என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- வீடுபேறு
- உலகத்தில் அமைதி இருக்கவேண்டும்.
- நம்மை சுற்றியுள்ள எல்லா கிரகங்களை பற்றியும் அறிந்திருக்கலாம்.
ஆணும், பெண்ணும் கூடி வாழ்வது இல்லறம். உலக அறிஞர்கள் எல்லாம் மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று கூறுவார்கள். பிறரிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். இனிமையாக பேசவேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆனால் வீடுபேறு பற்றி தமிழன்தான் அறிந்திருக்கிறான். வீடுபேறு என்றால் மரணமில்லாப் பெருவாழ்வு அல்லது மோட்ச லாபம் என்று பொருள்.
மனிதனுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நம்முடைய ஞானிகள். மகான் ராமலிங்க சுவாமிகள் முதல் மகான் அருணகிரிநாதர் வரை, எல்லா ஞானிகளூம் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்..
உலகத்தில் அமைதி இருக்கவேண்டும். உலகத்தில் ஒழுக்கம் இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் எல்லாம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் பேசலாம், சொல்லலாம். உலகத்தை பற்றி அணு அணுவாக ஆராய்ந்திருக்கலாம்.
நம்மை சுற்றியுள்ள எல்லா கிரகங்களை பற்றியும் அறிந்திருக்கலாம். அணுவை பற்றி அறிந்திருக்கலாம். அணுவின் இயக்கத்தை பற்றி அறிந்திருக்கலாம். ரசாயன சேர்க்கை போன்ற விஞ்ஞானங்களை பற்றி பேசலாம்.
விஞ்ஞானிகள் நமக்கு மின்சார விசிறி, டேப்ரெக்கார்டர், கம்ப்யூட்டர், ஏ.சி., பிரிட்ஜ், மிக்ஸி, மாவாட்டுகின்ற மெஷின், துணி துவைக்கின்ற மெஷின் என்று கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் எல்லாம்மனித வர்க்கத்திற்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
அது பாராட்டப்படவேண்டியது. மெய்ஞானத்திற்கு இது தெரியும். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதித்தல் கூடாது. இதற்கும் அதற்கும் பகை இல்லை. நட்புதான்.
விஞ்ஞானம் உடம்பை பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்பை பற்றியும், உடம்பிற்கு நோய் வந்தால் எப்படி குணமாக்குவது என்று விஞ்ஞானம் சொல்லும். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த மருந்துகள் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.
விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட கருவிகளூம் அல்லது மருந்துகளும் மனித வர்க்கத்திற்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அவைகள் மோட்ச லாபம் தருமா என்றால் அவைகள் தராது.
மோட்ச லாபம் என்பது உடம்பிற்குள்ளே சூட்சும தேகம் அல்லது ஒளி தேகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிந்து அந்த ஒளி உடம்பை பெற வேண்டும்.
அந்த ஒளி உடம்பை அறிவதற்கு என்ன செய்யவேண்டும்? ஒரே வழி பக்திதான் என்று சொல்லிவிட்டார்கள். அந்த ஒளி உடம்பை பெற்றவர்கள் தான் வீடுபேறு அல்லது மோட்ச லாபம் அல்லது முக்தி நெறியை அறிந்தவர்கள்.
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
ஒளி உடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்த வேண்டும். அவர்கள் மீது அன்பு செலுத்தவேண்டும் என்பார் ஆசான் வள்ளுவப்பெருமான். பக்தி எதற்கு செலுத்தவேண்டும். மோட்ச லாபம் அல்லது வீடு பேறு அல்லது முக்தி அடைய பக்தி செலுத்தவேண்டும். பக்தி யார் மீது செலுத்துவது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
உலகத்தில் செலுத்துகின்ற பக்தி எல்லாம் அது ஒரு வகையாக இருக்கும். ஒரு சிலர் சிறு தெய்வ வழிபாட்டில் சொல்வார்கள். ஆக அவரவர்களுடைய அறிவிற்கு ஏற்றமாதிரி பக்தி செலுத்துவார்கள்.
எவன் முக்தி பெற்றானோ, எவன்மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்திலும் அழியாக இருக்கிறானோ அவர்களுடைய ஆசியை பெறுவதற்காக அவர்கள் மீது ஞானிகள் பக்தி செலுத்துவார்கள்.
ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்களில் ஒரு பிழை கூட இருக்காது. இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல எல்லாக் காலத்திற்கும் பொருந்தும். எந்தக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு நூலை எழுதி இருக்கிறார்.
என்ன காரணம்? ஆசான் வள்ளுவப்பெருமான் வீடு பேறு அறிந்தவர். மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர். அறியாமையை நீக்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படி ஒரு நூலை எழுத முடிந்தது.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றி எழுதி இருப்பார். வீடு பேற்றைபற்றி சொல்லாமல் சொல்லியிருப்பார்.
ஆசான் வள்ளுவப்பெருமான் பிறவிக்கு காரணமானது எது என்பதை அறிந்தவர். பிறவிக்கு காரணம் எது? இந்த மும்மலமாகிய அறியாமையை உண்டுபண்ணக்கூடிய இந்த தேகம்தான் பிறவிக்கு காரணமாக இருக்கிறது.
