என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் ஊட்டம் தரும் கோதுமை பால்
    X

    உடல் ஊட்டம் தரும் கோதுமை பால்

    • கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம்.
    • நாம் உண்ணும் உணவை முறையாகச் செரித்தால் ரத்தத்தில் ஏறும் சர்க்கரை சட்டென்று ஏறாது.

    இத்தொடரின் ஆரம்பப் பகுதியில் சொன்னது போல அமெரிக்காவில் இருந்து தான் தமிழகத்திற்குக் கோதுமை அறிமுகமானது. ஒன்றிரண்டாக உடைத்த புழுங்கல் கோதுமையைச் சோறாகவே சமைத்துப் பள்ளி மாணவர்களுக்குப் போடுவார்கள். புழுங்கல் கோதுமை செரிக்கச் சற்றுக் கடினம். ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இன்றைப் போல உணவு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கிற உணவு எதை உண்டாலும் செரித்து விடும். அன்றைக்கு உணவுப் பற்றாக்குறை இருந்தாலும் கிடைக்கிறவை அனைத்துமே சத்துக்கள் மிகுந்ததாக இருந்தன. இன்றோ உணவென்று எது கிடைத்தாலும் உடலுக்கு இழைக்கும் கேடு, குறைந்ததாக இருக்குமா என்றே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

    அந்தளவிற்கு நம்முடைய நிலம் இரசாயனங்களால் கேடுவிளைவிக்கப்பட்டுள்ளது. பயிரை விளைவிக்கவும், விளைச்சலை பெருக்கவும் நிலத்தில் கொட்டும் உரம் போதாதென்று களைக் கொல்லி, பூச்சிக்கொல்லி என மீண்டும் மீண்டும் இரசாயனத்தெளிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுபோக சமைக்கத் தயார்நிலைக்குப் பொட்டலமிடும் உணவு ஆலைகள் உணவுப் பொருட்கள் கெட்டு விடக்கூடாதென்பதற்காக பூச்சிப் பிடித்து விடக்கூடாதென்பதற்காக சேர்க்கும் ரசாயனப் பொடிகள் ஒருபுறம். உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் குடோன்களில் எலி, பூச்சித் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க வீர்யமிக்க இரசாயன உருண்டைகளை சேமிப்பிடங்களில் வைக்கிறார்கள். இவையும் உணவுத் தானியத்தின் இயல்பான சத்துகளைக் கெடுத்து விடுவதோடு நச்சாகவும் மாற்றி விடும். எனவே முடிந்தளவு முழுத்தானியங்களை அரைத்து ஒன்றிரண்டு நீரில் அலசிக் காயவைத்து நாம் சமைப்பதற்கேற்ற வகையில் உடைத்தோ அரைத்தோ வைத்துக்கொண்டு சமைப்பதே நல்லது.

    கோதுமையை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்து அப்படியே சாப்பிடலாம். அதையே காய்ச்சினால் கெட்டியாக அல்வா போலத் திரளும். இதனை அப்படியே களிக்கு தொட்டுக் கொள்வதைப் போல கருப்பட்டித் தொட்டு சாப்பிடலாம். கைகால் இணைப்பு மூட்டுக்களில் வறட்சி நிலவுமானால் இந்தக் களி உடனடிப் பலன் கொடுக்கும். சிலருக்கு கால் மடக்கி உட்கார்ந்து எழுந்தாலே சடக்கென்று சத்தம் வரும். நடக்கும்போது மூட்டுக்கள் பலமின்றி துவளும். அப்படிப் பிரச்சனை உள்ளவர்களுக்கு கோதுமைப்பால் களி நல்ல பலத்தைக் கொடுக்கும்.

    காய்ச்சல் கண்டவர்கள் ஒருவாரம் பத்துநாட்கள் படுத்து எழுந்தால் உடல் முழுதும் வற்றி பலவீனமாகக் காணப்படுவார்கள். சளிக்காய்ச்சலுக்கு எடுக்கும் மருந்துகள் கூட அதீத வெப்பத்தை உடலில் உருவாக்கி சதையை உருக்கி விட்டிருக்கும். அவர்களுக்கும் இந்த கோதுமைப்பால் களி இழந்த சதையை மீட்டு உடலை மினுமினுப்பாக்கும்.

