என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்?- பணம் பெருக்கும் வழிமுறைகள்
- சில வங்கிகளின் டெபிட் கார்டில் இன்சூரன்ஸ் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
- போஸ்ட் ஆபீஸ்கள் வழங்கும் போஸ்டல் லைப் இன்சூரன்சும் குறைந்த பிரீமியத்தில் மனி பேக் திட்டங்களை வழங்குகிறது.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் நோக்கிய நம் பயணத்தில் வருமானம், முதலீடுகள் போன்றவை அதி முக்கியம் என்றாலும், அவற்றை வரவேற்கவும், கையாளவும் சில முன்னேற்பாடுகள் தேவைப்படுகின்றன என்று பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்போது நாம் பார்க்கப் போவது இன்சூரன்ஸ் - காப்பீடு.
பங்குச் சந்தையும், மியூச்சுவல் பண்டும் நமக்கு அறிமுகமாவதற்கு முன், இதை ஒரு முதலீட்டு வழி என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தோம். இதில் கிடைக்கும் 5 சதவீதம்-6 சதவீதம் வருமானம், போனஸ், அடிஷன்ஸ் போன்ற பெரிய வார்த்தைகளுடன் வந்ததாலும், இதன் ஏஜென்ட்டுகள் பொதுவாக நம் குடும்பத்தாராக அல்லது நலம்விரும்பிகளாக இருந்ததாலும் முதலீடு என்றாலே இன்சூரன்ஸ் என்றாகிவிட்டிருந்தது. ஆனால் முதலீடு என்றால் அதில் பணத்தை பன்மடங்காக்கும் மேஜிக் இருக்கவேண்டும். அது இன்சூரன்சில் இல்லை என்று அறிந்தபின்னரே காப்பீடு என்பது முதலீடு அல்ல; பாதுகாப்பு என்று நமக்குப் புரியவந்துள்ளது.
எதிர்பாராது ஏற்படும் சில கஷ்டங்களில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாப்பதே இன்சூரன்ஸின் வேலை. வானம் பொய்த்து, மழை இல்லாவிட்டால் பயிரை எப்படிக் காப்பது என்று விவசாயி யோசிக்கிறார். ஒரு அவசர நிலை ஏற்பட்டால், எங்கே, எப்படி தரையிறங்குவது என்ற திட்டத்துடன்தான் விமானத்தை செலுத்தும் பைலட் களத்தில் இறங்குகிறார். வந்தாலும் வரலாம்; வராமலும் போகலாம் என்ற ரிஸ்க்குகள் பற்றி இவ்வளவு திட்டமிடும் நாம், கண்டிப்பாக ஒவ்வொருவர் வாழ்விலும் வந்தே தீரக்கூடிய ரிஸ்கான மரணம் பற்றி யோசித்து திட்டமிடவேண்டும்தானே? அதற்கு நமக்கு உதவுவதுதான் இன்சூரன்ஸ்.
லைப் இன்சூரன்ஸ் / நான்-லைப் இன்சூரன்ஸ்:
பொதுவாக இன்சூரன்ஸை லைப், நான்-லைப் என்று இரண்டாகப் பிரிப்பார்கள். குடும்பத்தின் செலவுகளுக்குப் பணம் ஈட்டும் முக்கிய நபர் உயிரிழக்கும் பட்சத்தில், அந்த வலியை இறைவனாலும் ஈடு செய்ய இயலாது. ஆனால் அந்தக் குடும்பம் பொருளாதார ரீதியாக தாழ்ந்துவிடாமல் காக்க முடியும். ஒருவர் இல்லை என்பதால் அந்தக் குடும்பம் தன் வழக்கமான செலவுகளைக் குறைக்கவோ, குறிக்கோள்களை மாற்றவோ தேவையில்லாத அளவுக்கு அந்தக் குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியும். அதைத்தான் லைப் இன்சூரன்ஸ் செய்கிறது.
நான்-லைப் இன்சூரன்ஸை ஜெனரல் இன்சூரன்ஸ் என்போம். இது உயிர் தவிர்த்த மற்ற இழப்புகளுக்குக் காப்பீடு வழங்குகிறது. வீட்டுக்காப்பீடு, நகைக்காப்பீடு, வாகனக்காப்பீடு, விவசாயக்காப்பீடு, திருட்டு, பூகம்பம், வெள்ளம், பயங்கரவாதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புக்கான காப்பீடு ஆகியவற்றைத் தருவது ஜெனரல் இன்சூரன்ஸ்.
லைப் இன்சூரன்ஸ்
நம்மில் பலருக்கும் லைப் இன்சூரன்ஸ் மிகவும் பரிச்சயமான ஒன்று. ஏனெனில் போன தலைமுறை வரை நம் குடும்பங்களில் ஒருவர் கட்டாயம் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக இருப்பார்; அவர் கூறுவது புரியாவிட்டாலும் முக தாட்சண்யத்திற்காக ஒன்றிரண்டு பாலிசி எடுத்திருப்போம். லைப் இன்சூரன்ஸில் பல வகை உண்டு.
