என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நீங்கள் தேய்ப்பது உயிரற்ற எண்ணெயா?
- தோலில் ஏற்படும் லேசான காயங்களுக்கு முதலுதவி மருந்தாகவும் இருக்கிறது.
- விளம்பரங்களில் காண்பிக்கும் பொருட்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.
நீங்கள் உடம்புக்கு செத்த எண்ணெய் தேய்ப்பவரா?
தேங்காய் எண்ணெய் தெரியும்,நல்ல எண்ணெய் தெரியும், விளக்கெண்ணெய் தெரியும், வேப்ப எண்ணெய் கூட தெரியும். ஆனால் அதென்ன செத்த எண்ணெய் என்கிறீர்களா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்! தெரிந்து கொள்வீர்கள்.
தேங்காய் எண்ணெய் கடந்த தலைமுறை வரை கூட சர்வரோக நிவராணியாக இருந்தது. ஆனால் இந்த தலைமுறைதான் அது ஏன் எதுக்கு என்று கேட்டு எல்லாவற்றையும் ஒதுக்குவது போல தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்ளும் பழக்கத்தையும் விட்டுவிட்டனர்.
சிறு குழந்தைகளுக்கு தினமும் உடலில் எண்ணெய் தேய்த்து விடுவது நம்முடைய பல காலத்துப் பழக்கம். அந்த பயன்பாட்டிற்கு, பலருக்கும் பலகாலமாய் முதல் தேர்வாக இருந்தது தேங்காய் எண்ணெய் தான்.
தேங்காய் எண்ணெயை, பிசு பிசுப்பாக இருக்கிறது, கையில் ஒட்டுகிறது இப்படி பல காரணங்களை சொல்லி ஒதுக்கிவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட அல்லது கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய் வகைகளை இப்போது பயன்படுத்துகிறோம். அவை எல்லாம் தேங்காய் எண்ணெய்க்கு சரியான மாற்றே கிடையாது.
தேங்காய் எண்ணெயின் ஸ்பெஷல் என்ன?
தோலில் தேய்க்கப்படும் எல்லா எண்ணெய்களும், கிரீம்களும் பொதுவாக செய்யக் கூடிய ஒரு விஷயம் தோலினுடைய ஈரப்பதத்தை அதிகரிப்பது, தோலின் ஈரப்பதத்தை பாதுகாத்தால் தோல் மென்மையாக இருக்கும். ஆனால் தேங்காய் எண்ணெய் மட்டும் இதைத்தாண்டியும் வேறு நிறைய வேலைகளைச் செய்கிறது. என்னென்ன என்று பார்க்கலாமா? இப்போதும் கேரளாவில் அந்த மக்கள் வெளியே செல்லும் போது, கை கால்களில், தேங்காய் எண்ணெயை பூசிக்கொண்டு செல்வார்கள். முகத்தில் கூட தேங்காய் எண்ணெய் பூசிக் கொள்வார்கள். காரணம் தேங்காய் எண்ணெய், சூரிய ஒளியில் இருந்து அல்ட்ரா வயலட் கதிர்கள் நம் தோல் வழியாக உடலில் ஊடுருவதை தடுக்கிறது என்பதனால், இது அறிவியல் பூர்வமான உண்மையும் கூட.
நம்மூரில் ஒரு நம்பிக்கை உண்டு. தேங்காய் எண்ணெய் பூசி சென்றால் தோல் கருப்பாகும் என்று. அது முற்றிலும் தவறான நம்பிக்கை. தேங்காய் எண்ணெய் தேய்க்காமல் சென்றாலும் கருப்படிக்கத்தான் செய்யும் அது வெய்யிலின் வெகுமதி. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக், கேப்ராயிக், கேப்ராலிக் அமிலங்கள்தோலில் வைரஸ் பாக்டீரியா ஃபங்கஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. இது படை, சொறி சிரங்கு, தோல் அரிப்பு நோய்கள் வராமல் தடுக்கிறது. தோளில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது, தோலில் ஏற்படும் லேசான காயங்களுக்கு முதலுதவி மருந்தாகவும் இருக்கிறது.
அதனுடைய ஆன்டிஆக்சைடு சக்தியால் NICU எனப்படும் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தை பிரிவிலும் இப்போது கிரிம்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயையே குறைமாத குழந்தைகளுக்கு பூசுகிறார்கள். தேங்காய் எண்ணெய் தடவப்பட்ட குறைமாத குழந்தைகள் தோல் விரைவாக முதிர்ச்சி அடைவதும், மற்றும் தோல் வழியாக பாக்டீரியா வைரசால் வரக்கூடிய நோய்கள் குறைவாக இருப்பதும் ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை கட்டாயம் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை நாம் விட்டுவிடக்கூடாது, அந்த இரண்டு வருடங்களில் தோலுக்கு நாம் கொடுக்கும் சக்தி அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பர். எனக்கு தெரிந்து குளித்துவிட்டு வந்ததும் உடல் முழுவதம் தேங்காய் எண்ணெயை மிருதுவாக பூசிக்கொள்ளும் பலர் இப்போதும் உள்ளனர். அதில் முதியவர்களும் உண்டு. அவர்களை கேட்டுப்பாருங்கள் தங்களது உடல் கவசமே தேங்காய் எண்ணெய்தான் என்பர்.
மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா
ரசாயனம் கலந்த வாசனையுள்ள எத்தனையோ எண்ணெய்கள் உண்டு. முக்கியமாக பேபி ஆயில் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான பூசு எண்ணெய்களில், பலவிதம் உண்டு. சிலவற்றில் தேங்காய் எண்ணெய், சிலவற்றில் ஆலிவ், சிலவற்றில் பாதாம் எண்ணெய், சிலவற்றில் மினரல் ஆயில் என்று எழுதி இருக்கும். ஒரு மிகவும் பிரபலமான பேபி ஆயில் தயாரிப்பில் மினரல் ஆயில் என்று மட்டுமே இருக்கும். மினரலாயில் என்பது பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கக்கூடிய ஒரு பொருளாகும். இது தோலுக்கு ஈரப்பதத்தை கொடுத்தாலும், ஒரு துளி கூட தேங்காய் எண்ணெயோடு நாம் இதை ஒப்பிட முடியாது. உயிரற்ற இதுபோன்ற எண்ணெய்களை என்றாவது ஒருநாள் வாசனைக்காக தேய்த்துக் கொள்வது தவறு இல்லை. ஆனால் இதையே பழக்கமாக்கி விடக்கூடாது.
பொதுவாக நாம் நினைப்பது எல்லா பாக்டீரியாவும் நமக்கு கெடுதலை உண்டாக்கும் என்று. ஆனால் சில நல்ல பாக்டீரியாக்களும் இருக்கின்றன. அதனால் தினமும் தேங்காய் எண்ணெய் தேய்க்கும் பொழுது எண்ணெயிலேயே இருக்கக்கூடிய பிரீ பையாடிக் என்ற நுண்ணுயிர்கள், தோலில் உள்ள ப்ரோ பயோடிக் எனப்படும் நுண்ணுயிரிகளும் அழியாமல் பாதுகாக்கப்படுவதால், மற்றும் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. இந்த பிரீ பையாடிக் தான் எண்ணெயை உயிருள்ளதாக வைத்திருக்கிறது.
ஏதேனும் காயம் பட்டாலும் கூட நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தோல் இரண்டு, மூன்று நாட்களிலேயே அந்த காயத்தை முழுமையாக குணப்படுத்தி விடும். காயத்தில் ஏதேனும் ஒரு கிருமி பிடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. பெண்களுக்கு 40 வயதாகும்போது தோல் மிகவும் வறண்டு போவதை காணலாம். ஹார்மோன் குறைவினால் வறண்டு போக ஆரம்பிக்கும். இது நாள் வரை தேய்க்காவிட்டாலும் அந்த கட்டத்திலாவது தினமும் தேங்காய் எண்ணெயை தடவும்பொழுது தோல் வறண்டு போவது வெகு வேகமாக சுருக்கமாவது மற்றும் தோல் நோய்கள் வருவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
நீங்கள் உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு கிரீம் எதுவுமே எழுதிக் கொடுப்பதில்லையா?என்று கேட்பது எனக்கு புரிகிறது.
கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் வரக்கூடிய கோடுகளுக்கு "ஸ்ட்ரையா" என்று சொல்லுவோம். அதற்காக நானும் கிரீம்களை எழுதிக் கொடுப்பதுண்டு. ஆனால் கிரீம்கள் மட்டுமல்லாது அத்துடன் தேங்காய் எண்ணெய். ஆலிவ் எண்ணெய். பாதாம் எண்ணெய் போன்றவற்றையும் பூசிக்கொள்ளச் சொல்லுவேன்.
அதுவும் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல இயற்கையான உயிர் உள்ள எண்ணெய்யை விட்டுவிட்டு அதிக விலை கொடுத்து செத்த எண்ணெய்களை வாங்கி தேய்த்துக் கொள்ளும் முட்டாள்களாக நாம் இருக்கக் கூடாது. நம் நாட்டில் விளையும் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்துவதால், நம் தென்னை விவசாயிகளுக்கும் உதவி செய்கிறோம். இயற்கையாக கிடைக்கக்கூடிய பல பொருட்களுக்கு எந்த விதமான விளம்பரமும் கிடையாது. விளம்பரங்களில் காண்பிக்கும் பொருட்கள் மட்டுமே வாழ்க்கை இல்லை.
எந்த பொருட்களை வாங்கினாலும் அதில் உள்ள பொருட்கள் என்ன? இன்கிரிடியன்ஸ் என்ன என்பதை க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தோ! அல்லது எழுதி இருப்பதை தெளிவாக படித்தோ தெரிந்து கொண்டு பிறகு உபயோகிக்க வேண்டும். தோலுக்காக உள்ள பல அழகு சாதன பொருட்களில் நம் உடலுக்கு ஒவ்வாத வேண்டாத பல ரசாயனங்கள் கெமிக்கல்கள் கலந்து தயாரிக்கப்பட்டிருப்பதை, அதை படிக்கும் போது தெரிந்து கொள்ளலாம். எனவே விழிப்புடன் இருங்கள்.
தேங்காய் எண்ணெயிலேயே பல வகைகள் உண்டு. தேங்காய் எண்ணெயை சுத்திகரிக்கும் பொழுது பல மாற்றங்களை அடைந்து விடும். எனவே முடிந்தவரை எந்த ரசாயனங்களும் கலக்காத செக்கு எண்ணையாக பயன்படுத்துவது நல்லது. அதுவும் வெர்ஜின் ஆயில் எனப்படும் தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் கெமிக்கல்கள் எதுவும் கலக்கப்படாமல் சுத்தமாக கிடைத்தால் மிகவும் நல்லது.
இன்று தேங்காய் எண்ணெயை விட்டு விலகும் நாம், அடுத்த தலைமுறைக்கு அதை அறிமுகப்படுத்தாமலேயே தொலைத்து விடக்கூடிய தவறை செய்கிறோம்.
வழி வழியாக உங்கள் வீட்டில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைவிட்டு விடாதீர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்துங்கள். எனவே தேங்காய் எண்ணெய் தேய்ப்போம்.! தோல் நலம் காப்போம்!
இது போன்ற பல நல்ல விஷயங்களை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப்: 8925764148






