என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இயற்கையின் இனிய வரம் இளமை தரும் தேன்!
    X

    இயற்கையின் இனிய வரம் இளமை தரும் தேன்!

    • காதில் தேன் பாய்ந்தது போல இருக்கிறது என்று சொல்வது கூட தேனை மேன்மைப்படுத்தும் சொல்லே.
    • பழைய காலங்களில் தீக்காயங்கள் மற்றும் தோலின் காயங்களை குணப்படுத்துவதற்கு தேனை மருந்தாக பயன்படுத்தினர்.

    தேன், இதன் சுவையில் விழாதவர்களே இருக்க முடியாது! எத்தனை நாட்கள் ஆனாலும், எந்த புட்டியில் ஊற்றி வைத்தாலும் துளிகூட சுவை மாறாமல் இருப்பது தேன் ஒன்றே. இந்த உலகம் தோன்றும் போதே தோன்றியதோ என்று என்ணும் வண்ணம் தேனைப் பற்றி பாடாத சங்க இலக்கியங்கள் கிடையாது. புகழாத சினிமா பாடல்களும் கிடையது.

    உதாரணத்திற்கு குணா படத்தைக் கூட எடுத்துக் கொள்ளலாம். கவிதை எழுதச் சொல்லும் போது மானே! தேனே! என்று போட்டுக்கோ! என்று கமல் கூறுவார். அந்த அளவிற்கு சொல்லும் போதே இனிப்பது தேனாகும். காதில் தேன் பாய்ந்தது போல இருக்கிறது என்று சொல்வது கூட தேனை மேன்மைப்படுத்தும் சொல்லே.இப்படி கவிதை, வர்ணிப்பு, பேச்சு, பாட்டு, மருந்து, விருந்து என்று எல்லாவற்றிலும் தேன்... தேன்... தேன்தான்.

    அப்படிப்பட்ட தேன் உண்மையில் நமக்கானது அல்ல அது தேனீக்களுக்கானது. அவற்றின் உணவே அதுதான். கஷ்டப்பட்டு தேனீ தயாரிக்கும் தேனை எடுத்து "ஆஹா! என்ன ருசி!" என்று இஷ்டப்பட்டு சாப்பிடுகிறோம், ஒரு கூட்டை தயாரிப்பதற்க 60 ஆயிரம் தேனீக்கள் உழைக்கின்றன, குறைந்தது 2 மில்லியன் மலர்களில் இருக்கும் மதுவை உறிஞ்சி எடுத்து தன் வயிற்றில் உள்ள நொதிகளோடு கலந்து, அதிகப்படியான ஈரப்பதத்தை தன் இறக்கையால் விசிறி காய வைத்து, கெட்டுப்போகாத, கெட்டியான தேனாக மாற்றினால் தான், தேவையான தேன் தேறும். இவ்வாறு தயாரிக்க ஒரு வாரம் முதல் பத்து நாட்களாகும்.

    இந்த தேனில் அப்படி என்னதான் இருக்கிறது?

    ஒன்றும் வேண்டாம்!. ஒரு கரண்டி தேனை எடுத்து சாப்பிட்டால் போதும் !அதிலேயே 64 கலோரிகள் உள்ளது. எளிதில் செரிக்க கூடிய மாவுச்சத்து உள்ளது. பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள், கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. தேனில் இயற்கையாகவே பாக்டீரியாக்களை கொல்ல கூடிய, புண்ணை ஆற்றக்கூடிய சத்துகள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் என்று சொல்லக்கூடிய வயதாவதை தள்ளி போடக்கூடிய சத்தும் உள்ளது. அதனால்தான் பழைய காலங்களில் தீக்காயங்கள் மற்றும் தோலின் காயங்களை குணப்படுத்துவதற்கு தேனை மருந்தாக பயன்படுத்தினர். ஏராளமான ப்ரோபயாட்டிக் நுண்ணுயிரி சத்துக்கள் இருப்பதால் செரிமானத்தை சரிப்படுத்தும். செரிமானத்திற்கு உதவி செய்யும். மலச்சிக்கலை குணப்படுத்தும்.

    ஜெயஸ்ரீ சர்மா

    இரவில் தேனை எடுத்துக் கொள்ளும் பொழுது தூக்கம் வரும். இது தவிர முகத்திற்கு சிறந்த பேஸ் பேக்காகவும் தேனை உபயோகிக்கலாம். முகச்சுருக்கங்கள் குறையும். உண்மையில் கஷ்டமான வேலை, அசல் தேனை கண்டுபிடிப்பதுதான்.

    அசல் தேன்!... அசந்தேன்!... இந்த வார்த்தையை டி.வி., பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு பல முறை பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்.

    தேனை விற்பதற்கான ஒரு நிறுவனத்தின் பிரபலமான வசனம் அது! அசல் தேனை தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரில் விட்டால் கரையாமல் டம்ளரின் அடியில் அப்படியே தங்கும். அப்படி தங்கினால் அது அசல் தேன். ரொம்ப சிரமம் வேண்டாம் நம்பகமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இப்போது நல்ல தரமான தேன் கிடைக்கிறது. அதை வாங்கிக் கொள்ளுஙகள்!

