என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

வெள்ளி விலங்கு ஒடித்த வித்தகன்!
- மனம் வருந்திய வைணவர், இதுவும் செந்தில்நாதனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார்.
- இருவைணவர் வரலாறு சிறந்த சான்றாக கூறப்படுகிறது.
தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இருவைணவர் மீது, தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது.
திருச்செந்தூருக்கு வடக்கே 24 கி.மீ. தூரத்தில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் உள்ளது. அங்கு இரு வைணவர் என்னும் புனைபெயருடன் ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் வடமொழி தென்மொழியில் புலமை பெற்று இனிய தமிழ்ப்பாடல்கள் பாடுவதில் வல்லவராக விளங்கினார். இவர் பெருமாள் மீது ஆழ்ந்த தீவிர பக்தி கொண்டவர். ஆனால் ஆழ்வார்திருநகரியில் நின்று அருள்புரியும் ஆதிநாதக் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என்ற வைராக்கியத்தோடு வாழ்ந்து வந்தார்.
அவரது பாடல்கள் மீது ஆசை கொண்டார் செந்திலாண்டவர். அவரைச் சோதிக்க வேண்டும் என்று கருதி ஒரு நாள் அவர் கனவில் தோன்றினார். எப்படி தோன்றினார் தெரியுமா, ஆதிநாதர்வடிவத்தில் தோன்றினார். அதை பார்த்து இரு வைணவர் பரவசமடைந்தார். ஆதிநாதர் கையிலே வேலாயுதம் இருக்கக் கண்டு திகைத்தார். காட்சியளிப்பவர் முருகப்பெருமானே என தெரிந்து கொண்டார். செந்திலாண்டவர் தம்மைப் பற்றி பாடுமாறு பணித்தார். 'பெருமாளைப் பாடிய வாயால் பெருமானைப் பாட மாட்டேன்' என மறுத்தார் வைணவர்.
தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கிய இருவைணவர் மீது, தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகனுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. இவரை ஆட்கொண்டு அதன்மூலம் பாடல் பெற விரும்பினான். அதனால் முருகப்பெருமான் இவர் கனவில் தோன்றி தன்னைப் பற்றிப் பாடுமாறு மீண்டும் கேட்டுக்கொண்டான். ஆனால், பெருமாளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் மதிக்காத அந்தத் தீவிர இருவைணவர், கனவில் வந்து முருகன் இடையூறு செய்துவிடுவாரோ என்று பயந்து, மறுநாள் தூங்காமலேயே விழித்திருந்தார்.
அதன்பின், தமது இஷ்டதெய்வமான ஆழ்வார் திருநகரி ஆதிநாராயணரிடம், பெருமாளே! நீயே எனக்கு தெய்வம். உன்னை அன்றிச் செந்தில்நாதனை நான் பாடினால் என் கற்புநெறி பிழைபடுமல்லவா? அவ்வாறு ஏற்படாமல் என்னை நீ காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு திரும்பினார்.
மறுநாள் இரவு அந்த வைணவரின் கனவில் பெருமாளே தோன்றினார். சங்கும் சக்கரமும் தாங்கிய கோலத்தில், ஆதிநாராயணர் தோன்றித் திருச்செந்தூர் வேலவனை வழிபடுவதில் உனக்குத் தயக்கம் ஏன்? நீ பேதம் பார்க்க வேண்டாம் என்று கூறினார். கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்த இருவைணவர் மீண்டும் விழித்திருந்து பெருமாள் கோவிலுக்கு ஒடினார்.
அப்போது மூலஸ்தான மூர்த்தியாக விளங்கிய ஆதிநாராயணன், தம் அடையாளங்களாகிய சங்கு சக்கரத்தை மறைத்து, மயிலின் மீது வேலாயுதம் தாங்கிய கரத்தோடு காட்சி தந்தார். தாம் கண்ட காட்சி கனவா நனவா என்று பயந்த இருவைணவர், உற்று நோக்க, மயில் மீது அமர்ந்த வேலவனே காட்சி தந்தார். அதைக் காண விரும்பாத அவர், வீடு திரும்பினார். அவரது மனம் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தது.
