என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

உலகத் தமிழ்த் தூதர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண்பேராயத்தில் உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு.
- தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது உள்பட இன்னும் பற்பல முக்கியமான விருதுகள் பெற்றவர்.
தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (1935 - 2025), பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதமி பரிசுபெற்றவருமான வல்லிக்கண்ணன் காலமானபோது இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அங்கே அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் பெரிதும் ஆச்சரியப் பட்டார்கள்.
காரணம் அப்போது பெருங்கவிக்கோவின் மனைவி திருமதி சேதுமதி காலமாகி மிகச் சில நாட்கள்தான் ஆகியிருந்தன.
`உறவு முக்கியம்தான். சந்தேகமில்லை. அதுபோலவே உறவுக்கு இணையாக நட்பும் எனக்கு மிக முக்கியம். என் வாழ்வில் எனது நண்பர்களுக்கு மிக உயர்வான இடம் உண்டு!` என்பதைத் தம் வாழ்க்கைக் கோட்பாடாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர்.
அவரது உற்ற நண்பர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. ஏராளமான வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த அவருக்கு உலகின் எல்லா நாடுகளிலும் அவரை நேசிக்கும் நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். (அவர் சென்றுவந்த வெளிநாடுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய அறுபது என்று சொல்லப்படுகிறது. அந்த எண்ணிக்கை இன்னும் சற்றுக் கூட இருக்கலாமே அன்றிக் குறையாது.)
பெருங்கவிக்கோ சேதுராமன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள ஆண்டநாயகபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.
இளமைக் காலங்களில் கடும் வறுமையைச் சந்தித்தவர். சாப்பாட்டிற்குக் கூடச் சிரமம் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் கல்வியை விட்டுவிடக் கூடாது என்று கருதினார். அதனால் தனது விடாமுயற்சியால் படிப்படியாகப் படித்துத் தேறி, மிக விரைவில் தமிழில் புலவர் பட்டமும் பெற்றார்.
அதன்பின் தமிழ் முதுகலைப் பட்டத்தையும், ஆசிரியப் பணிக்கு அடிப்படையான பி.எட் பட்டத்தையும் பெற்று சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். அந்தப் பள்ளியில் அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் அவரை அன்போடும் மரியாதையோடும் இப்போதும் நினைவு கூர்கிறார்கள்.
பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார் பெருங்கவிக்கோ. `பழந்தமிழ் நூல்களில் கவிதை பற்றிய கருத்துகளும் கற்பனைகளும்` என்பதுதான் அவர் எடுத்துக்கொண்ட ஆய்வுத் தலைப்பு. தாமே ஒரு கவிஞராக இருந்ததால் இந்தத் தலைப்பில் ஆய்வு செய்வது அவருக்கு எளிதாக இருந்திருக்க வேண்டும். எந்த வயதிலும் தொடர்ந்து கல்வி கற்பதற்கு அவர் ஒருசிறிதும் தயங்கியதே இல்லை. எழுதுவதற்கும் புத்தகங்கள் படிப்பதற்கும் தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்தார்.
இவர் எழுதிய `காலக்கனி` என்ற காவியம் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்தது. அந்த நூல் அதன் தகுதி காரணமாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலைப் படிப்புக்குப் பாடமாக இருந்தது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் எண்பேராயத்தில் உறுப்பினராக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு. பெருங்கவிக்கோ தான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களுக்குப் பேருந்திலும் ஆட்டோவிலும் தான் செல்வார். பந்தா, படாடோபம் போன்றவை அவரிடம் அறவே கிடையாது. மிக எளிய வாழ்வு வாழ்ந்த உயர்நிலைத் தமிழறிஞர் அவர்.
திருப்பூர் கிருஷ்ணன்
மிகுந்த ஆன்மிக நாட்டம் உடையவர். சபரிமலை ஐயப்பன் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். `ஐயப்பன் பாமாலை, ஐயப்பன் ஆற்றுப்படை` போன்ற தலைப்புகளில் ஆன்மிகச் செய்யுள் நூல்கள் இயற்றியுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்களில் ஒன்று `ஐயப்பன் அருள்கவி` என்பது.
