என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அவசரகால நிதி – அவசியம்தானா?
- நம் வசதிக்குத் தகுந்தவாறு சேமிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
- கஷ்டப்பட்டு உருவாக்கிய நிதியை வேறு செலவுகளுக்கு எடுப்பதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். சமீபத்தில் ஒரு நண்பர், "நான் மாலைமலரின் நெடுநாள் வாசகன். உங்கள் கட்டுரை மாலைமலரில் வருவது குறித்து எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏதோ முதலீட்டு ரகசியங்கள் எல்லாம் சொல்லி எங்கள் செல்வ நிலையைத் தேற்ற உதவி செய்வீர்கள் என்று பார்த்தால், செலவு, கடன், தேவையற்ற பழக்கங்கள் என்று ஏதேதோ சொல்கிறீர்களே தவிர, பணத்தை பலமடங்கு அதிகரிக்கும் வழியைச் சொல்லவில்லையே?" என்றார்.
அவருக்குப் புரியாத விஷயம் என்னவென்றால், முதலீடுகளைப் பற்றிப் பேசி, இதில் போட்டால் இவ்வளவு கிடைக்கும், அதில் போட்டால் அவ்வளவு கிடைக்கும் என்று சொல்வதற்கு ஒரு கால்குலேட்டர் போதும். ஆனால் நாம் முன்னெடுத்திருப்பது ஒரு பயணம். நம் செல்வநிலையை உயர்த்தும் பெரும் பயணம்.
ஒரு சாதாரணப் பயணத்துக்குக் கூட முதலில் என்ன செய்வோம்? நம் கார் எஞ்ஜினில் ஆரம்பித்து, பிரேக், டயர், ஸ்டியரிங், வீல் என்று எல்லாவற்றையும் சரி பார்த்தபின்புதானே கிளம்புவோம்? ஒரு நான்கு நாள் பயணத்துக்கே இவ்வளவு முன்ஜாக்கிரதை என்றால், ஆயுள் முழுக்கப் பயன் தரக்கூடிய செல்வநிலைப் பயணத்துக்கு எத்தனை விஷயங்கள் தயார்ப்படுத்த வேண்டும்?
மேலும் செல்வம் என்னும் அமிர்தம் கிடைப்பதே அரிது. கிடைத்ததைத் தக்க வைக்க ஓட்டை, உடைசல் அற்ற நல்ல பாத்திரம் தேவை. நம் அனைவரின் கையிலும் இருப்பதோ பணத் தவறுகள் என்ற ஓட்டைகள் நிறைந்த மண் பாத்திரம். எந்த நிமிடமும் பாத்திரம் உடைந்து மொத்தமும் பறிபோகக்கூடிய சூழல். ஆகவே நம் கையில் இருக்கும் பாத்திரங்களை சரி செய்து, திடமாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதுதான் நம் முதன்மையான கடமை. அதன் பிறகு அமிர்தத்தைத் தேடலாம் என்று நண்பருக்குச் சொன்னேன்.
சரி செய்யவேண்டிய மற்றுமொரு தவறு
கிரெடிட் கார்டும், பர்சனல் லோன்களும் இருக்கும் தைரியத்தில், அவசர கால சேமிப்பு என்பதை நாம் ஒரு அநாவசியமான விஷயமாகத்தான் பார்க்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்க இயலும்? உதாரணமாக கொரோனா வரப்போவதை அறிந்தவர் யார்? நம் ஒவ்வொருவர் வாழ்விலும் யாரும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன. அவை சந்தோஷம் தரும் நல்லவையாகவும் இருக்கலாம்; வாழ்வைப் புரட்டிப் போடும் கெட்டவையாகவும் இருக்கலாம். ஆனால் எல்லாமே செலவைக் கூடவே கூட்டிவருவனவாக உள்ளன. வருமுன் காப்போனாக அவற்றை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.
உதாரணமாக, உங்களுக்கு வேலை போய்விட்டால், அடுத்த வேலை கிடைக்கும்வரை மாதாந்திரச் செலவுகளை எப்படி சமாளிப்பீர்கள்? அல்லது உடல்நலம் குறைந்து விட்டால், சரி செய்யும்வரை குடும்பத்தாரின் கதி என்ன? இவ்வளவு பெரிதாகக் கூட யோசிக்க வேண்டாம். ஊரிலிருந்து சொந்த பந்தங்கள் திடீரென வந்து நின்றால் அவர்களை நல்லபடியாக உபசரித்து அனுப்ப விரும்புவோமே? அதற்குப் பணம் ஏது? நாளை நம் கார் அல்லது டூ வீலர் ரிப்பேர் ஆகிவிட்டால் ரிப்பேர் செலவுக்கு என்ன வழி?