ஆக, இப்படிப்பட்ட அறியாமையை உண்டுபண்ணக்கூடிய தேகத்தை நீக்கினால் அது மரணமில்லாப் பெருவாழ்வை பெறும் என்ற ரகசியத்தை ஆசான் திருவள்ளுவர் அறிந்தவர். அதனால்தான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த முனிவராலும் அல்லது எந்த விஞ்ஞானிகளாலும், எந்த அறிஞர்களாலும் புறக்கணிக்க முடியாத, இது தேவையில்லை எறு சொல்ல முடியாத 1330 குறளையும் அமைத்துள்ளார்.
ஆசான் வள்ளுவப்பெருமான் பிறவியை நீக்கியவர். பிறவிக்கு காரணமான தேகத்தை நீக்கியவர். பேதமையை உண்டுபண்ணுவது இந்த உடம்பு. இந்த தேகத்தை அவர் என்ன செய்தார்?
இந்த தேகத்தை பற்றி அறிந்து அந்த தேகத்தி உள்ள மாசை நீக்கினார். இந்த உடம்பிற்கு மாசு எப்படி வந்தது. தாய், தந்தையின் சேர்க்கையினாலும், பெண்ணும், ஆணும் கூடியதால் எடுத்த மும்மலத்தாலான தேகம் இது. களிம்பு அல்லது அசுத்தம் சேர்ந்ததுதான் இந்த தேகம். அழுக்கும் அழுக்கும் சேர்ந்து எடுத்த தேகம் இது. அப்படிப்பட்ட தேகத்தை அறிந்து அதிலிருந்த மாசை நீக்கினார்.
இந்த உடம்பில் உள்ள அழுக்கை அல்லது மாசை அல்லது மும்மல குற்றத்தை நீக்கியவர் ஆசான் வள்ளுவப்பெருமான். மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்று சொல்லப்பட்ட இந்தமும்மல கசடை நீக்கியதால் இனி அவர் பிறக்கமாட்டார். பேதமையை நீக்கியவர். பேதமையை அல்லது அறியாமையை அல்லது தன்னை பற்றி புரிந்துகொள்ள முடியாத பலகீனத்தை உண்டுபண்ணக்கூடியது இந்த உடம்பு. இதுதான் இயற்கை. இயற்கையின் அமைப்பே இப்படித்தான் உள்ளது.
பேதமையாகிய அறியாமை அல்லது மும்மலம் எப்படி வந்தது? பசியினால்தான் மும்மலம் வந்தது. மும்மலத்தை உருவாக்குவது பசி. தாய், தந்தையின் மும்மலத்தால் அல்லது மல, ஜல, சுக்கிலத்தால் அல்லது மல, ஜல சுரோணிதத்தால் தாய், தந்தையினுடையெ களிம்பு தேகத்தால் வந்ததுதான் இந்த தேகம். இதை அறிந்து கொண்டான்.
பசியை அறிந்தான். பசியை அறிந்து அந்தப் பசிதான் உடம்பு வளர்வதற்கு காரணமாக இருக்கிறது என்பதை அறிந்தான். பசிதான் இந்த உடம்பை வளர்க்கிறது. பரிணாம வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதும் பசிதான். அதை அறிந்து வென்றுவிட்டான்.
பசியை எப்படி வென்றான்? உடம்பினுள்ளேயே ஒருவகையான உஷ்ணத்தை உண்டு பண்ணினான். இந்த புற உடம்பு கழிய கழிய புற உடம்பு என்று சொல்லப்பட்ட மாசு தேகம் அல்லது அசுத்த தேகம் அல்லது அழுக்கு தேகம் நீங்க நீங்க உள்ளே ஒரு ஜோதி தோன்றுகிறது. உள்ளே ஒரு உஷ்ணம் தோன்றுகிறது. அந்த உஷ்ணத்தின் துணை கொண்டுதான் புற உடம்பை நீக்கினான்.
மும்மல சேறு நீங்கியது. களிம்பு நீங்கியது. அது நீங்க, நீங்க ஒரு ஒளி உடம்பு உண்டாகிறது. அமிழ்தபானம் சாப்பிடுகிறான். அந்த அமிழ்தபானம் சாப்பிடும்போது பசி அற்றுப்போகிறது. அதுவே பசியை நீக்குகிறது.
எந்த உடம்பில் உஷ்ணம் இருக்கிறதோ, அந்த உடம்பில் பசிக்கு காரணமாக இருப்பது அதே வெப்பம்தான்.
அந்த வெப்பத்தின் துணை கொண்டு உள்ளே முறையோடு, வகையோடு உஷ்ணத்தை ஏற்றினால் இந்த உடம்பிற்குள்ளேயே அமிழ்தபானம் சிந்தும் என்பார். அந்த அமிழ்த பானத்தை உண்ணுகின்ற மக்கள்தான் பிறவியற்றுப்போவார்கள்.