உணவு உண்ணாமல் உறக்கமும் இல்லாமல் தவித்துத் தம்மை அறியாமல் அயர்ந்து தூங்கினார். அப்பொழுது மீண்டும் அவருக்கு ஒரு கனவு தோன்றியது. அக்கனவில் ஆதிநாராயணப் பெருமாள் காட்சிதந்தார். இக்காட்சியைக் கண்ட இருவைணவர், மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
நாராயணனை நோக்கி, "உன்னைத் தவிர எனக்கு வேறு தெய்வம் இல்லை என்பதில், நான் உறுதியாக இருக்கின்றேன். இந்நிலையில் தாங்கள் மயில் மீது முருகன் தோற்றத்தில் காட்சி தருவது முறையோ? மனைகள்தோறும் மண்டையோட்டில் பலிகொண்டு உழலும் பித்தனாகிய சுடலையாண்டியின் மகனான பித்தனையா நான் பாடுவது? கோவிந்தனைப் பாடித் திளைத்து நின்ற நான், கோவண ஆண்டியைப் பாடுவது முறையோ? பேயுடன் ஆடி புலித்தோல் உடுத்தித் திரியும் ஒருவனின் மகனையா நான் பாடுவது? "என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் கூறிய நாராயணர், "அன்பரே! திருச்செந்தூர் முருகப் பெருமானை நீ இகழ வேண்டாம். அவனே பரம்பொருள். நாங்கள் அனைவரும் அப்பரம்பொருளின் துணைகொண்டு நிற்கும் சக்திகள். ஈசன் ஒருவனே. அவனே ஆடலால் ஆறுமுகன் தோற்றத்தில் எழுந்தருளியுள்ளான். பிறப்பு, இறப்பு இல்லாத தெய்வமே முருகன். முருகன் வேறு யாருமில்லை. என்னுடைய மருமகன் தான். எனவே, அவனைத் தயங்காமல் பாடுவீராக" என்று கூறக் கனவு மறைந்தது.
இதனால் மனம் வருந்திய வைணவர், இதுவும் செந்தில்நாதனின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார். என்றாலும், முருகனைப் புகழ்ந்து பாடிட அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பாடுவதும், வணங்குவதும் பெருமாளை அன்றி வேறு எவரையும் வணங்குவதில்லை. இதை நான் கற்பு நெறியாகவே வைத்துள்ளேன். ஆனால், இன்றோ எனது திருமாலே என்னைப் பாடச்சொல்லி ஆணையிடுவதால், நான் உயிர் வாழ விரும்பவில்லை என்று முடிவு எடுத்தார். எனவே, இருவைணவர் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், திருநெல்வேலியின் குறுநில மன்னரான வடமலையப்ப பிள்ளையன் ஆழ்வார் திருநகரியில் தங்க நேர்ந்தது. அப்போது அவரது கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றினார். இருவைணவரின் நிலையைக் கூறி, அவரது உயிரைக் காப்பதற்காகப் பொன் விலங்கிட்டுப் போற்றுக என்று கூறி, மறைந்தார்.
உடனே திடுக்கிட்டு எழுந்த மன்னன் வடமலை இருவைணவரின் வீட்டிற்குச் சென்றார். வீட்டின் கதவை உடைத்தார். அப்போது இருவைணவர் உயிரைப் போக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். உடனே வடமலையப்ப பிள்ளை, தமது மார்பில் அணிந்திருந்த பெரிய தங்கச் சங்கிலியால் அவர் கைகளைக் கட்டி விலங்கிட்டார். என்றாலும் அவரை உரிய மரியாதையுடன் நடத்திவருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.
தற்கொலை முயற்சி தவறியதாலும், மன்னனின் அறிவுரையாலும் இருவைணவர் கலக்கம் மறைந்து, தெளிவு ஏற்பட்டது. முருகப்பெருமானின் பெருமையும் புலப்பட்டது. இதனால் திருச்செந்தூர் முருகன் மீது விருப்பம் ஏற்பட்டது.
திருச்செந்தூர் முருகன் மீது பதிற்றுப் பத்தந்தாதி பாடத் தொடங்கினார். அதில் எட்டாவது பாடலைப் பாடும் போது அவரது கையில் கட்டி வைக்கப்பட்ட விலங்கு படீரென உடைந்தது. அந்தப் பாடல்,
செய்வதொன் றறிகிலேன் செழுமென் போதுதாட்
பெய்வதொன் றறிகிலேன் பேதையேன்சுடர்
வைதிகழ் வேற்படை முருக! என்றளை
கொய்தெனக் கிரங்கியாட் கொள்ளவேண்டுமால்
இதைக் கண்ட காவலர்கள், மன்னர் வடமலையிடம் இதுபற்றி கூறினர். உடனே வடமலையும், அந்த இருவைணவரை வணங்கி, அவருக்கு அனைத்து மரியாதைகளையும் செய்து சிவிகையில் ஏற்றித் திருச்செந்தூருக்கு அழைத்து வந்தார். ஒரு நன்னாளில் புலவர்கள் மடாதிபதிகள், சிற்றரசர்கள் நிறைந்திருக்க, சிறைவிடு அந்தாதி என்ற பெயரில் அவர் பாடல்கள் அரங்கேறின.
இந்தப் பாடல், அதன் சிறப்புக் கருதி, அப்பகுதியில் அக்காலத்து அனைத்துத் திண்ணைப் பள்ளிகளிலும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கடவுளான முருகன், புலமை வாய்ந்த தமிழ் எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பெற்றுக்கொள்வதில் பேதம் பார்க்காதவன் என்பதற்கு, இருவைணவர் வரலாறு சிறந்த சான்றாக கூறப்படுகிறது.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.






