என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகளிர் மருத்துவம் - கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம்...
    X

    மகளிர் மருத்துவம் - கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம்...

    • கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன.
    • கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    குழந்தைபேறு சிகிச்சையில் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றால், அவரது கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தான், எல்லா தம்பதியினரும் முதலில் தெரிந்து கொள்வதற்கான ஆர்வமான விஷயமாக இருக்கும். அவர்களது குடும்பத்தினரும் அதை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

    கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஒவ்வொரு பரிசோதனைகளையும் மருத்துவர்கள் செய்யும் போது, டாக்டர் குழந்தை நன்றாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்று எல்லா தம்பதிகளுமே கேட்பது வழக்கமான விஷயமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

    ஆரோக்கியமான குழந்தை பெற விரும்பும் பெண்கள்:

    கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும், உருவ அமைப்புகளில் நன்றாக இருக்க வேண்டும், மரபணு சார்ந்த குறைபாடுகள் எதுவும் இருக்கக்கூடாது, குரோமோசோம் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற வகையில், எல்லா வழிகளிலும் ஒரு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதைத்தான் எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள்.

    கருவில் இருக்கும் குறைபாடுகளை நாம் கண்டுபிடிக்க முடியுமா? இதை கண்டுபிடித்தால் நிறைய நேரங்களில் தேவையில்லாத, குறைபாடுகள் கொண்ட குழந்தை பிறப்பை தவிர்க்க முடியுமே என்பது தான் பலரது கேள்வியாக இருக்கும். அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இன்றைய நவீன மருத்துவத்தில் பரிசோதனை முறைகள் உள்ளன.


    டாக்டர் ஜெயராணி காமராஜ்

    குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்

    செல்: 72999 74701

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ப்ரீநேட்டல் டெஸ்ட் எனப்படும் மகப்பேறுக்கு முந்தைய பரிசோதனை என்பது பெண்களின் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை கண்டறிவதற்கான வழிமுறைகளை கொடுத்து இருக்கிறது. மகப்பேறுக்கு முந்தைய இந்த பரிசோதனையானது கர்ப்பகாலத்தின் போது தாயின் ஆரோக்கியத்தையும், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் அறிந்து கொள்வதற்காக செய்யப்படுகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த பரிசோதனை மூலம் குழந்தைக்கு மரபணு ரீதியான குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பாதிப்புகள் இருந்தாலோ அதை எளிதில் கண்டறிய முடியும். மேலும் அதை ஆரம்பத்திலேயே சரி செய்யவும் முடியும்.

    குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு அரிது:

    கடந்த 30 வருடங்களாக நான் குழந்தையின்மைக்கான சிகிச்சைகளை அளித்துக்கொண்டு இருக்கிறேன். ஏராளமான விஷயங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு குறைபாடு உள்ள குழந்தை பிறப்பு என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அதாவது எனக்கு தெரிந்து கடந்த 15 வருடங்களாக பிரசவத்தின் போது குழந்தைகளுக்கு பெரிய அளவிலான குறைபாடுகள் வருவது இல்லை.

    இன்னும் சொல்லப்போனால் இப்போதைய காலகட்டத்தில் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு ஏதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதால் தான் இந்த வகையிலாக சாதனையை நிகழ்த்த முடிகிறது.

    கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாடுகளை கண்டறிவதற்கு பலவிதமான பரிசோதனை முறைகள் உள்ளன. கடந்த 30 வருட காலத்தை எடுத்துக்கொண்டால், ஆரம்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்கிற ஒரே ஒரு பரிசோதனை முறை இருந்தது.

    ஆனால் இன்றைக்கு நவீன வளர்ச்சி காரணமாக, பலவிதமான பரிசோதனைகள் மூலமாக, கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். இதில் பரிசோதனை முறைகளில் ஏராளமான முன்னேற்றங்களும் வந்துள்ளது.

    பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம்:

    30 வருடங்களுக்கு முன்பு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய மார்க்கர்ஸ் எனப்படும் சில அறிகுறிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். அந்த அறிகுறிகளை பார்த்து இது பாதிக்கப்பட்ட குழந்தை என்பதை உறுதி செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த மார்க்கர்ஸ் என்பது மிகவும் இயல்பானது.