    மருத்துவ பயன்பாட்டுத் தேன் என்றும் மெடிக்கல் கிரேட் தேன் என்றும் 100 சதவீதம் சுத்தமான தேன் என்றும் எழுதி இருப்பதையே உபயோகிப்பது நல்லது.

    ஒவ்வொரு குறிப்பிட்ட பூக்களில் இருந்து உருவாக்கப்படும் தேன் சுவையும் நிறமும் திடமும் வித்தியாசமாக இருப்பதோடு அந்த மருத்துவ குணத்தோடும் விளங்குகிறது என்பது அதிசயமான உண்மை. எடுத்துக் காட்டாக யூகலிப்டஸ் மரங்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடத்தில் கிடைக்கக்கூடிய தேன், சளி இருமலை குணமாக்குகிறது.

    உலகில் நியூசிலாந்தின் மனோகா மற்றும் அகஸியா மிகச் சிறந்த தேனாக கருதப்படுகிறது. தமிழகத்தில் மிகவும் சிறந்த தேன், முருங்கைப்பூ தேனாகும்.

    இனிப்பு தேவைப்படும் எல்லா இடங்களிலும் வெள்ளை சக்கரையை தவிர்த்து விட்டு தேனை தாராளமாக உபயோகிக்கலாம். குறிப்பாக பழ சாலடுகள், பலாப்பழத்தோடு தேனும் கலந்து உண்பது நம்முடைய வழக்கம். செரிமான சக்தி தேனுக்கு அதிகமாக இருப்பதால் பலாப்பழத்தோடு சேர்த்து உண்ணும் பொழுது எளிதில் செரிக்கிறது என்பது உண்மை, சுவையும் கூடுகிறது என்பது கூடுதல் நன்மை.

    இது தெரிந்ததால்தான் தேனை சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் அதிகம் உபயோகப்படுத்துகிறது. எனக்கு இப்போது கூட ஞாபகம் இருக்கிறது. 8 வயதில் இருமலும் தொண்டை வலியும் இருந்த போது சித்த மருத்துவர் சிறுசிறு பொட்டலங்களாக மருந்து கொடுத்தார். அம்மா அதை தேனில் குழைத்து நாக்கில் தடவி விடுவார். மருந்து கசந்தால் கூட தேனின் இனிப்பிற்காக அந்த மருந்தை விரும்பி சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. தேனோடு கொடுக்கப்படும் மருந்து வேலை செய்வதற்கு உதவுவதோடு செரிமானத்திற்கும் உதவும் என்பதால் சித்த மருத்துவம் பெரும்பாலும் தேனை உபயோகப்படுத்துகிறது.

    தேனுடன் இஞ்சி சாறு, தேனுடன் துளசி சாறு மிளகுத்தூள் போன்றவற்றை கலந்து கஷாயமாக இருமலுக்கு கொடுப்பது நம் வீடுகளில் பாட்டி வைத்தியமாக செய்யப்படுகிறது. தொண்டை புண்ணை குணப்படுத்தக்கூடிய ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி செப்டிக் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் இது இருமலை குணப்படுத்தும்.

    உடல் எடை குறையுமா?

    சுடுநீரில் தேன், எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பர். செரிமானத்தை பலப்படுத்துவதோடு மெட்டபாலிசம் என்று சொல்லக்கூடிய வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கும், அதனால் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது எடை குறைப்புக்கு இது உதவும். ஆனால், சரியான உணவு, உடற்பயிற்சியின் மூலமாகத்தான் கணிசமாக எடையை குறைக்க முடியும். என்னதான் தேனாக இருந்தாலும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. தேனும் அதிகப்படியாக எடுத்தால் கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கலாம்.

    குழந்தைகள் பிறந்த உடன் நாவில் தேனை வைப்பர். இது பல காலமாக இருக்கக்கூடிய பழக்கம். ஆனால் ஆங்கில மருத்துவம் ஒரு வயதுக்குள் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை ஊக்குவிப்பதில்லை.

    தலை நரைக்குமா?

    தலைமுடியில் தேன் பட்டால் உடனே நரைத்து விடும் என்று நம்மூரில் நம்பிக்கை உண்டு, இயல்பாகவே தேனிற்கு லேசாக நிறத்தை குறைக்கும் தன்மை உண்டு. ஆனால் தேன் பட்டால் தலைமுடி நரைக்கும் என்பது முற்றிலும் தவறு. எதிர்பாராமல் பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீர் விட்டு கழுவி விட்டாலே போதும்.

    உண்மையில் சில இடங்களில் இயற்கை ஈரப்பதத்தை அதிகரிக்கும் பொருளாக தேனை தலைமுடிக்கு கூட பயன்படுத்துவர்.

    தினமும் ஒரு சிறு கரண்டி தேனை சுவையுங்கள்! செரிமானம் சரிப்படும், நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். வயதாவது தள்ளிப்போகும். தடவினால், முகம் இளமையாகும். மொத்தத்தில் தேன் இயற்கை கொடுத்த சஞ்சீவினி!. அதை அளவோடு எடுத்துக் கொண்டு வளமோடு வாழ்வோம்.

    வாட்ஸ்அப்: 8925764148

    Next Story
    ×