என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கருவின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பரிசோதனைகள்
    X

    கருவின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் பரிசோதனைகள்

    • போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகியவற்றை பற்றி எல்லோருமே ஓரளவு தெரிந்து வைத்து இருப்பார்கள்.
    • அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அந்த கருவின் மூக்கு பகுதியில் உள்ள நாசி எலும்பு உருவாக்கத்தையும் பார்க்க முடியும்.

    ஒரு பெண் கருவுற்று இருக்கிறார் என்றால் அவர் மகப்பேறு அடைவதற்கு முன்பு அவரது வயிற்றில் உள்ள கருவின் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமானது. எனவே கருவின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருத்தரிக்கும் முன்பு ஆரோக்கி யமான கருவை உருவாக்குவதற்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின்போது குழந்தை ஆரோக்கியமாக வளருகிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

    குழந்தை பெற விரும்பும் பெண்கள் முதலில் தங்களுக்கு பால்வினை நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதாவது இருந்தால் அதை சரிசெய்த பிறகுதான் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    ரத்த மாறுபாடுகள் இருந்தால் முன் எச்சரிக்கை தேவை:

    அதேபோல் சில வகையான ரத்தப்பிரிவுகளில் மாறுபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளது. இதுவும் கர்ப்பத்தில் இருக்கும் கருவுக்கு பாதிப்புகளை உருவாக்கும். சிலருக்கு ரத்த சிவப்பணுக்கள் வட்ட வடிவமாக இருப்பதற்கு பதிலாக அரிவாள் போன்ற வடிவில் இருக்கும் சிக்கில் செல் நோய் இருக்கலாம்.

    இன்னும் சிலருக்கு ஆர்.எச். நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருக்கலாம். மேலும் சிலருக்கு தலசீமியா பாதிப்புகளும் இருக்கலாம். எனவே இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கும் வரக்கூடும். எனவே அவர்கள் முதலிலேயே அதற்குரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    மேலும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும் நிலையில் கருவில் இருக்கும் குழந்தைக்கு பரிசோதனை செய்து அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கும்போது, கர்ப்ப காலத்தின்போது என்னென்ன பாதிப்புகள் வர வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்னரே அறிந்து கொள்ள முடியும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் முடியும்.

    இதுதவிர கர்ப்பம் தரிக்க இருக்கும் சில பெண்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் அல்லது வலிப்பு நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நிலையில் அவர்கள் அதற்குரிய மருந்து மாத்திரை சாப்பிட்டு வருவார்கள். அந்த மாத்திரைகளால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். கருவில் உள்ள குழந்தைக்கு குறைபாடுகள் வரலாம்.

    எனவே அதை முன்னரே தெரிந்துகொண்டு கர்ப்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பாதுகாப்பான வகையில் மருந்து மாத்திரைகளை மாற்றிக் கொள்வது முக்கியம். இதுதான் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருவதை தடுப்பதற்கான வழிறையாகும்.

    கர்ப்பத்தை எதிர்நோக்க முறையான திட்டமிடுதல்:

    மேலும் போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகியவற்றை பற்றி எல்லோருமே ஓரளவு தெரிந்து வைத்து இருப்பார்கள். குழந்தைக்கு முதுகு தண்டுவட குறைபாடுகள் மற்றும் மூளை குறைபாடுகள் ஆகியவை வராமல் தடுப்பதற்கு இவை அனைத்தையுமே முதலிலேயே கொடுக்க வேண்டும்.

    அந்த வகையில் மகப்பேறுக்கு முன்பே இந்த மாதிரியான, முறையான பரிசோதனைகளை செய்ய வேண்டும். அதன்மூலம் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு என்னென்ன குறைபாடு உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு தீர்வு இருந்தால் அந்த தீர்வை கொடுக்க வேண்டும்.

    ஒருவேளை அதற்கு தீர்வு இல்லாவிட்டால் அந்த குறைபாடானது எத்தனை சதவீதம் அடுத்த குழந்தையை பாதிக்கும் என்பதை தெரிந்துகொண்டு, ஒரு சரியான திட்டமிடுதலுடன் தான் அடுத்த கர்ப்பத்தை அந்த தம்பதிகள் எதிர்கொள்ள வேண்டும்.

    அந்த வகையில் கர்ப்பம் தரித்த பெண்கள், என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு முதல் முக்கியமான பரிசோதனை என்பது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தான். மேலும் குழந்தையின் வடிவமைப்பில் ஏற்படும் குறைபாட்டை கண்டுபிடிப்பதற்கு இன்னும் சில பரிசோதனைகளை செய்ய வேண்டும். இந்த பரிசோதனைகள் மூலமாக கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறியலாம்.

    பாதிப்புகளை உறுதி செய்வதற்கான பரிசோதனை:

    இப்போது ஒருவருக்கு சர்க்கரை அளவை பரிசோதித்து பார்க்கிறோம் என்றால், அவருக்கு எப்போது எடுத்தாலும் ரத்த சர்க்கரை அளவு 150-க்கு மேல் இருக்கும் நிலையில் அவருக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கருதலாம்.

    எனவே அதை உறுதி செய்வதற்கான பரிசோதனையை செய்ய வேண்டும். அதன்மூலம் அவருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா அல்லது சிலநேரங்களில் சாப்பிட்டவுடன் ஏறுகிற சர்க்கரை அளவை ஏற்கனவே கண்டு பிடித்தோமா என்பதை நாம் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியும்.

