு இளவரசன், அடர்ந்த காட்டிற்குள் சென்று, அங்கே தவம் இயற்றிக் கொண்டிருக்கும் முனிவரிடம் பயிற்சியெடுத்துத் திரும்ப வேண்டும்" என்றார். இளவரசனும் காட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டு, முனிவரிடம் முறையான பயிற்சியும் தொடங்கினான்.
" பயிற்சி ஒன்றுமில்லை!. நீ இந்தக் காட்டின் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து, உன் காதில்விழும் காட்டின் ஓசையெல்லாம் கேட்டுவந்து சொல்!. ஒன்றும் அவசரமில்லை; பத்துநாள் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டு பிறகு என்னிடம் வந்து, காட்டின் ஓசைகளாக என்னென்ன கேட்டாய் என்பதைச் சொல்!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். இளவரசனும் மிகுந்த பணிவோடு குருநாதரின் ஆணைக்கிணங்க காட்டிற்குள் சென்று, ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு காட்டின் ஓசைகளைக் கவனிக்கத் தொடங்கினான். பத்து நாட்களுக்குப் பிறகு முனிவரைப் பார்க்க ஆசிரமம் வந்தான் இளவரசன். " சொல்! காட்டின் ஓசைகளாக என்னென்ன கேட்டாய்?" முனிவர் கேட்டார்.
" பறவைகளின் ஓசைகளைக் கேட்டேன்!; அவை ஒவ்வொன்றன் குரலையும் வேறுபடுத்தி அறியவும் கற்றுக்கொண்டேன்; புலி, சிங்கம், கரடி, மான், யானை முதலான விலங்குகளின் ஓசைகளைக் கேட்டேன்; ஆறு, அருவி, இடி, மின்னல் இவற்றின் ஓசைகளையும் கேட்டேன்" என்றான் இளவரசன். " மகிழ்ச்சி!. அதே காட்டிற்குள் மீண்டும் செல்!; இப்போது ஒரு மாதம் அங்கேயே தங்கியிருந்து ஓசைகளைக் கூர்ந்து கவனித்துவிட்டு என்னிடம் வா!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். ஒரு மாதம் கழித்து, கூடிய முகப்பொலிவோடு முனிவரிடம் திரும்பிய இளவரசன், " குருநாதரே! இந்த முறை காட்டில், தேனீக்களின் ரீங்கார ஓசையைக் கேட்டேன்; சில் வண்டுகளின் ஓசை, இலைகள் காற்றில் படபடக்கும் ஓசை இவற்றையும் கேட்டேன் என்றான் இளவரசன்.
"இப்போது மூன்றாவது முறையும் அந்தக் காட்டிற்குள் செல்!. மீண்டும் ஒருமாதம் அங்கேயே இரு. ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்தபடியே என்னென்ன ஓசைகளை உணரமுடிகிறது என்பதை உணர்ந்து வா!" என்று அனுப்பி வைத்தார் முனிவர். ஒருமாதம் கழித்து, இளவரசன் ஒரு முனிவரைப்போலவே சாந்த சொரூபத்துடன் முனிவர்முன் வந்து நின்றான்.
"ஐயா!," இம்முறை பூக்கள் மலரும் ஓசைகளைக் கேட்டேன்!; பனித்துளிகள் புற்களில் உடைபடும் ஓசையினைத் துல்லியமாகக் கேட்டேன். சூரியக்கதிர்கள் பூமியைச் சூடேற்றும் ஓசையையும் உணர்ந்தேன்!" என்றான் இளவரசன். முனிவர் இளவரசனைப் பார்த்துச் சொன்னார், "உனக்குப் பக்குவம் வந்துவிட்டது. உனது நாட்டிற்குச் சென்று, நாடாளும் பொறுப்பை உடனே ஏற்றுக்கொள்!. வாய்திறந்து சொல்லப்படுகிற குறைகளுக்கும் மேலாக, உணர்ச்சிப் பிழம்பாய் உலவும் மக்களின் மனவோட்டங்களைக் கேட்டுப் பழகு!. உணர்வுகள் புலப்பட்டால் உண்மை புலப்படும்; உணர்வுகளைப் புரிந்துகொண்டால் உண்மைகளைத் தாமாகவே உணர்ந்து கொள்ளலாம்".
ஆம்!. நாம் மனத்தில் எண்ணும் எண்ணங்களே வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. மனிதர்கள் வாய்திறந்து பேசுகின்ற சொற்களை நமது செவிகள் கேட்கின்றன என்றால், அவர்கள் பேசாத, பேச நினைக்கின்ற சொற்களை நமது இதயம் உணர வேண்டும். ஆளுகின்ற தலைவன், மக்கள் கூறுகின்ற குறைகளை மட்டுமல்லாது கூற விழைகின்ற குறைகளையும் உணர்ந்துகொண்டு களைபவனாக இருக்க வேண்டும். அதைப்போலத்தான் அலுவலகத்திலும். நாம் எதிர்பார்க்கிற பலனை மற்றவர்கள் மூலம் நாம் பெற வேண்டுமென்றால் அவர்கள் எதிர்பார்க்கின்ற பலனை அவர்கள் கூறாமலேயே நாம் செய்து முடிக்க வேண்டும்.
குடும்பத்திலும் கடுமையேதும் இல்லாமல் மென்மையாகவே நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடைபெற வேண்டுமென்றால், உணர்வுரீதியாக உணர்ந்துகொண்டு செயல்படும் மென்மைத் தன்மையை வளர்த்தெடுக்க வேண்டும். உணர்வுகள் மென்மையானவை; அவற்றை இயந்திரங்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாது. நிருவாகத்தில் எல்லாம் இயந்திரம்போலத் துல்லியக் கணக்கில் துரிதகதியில் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. மனிதர்களுக்குள் எல்லாம் மாண்புடன் நடைபெற வேண்டுமானால், 'கடிதோச்சி மெல்ல எறியும்' உத்தியே சிறந்த முறையில் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் நிருவாகம் மனித நேயம் சார்ந்ததாகப் பயன் விளைவிக்கும்.
தொடர்புக்கு - 9443190098