மகான் மஸ்தான்,
ஆடிய கூத்தினைப் போற்றி - அருள்
ஆனந்த்ஞ் சேரர்க்கு அருளினிற் றோற்றி
ஓடிய காற்றினை யேற்றி - அதில்
உருகியொழுகும மிர்தத்தை தேற்றி.
(மகான் மஸ்தான் சாகிபு-ஆனந்தக்களிப்பு- கவி எண் 13)
-என்பார். ஆக உடம்பில் உள்ள கனலை கபாலத்தில் ஏற்றி அதன் மூலமாக அமிழ்தபானத்தை உண்ணுகின்ற மக்களுக்குப் பசி இருக்காது. பசி அற்றுப்போனதால் தேகத்தில் உள்ள மலக்குற்றம் நீங்கும். மலக்குற்றம் நீங்கினால் உடம்பின் உள்ளே ஜோதி தோன்றும்.
இப்படிப்பட்ட வரம் பெற்றவர்கள்தான் ஞானிகள். இவர்கள் எதையும் செய்வார்கள். அவர்கள் வல்லமைக்கு ஈடே கிடையாது. இதை ஆசான் வள்ளுவப் பெருமான் சொல்லுவார்,
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
-திருக்குறள்-தவம்-குறள் எண் 269.
என்பார். ஆசான் அகத்தீசர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலதேவர் போன்றஞானிகள் மீது அன்பும், பக்தியும் செலுத்தினால் அவர்கள் பக்தி செலுத்தியவனுக்கு மேலான் இந்த அறிவை தருகிறார்கள்.
வாசி வசப்படச் செய்து ஓடுகின்ற காற்றை புருவமத்தியில் செலுத்தி, அதன்மூலமாக கனலை ஏற்றச் செய்து, அந்தக் கனல் மூலமாக இந்த உடம்பில் இருக்கிற கசடை நீங்க செய்து அதன் மூலமாக் அமிழ்தபானத்தை ஊட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட செயலை ஞானிகள்தான் செய்ய முடியும். ஞானிகளின் திருவடியை பற்றினால்தான் அந்த உண்மையை உணர்த்துவார்கள். அப்படி உணர்த்தினால்தான் மலக்கசடு, பேதமை நீங்கும்.
நமக்கு அறியாமையை உண்டுபண்ணுகின்ற கசடு நீங்கும். இதை ஆசான் வள்ளுவப்பெருமான் 'சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின்' என்பார்.
சார்பு உண்ர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றால், எல்லா உயிரையும் சார்ந்திருப்பது மும்மலம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தை அல்லது அசுத்த தேகத்தை உணர்த்துவார்.
எல்லா உயிரையும் நரகத்திற்கு தள்ளக்கூடிய மும்மலத்தை உணர்ந்து அதை நீக்க கற்றுக்கொண்டால், மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்- மீண்டும் இவனை அழித்து, மீண்டும் மீண்டும் இவனுக்கு பிறவியை உண்டாக்கி இவனை மறுபடியும் அழிக்கும். இந்த உடம்பிற்கு மரணம் வந்து இவன் மீண்டும் பிறக்கமாட்டான் என்பார்.
இதை ஆசான் வள்ளுவப்பெருமான்,
சார்புஉணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
(திருக்குறள் - மெய் உணர்தல் -
குறள் எண் 359)
என்கிறார். இந்த நிலைகள் எல்லாம் யோகிகளுக்கு மட்டும் தெரியும். யோகிகள் மீது பக்தி செலுத்தினால் சொல்லுவார்கள். இந்த ரகசியத்தை அறிந்தவர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெறலாம் என்கிறார் திருவள்ளுவர்.
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.
(திருக்குறள் - மெய் உணர்தல் -
குறள் எண் 357)
ஓர்த்து-ஆராய்ந்து, உள்ளது உணரின் - உண்மைப்பொருளை உணர்ந்தால், ஒருதலையாப் - ஒருதலைப்பட்சமாக, உள்ளது உணரின் - அப்படி ஆராய்ந்து உணரப்பெற்றால்
ஒருதலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு - மீண்டு பிறக்க அவசியம் இல்லை. நீ சாகமாட்டாய் என்கிறார் திருவள்ளுவர்.
இதில் இப்படி ஒரு மர்மம் இருக்கிறது. இதை பெறுவதற்கு ஞானிகள் என்ன செய்தார்கள்? தினம் தினம் தலைவனை(இறைவனை) பூஜை செய்து ஆசிபெற்றார்கள். அவர்கள் எப்படி பூஜை செய்கிறார்கள்?
உலக நடையில் இருக்கும் மக்களை போல பூஜை செய்ய மாட்டார்கள். ரகசியமாய் உட்கார்ந்து தியானம் செய்வார்கள். யாரை நினைத்து தியானம் செய்யவேண்டும்? இப்படிப்பட்ட் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற ஞானிகளை நோக்கி தியானம் செய்யவேண்டும்.
ஓம் அகத்தீசாய நம, ஓம் நந்தீசாய நம, ஓம் திருமூல தேவாய நம, ஓம் கருவூர் தேவாய நம என்று சொல்லி நாம ஜெபம் செய்கிறார்கள்.