எண்டோமென்ட் பாலிசி
சென்ற தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான பாலிசி இது. ஏனெனில், முதலீடு, பாதுகாப்பு என்று நாம் விரும்பக்கூடிய இரண்டு தலையாய விஷயங்களையும் ஒன்றாக வழங்குகிறது. பாலிசி காலம் தாண்டி பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் காப்பீட்டுத் தொகையுடன் போனஸ், அடிஷன் போன்றவை சேர்க்கப்பட்டு, மொத்தமாக அவரிடமே திருப்பித் தரப்படும். இந்த மொத்தப் பணம் சொந்த வீடு, பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம், ஓய்வுக்காலம் போன்ற அவருடைய பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்ற உதவுகிறது. இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் காப்பீட்டுத் தொகை (Sum Assured) அவரது நாமினிக்குத் தரப்படும்.
மனி பேக் பாலிசி
எண்டோமென்ட் பாலிசி போலவே மனி பேக் பாலிசியும் செயல்படும். இதில் உள்ள ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு குறிப்பிட்ட கால கட்டத்திலும் திரும்பத் தரப்படும். உதாரணமாக, பதினைந்து வருட மனி பேக் பாலிசியில் ஐந்து வருடத்திற்கொரு முறை மூன்றில் ஒரு பங்கு தொகையைப் பெறலாம். இதனால் இடைப்பட்ட காலங்களில் வரக்கூடிய செலவுகளுக்கும் பணம் கிடைக்கிறது. பாலிசி முடிவில் மீதித் தொகையுடன் போனஸ்களும் கிடைக்கும்.
சுந்தரி ஜகதீசன்
யூலிப் பாலிசி
இதிலும் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் முதலீடு என்ற இரண்டு நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால் ரிஸ்க் குறைந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், ரிஸ்க் நிறைந்த சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் லாபம் அதிகரிக்கிறது. மற்ற திட்டங்களில் 5 சதவீதம்-6 சதவீதம் வருமானம் கிடைத்தால் யூலிப் பாலிசியில் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை திட்டங்களைப் பொறுத்து வருமானம் கிடைக்கிறது என்பதால் இது அதிகம் விரும்பப்படுகிறது.
ஹோல் லைப் பாலிசி
பொதுவாக 70 வயதுக்கு மேல் லைப் இன்சூரன்ஸ் கிடைக்காத நிலையில் இந்தப் பாலிசியின் கீழ் நூறு வயது வரை நமக்கு கவரேஜ் கிடைக்கும். இதனால் நாம் ப்ரீமியம் கட்டும் காலம் வரை இன்சூரன்ஸ் பாதுகாப்பு நமக்கு இருக்கும். நூறு வயதுக்குள் நாம் எப்போது இறந்துபோக நேர்ந்தாலும், நம் குடும்பத்தாருக்கு பொருளாதார உதவி கிட்டும். உயிருக்கான இன்சூரன்சில் மிகப் பிரபலமானது டெர்ம் இன்சூரன்ஸ். மிகவும் முக்கியம் வாய்ந்த இது குறித்து அடுத்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
நான்-லைப் இன்சூரன்ஸ் அல்லது ஜெனரல் இன்சூரன்ஸ்
உயிருக்கான இன்சூரன்ஸ் லைப் இன்சூரன்ஸ் என்று பார்த்தோம். உடமைகளுக்கானது ஜெனரல் இன்சூரன்ஸ். வீடு/வாகனம்/ஆரோக்கியம்/ பயணம் போன்ற விஷயங்களில் இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சேதாரங்களை ஈடுகட்டுவது ஜெனரல் இன்சூரன்ஸ்.
வாகனக்காப்பீடு
நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் 53 வாகன விபத்துக்கள் நடக்கின்றன. அவற்றில் 19 விபத்துக்கள் உயிரிழப்பில் முடிவதாக அரசு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் திருட்டு, கலவரம் போன்றவைகளும் வாகனங்களுக்கும், அவற்றில் பயணிப்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றை ஈடு செய்ய வாகனக் காப்பீடு உதவுகிறது.
இதில் தேர்ட் பார்ட்டி, காம்ப்ரிஹென்ஸிவ் என்று இரண்டு வகை உண்டு. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ், விபத்தில் காயம் பட்ட எதிராளிக்கு மட்டும் இன்சூரன்ஸ் வழங்குகிறது. வாகனத்திற்கோ, ஓட்டுனருக்கோ கவரேஜ் இல்லை. காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ், வாகனத்திற்கும், ஓட்டுனருக்கும், காயம் பட்ட தேர்ட் பார்ட்டிக்கும் கூட கவரேஜ் தந்து எல்லாவித இழப்புகளையும் ஈடு செய்கிறது.