    இன்றளவும் கிராமப்புறங்களில் பிள்ளைப் பேறு முடிந்தவுடன் இளந்தாய்மார்களுக்கு இழந்த ஆற்றலை மீட்க வெந்தயக்களி கொடுப்பதுண்டு. அதற்குக் காரணம் உடலின் நீரிழப்பையும், சத்திழப்பையும் உடனே ஈடுசெய்வதற்காகும். அதுதரும் பலனையே கோதுமைப் பால் களியும் கொடுக்கும். உடலில் சத்து பற்றாத குழந்தைக்கும் கோதுமைப் பால்களி கொடுக்கலாம்.

    கோதுமையை ஊறவைத்து முளைகட்டும் பக்குவத்தில் மண்ணில் தூவி மூடி விட்டால் சுமார் பத்துநாட்களில் இரண்டு மூன்று அங்குலத்தில் கோதுமைப் புல் வளரும். இதனை அறுத்து அருகம் புல் சாற்றுக்கு அரைப்பது போல அரைத்து வடிகட்டிக் குடித்தால் உடலின் உயிர்ச்சத்துக்கள் அதிகரிக்கும். கல்லீரல் பலம் குன்றிய நிலையில் கோதுமைப்புல் சாறு அருந்துவது அதனை மீட்டெடுக்க பேருதவியாக இருக்கும். கல்லீரல் நாம் உண்ணும் உணவு, மருந்து ஆகியவற்றில் உள்ள நச்சுக்களை உள்ளீர்த்து வைத்து பின்னர் நீக்கும் தன்மை உடைய உறுப்பாகும். இந்தக் கல்லீரலுக்கு கோதுமைப்புல் சாறு, அருகம் புல்ச்சாற்றினைப் போலவே நல்ல பலனைக் கொடுக்கும். கண்ணில் உள்ள பார்வை நரம்பில் போதியளவிற்கு ரத்தவோட்டம் இல்லாத போதும் கோதுமைப்புல் சாறு நல்ல பலன் தரும்.

    கோதுமையை விதைத்துப் புல்லாக்கி அரைத்து சாறெடுக்க சாத்தியப்படாதவர்கள், மேலே சொன்னபடி கோதுமையை முளைக்கட்டி பாலெடுத்து அரைத்து வடித்துப் பயன்படுத்தலாம். அது கோதுமைப்புல் சாற்றின் பலனில் பாதியளவிற்கேனும் கொடுக்கும். ஆனால் உடலின் நச்சுத் தன்மையை நீக்குவதில் கோதுமைப்புல் சாறு தரும் பலன் அலாதியானது. புழுங்கல் கோதுமையை உடைத்து பாக்கெட்டாக விற்கிறார்கள். அதனை அப்படியே சோறாக சமைக்கலாம். நாம் அரிசிச்சோற்றை கொஞ்சம் பிசைந்து சின்ன உருண்டையாக்கி விழுங்கினால் மெள்ளாமல் அப்படியே விழுங்கி விடலாம். காரணம் வயிற்றினால் அதனைக் கூழாக்க முடியும். ஆகவே உடலறிவு அதனை தொண்டையினுள் செல்ல அனுமதிக்கிறது. ஆனால் கோதுமையை அப்படி உருண்டையாக்கி உள்ளே தள்ள முடியாது. தொண்டையில் சிக்கும். ஏனென்றால் புழுங்கல் கோதுமையை வயிற்றால் கூழாக்க முடியாது. எனவே கோதுமைச்சோற்றினை நாம் நன்றாக மென்ற பின்பே விழுங்க முடியும். அவ்வாறு மெள்ளும் பொழுது வாயில் சுரந்து உடன் சேரும் உமிழ்நீர் கோதுமைச்சோற்றை கூழாக்குவதோடு வயிற்றில் செரிப்பதற்குரிய நொதிகளையும் சேர்த்தே வழங்குகிறது. ஆகவே உடலால் கோதுமையின் சத்துக்களை எளிதில் உள்ளீர்க்க முடியும்.

    நாம் உண்ணும் உணவை முறையாகச் செரித்தால் ரத்தத்தில் ஏறும் சர்க்கரை சட்டென்று ஏறாது. நிதானமாகவே ஏறும். உண்ணும் உணவில் உள்ள எரிசக்தி ரத்தத்தில் உடனடியாக ஏற்றப்படுவதும், அது வேறுவடிவத்திற்கு மாற்றப்படாமல் உடலினுள் கழிவாகச் சுற்றிக் கொண்டிருப்பதும் தான் உடலுபாதைகளுக்குக் காரணம். புழுங்கல் கோதுமையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் அதிலுள்ள எரிசத்து (கார்போஹைடிரேட்) கொஞ்சங் கொஞ்சமாகவே வடிக்கப்படும். எனவே உடலில் சத்துக்கள் முறையாகச் சேமிக்கப்படும். இளவயதில் வளர்ச்சியின் பொருட்டு உள்ளுறுப்புகள் மிகவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும். வளர்ச்சி முழுமை பெற்ற நடுத்தர வயதை அடைகிற பொழுது சதை வளர்ச்சிக்கு உரிய சத்துக்கள் தேவையில்லை. எனவே உணவின் அளவை நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பொதுவாக இளவயதில் உண்ட பழக்கத்தின் அளவிற்கே உண்ண விரும்புகிறோம். அதுதான் நோய்கள் உடலில் தோன்றக் காரணம் ஆகி விடுகிறது.

