என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தயிர் நம் அனைவருக்கும் உயிர்!
    X

    தயிர் நம் அனைவருக்கும் உயிர்!

    • பல்வேறு நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.
    • சிறு வயதில் இருந்தே தயிரை பழக்கப்படுத்துங்கள்.

    தயிர், ஈடு இல்லாத, ஏராளமான சத்துகள் நிறைந்த, ஒர் எளிய உணவு. இன்று பல குழந்தைகளும் தயிர் என்றாலே முகத்தை சுளிப்பதும் தயிரே சாப்பிடாமல் வளர்வதையும் சகஜமாக பார்க்க முடிகிறது. தயிர் வாசம் பிடிக்கவில்லை. புளிப்பாக இருக்கிறது என்று ஏதேதோ காரணங்கள். அதையும் மீறி சாப்பிட்டாலும் வீட்டில் உறைய வைக்கும் தயிர் அவர்களுக்கு சிறிது கூட பிடிப்பதில்லை. கடைகளில் விற்கும் டப்பா தயிரைத் தான் விரும்பி உண்ணுகின்றனர்.

    இது சரியா தவறா? நல்லதா கெட்டதா? முதலில் தயிரால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம் வயதானவர்களுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு முக்கியமாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் பொழுது தயிர் சோறு அல்லது மோர் சாதத்தை முக்கியமான உணவாக கொடுப்பது நம்முடைய பழக்கம்.

    இதற்கு காரணம் தயிரில் உள்ள புரோபயாடிக் என்று சொல்லக்கூடிய லாக்டோபசிலஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் தான். செரிமானத்திற்கு மட்டுமல்லாது குடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மற்ற கெட்ட பாக்டீரியாக்கள் உடலை தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்கிறது . இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

    இதில் உள்ள சத்துகளான புரதம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நம் உடலுக்கு பலவிதத்திலும் தேவைப்படுகின்றன. தயிரில் உள்ள முக்கியமான ஒரு அமினோ அமிலம் டிரிப்டோப்பேன் என்பதாகும். 100 கிராம் தயிரில் 50 மில்லி கிராம் என்ற அளவில் இது உள்ளது. இந்த அமினோ அமிலத்தை நம் உடலால் தயாரிக்க முடியாது. வெளியில் இருந்து தான் உடலுக்கு கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.

    முக்கியமாக குழந்தைகளின் நல்ல தூக்கத்திற்கு, அமைதியான மனநிலைக்கு, மூளை வளர்ச்சிக்கு இந்த அமினோ அமிலம் முக்கியமானது. அதனால் தினமும் தயிர் சாதம் குழந்தைகளுக்கு சேர்த்து தரும்பொழுது குழந்தையினுடைய உடல், மனம் மற்றும் மூளை வளர்ச்சி சீராக இருக்கும். எனவே அனைவரும் தயிர் சாப்பிடலாம் குழந்தைகள் தினமும் தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறு வயதில் இருந்தே தயிரை பழக்கப்படுத்துங்கள். பல குழந்தைகள் சிறு வயதில் எடுத்துக் கொள்ளாவிட்டால் பெரியவர்கள் ஆனபோதும் தயிரை புறக்கணிப்பர்.

    வீட்டில் தயிர் எப்படி தயாரிப்பது?

    பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து, அதில் பழைய மோரை சிறிது ஊற்றி நன்கு கலந்து வைப்பார்கள். வெயில் காலங்களில் ஆறு மணி நேரத்திலேயே தயிர் தயாராகிவிடும். மழை மற்றும் குளிர்காலங்களில் சிறிது கூடுதல் நேரம் எடுக்கும். தண்ணீராக இருக்கும் பாலானது, கெட்டியாக தயிராக உறைந்து போயிருக்கும். அவ்வளவுதான் தயிர் ரெடி. தயிரை எப்பொழுதும் காலையில் உறைய வைத்து மதியம் எடுத்துக் கொள்ளும் போது புளிப்பு தன்மை குறைவாக இருக்கும். உடலுக்கும் மிகவும் நல்லது.

    தயிர் கொடுத்தால் சளி பிடிக்கும் என்று குழந்தைகளுக்கு தயிர் கொடுப்பதை தவிர்ப்பார்கள். அவர்களுக்கு நான் முக்கியமாக சொல்லிக் கொள்வது என்னவென்றால் புதியதாக உறைய வைத்த ஃப்ரிட்ஜில் வைக்காத தயிரை நேரடியாக குழந்தைகளுக்கு சிறு கரண்டியை வைத்து ஊட்டலாம்.