வீட்டுக்காப்பீடு
இயற்கைச் சீற்றங்களாலோ, மனிதத் தவறுகளாலோ வீட்டுக்கும் அதில் உள்ள நகைகள், ஆர்ட் வேலைப்பாடுகள், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றுக்கும் ஏற்படும் சேதத்தை ஈடு செய்ய இந்தக் காப்பீடு உதவுகிறது. வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தால் வாடகை வராத பட்சத்தில் அதையும் சில பாலிசிகள் ஈடு கட்டுகின்றன இன்னும் சில பாலிசிகள், சேதமடைந்த வீடு சரியாகும் வரை வீட்டு உரிமையாளர்கள் வேறு இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த வாடகையையும் ஈடு செய்கின்றன.
வீட்டுக் கடன் காப்பீடு
குடும்பத் தலைவர் இறந்ததும், வீடு கட்டக் கடன் கொடுத்த நிறுவனம், அவரது விதவை மனைவியையும், சிறு பிள்ளைகளையும் கதறக் கதற வீட்டை விட்டுத் துரத்தும் காட்சிகளை எத்தனை சினிமாக்களில் பார்த்திருப்போம்! அது போன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, வீட்டுக் கடன் காப்பீடு உதவும். கடனைக் கட்டி வரும் குடும்பத்தலைவர் இறந்து விட்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் கடன் நிறுவனத்துக்கு மீதி இருக்கும் தொகையை மொத்தமாகக் கட்டிவிடும். இதனால் குடும்பம் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படாது.
பயணக்காப்பீடு
இது வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. லக்கேஜ் இழப்பு, பயணத் தாமதங்கள் மற்றும் ரத்து போன்றவை ஏற்படுத்தக்கூடிய இழப்புகளை பயணக் காப்பீடு ஈடு செய்கிறது. பயணத்தின் போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற நேர்ந்தால் அதற்கான இழப்பீடு தரக்கூடிய பாலிசிகளும் உள்ளன. ஜெனரல் இன்சூரன்ஸில் மிக முக்கியமானது ஹெல்த் இன்சூரன்ஸ். இதுவும் விரிவாகப் பார்க்கப்படவேண்டிய ஒன்று என்பதால் தனி ஒரு கட்டுரையில் காணலாம்.
காப்பீடு என்று வரும்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நாம் தெரிவு செய்யும் காப்பீட்டுக் கம்பெனி அநாவசியமாக இழுத்தடிக்காமல் இழப்பீட்டுத் தொகையைத் தரும் வழக்கம் உடையதா என்று கவனிப்பது முக்கியம். நம் தேவைகளை லிஸ்ட் போட்டு அவை எல்லாம் இருக்கின்றனவா, தேவை இல்லாத விஷயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.
விண்ணப்பப்படிவத்தை நிரப்பும்போது தவறின்றி முழுவதுமாக நிரப்ப வேண்டும். ஒரு நகலை நம்மிடம் வைத்துக் கொள்வது நல்லது.
பாலிசி வந்ததும் அதில் இருக்கும் விவரங்களை சரி பார்க்கவேண்டும். அதில் தவறு இருந்தால் பிற்காலத்தில் தொகை கிடைப்பது கஷ்டம் என்பதால், 15 நாட்களுக்குள் பாலிசியை திருப்பி அனுப்பி திருத்தங்கள் செய்யலாம் அல்லது ப்ரீமியத்தைத் திரும்பப் பெறலாம்.
க்ளெய்ம் (பணத்தைத் திருப்பிப்பெறும்) பத்திரங்களை நிரப்பும்போதும் தவறின்றி நிரப்ப வேண்டும்.
பொதுவாக க்ளெய்ம் என்று வரும்போது தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேகமாகவும், நியாயமாகவும் செயல்படுவதாக அமெரிக்க சர்வே ஒன்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
இன்சூரன்ஸ் நிறுவனங்களை விட எளிமையாக போஸ்ட் ஆபீசும், வங்கிகளும் இன்சூரன்ஸ் வழங்குகின்றன. உங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்குக்கு இன்சூரன்ஸ் வழங்கும் வசதி இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். பல வங்கிகளில் வருடத்திற்கு ரூ.200/ கட்டினால் ஒரு லட்ச ரூபாய்க்கு இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. சில வங்கிகளின் டெபிட் கார்டில் இன்சூரன்ஸ் இலவசமாகவே வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ்கள் வழங்கும் போஸ்டல் லைப் இன்சூரன்சும் குறைந்த பிரீமியத்தில் மனி பேக் திட்டங்களை வழங்குகிறது.
இவற்றில் உங்கள் நிலைமைக்குப் பொருத்தமான இன்சூரன்ஸ்கள் எவை? ஏற்கெனவே எடுத்திருந்தால் அவற்றின் அவசியத்தை மறுபரிசீலனை செய்திருக்கிறீர்களா?






