என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சனியின் வக்ர பலன்கள் 2025
    X

    சனியின் வக்ர பலன்கள் 2025

    • ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலருக்கு வக்ர கிரகம் குறித்து பல்வேறு கருத்து நிலவுகிறது.
    • பெரிய பாதிப்பு இருப்பவர்கள் சுய ஜாதகத்தை ஒப்பிட்டு உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கவும்.

    சென்ற வாரம் கடகம் ராசிவரை சனி பகவானின் வக்ர பலன்கள் பார்த்தோம். இந்த வாரம் மீதம் உள்ள ராசியினருக்கான பலன்களை பார்க்கலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசிக்கு 6,7ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். கணவன்-மனைவி உறவில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். விவாகரத்து வரை சென்று வழக்குகளில் திருப்பம் ஏற்படும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் அனுகூலமான பலன்கள் உண்டு.

    அஷ்டமச் சனி முழுமையாக முடியும் வரை திருமணம் தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. புதிய கூட்டுத் தொழிலை தவிர்க்கவும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். உடல் நலனில் நிலவிய பாதிப்புகள், மனசஞ்சலம் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையத் துவங்கும். பூர்வீகச் சொத்து மற்றும் பாகப் பிரிவினையில் மாற்றுக் கருத்துக்கள் பேச்சு வார்த்தையில் சீராகலாம். வழக்கம் போல் தொழிலில் நல்ல முன்னேற்றப் போக்கு தென்படும். காப்பீட்டு பணம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் கிடைக்கலாம். மேலும் சுப பலனை அதிகரிக்க தினமும் ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

    கன்னி

    கன்னி ராசிக்கு 5,6-ம் அதிபதியான சனி பகவான் கோச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் ராசிக்கு 7ல் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். நல்ல பலன்கள் ஜாதகருக்கு ஏற்படும். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களின் குணங்கள் மற்றவர்களால் விரும்பக் கூடியதாக, போற்றப் படக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் காரண காரியத்தோடு நன்கு யோசித்துச் செய்ய கூடிய திறன் பெற்றவராக இருப்பீர்கள்.

    யாருடைய உதவியுமின்றி புதியவற்றை கற்றுக் கொள்ளக் கூடிய திறமை இருக்கும். பார்ப்பதற்கு இளமையான தோற்றம் இருக்கும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார்.வெளிநாட்டுப் பயண முயற்சி சித்திக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். மேலும் நன்மைகளை அதிகரிக்க ஸ்ரீ காயத்திரி தேவியை வழிபடவும்.

    துலாம்

    துலாம் ராசிக்கு 4,5ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் ராசிக்கு 6ல் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்திலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் அகலும். வாழ்க்கையை செம்மையாக நடத்த தேவையான ஜீவனங்கள் வரத் துவங்கும். கல்வித்தடை, உற்றார் உறவினர் பகை, டென்ஷன், ஆரோக்கியக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. அரசு வேலை முயற்சி கைகூடும்.

    ஐ.ஆனந்தி

    4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். கடன்களை அடைக்கும் மார்க்கம் தென்படும். இடமாற்றத்தால் ஏற்பட்ட சங்கடங்கள் மாறும். வழக்குகளில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். தலைமறைவாக வாழ்ந்தவர்கள், காணாமல் போனவர்கள், முதியோர் இல்லம் சென்றவர்கள் வீடு திரும்புவார்கள். வீடு, வாகன, தொழில் கடனால் ஏற்பட்ட மனக் கவலைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி நாட்டம் அதிகமாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் நிலவிய தடைகள் அகலும். வீடு கட்டும் பணி துரிதமாகும். பிரிந்த தம்பதிகள் கூடி வாழ்வார்கள். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    விருச்சிகம்

    விருச்சிகராசிக்கு 3,4-ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் தொடர்பான விசயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். காதல் விசயங்கள், எதிர்பாலின நட்பால் அசிங்கம், அவமானம் ஏற்படலாம். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் பாதுகாப்பது நல்லது.

    4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்கும் காலத்தில் உற்றார், உறவினர்கள், குடும்ப உறவுகளுடன் கனிவுடன் பேச வேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான பணிகளை ஒத்தி வைக்கவும். தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயர்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். மாற்றுத்திறனாளிகளின் தேவையறிந்து உதவுவது நல்லது.

