என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மூளை பாதிப்பும் வலிப்பும்
    X

    மூளை பாதிப்பும் வலிப்பும்

    • வலிப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல.
    • நம் மூளையில் பல பகுதிகள் உள்ளன.

    காக்காய் வலிப்பு என்று நாம் கூறும் இந்த வலிப்புக்கும் காக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கை, கால், வெட்டி, வெட்டி இழுப்பதை, கைகால் வலிப்பு என்று கூறப்பட்ட சொல் தான் நாளடைவில், காக்காய் வலிப்பாக மாறி விட்டது.

    வலிப்பு என்பது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல. இது உண்மையில் மூளை மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களின் தாக்கத்தினால், ஏற்படும் பாதிப்புதான். மூளையில் எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதை பொறுத்து அறிகுறிகள் மாறுபடுகின்றன.

    மூளையின் எந்தப்பகுதி பாதிப்பதால் வலிப்பு வருகிறது?

    நம் மூளையில் பல பகுதிகள் உள்ளன. அதில் பெருமூளை பாதிப்பதால் வலிப்பு வருகிறது. இதில் ப்ரான்டல், பரைட்டல், டெம்போரல், ஆக்சிபிட்டல் என்று நான்கு பகுதிகள் உள்ளன. மூளையின் ஒரு சில பகுதிகளில் வலிப்பைத் தூண்டக்கூடிய நியூரான்கள் உள்ளன. அதாவது, இந்தப் பகுதியிலுள்ள நியூரான்கள் பாதிக்கப்படும் போது வலிப்பு அதிகமாக வருகிறது.

    உதாரணத்திற்கு, டெம்போரல் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, ஹிப்போகாம்பஸ் என்னும் பகுதியிலிருந்து வலிப்பு வரும் போது, அதை மாத்திரைகளால் கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு குறைவாக உள்ளது.

    இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெருமூளையில் பாதிப்பு ஏற்பட்டால் வலிப்பு வரும் என்பதும், அதிலும், டெம்போரல் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது, வலிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்பதுதான். இந்த நான்கு மடல்களும் பாதிக்கப்படும் போது என்ன மாதிரியான அறிகுறிகள் வருகிறது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

    ப்ராண்டல் என்னும் மூளையின் முன்மடல் பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    ப்ராண்டல் எனப்படும் மூளையின் முன்மடல், நமது நெற்றி இருக்கும் இடத்திற்குப் பின்னால் அமைந்துள்ளது. இந்தப்பகுதி உடலின் அசைவுகள் உட்பட பல இயக்கங்களுக்கு, பேச்சு, அறிவுத்திறன், பகுத்தறிவுத்திறன் மற்றும் ஒருவரின் தனித்தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த மூளையின் முன்மடல் பாதிக்கப்படுவதால் வலிப்பு வருவதை ப்ராண்டல் லோப் எபிலெப்சி என்கிறோம். இதன் அறிகுறிகள் சற்று வேறுபட்டவையாக இருக்கிறது. இவ்வகை வலிப்பின் அறிகுறிகள் இரவில் மட்டுமே சிறிது நேரம் வரக்கூடிய வலிப்பு. கண்கள் மட்டும் ஒரு புறமாகப் போகும் தன்மையுடன் வரும் வலிப்பு. பேசுவதில் சிரமம் மற்றும் சுயநினைவின்மை. அதிக ஓசையுடனான சிரிப்பு அல்லது கத்துவது.

    மீண்டும் மீண்டும் சொல்வதையே சொல்வது அல்லது செய்வது. இயல்பு பிரண்ட தோரணைகள். அடிப்பது போன்று அல்லது போராடும் தன்மையுடைய கை, கால் அசைவுகள். படுக்கையில் சிறுநீர் கழித்தல். தற்காலிக ஞாபகமறதி. குழப்பமடைந்தவர்கள் போலவோ, தொலைந்து போனவர்கள் போலவோ காணப்படுதல். இவ்வகை வலிப்பைக் கண்டறிவது சிறிது சிரமமான விஷயம் தான். ஏனென்றால் மனரீதியான சிக்கல்கள் மற்றும் தூக்கமின்மைக் கோளாறுகள் என்று தவறாகக் கணிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    பரைட்டல் என்னும் மூளைமடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    மூளையின் மையப்பகுதியில் பரைட்டல் என்னும் மூளையின் மடல் அமைந்துள்ளது. தொடுதல், வலி மற்றும் வெளியிடம் குறித்த தகவல்களைப் பெற்று மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பி ஒருங்கிணைக்கச் செய்கிறது. இந்தப் பகுதி பாதிக்கும் போது ஏற்படும் வலிப்பிற்கான அறிகுறிகள் பின்வருமாறு,