    பகல் நேரத்தில் கொடுங்கள். கட்டாயமாக கொடுங்கள். ஜீரண சக்தியை மேம்படுத்தும். குழந்தையினுடைய மூளை வளர்ச்சியை மேம்படுத்தும்.

    சைனஸ் எனப்படும் காது மூக்கு தொண்டை பகுதியில் அலர்ஜி அதிகமாக இருக்கக்கூடிய ஒரு சிலருக்கு மட்டுமே தயிர் ஒத்துக் கொள்ளாது.

    அவர்கள் வேண்டுமானால் தவிர்த்துக் கொள்ளலாம் 20 வருடங்களுக்கு முன்னாள் தயிர் வெளியில் இருந்து வாங்குவர், கிராமங்களில் தலையில் மண் சட்டியில் அழகாக தயிர் உடையாமல் லாவகமாக சுமந்து வருவர். மண் சட்டியில் உறைய வைத்த தயிரை தேங்காய் மூடி அகப்பையால் அழகாக எடுத்து ஊற்றுவர். அதிலும் எருமைத்தயிர், பசுந்தயிர் என்று தனித்தனியாக பிரித்து வைத்திருப்பர். குழந்தைகளுக்கு பசுந்தயிரைக் கொடுப்பர்.

    ஜெயஸ்ரீ சர்மா

    மாடுகள் நிறைய இருக்கும் கிராமப்புறங்களில் இது போன்ற சுத்தமான தயிரை நாம் சுவைக்கலாம். டப்பா தயிர் - இது தொழிற்சாலைகளில் பெரிய அளவில் தயாரிக்கப்படும். ஒரே மாதிரியான பாக்டீரியா கலவைகளை கலந்து தயிர் தயாரிக்கிறார்கள். இவ்வாறு தயாரிக்கப்படும் தயிர் ஒரே மாதிரியான அடர்த்தியுடனும் கெட்டியாகவும் தண்ணீர் குறைவாகவும் புளிப்பு சுவை குறைவாகவும் இருக்கும். இதையே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் இது போன்ற ஒரே மாதிரியான தயிரை உண்டாக்குவதற்கு அவர்கள் சில செயற்கைப் பொருட்களையும் சேர்க்க வேண்டி இருக்கும்.

    கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயண சேர்க்கை நடைபெறும். ஏற்கனவே ஏகப்பட்ட ரசாயணத்தை அறிந்தும் அறியாமலும் நாம் நம் உடலுக்குள் திணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தெரிந்த இந்த ரசாயண சேர்க்கையை தவிர்க்கலாம்தானே. இது எதுவுமே சேர்க்காத வீட்டுத்தயிரில் இருக்கும் நன்மைகளை உணர்ந்து வீட்டு தயிரையே பயன்படுத்துங்கள். எங்காவது பயணம் செய்யும்பொழுதும் நேரமில்லாத போதும் மட்டும் டப்பா தயிர் வைத்துக் கொள்ளுங்கள்.

    சமையல்:

    நம் வீடுகளில் தயிர் குழம்பு அல்லது மோர் குழம்பு என்று செய்வார்கள். அது போலவே சில உணவுப் பொருட்களை மோரில் ஊறவைத்து மேரினேசன் என்று கூறுவதை செய்யும்பொழுது அந்த உணவு மென்மையாகவும் மாறுவதை காணலாம். அதுபோல வெள்ளரிக்காய், வெங்காயம் தக்காளி போன்றவற்றை தயிருடன் சேர்த்து செய்யும் ரைத்தா மிகவும் பிரபலமானது. அதனுடைய சுவை மிகவும் அருமையாக இருக்கும் உடலுக்கும் நல்லது.

    அழகுக்காக இரவில் சிறிது தயிரை எடுத்து முகத்தில் நன்றாக பூசிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். மிகச்சிறந்த தோலுக்கான ஃபேஸ் பேக்காக இருக்கும். இன்னும் ஒரு சில வயதானவர்கள் தயிரை தலையில் தேய்த்து குளிப்பார்கள். தயிரில் உள்ள வெண்ணை தலைமுடிக்கு ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தயிரை தயிராக சாப்பிடமுடியாதவர்கள் மோராக, லஸ்சியாக கூட சாப்பிடுங்கள் முழுப்பலன் இல்லாவிட்டாலும் முக்கால் பலன் கிடைக்கும். இப்படி பிறந்தது முதல் நம் வாழ்க்கையில் பயன்படும் தயிர் நம் அனைவருக்கும் உயிர் என்பதை உணர்ந்து அதை நம் உணவில் வாழ்வில் அங்கமாக்கிக் கொள்வோம்.

    வாட்ஸ்அப்: 8925764148

    Next Story
    ×