    நான் சிகிச்சையளிக்க தொடங்கிய ஆரம்ப கால கட்டத்தில், 8 வருடம் குழந்தை இல்லை என்று ஒரு தம்பதி என்னிடம் சிகிச்சைக்காக வந்தனர். அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தது. மறுபடியும் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் போது, அந்த குழந்தைக்கு அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தபோது, இருதயத்தில் ஒரு எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தது.

    இந்த எக்கோஜெனிக் போக்கஸ் இருந்தால் குழந்தைக்கு இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த குழந்தையின் இருதயத்தில் ஏதாவது குறைபாடு இருக்குமோ என்று பயந்து 14 வாரத்தில் அந்த கருவை வேண்டாம் என்று கருக்கலைப்பு செய்தனர். இது கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கு முன்பு நடந்தது.

    ஏனென்றால் அந்த குழந்தைக்கு இருதயத்தில் குறைபாடு வரலாம். இதயத்துடிப்பை உருவாக்குவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.

    அதனால் அந்த குழந்தைக்கு இதயத்துடிப்புகளில் மாறுபாடு ஏற்பட்டு உயிர்வாழ முடியாத நிலை வரலாம் என்று கருதி கருக்கலைப்பு செய்யப்பட்டது.



    ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்று நிறைய குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்புகளை கண்டுபிடித்து, அதனை, தொடர்ந்து கண்காணித்து, நன்றாக சிகிச்சை அளிக்கும் போது, இது பயப்படுவதற்கான பெரிய விஷயம் இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதனை கண்டுபிடிப்பதற்கும் அடுத்தடுத்த சில நவீன முறைகள் இருக்கிறது.

    ஏனென்றால் இந்த மாதிரி மார்க்கர்ஸ் இருந்தால், ஏதாவது மரபணு சார்ந்த குறைபாடுகள் இருக்கலாமா என்பது போன்று நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய தரவுகள் மற்றும் நிறைய ஆதாரங்களை கண்டுபிடித்ததில், பல பிரச்சனைகள் முந்தைய காலத்தில் குறை என்று நினைத்த நிலையில், இன்றைய காலத்தில் அதனுடன் வாழலாம், அதற்கு தீர்வு இருக்கிறது என்ற நிலை உருவாகி உள்ளது.

    பரிசோதனையை எப்போது தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்:

    இதுதவிர குழந்தை வயிற்றில் இருக்கும் போதே சில சிகிச்சை முறைகளையும் செய்ய முடியும். உதாரணத்துக்கு சின்னச்சின்ன அறுவை சிகிச்சைகளை செய்யலாம். ரத்த மாற்றுகள் செய்யலாம். பல நேரங்களில் பல அறுவை சிகிச்சைகளையே செய்யலாம். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாமே தற்போதைய மருத்துவ வசதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்கிற அளவுக்கு பலவித முன்னேற்றங்கள் அடைந்துள்ளது.

    அந்த வகையில் ஒரு பெண் கருவுற்றால், குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு என்னென்ன பரிசோதனை முறைகளை செய்ய வேண்டும், என்னென்ன பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக ஒரு கருவில் குழந்தை இயல்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான பரிசோதனையை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

    மேலும் கருத்தரிப்பதற்கு முன்பே அவர்களின் உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்பதை பார்த்து, அதனால் குழந்தைகளுக்கு ஏதாவது குறைபாடுகள் உண்டாகுமோ என்பதையும் கண்டுபிடிப்பது ரொம்பவும் முக்கியம்.

    உதாரணத்துக்கு ஒரு பெண்ணுக்கு ஒரு சில பால்வினை நோய்கள் இருக்கிறது என்றால், அந்த குழந்தையும் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருக்கும். எனவே கருத்தரிப்பதற்கு முன்பே பல பரிசோதனைகள் செய்யும் போது, குழந்தைக்கு பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். அதனை சரிசெய்த பிறகுதான் அந்த பெண் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் கருத்தரிக்கும் பெண்ணுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும்? கர்ப்பகாலத்தின் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை கண்டறிய என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

    Next Story
    ×