என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆயிரம் முறை கோவிலுக்குச் சென்ற பலனை தரும் கும்பாபிஷேக தரிசனம்
- தெய்வச் சிலைகளும் கலசங்களும் இந்த மந்திர நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு புதிய சக்தி பெறும்.
- கும்பாபிஷேகம் பெரும் பொருட்செலவில் நிகழ்த்தப்படும் ஓர் ஆன்மிக வைபவமாகும்.
கூட்டம் அலைமோதும் கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர்க் கோவில் உண்மையிலேயே அலைமோதும் கோவில். அது அலைகள் வந்து மோதும் கடலோரத்தில் அமைந்துள்ளது. சுனாமியின் போதும் தாக்கப்படாமல் நிலைநின்ற பெருமை பெருமையுடையது.
பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இத்திருக்கோவில் ஜூலை ஏழாம் தேதியன்று கும்பாபிஷேகம் காண்கிறது.
கோவிலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தெய்வ சக்தியைப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சில சடங்குகளின் மூலம் புதுப்பிப்பது வழக்கம். அந்தச் சடங்குகளின் தொகுப்பே கும்பாபிஷேகம் அல்லது குடமுழுக்கு எனப்படுகிறது.
புனித நீரைக் கலசங்களில் வைத்து மந்திர விற்பன்னர்கள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை ஜபிப்பர். மந்திர உச்சாடனங்கள் மூலம் கலச நீர் மந்திர சக்தி நிறைந்ததாக மாறும்.
பின்னர் அந்தப் புனித நீர் மூலம் தெய்வச் சிலைகளையும் கோவில் மேல் உள்ள கலசங்களையும் நீராட்டுவர். தெய்வச் சிலைகளும் கலசங்களும் இந்த மந்திர நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு புதிய சக்தி பெறும்.
கும்பாபிஷேக நன்னீரை பக்தர்கள் மேலும் தெளிப்பர். அந்தப் புண்ணிய தீர்த்தம் மேனியில் பட்டால் பல பிறவியில் செய்த பாவங்கள் எல்லாம் அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.
ஆயிரம் முறை கோவிலுக்குப் போய் வழிபட்டு அடையும் பலனை விட, ஓர் ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டால் கிடைக்கும் பலன் அதிகம் என்று சொல்வதுண்டு.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த கும்பாபிஷேகத் திருவிழாவைக் காண்பதென்பது எளிதில் கிடைக்கும் வாய்ப்பல்ல. புண்ணியசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியமாகும்.
திருச்செந்தூர்க் கோவிலில் நடைபெறும் இந்தக் கும்பாபிஷேகத்தைத் தவறவிட்டால், மறுபடி அதை தரிசிப்பதற்குப் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஆலயங்களில் நடைபெறும் விசேஷங்களில் கும்பாபிஷேகம் மிக முக்கியமானது. கும்பாபிஷேகத்திற்கென்றே நிகழ்த்த வேண்டிய வேள்விகள் உண்டு. அந்த வேள்விகளை நிகழ்த்துவதில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அதை நிகழ்த்த உரிமையுடையவர்கள்.
வேள்விகளை நிகழ்த்துவதற்காக வேள்விச் சாலைகள் கோயிலில் அமைக்கப்படும். வேள்விச் சாலைகளை எப்படி அமைக்க வேண்டும், அதன் வடிவமைப்பு, அகல நீளங்கள் இவை பற்றியெல்லாம் சட்ட திட்டங்கள் உண்டு. கும்பாபிஷேகம் பெரும் பொருட்செலவில் நிகழ்த்தப்படும் ஓர் ஆன்மிக வைபவமாகும்.
கும்பாபிஷேகம் குறித்த முகூர்த்தத்தில் நிகழ்ந்த பிறகு, நாற்பத்தெட்டு நாட்கள் அதாவது ஒரு மண்டலம், மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறும்.
பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகத்தன்று நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள் மண்டலாபிஷேகம் நிறைவடைவதற்குள் சென்று கோயிலை தரிசித்தாலும், கும்பாபிஷேகத்தன்று தரிசித்த அதே பலன் உண்டு.
திருச்செந்தூர் முருகன் ஆலயம், முருகனின் ஆறு படைவீடுகளில் இரண்டாம் படைவீடு.