இவருக்குப் பல்வேறு நிறுவனங்களாலும் தனி நபர்களாலும் `பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கொண்டல், செந்தமிழ்க் கவிமணி, கவிஞர் குல திலகம்` போன்ற பல பட்டங்கள் வழங்கப் பட்டுள்ளன.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது உள்பட இன்னும் பற்பல முக்கியமான விருதுகள் பெற்றவர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய திருவள்ளுவர் விருது, முரசொலி விருது போன்றவை அவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க சில.
தினத்தந்தி நாளிதழ் `சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது` என்ற உயர்வான விருதை இவருக்கு வழங்கி இவரை கெளரவித்துள்ளது.
தீவிர ஐயப்ப பக்தராக இருந்தாலும் அவர் மத நல்லிணக்கத்தைப் போற்றிய உயரிய பண்பாளர். அவர் இயற்றிய நூல்களில் ஒன்று `இயேசு அந்தாதி` என்பது கவனத்திற்குரிய செய்தி.
மரபுக் கவிதையாக நிறையச் செய்யுள்களை எழுதிக் குவித்தவர். ஏறக்குறைய ஒரு லட்சம் செய்யுள்கள் அவர் எழுதியுள்ளார் என்று ஒரு கணக்கு சொல்லப்படுகிறது. எண்ணிக்கையில் அவரளவு மரபுக் கவிதைகளை எழுதியவர்கள் அண்மைக்காலத்தில் யாரும் இல்லை என்றே கூறலாம். கவிதை எழுதுவதை தினசரிப் பணியாகக் கொண்டு அவர் எழுதியிருக்க வேண்டும். அல்லாவிட்டால் எண்ணிக்கையில் அவ்வளவு கவிதைகளைப் படைப்பது இயலக் கூடியதல்ல. அவரது கவிதைகள் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடும் பல தீபாவளி மலர்களை அலங்கரித்ததுண்டு.
மகாத்மா காந்தியின் வாழ்வால் பெரிதும் கவரப்பட்ட பெருங்கவிக்கோ, காந்தியக் கொள்கைகளில் தீவிர நாட்டமுள்ளவர். `வாழ்க நீ எம்மான்!` என்ற தலைப்பில் காந்தி பற்றிய பன்மொழிக் கவிதை நூல் ஒன்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அந்தாதி, ஆற்றுப்படை போன்ற பழைய இலக்கண மரபுகளில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர். இவ்வகையில் இவரது `தாயுமானவர் அந்தாதி, ஐயப்பன் ஆற்றுப்படை` போன்ற நூல்கள் குறிப்பிடத் தக்கவை.
இவை தவிர `நெஞ்சத் தோட்டம், தமிழ் முழக்கம், தாய்மண், எண்ணச் சுடர், உலகை உயர்த்திய ஒருவன், பற்றிலான் பற்று` என்பன போன்ற பல தலைப்புகளில் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். `மலைநாட்டின் மீதினிலே` என்று பயணக் காப்பியமாகவும் ஒரு செய்யுள் நூல் இயற்றியுள்ளார். பயண இலக்கிய வரிசையில் உரைநடை நூல்கள் நிறைய வந்துள்ளன. செய்யுள் நூல்கள் மிகக் குறைவு என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
`சேது காப்பியம்` அவர் எழுதிய நூல்களில் முக்கியமானது. அது ஒரு வித்தியாசமான தன்வரலாற்றுச் செய்யுள் நூல். பன்னிரண்டு காண்டங்களை உடைய அந்நூலின் அமைப்பு இதுவரை யாரும் செய்யாத வகையில் புதுமை நிறைந்தது.
தனது தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றைத் தமிழ்ச் சமூகத்தின் பொது வரலாற்றோடு இணைத்துப் புனைந்துள்ளார் நூலாசிரியர். பெருங்கவிக்கோவின் வாழ்க்கையைப் பேசும் அந்த நூலில், `ப·றுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொண்ட` தமிழின் பழைய வரலாற்றுச் செய்திகளும் இணைந்தே பேப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்த நூலை ஓர் ஆவணப் பதிவு என்றே கூற வேண்டும்.
