என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சுக்கிர மேட்டின் அமைப்பும் பலன்களும்
- சுக்கிர மேட்டில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்களுக்கு உலக வாழ்வில் மட்டுமே பிடிப்பு அதிகம் இருக்கும்.
- அதுவே சுக்கிர மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால் அந்தநபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும்
சென்ற வாரம் புதன்மேடு ரேகைகளும் அவற்றில் இருக்கும் குறிகளை பற்றியும் பார்த்தோம். இன்று சுக்கிர மேடு ரேகை குறியீடுகளை பற்றி பார்க்க போகிறோம்...
சுக்கிர மேடும் ரேகை குறியீடுகளும்: கட்டை விரலுக்கு கீழே ஆயுள் ரேகையை ஒட்டி உள்ள பகுதி தான் சுக்கிர மேடு ஆகும். ஒருவர் வாழ்வில் அவர் அடையும் மகிழ்ச்சி, திருமண வாழ்க்கையில் அவர் அடையும் சந்தோஷங்கள், அவருக்கு கிடைக்கும் காதல் அனுபவங்கள் என இவை அனைத்தையும் விளக்கும் பகுதி தான் இந்த சுக்கிர மேடு. இதில் உள்ள குறியீடுகளும் அவை தொடர்பான பலன்களையும் தான் தற்போது நாம் காண இருக்கிறோம்.
சுக்கிர மேட்டில் உள்ள குறியீடுகள் சொல்லும் பலன்கள் வருமாறு:-
சுக்கிர மேட்டில் ஒரே ஒரு கோடு மட்டும் காணப்பட்டால் அவர்களுக்கு உலக வாழ்வில் மட்டுமே பிடிப்பு அதிகம் இருக்கும். அதிக காமம் காணப்படும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கத்துடன் இருப்பார்கள். வாழ்க்கையில் பல அனுபவங்களை பெற்று நன்கு சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். உறவுகளை விட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். இதனால் உறவுகளை இழக்க நேரிடலாம். அதனால் அந்த குணத்தை மட்டும் மாற்றிக் கொள்வது நல்லது.
அதுவே சுக்கிர மேட்டில் பல கோடுகள் காணப்பட்டால் அந்தநபர்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும். உலக விஷயங்கள் அனைத்தையும் அறிந்து வைத்து இருப்பார்கள். முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கையில் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பார்கள்.
சுக்கிர மேட்டில் குறுக்கும், நெடுக்குமாக பல கோடுகள் காணப்பட்டால் அன்பு மற்றும் காதலில் எதிர்பாராத தோல்வியை அவர்கள் சந்திக்க நேரிடும். காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்தாலே அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். செய்யும் வேலையில் கண்டிப்பும் கறாறும் நிறைந்து இருக்கும். நல்ல உழைப்பாளிகளாக சிறந்து விளங்குவார்கள்.
சுக்கிர மேட்டில் கரும் புள்ளி காணப்பட்டால் வீடு வாங்கும் யோகம் தாமதப்படும். அதிக பொருளாதார பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாவார்கள். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு உடல் நல பாதிப்பும் கூட ஏற்பட இடம் உண்டு. சுக்கிர மேட்டில் நட்சத்திரம் காணப்பட்டால் அவர்களுக்கு அந்த அமைப்பு அதிக பொருள் நஷ்டத்தை தரும். அதிக மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். பிறருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்தல் நலம். பேச்சில் அதிக கவனம் தேவை. பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேற்கண்ட இவற்றில் மட்டும் கவனமாக இருந்து விட்டீர்கள் என்றால் மற்றபடி அனைத்து விதத்திலும் நன்மையை அடைவீர்கள். பிற்காலத்தில் பொருளாதார வசதி நல்ல படியாக மேம்படும்.