இது போன்ற சிறிய மற்றும் பெரிய செலவுகளுக்கு நாம் தயாராக இல்லாவிட்டால், இன்றைய பிரச்சினைகளை சமாளிக்க நாளைய எதிர்காலத்தை அடகு வைக்க நேரும். ஏற்கெனவே செய்த வங்கி டெபாசிட், மியூச்சுவல் பண்ட் முதலீடு போன்றவற்றை அவசரமாகக் கலைக்க நேரும்; அல்லது கடன் வலையில் விழ நேரும் இது போன்ற நிகழ்வுகள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்து, வாழ்வு குறித்த பயங்களை உருவாக்குவதோடு, நம்மை நம் செல்வப் பயணத்தில் பல கட்டங்கள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும். இதற்கு நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இவை குறித்து எதிர்பார்த்து தயார் நிலையில் இல்லாத நம்மை மட்டுமே நாம் நொந்துகொள்ள முடியும்.
எது உதவும்?
இதுபோன்ற நேரங்களை சமாளித்து, நிம்மதியாக உறங்க நமக்கு உதவுவதுதான் எமர்ஜென்சி பண்ட். வெறும் வியாதிகளும், வெள்ளங்களும் மட்டுமல்ல; கீழ்க்கண்ட பல வேளைகளும் ரெடியாகப் பணம் தேவைப்படும் அவசரகாலங்கள்தான்.
விபத்து
உடல் நலக் குறைவு
வேலை இழப்பு
கம்பெனியே மூடப்படுவது
சட்டப் பிரச்சினைகள்
குடும்பப் பிரச்சினைகள்
சொத்துத் தகராறுகள்
பூகம்பம், வெள்ளம், காட்டுத் தீ, சுனாமி
இது போன்ற தருணங்களில், நமக்கு உதவக்கூடியவர்களும் சிக்கலில் இருக்கும்போது, யாரிடம் கேட்க முடியும்? கொரோனா லாக்டவுன் போதும், மழை வெள்ளத்தில் நகரம் மிதந்தபோதும், ஏடிஎம்களில் பணம் இல்லை. ஆஸ்பத்திரிகளிலோ ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டைக் காட்டினாலும், முன்பணம் கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், மிகுந்த முன்யோசனையுடன் துவங்கப்பட்ட வங்கி எஃப்.டி.க்களும், ஹெல்த் இன்சூரன்ஸும் கூட உதவாத இடத்தில் எமர்ஜென்சி ஃபண்ட் உதவும். அதனை எப்படி உருவாக்குவது?
சுந்தரி ஜகதீசன்
எவ்வளவு தேவை?
ஒரு குடும்பத்துக்குத் தேவைப்படும் எமர்ஜென்சி ஃபண்ட் எவ்வளவு என்பதை முதலில் கணக்கிடவேண்டும். வாடகை அல்லது வீட்டுக்கடன் இ.எம்.ஐ, உணவு, மின்சாரம், தண்ணீர், ஃபோன் போன்றவற்றுக்கான பில்கள், ஸ்கூல் ஃபீஸ், போக்குவரத்து செலவு, கடன் கட்டுதல் போன்ற அனைத்துக்குமாக உங்கள் செலவு மாதம் ரூ. 30000/ என்று வைத்துக் கொண்டால், அவசரகால நிதியாக மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான ரூ.90000/ முதல் ரூ.180,000/ வரை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் சமீப காலங்களில் வெள்ளத்தால் வீடும், வீட்டு உபயோகப் பொருட்களும் மிகுந்த பாதிப்படைகின்றன; அவற்றை மீட்டெடுக்க குறைந்த பட்சம்
ரூ. 50000/ எக்ஸ்ட்ராவாகத் தேவைப்படலாம். இவையெல்லாம் பொதுவிதி மட்டுமே; நம் வசதிக்குத் தகுந்தவாறு சேமிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.
அவசரகால நிதிக்கு இவ்வளவு பணம் எப்படி சேமிப்பது என்று கவலைப்பட வேண்டாம். இது ஒரே இரவில் நடக்கக் கூடிய காரியமல்ல. ஆகவே மொத்தமாகக் கையில் பணம் சேர்ந்தபின் இந்த நிதியை உருவாக்கலாம் என்று எண்ணுவது தவறு. முன் கூட்டியே திட்டமிட்டு மாதா மாதம் அதற்கான பணத்தைத் தனியாக சேமித்துவர வேண்டும். போனஸ், சம்பள உயர்வு போன்றவை மட்டுமின்றி, கையில் கிடைக்கும் சின்ன சின்னத் தொகையைக் கூட சேமிப்பது நல்லது. தேவையென்றால் மற்ற முதலீடுகளை தற்காலிகமாகக் குறைத்துக் கொண்டு அவசரகால நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலும் தவறில்லை. ஆனால் கஷ்டப்பட்டு உருவாக்கிய நிதியை வேறு செலவுகளுக்கு எடுப்பதை முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.