எங்கே தவறு கண்டாலும் அதை உடனே கண்டிக்கும் இயல்புடையவர் பெருங்கவிக் கோ. அந்த நக்கீரப் பண்பினால் தாம் செய்த ஆசிரியப் பணியிலும் சரி, தமது குடும்ப வாழ்விலும் சரி, அவருக்குப் பலவகை சிரமங்கள் நேர்ந்தன. அவற்றையெல்லாம் சேதுகாப்பியத்தில் விறுவிறுப்பாக விவரிக்கிறார்.
சமகாலத் தமிழகத்தின் அரசியல், கலை, இதழியல் தொடர்பான பல நிகழ்வுகள் சேது காப்பியத்தில் ஆங்காங்கே பொருத்தமாக இடம்பெற்றுள்ளன. அதனாலேயே இந்தத் தன்வரலாறு தனி வரலாறாக இல்லாமல் தமிழக வரலாறாக உருக் கொள்கிறது. மீசையால் அடையாளம் காணப்பட்ட தமிழறிஞர்கள் வரிசையில் டி.கே.சி. என்கிற டி.கே. சிதம்பரநாதன்போல் இவரும் ஒருவர். பெருங்கவிக்கோவின் பெரிய மீசையைப் பார்ப்பவர்கள் அவரை முரட்டு மனிதர் என்றே எடைபோடுவார்கள். ஆனால் அது நூறு சதவிகிதம் தவறு. அவரைப் போன்ற குழந்தை மனம் படைத்தவர்கள் மிக அபூர்வம். வாழ்நாள் முழுதும் சூதும் வஞ்சனையும் இல்லாத வளர்ந்த குழந்தை போலவே அவர் இருந்தார்.
எளிய பாராட்டுகளுக்குக் கூட உளமார மயங்குபவர். பெருந்தன்மையும் நன்றி உணர்வும் உடைய சான்றோர்களில் இவரும் ஒருவர். தொண்ணூறு வயதான முதுமைக் காலத்திலும் மிகுந்த நினைவாற்றல் கொண்டிருந்தார். பழைய சம்பவங்களைத் துல்லியமாக விவரிப்பதிலும், இலக்கிய மேற்கோள்களைப் பிசகில்லாமல் சொல்வதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
`தமிழ்ப் பணி` என்ற தலைப்பில் மாத இதழ் நடத்தியவர். தமிழ் அறிஞர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்த பத்திரிகை அது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்த மாத இதழ் இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சூழல்களில் தமிழ் உரிமை காப்பதற்காகப் பல போராட்டங்களை நடத்தி அதன் காரணமாகப் பலமுறை சிறைசென்றவர் இவர் என்பதும் எண்ணிப் பார்க்கத்தக்கது. தமிழுக்காகப் பலமுறை நடைப்பயணம் மேற்கொண்டவர்.
மூதறிஞர் கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் உலகக் கவிஞர்களைக் கவிதை அடிப்படையில் ஒருங்கிணைக்க உலகக் கவிஞர் பெருமன்றம் தொடங்கினார். அம்மன்றம் நிகழ்த்திய உலகளாவிய கவியரங்கங்களில் இருபது முறைக்கும் மேல் பெருங்கவிக்கோ கலந்துகொண்டு கவிதை வழங்கியிருக்கிறார். 1972இல் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தைப் பெருங்கவிக்கோ தொடங்கினார். தமிழ்ப் போராளியாகவும் உலகத் தமிழ்த் தூதராகவும் ஒருசேர விளங்கியவர் என இவரைப் பற்றிச் சொல்வது பொருத்தமானது.
பெருங்கவிக்கோவின் மக்கட் செல்வங்கள் `கவியரசன், ஆண்டவர், திருவள்ளுவர், தமிழ் மணிகண்டன்` என்ற நான்கு புதல்வர்கள் மற்றும் `பூங்கொடி` என்ற புதல்வி என ஐவர். வெள்ளை மனம் படைத்தவராய், வளர்ந்த குழந்தைபோல் தொண்ணூற்று ஓராண்டுகள் வாழ்ந்த பெருங்கவிக்கோ அண்மையில் ஜூலை நான்காம் தேதியன்று முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார். அவரது வற்றாத தமிழ்ப் பற்றை அவர் எழுதிய சேதுகாப்பியம் உள்ளிட்ட செய்யுள் நூல்கள் என்றென்றும் புலப்படுத்திக் கொண்டிருக்கும்.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com