    சத்துள்ள உணவுகளைக் குறைவாக உண்டால் நோய்கள் உருவாவதில்லை. நிறைய உணவு உண்ண விரும்புவோர் நல்ல உடலுழைப்பு செய்து சத்துக்களை எரித்து மீண்டும் உண்பதில் தவறேதும் இல்லை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் உழைப்பதற்கான வாய்ப்பே குறைவு. அத்துடன் உணவுவகைகள் மலிந்து விதவிதமாகக் கண்ணைப் பறிக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருப்பதால் அத்தனை வகையான உணவுகளையும் சுவைத்துப்பார்த்து விடவேண்டும் என்ற எண்ணம் பரவலாகி இருக்கிறது. நாம் எரிக்கும் அளவை மிஞ்சி, உண்கிற போக்கு நிலவுகிறது. சத்தான உணவுகளைத் தேர்ந்து உண்ணும் பழக்கம் இருந்தால் கண்டதையும் சுவைத்துப் பார்க்கும் எண்ணம் தோன்றாது.

    கோதுமையை மேலே சொன்னவாறு சோறாகப் பொங்கி சாப்பிடுவது, நடுத்தர வயதைக் கடந்தவர்களுக்கு மிகவும் நல்லது. கோதுமை ரவையை உப்புமாவாகச் சமைத்து உண்பதுபோல காரத்தாளிப்பு போடாமல் அப்படியே நாட்டுச்சக்கரை போட்டு இனிப்பாகச் சமைத்துச் சுவைக்கலாம். மைதாமாவில், கடலைமாவில் இனிப்பு தயாரிக்கிற பொழுது அது இறுகல் தன்மையை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அதனோடு நிறைய நெய் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வெள்ளைச் சர்க்கரைப் பாகும் இனிப்புப் பண்டத்தை இறுகலாக்கும். அதுவும் நெய் அல்லது எண்ணையைக் கூடுதலாகச் சேர்க்க நேரிடுகிறது. அதுவே கோதுமை ரவையில் இனிப்பு தயாரிக்கிற பொழுது எண்ணையோ, நெய்யோ அதிகமாகச் சேர்க்கத் தேவையில்லை. கோதுமை ரவையில் செய்யும் இனிப்பு ஓரிரு நாட்களுக்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது. மற்றபடி அது இனிப்பு சாப்பிடும் வேட்கையை நன்றாகத் தணிக்கும். குழந்தைகளாக கோதுமை ரவையில் தயாரிக்கும் இனிப்பைச் சாப்பிட்டுப் பழகி விட்டால் பிசுபிசுப்பான மாவுப் பண்டங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள்.

    இன்றைய மாவுப் பலகார இனிப்பு வகைகள் உடலில் சதைப்பெருக்கத்தை அதிகளவில் பெருகச் செய்வதோடு பல்லையும் விரைவில் பதம் பார்த்து விடுகிறது. பண்டத்தில் மூன்று மடங்கு ஐந்து மடங்கில் சேர்க்கப்படும் சர்க்கரையும், அதன் பிசுபிசுப்புத் தன்மையும் நிறமிகளும் வயிற்றின் செரிமானப் பகுதிகளில் ஒட்டி மலச்சிக்கலை ஏற்படுத்துவதுடன் பற்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    போப்பு, 96293 45938

    குழந்தைகளுக்கு இனிப்புத் தேவைதான். ஆனால் அவர்கள் சுவைக்கும் இனிப்புகள் வயிற்றிலும் செரிமான மண்டலத்திலும் ஒட்டாத வகையில் வாயில் மென்று சுவைக்கும் வகையில் ரவைப் பதத்தில் இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் தான் பற்களோடு ஒட்டுமொத்தமான உடலாரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.

    கோதுமையில் சமைக்கும் மாறுபட்ட உடலுக்கு நன்மை செய்யும் சுவையான உணவுகள் குறித்து மேலும் சில பார்க்கலாம்.

    Next Story
    ×