எங்கு சேமிப்பது?
எங்கு சேமிப்பது என்பதே அடுத்த கேள்வி. பணமே ராஜா (Cash Is King) என்று ஒரு பழமொழி உண்டு. அவசரகாலத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. எமர்ஜென்சி ஃபண்ட் என்பது அவசர காலத்தில் உடனடியாக கைக்கு எட்டும்படி வைக்க வேண்டிய ஒன்று. இதில் வட்டி எவ்வளவு கிடைக்கும்; வருமானம் எவ்வளவு வரும் என்ற கணக்கெல்லாம் செல்லாது. இதில் பணத்தைப் பலமடங்காகப் பெருக்கும் வழிகளை உபயோகிக்கும் தேவையும் இல்லை. ஆனால் பலரும் இதைப் புரிந்து கொள்ளாமல், இதனையும் பணம் பெருக்கும் மற்ற வழிகளில் ஒன்றாக எண்ணி, நல்ல வட்டி வரவேண்டும் என்று விரும்பி, தங்கள் எமர்ஜென்சி பணத்தை வங்கி எஃப்.டியிலும், மியூச்சுவல் ஃபண்ட்களிலும் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் உணராத விஷயம் என்னவென்றால், மியூச்சுவல் ஃபண்டில் பணம் வெளிவர ஓரிரண்டு தினங்கள் ஆகும். இடையில் விடுமுறைகள் வர நேர்ந்தால் நான்கு நாட்கள் கூட ஆகலாம். வரும் பணமும் வங்கிகள் மூலமே வரும். ஆனால் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது வங்கிகளை அணுகுவது கடினம். கேரளாவிலும், சென்னையிலும் வெள்ளம் வந்த போது வங்கிகளுக்குச் சென்று பணம் எடுப்பது இயலாத காரியமாக இருந்தது. வங்கிகள்தான் பத்தடி ஆழ வெள்ளத்தில் மூழ்கி இருந்தனவே?
ஆகவே, உங்கள் அவசரகால நிதி பத்திரமாக இருக்கவேண்டும்; உடனடியாக எடுக்கும்வண்ணம் இருக்கவேண்டும் என்பதால் குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்குத் தேவையான பணத்தையாவது (ரூ.30000/) வீட்டில் கேஷாக வைத்திருக்க வேண்டும். வங்கிகள் தரும் கரன்ட் அக்கவுன்ட் லிமிட் மீதியை எங்கு வைக்கலாம்? முன்பெல்லாம் பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமே வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் கிடைக்கும். இப்போது எஃப்.டி. வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எப்.டி. தொகையில் 75 சதவீதம் அளவுக்கு லிமிட் வழங்கப்படுகிறது.
ஆகவே ரூ.60000/த்தை எப்.டி.யாக வைத்தால், ரூ.45000/ வரை லிமிட் கிடைக்கும். எஃப்.டி.யில் நமக்குக் கிடைக்கும் வட்டி 5.5 சதவீதம் என்றால், கரன்ட் அக்கவுன்டுக்குப் போடப்படும் வட்டி சுமார் 7.5 சதவீதம் ஆக இருக்கும். இதில் மிகப் பெரிய வசதி என்னவென்றால், நூறு ரூபாய் முதல் 45000/ வரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம்; மீண்டும் போடலாம்; மறுபடி எடுக்கலாம். முழு லிமிட்டுக்கும் வட்டி போடப்படுவதில்லை. நாம் எடுக்கும் பணத்துக்கு மட்டுமே வட்டி போடப்படும். இந்த வசதி உங்கள் வங்கியில் இருக்கிறதா என்று பாருங்கள்.
கையில் வரக்கூடிய பணத்தில் ஒரு அளவை எமெர்ஜென்சி பண்டாக உருவாக்குவதால் பிரச்சினைகளை பதற்றமின்றி, கடனின்றி, பயமின்றி எதிர்கொள்ள முடியும். சுனாமியோ, பெருந்தொற்றோ மற்ற உலகளாவிய பிரச்சினைகளோ வருவதைத் தடுப்பது நம் கையில் இல்லை. ஆனால் அவற்றை சமாளிக்கும் கேடயமாக அவசரகால நிதி இருக்கிறது. ஆபத்து நிறைந்த நம் வாழ்க்கைப் பயணத்தில் அவசியமான இந்தக் கேடயம் உங்களிடம் இருக்கிறதா?