`தேவர் படைத்தலைமைப் பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல்கிழித்து
கோவில்கொண்டே அமர்ந்த ஒருவீடு கடல்
கொஞ்சும் செந்தூரிலுள்ள படைவீடு'
என இக்கோவிலைப் போற்றுகிறார் கவியரசர் கண்ணதாசன். திருச்செந்தூர் முன்னர் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டது.
திருப்பூர் கிருஷ்ணன்
சூரபத்மனை வதம்செய்ய வேண்டிப் படைகளுடன் சென்ற முருகன், திருச்செந்தூரில்தான் தங்கினான். இங்கிருந்துதான் தன் படைத்தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூதனுப்பினான். அவன் சமாதானத்திற்கு உடன்படாததால் படைகளுடன் இங்கிருந்து புறப்பட்டுச் சென்று சூரனை வதம் செய்தான்.
உண்மையில் சூரபத்மன் வதம் என்பது அவனை முற்றிலும் அழித்துச் செய்த வதம் அல்ல. பிற தெய்வங்கள் அசுரர்களை முழுவதுமாக அழித்த புராணங்கள் பல உண்டு.
ஆனால் முருகனோ சூரபத்மனை அழிக்காமல் அவன் பகைமை உணர்வை மட்டுமே அழித்து அவன் உருவத்தை மாற்றினான்.
மரமாக நின்ற சூரபத்மனைத் தன் வேலால் இருகூறாக்கினான். மரத்தின் ஒரு பகுதி மயிலாக மாற அதைத் தன் வாகனமாகக் கொண்டான். இன்னொரு பகுதி சேவலாக மாற அதைத் தன் கொடியாகக் கொண்டான்.
முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே முருகனைப் பற்றிய குறிப்பு உண்டு. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகக் கடவுளைத்தான் போற்றுகிறார்.
பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல்.
இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. `திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்` என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர். பகழிக் கூத்தர் முருகக் கடவுளைக் குழந்தையாக்கி, தாலாட்டுப் பாடி முத்தம் தருமாறு வேண்டி, நிலவைக் காட்டிச் சோறூட்டி என இன்னும் பல வகைகளில் பக்திப் பரவசத்துடன் பாடுகிறார். திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் முத்திரை பதிக்கிறது.
பகழிக் கூத்தர் பிறப்பால் வைணவர் என்றும் ஆனால் பெரும் முருக பக்தராக விளங்கினார் என்றும் கூறுவர்.
கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்ட இவர், வயிற்றுவலி திருச்செந்தூர் முருகன் அருளால் நீங்கினால் முருகனைப் பற்றிப் பிள்ளைத் தமிழ் பாடுவதாக வேண்டிக் கொண்டார். அவ்வண்ணமே வயிற்றுவலி நீங்கியதும் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் இயற்றினார்.
பிள்ளைத் தமிழ் இலக்கிய வரிசையில் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் போல, பகழிக் கூத்தரின் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழும் பெரும் புகழ்பெற்றது.
திருச்செந்தூர்க் கோவிலில் புலவர்கள் முன்னிலையில் இந்தப் பிள்ளைத் தமிழ்நூல் அரங்கேற்றப்பட்டது. நூற்றிமூன்று பாடல்கள் நிறைந்த இந்நூல் சொற்சுவை பொருட்சுவை இரண்டும் நிறைந்தது.
எனினும் பொறாமைக் காழ்ப்பின் காரணமாகப் பிற புலவர்கள் இந்நூலை உரிய வகையில் அங்கீகரிக்கவில்லை. அதையறிந்த முருகன் தன் கழுத்தில் இருந்த மாணிக்க மாலையை பகழிக்கூத்தர் உறங்கும்போது அவர் மார்பில் அணிவித்து மறைந்தான்.
மறுநாள் பகழிக்கூத்தர் கழுத்திலிருந்த மாணிக்க மாலை பற்றிக் கேள்வி எழுந்தபோது நான் அளித்த பரிசே அது என முருகன் அசரீரிக் குரல் எழுப்பினான். வியந்த மற்ற புலவர்கள் அதன்பின் பகழிக் கூத்தரின் பெருமையுணர்ந்து அவரைப் பல்லக்கில் சுமந்து சென்று மரியாதை செய்தனர்.
வென்றிமாலைக் கவிராயர் என்ற புலவர் திருச்செந்தூர்த் தலபுராணத்தைச் செய்யுள் நூலாக எழுதியுள்ளார். ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைத் திருச்செந்தூர் முருகனோடு இணைத்து அந்நூல் பேசுகிறது.