சுக்கிர மேட்டில் சதுரம் காணப்பட்டால் எந்த சமயத்திலும் தன்னிலையை இழக்க மாட்டார்கள். இதனால் குற்றம் புரியும் எண்ணத்தில் இருந்து காக்கப்படுவார்கள். அதிகம் உணர்வு பூர்வமாக யோசிப்பவர்கள். சத்திய வாக்கை கொண்டு இருப்பார்கள். இதனால் அவர்கள் சொல்வது பலிக்கலாம். அதனால் சாபம் தரும் வார்த்தைகளை பேசுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கூர்மையான புத்தியையும், தரும சிந்தனையையும் கொண்டு இருப்பார்கள். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பார்கள்.
சுக்கிர மேட்டில் பெருக்கல் குறி காணப்பட்டால் அவர்களுக்கு ஆசை, பற்று, காதல் ஆகியவற்றில் தோல்வி ஏற்படும். எதிர்பாராத வகையில் பொருள் ஈட்டி வாழ்வில் வளர்ச்சி பெறுவார்கள். வாழ்வின் பிற்பகுதியில் நிலம், வீடு என அனைத்து வித சொத்துக்களுடன் இருப்பார்கள். சொந்தங்களுடன் கூடி வாழும் பாக்கியம் உண்டு.
சுக்கிர மேட்டில் வட்டம் காணப்பட்டால் எதிர்பாராத விபத்துக்கள் அவர்கள் வாழ்வில் ஏற்பட இடம் உண்டு. அதனால் வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கவனமுடன் சென்று வருதல் வேண்டும். சதா ஊர் சுற்றும் குணம் இருக்கலாம். வரவுக்கு மேல் செலவு செய்யும் குணம் இருக்கலாம். இவற்றை தவிர்த்தால் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்.
சுக்கிர மேட்டில் வலை போன்ற அமைப்பு காணப்பட்டால் ஆரோக்கியம் பாதிக்கும், அடிக்கடி மருத்துவ செலவுகள் தரும். மன அழுத்தம் கூட சற்று அதிகம் காணப்படும். மனம் மிகவும் சஞ்சலம் அடைந்து கொண்டே இருக்கும். பேச்சினால் மதிப்பை நீங்களே கெடுத்துக் கொள்ளலாம். அதனால் யோசித்து பேசுவது நல்லது. வாழ்க்கையில் வரவும், செலவும் உடனுக்குடன் நேரிடலாம். உடன் பிறந்தவர்களுடன் அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தாராள மனது உடையவர்களாக இருப்பீர்கள். இதனால் அதிகம் ஏமாற்றப்படலாம். எதிலும் சிந்த்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி!
சுக்கிர மேட்டில் முக்கோணம் காணப்பட்டால் அவர்களுக்கு மிக அதிகமான பாலியல் தொடர்புகள் ஏற்படும்.
உங்களை சுற்றி எதிரிகள், விரோதிகள், அவதூறு பேசுபவர்கள் அதிகம் இருக்கலாம். குடும்பம் அடிக்கடி இடமாற்றத்தை சந்திக்கும்படியாக இருக்கும். வாழ்வில் அலைச்சல் அதிகம் இருக்கும். திறமைகள் இருந்தும் கூட அவை வெளியில் வராமலே போகலாம். அதனால் உங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.
சுக்கிர மேட்டில் சூரியனின் சின்னம் காணப்பட்டால் உண்மையாக பிறரை நேசிப்பார்கள். காதல் உணர்வு அவர்களிடம் அதிகம் காணப்படும். மனதார அன்பையும் பாசத்தையும் காட்டத் தெரிந்தவர்கள். வருமானத்தை விட செலவு அதிகம் இருக்கும். தாயார் வழியில் விரோதங்கள் ஏற்பட இடம் உண்டு. எதிர்காலத்தில் ஞாபக சக்தி குறைய வாய்ப்பு உண்டு என்பதால் இப்போதில் இருந்தே அதனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வது நல்லது.
சுக்கிர மேட்டில் சந்திரனின் சின்னம் காணப்பட்டால் சரீர சுகங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். நல்ல சுகவாசியாக இருப்பார்கள். ஆனாலும் கூட, சில சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மனைவியினால் சில தொல்லைகள் ஏற்பட இடம் உண்டு.