    அதேபோல் ஒரு பரிசோதனை முறை என்றால், இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தெரியும். ஒருவேளை நோய் வருவதற்கான சாத்தியக்கூறு இருந்தால், அதன்பிறகு அவர்களுக்கு அதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு நோய் தாக்கம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்.

    அந்த வகையில் ஒரு பரிசோதனை முறை என்பது மிகவும் எளிமையான முறையாக இருக்க வேண்டும். அத்துடன் தரமானதாகவும் இருக்க வேண்டும். அந்த பரிசோதனையானது எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய விஷயமாக இருக்க வேண்டும். இந்த பரிசோதனைகளை நகரங்களுக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்றால், எல்லா கர்ப்பிணியாலும் இந்த பரிசோதனைகளை செய்ய முடியாது.

    அப்படியென்றால் இதற்கு சில குறிப்பிட்ட இடங்கள் மட்டும் என்று இல்லாமல், பல இடங்களில் எளிமையான முறையில் கிடைப்பதாக இருக்க வேண்டும். மேலும் விலை குறைவாகவும், நல்ல ஒரு தொழில்நுட்ப வசதியுடன் கிடைக்க வேண்டும். இதுதான் ஒரு முழுமையான பரிசோதனை முறை ஆகும்.

    மேலும் கர்ப்பகாலத்தின்போது, குறிப்பாக கருவில் உள்ள குழந்தைக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வகையிலான கருவுக்குள் ஊடுருவும் வகையிலான பரிசோதனை முறைகளை (இன்வேசிவ் மெத்தட்) செய்யக்கூடாது. இன்வேசிவ் மெத்தட் முறையில் பரிசோதனை செய்யும்போது கருச்சிதைவு ஏற்படுவதற்கோ அல்லது குறை பிரசவம் ஆவதற்கோ வாய்ப்புகள் உண்டு. எனவே எந்தவொரு மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனையும், இன்வேசிவ் மெத்தட் இல்லாமல் வருகிறதோ, அதுதான் ஒரு பாதுகாப்பான பரிசோதனை முறை ஆகும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    கருவில் உள்ள குழந்தைகளுக்கு டவுன் சின்ட்ரோம், முதுகு தண்டுவட குறைபாடுகள்:

    அந்த வகையில் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனையாக எல்லா கர்ப்பிணிகளுக்கும் 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு சரியான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். இதில் நியூக்கல் டிரான்ஸ்லுசென்சி பரிசோதனை என்பது மிகவும் முக்கியமானதாகும். இது கருவின் கழுத்தின் பின்புறத்தில் திரவம் நிறைந்த பகுதியை அளவிடும் பரிசோதனையாகும். இந்த பரிசோதனை என்பது கருவில் குரோமோசோம் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது பிற உடல்நல பிரச்சினைகள் இருந்தாலோ அதை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அந்த கருவின் மூக்கு பகுதியில் உள்ள நாசி எலும்பு உருவாக்கத்தையும் பார்க்க முடியும். அதன் மூலம் ஏதாவது பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்பதை முன்பே கண்டறிய முடியும். குறிப்பாக டவுன் சின்ட்ரோம் மற்றும் முதுகு தண்டுவட குறைபாடுகள் வருவதற்காக பாதிப்பு காரணிகளை அறிய முடியும். இவைதான் ஒரு அல்ட்ராசவுண்ட் மூலம் செய்யக்கூடிய பரிசோதனை முறையாகும்.

    இதுதவிர பயோ கெமிக்கல் பரிசோதனை முறைகளும் இருக்கிறது. பயோ கெமிக்கல் முறையில் ரத்தத்தில் சில பரிசோதனைகளை செய்ய வேண்டும். சரியாக 12 முதல் 14 வாரத்துக்குள் ஒரு ஆல்பா பீட்டா புரோட்டின், பீட்டா எச்.சி.ஜி. ஆகிய பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

    இதில் பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை என்பது முதன்மையாக கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. மேலும் கருவின் வளர்ச்சியை கண்காணிக்கவும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. ஆல்பா பீட்டா புரோட்டின், பீட்டா எச்.சி.ஜி. ஆகிய அனைத்துமே, முதுகு தண்டுவட குறைபாடு இருக்கின்ற குழந்தை களாக இருந்தால் அதன் அளவீடு அதற்கு மாறுபட்டு அதிகமாக இருக்கும். மேலும் வைட்டமின் பி 12 குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு உள்ளிட்ட சில குறைபாடுகளும் கருவின் வளர்ச்சியை பாதிக்கும்.

    இந்த வகையில் ஒரு மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது கருவை பாதிக்கும் முறையில் இல்லாமல் இருக்க வேண்டும்.

    அதாவது எளிதாக ஒரு ரத்த பரிசோதனை செய்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரப்போவது இல்லை. ஆனால் இதுவே ஒரு பனிக்குடத்தில் இருந்து நீர் எடுப்பதோ, அதேபோல் கருவில் இருந்து ஒரு திசுவை பயாப்சி பரிசோதனைக்காக எடுப்பதோ ஆபத்தை விளைவிக்கும் பரிசோதனை முறையாகும்.

    எனவே ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்வதற்கு, கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் ஆரோக்கியமான குழந்தை பெற என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×