    தொடுஉணர்வில் மாற்றங்கள் (அதாவது மரத்துப் போகும் தன்மை, எரிச்சல் மற்றும் மின்பாய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு), உடல் பலவீனம், தலைசுற்றல், மாயத்தோற்றங்கள் பார்ப்பது போலும், கேட்பது போலும் தோன்றுவது, சிதைந்த தெளிவற்ற வார்த்தைகள் வெளிவருதல், பேச்சிழந்து போகுதல், தன்னியக்கவாதிகளாகத் தோன்றுதல் (அதாவது யார் சொல்வதையும் காதில் வாங்காமல் தன்னிச்சையாக இயங்குவது).

    டெம்போரல் என்னும் மூளைமடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    இந்த மடல் தலையினுள் காதுப்பகுதியின் உள்புறம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் ஹிப்போகாம்பஸ் எனப்படும் ஞாபகத்திறனுக்கான பகுதி அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் வலிப்பைத் தூண்டிவிடும் இயல்பு அதிகமாக உள்ளது. இந்தப் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பின் அறிகுறிகள் பின்வருமாறு, வயிற்றுப் பகுதி அல்லது இருதயப்பகுதியில் அசௌகரியமான உணர்வுகள் ஏற்படலாம். வலிப்பு வருவதற்கு முன் ஒருவித வாசனை, சுவை, சப்தம், பார்வையில் மாற்றம் அல்லது உணர்வில் மாற்றங்கள் ஏற்படலாம். முறைத்துப் பார்ப்பது, நாக்கைக் கடித்துக் கொள்வது மற்றும் கைகளைத் தேய்த்துக் கொள்வது மற்றும் சுயநினைவின்மை ஏற்படலாம்.

    தேவையற்ற வாய், கைகால் மற்றும் அங்க அசைவுகள் அல்லது தன்னிச்சையான அங்கஅசைவுகள் ஏற்படக்கூடும்.

    வலிப்பின் ஆரம்ப நிலையில், தனக்குள் ஏற்படும் மாற்றங்களைச் சிலநேரங்களில் உணரமுடியும். பிறகு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போய்விடலாம்.

    மரு.அ.வேணி

    ஆக்சிப்பிட்டல் என்னும் மூளை பின்மடல் பகுதி பாதிக்கப்படுவதால் வரும் வலிப்பு

    இது தலையின் பிடரிப்பகுதிக்குப் பின்புறம் உள்ளது. இது நம் பார்வையுடன் தொடர்புடையது. இப்பகுதியில் தோன்றும் வலிப்பு, பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதன் அறிகுறிகள் பின்வருமாறு,

    தேவையற்ற கண் அசைவுகள், காதுகளில் இரைச்சல், தலைச்சுற்றல், கண் பார்வை விலகிக் காணப்படுதல், வாந்தி, கண் இமை துடிப்பு

    கண்களை இறுக மூடிக்கொள்ளுதல், உருவம் பெரிதாக அல்லது இரட்டையாக அல்லது அதற்கும் மேலாக தெரிதல், வண்ண வண்ண பிம்பங்கள் வந்து வந்து செல்வது, ஒரு உருவம் பாதியாக வெட்டுப்பட்டது போல் அல்லது முழுமையாகத் தெரியாமல் பாதி தெரிவது, கண் ஒரு பக்கமாகத் திரும்பிப் வெறித்துப் பார்ப்பது.

    என்ன கொடுமை இது? என்று தானே சிந்திக்கிறீர்கள். இவை அனைத்துமே வலிப்பு நோயின் அறிகுறிகளே. வலிப்பு நோயாளிகள் வலிப்பு ஏற்பட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் மிகவும் நன்றாக இருப்பர். எனவே மருத்துவ கவனிப்புக்கு உடனே அழைத்து வருவதில்லை. 4 அல்லது 5 முறை வலிப்பு வந்து விட்ட பின்னரே, மருத்துவ கவனிப்புக்கு அழைத்து வருகிறார்கள். இது மிகவும் தவறான செயல். ஒரு வலிப்பானது அடுத்த வலிப்பை வரவழைக்கக் கூடியது. எனவே, அறிகுறி தென்பட்டவுடன் மூளை நரம்பியல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    செல்: 75980-01010, 80564-01010

    Next Story
    ×