அ.ச.இராமராஜன்
சுக்கிர மேட்டில் செவ்வாயின் சின்னம் காணப்பட்டால் ஆசைகள் நியாயம் இல்லாமல் இருக்கும். அதிக ஆசைகளுடன் அவற்றை எல்லாம் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணங்களுடன் இருப்பார்கள். உங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் எதிர்காலத்தில் படித்த அறிவாளிகளின் சமூகத்தில் பிரசித்தி பெற்று புகழுடன் இருப்பார்கள். சுக்கிரன் மேட்டில் புதன் சின்னம் இருந்தால் பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டம் இருக்கும். உறவுகளை விட செல்வத்தை அதிகம் சேர்ப்பார்கள். நோக்கத்தில் வெற்றியும் அடைவார்கள்.
சுக்கிரன் மேட்டில் குருவின் சின்னம் காணப்பட்டால் புகழ் மீது ஆசை அதிகம் இருக்கும். புகழுக்காக எதையும் செய்வார்கள். எதிர்காலத்தில் மாளிகை போன்ற வீட்டில் வாசம் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறும். குடும்பத்தை நன்றாக போஷிக்கும் குணம் இருக்கும். பிறர் உங்களின் வாக்கிற்கு கட்டுப்பட்டு இருப்பார்கள். பேச்சில் மட்டும் எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுக்கிர மேட்டில் சுக்கிரனின் சின்னம் காணப்பட்டால் அவர்கள் அதிக சுயநலம் கொண்டு இருப்பார்கள். அவர்கள் ஆசைகள் அனைத்தும் தங்கள் தனிப்பட்ட தேவைகளை பற்றியே சிந்திக்கும்.
பிறரை பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். வாழ்வில் எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்தால் அநேக நன்மைகளை பெறலாம்.
அயர்ச்சியை பார்க்காமல் உழைக்கக் கூடியவர்கள். எதிர்காலத்தில் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுடன் இருப்பார்கள்.
சுக்கிர மேட்டில் சனியின் சின்னம் காணப்பட்டால் பொறாமை குணம் அதிகம் இருக்கும், பிடிவாத குணம் அதிகம் காணப்படும். விருப்பு - வெறுப்புகளுடன் பிறரிடம் சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற் போல பழகுவார்கள். வாழ்க்கையில் சோதனைகள் பல வந்தாலும் கூட அவற்றை எல்லாம் கடந்து வெற்றி பெறுவார்கள். எனினும் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நன்மைகளை கோபத்தால் நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆயுள் தீர்க்கம் உண்டு. பிற்காலத்தில் நிறைய தனம் சம்பாதிப்பார்கள்.
சுக்கிர மேட்டில் ராகுவின் சின்னம் காணப்பட்டால் விரும்பியதை எப்படியாது அடைந்து விட வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்களை இழக்கலாம், சொந்தங்கள், நண்பர்கள் கூட பல சமயங்களில் அவிப்பிராய பேதத்துடன் நடந்து கொள்ளலாம். எனினும் மேற்கண்ட இவற்றை எல்லாம் கடந்து நீங்கள் அநேக விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலத்தில் பிறர் பொறாமைப்படும் அளவிற்கு செல்வ செழிப்புடன் இருப்பீர்கள்.
சுக்கிர மேட்டில் கேதுவின் சின்னம் காணப்பட்டால் அவர்களிடம் தந்திரமும், சாமர்த்தியமும் நிறைந்து காணப்படும். வாழ்வில் அநேக விஷயங்களில் போராடி வெற்றி பெறுவார்கள். எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றலும் காணப்படும். சொத்துக்களை விருத்தி செய்யும் குணத்துடன் இருப்பார்கள். அதிகாரப் பதவி, அரசு ஆதரவு போன்ற நல்ல பலன்களை இந்த அமைப்பு பெற்றுத் தரும்.
செல்பேசி 9965799409