    தனுசு

    தனுசு ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் கோட்ச்சாரத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் ராசிக்கு 4ல் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். மிக மோசமான பிரச்சினைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடிய நல்ல நேரம் ஆரம்பமாகி விட்டது. பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள். தாயுடன் தேவையற்ற கருத்து வேறுபாடு வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

    சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றை ஒத்தி வைக்கவும். புதிய தொழில் முயற்சியில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். கண், பல் தொடர்பான பிரச்சினைக்கு வைத்தியம் செய்ய நேரும். சகோதரர்களால் வீண் விரயம் உண்டு. கடன் பெற்று சொந்த வீடு வாங்குவீர்கள். வாழ்க்கைக் துணையுடன் நல்ல புரிதல் உண்டாகும். மறுமண முயற்சி சித்திக்கும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். முன்னோர்கள் வழிபாடு மிக அவசியம்.

    மகரம்

    மகர ராசிக்கு ராசி அதிபதி மற்றும் தன ஸ்தான அதிபதியான சனி பகவான் ராசிக்கு 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். திருமண முயற்சிகள் இழுபறியாகும். எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம்.

    குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். பிறர் பிரச்சினைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகத்திற்கு சென்று வருவதை ஒத்தி வைப்பார்கள். மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. வயதானவர்களின் தேவையறிந்து உதவ வேண்டும்.

    கும்பம்

    கும்ப ராசியின் அதிபதி மற்றும் விரய அதிபதியான சனி பகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். சிலர் தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். பங்குச் சந்தையில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும்.

    ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிப்பார். கடனி்ல இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் தேடி வரும். வீண் விரயங்கள், இழப்புகள், நஷ்டங்கள் குறையும். எதிரிகளின் நெருக்கடி மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கும். புதிய நட்பு வட்டாரங்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். எதிர்பாராத சுபச் செலவு உண்டாகும். வழக்குகள் இழுபறியாகும்.சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.

    மீனம்

    மீன ராசிக்கு லாபஸ்தான அதிபதி மற்றும் விரய ஸ்தான அதிபதியான சனி பகவான் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். ஜென்ம சனியின் தாக்கம் குறையும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும்.

    நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். திருமண முயற்சிகள் முன்னுக்கு பின் முரணாக இருக்கும். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்கள், உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். இதுவரை இருந்த காரியத் தடைகள் நீங்கி குடும்பத்தில் அமைதியான சூழல் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வீடு கட்டுதல், வாங்குதல், சொத்துக்களை விற்றல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தினமும் விலங்குகள் மற்றும் பட்சிகளுக்கு உணவிட முன்னேற்றம் அதிகரிக்கும்.

    ஜோதிடம் பார்க்க வருபவர்கள் பலருக்கு வக்ர கிரகம் குறித்து பல்வேறு கருத்து நிலவுகிறது. பலர் வக்ர கிரகம் என்ன பலன் தரும் என்று அறியாத நிலையிலேயே இருக்கிறார்கள். ஜோதிடம் என்பது ஒரு புரியாத புதிர். அதை புரிந்து கொள்ள முயன்றவர்கள் புரிந்து கொண்டவர்கள் தெளிவாக வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ முடியும். புரியாத பல புதிர்களை அடங்கிய ஜோதிடத்தில் வக்ரகிரகங்களுக்கு பலம் எடுப்பதும் ஒரு சாமானியமான செயல் அல்ல. நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும். ஒருவரின் தொழில் உத்தியோகத்தை நிர்ணயிக்கக்கூடிய சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் தொழில் உத்தியோக ரீதியான வாழ்க்கையை பாதிக்கும் பெரிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. பெரிய பாதிப்பு இருப்பவர்கள் சுய ஜாதகத்தை ஒப்பிட்டு உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கவும். மற்றவர்களுக்கு மேலே கூறிய பரிகாரங்கள் சிறப்பான பலன்களைத் தரும். உரிய பரிகார வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    செல்: 98652 20406

    Next Story
    ×