ராமனும் சீதையும் இலக்குவனும் குகனைப் பிரிந்து கானக வாழ்வு வாழச் சென்றார்கள். பெரும் மன வேதனை அடைந்த குகன் உண்ணாமலும் உறங்காமலும் உடல் நலிந்தான்.
தனது வேட்டுவக் குலத்தைச் சேர்ந்த குகன் அவ்விதம் வருந்துவதைக் கந்தலோகத்தில் இருந்த வள்ளி அறிந்து வருந்தினாள்.
வள்ளி சீதையாகவும் தெய்வானை இலக்குவனாகவும் முருகன் ராமனாகவும் மாறுவேடம் தரித்து மயில்மேல் கானகம் வந்தார்கள். பின் குகனைச் சந்தித்தாள் சீதையாக வேடம் புனைந்த வள்ளி.
குகன் சரிவர உடல்நலத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் பதினான்கு ஆண்டுகள் கழித்து ராமபிரான் பட்டாபிஷேகம் செய்துகொண்டு மன்னனாகும்போது குகன் உடல்வலிமை மிக்க தளபதியாக ராமனுக்குத் துணை நிற்க வேண்டும் என்றும் வள்ளிச்சீதை குகனிடம் கட்டளையிட அவன் அதை ஏற்றுக் கொண்டான்.
அதன்பின் முருகன் வள்ளி தெய்வானை ஆகியோர் மீண்டும் கந்தலோகம் சென்று தங்களின் சுயவடிவை அடைந்தார்கள் என்று கூறுகிறார் வென்றிமாலைக் கவிராயர்.
ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனை வழிபட வந்தார். அங்குதான் முருகன் சன்னிதியில் அவர் `சுப்ரமண்ய புஜங்கம்` என்ற சம்ஸ்க்ருத சுலோகத்தை அருளினார்.
அவர் முருகனை தரிசித்த நேரத்தில் கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு வளைந்து வளைந்து சென்று வெளியேறியது.
அந்தக் காட்சியைக் கண்ட சங்கரர் அதையே முருகன் கட்டளையாக ஏற்று பாம்பு வளைந்து வளைந்து போவதுபோன்ற சந்தத்தில் `ஸதாபால ரூபாபி` என்று தொடங்கும் சுலோகத்தை இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகன் சன்னிதிக்கு எதிரேயுள்ள தூண்களில் ஒரு தூணில் ஆதிசங்கரர் உருவம் செதுக்கப் பட்டுள்ளது.
பாலன் தேவராயன் அருளிய கந்த சஷ்டி கவசம் திருச்செந்தூர் முருகனைப் போற்றித்தான் எழுதப்பட்டது என்றொரு கருத்து உண்டு. திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் கந்தசஷ்டி கவசம் முழுவதும் சுவரில் எழுதி வைக்கப் பட்டுள்ளது. அடியவர்கள் அதைப் படித்தவாறே ஆலயத்தை வலம் வரலாம்.
முருகனின் கையில் உள்ள ஆயுதம் வேல். மற்ற கடவுளரின் திருக்கரங்களில் உள்ள சூலம், சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்கள் கடவுளரின் நாமங்களோடு அல்லாமல் தனித்த முறையில் பெயர்களாக அமைவதில்லை.
ஆனால் முருகன் கரத்திலுள்ள வேல், அப்படியே நம்மில் பலருக்குப் பெயராக அமைவது இந்த வேலின் தனிச் சிறப்பு.
வேலாயுதம், சக்திவேல், கந்தவேல், வடிவேல், ஞானவேல், தங்கவேல் என்றெல்லாம் நம் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டி மகிழ்கிறோம் நாம். பகைவனையும் கொல்லாது மயிலாகவும் சேவலாகவும் ஆக்கிய வேலாயுதத்தின் மேல் முருகன் அடியவர்கள் மிகுந்த பக்தி செலுத்துகிறார்கள்.
பழந்தமிழ் இலக்கியங்களிலேயே புகழப்படுவதும் மிகப் பழைமை வாய்ந்ததும் நக்கீரர், ஆதிசங்கரர் போன்றோரால் போற்றப் படுவதுமான திருச்செந்தூர்த் திருக்கோயில் கும்பாபிஷேகம் என்பது ஆன்மிக அடியவர்கள் தவறவிடக் கூடாத மாபெரும் விழாவாகும்.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com