என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

குலசை ஞானியாரை ஆட்கொண்ட முருகன்
- பாண்டியமன்னனின் ஆட்சி நிலைகுலைந்தபின், குறுநில மன்னர்களின் ஆட்சி தலைதூக்கியது.
- குறுநில மன்னரான செந்தில்காத்த மூப்பனாரின் ஆட்சியில் முதலமைச்சராகப் பணிபுரிந்தவர் ஞானியார் ஆவார்.
திருச்செந்தூருக்குத் தெற்கே சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன் பட்டினம் என்ற ஊர் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது. கோடைக் காலத்தில் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் இடமாக இது இருந்தது. இதனால் மன்னன் குலசேகர பாண்டியன் இவ்வூரில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
பாண்டியமன்னனின் ஆட்சி நிலைகுலைந்தபின், குறுநில மன்னர்களின் ஆட்சி தலைதூக்கியது. அந்த வகையில் இவ்வூரைச் செந்தில் காத்த மூப்பனார் என்ற குடும்பத்தார் ஆண்டு வந்தனர். திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை முதலிய பகுதிகளெல்லாம் இவரது ஆளுகைக்கு உட்பட்டதாக விளங்கியது. இவரின் குலதெய்வமாக திருச்செந்தூர் முருகன் விளங்கினார்.
குறுநில மன்னரான செந்தில்காத்த மூப்பனாரின் ஆட்சியில் முதலமைச்சராகப் பணிபுரிந்தவர் ஞானியார் ஆவார். இவரது இயற்பெயர் முத்தணைந்த பெருமாள்பிள்ளை என்பதாகும். இவர் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கினார். நாள் தோறும் திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்று, அங்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொள்வார். பூஜை முடிந்த பிறகு சற்றுநேரம் கடற்கரையில் உலாவிவிட்டு ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது முழுப்பெயரை யாருமே சொல்வதில்லை. அந்த அளவிற்கு இவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.
இன்றைய கேரளமாநிலம் அப்பொழுது ஒன்பது வீட்டுப்பிள்ளைமார் அதிகாரத்தின் கீழ் இருந்துவந்தது. இப்பகுதியில் மலையாள மந்திரவாதிகள் அதிக பேர் வாழ்ந்து வந்தனர். தங்களது மந்திரசக்தியின் மூலம் எந்தப் பொருளையும் கொண்டு வருவது, எவ்வளவு தொலைவில் யார் இருந்தாலும், இருக்கும் இடத்திற்கு தம் மாய சக்தியால் அவரைத் தங்களிடம் கொண்டு வருவது என, பல்வேறு மாயாஜால வித்தைகளைச் செய்துவந்தனர். இவர்களில் பொல்லாப்பிள்ளை ஆசான் என்பவரும் இருந்துவந்தார். இவர் மந்திர சக்தியில் மிகவும் புகழ் பெற்றவராக விளங்கினார்.
இவரைச் சோதிக்க விரும்பிய அப்பகுதிவாழ் மன்னன், இலங்கைக் கண்டி மன்னனின் அரச குமாரியை இங்கு கொண்டு வரமுடியுமா? என்று கேட்டார். அந்த சவாலை ஏற்றுக்கொண்ட பொல்லாப்பிள்ளை ஆசான் தம் மாயசக்தியை ஏவி விட்டார். அதன்படியே அந்த அரசிளங் குமரியைக் கட்டிலோடு சில பூதங்கள் தூக்கிக் கொண்டு பறந்து வந்தன. அப்போது திருச்செந்தூர் முருகனின் பள்ளியறை பூஜையைக் கண்டு வணங்கி விட்டு ஞானியார், முருகனின் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அன்று பவுர்ணமி நாளாகும்.
ஞானியாரின் கண்களில் அரசிளங்குமரியை பூதங்கள் கடத்திச் செல்லும் காட்சி தென்பட்டது. தமது ஞான சக்தியால் முருகன் அருள்கொண்டு அதனைக் கீழே இறக்கினார். கட்டிலில் அரசிளங்குமரி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். பூதங்களும் பணிவோடு நின்று கொண்டிருந்தன.
நிலைமையை இறை அருளால் உணர்ந்து கொண்ட ஞானியார், பூதங்களைத் தமது ஞான சக்தியால் மிரட்டினார். மிரண்டு நின்ற அப்பூதங்களிடம், "கடத்திவந்த அரசிளங்குமரியை அவளுடைய இடத்திலேயே சேர்த்துவிடுங்கள்", என ஆணையிட்டார்.
பூதங்களும் அதன்படியே செய்துமுடித்தன. இந்தச் சம்பவத்தை தன் மந்திரசக்தியால் அறிந்து கொண்ட பொல்லாப்பிள்ளை ஆசான், ஞானியார் மீது மிகுந்த கோபம் கொண்டான். தனது பூதங்களைக் குலசை ஞானியாரின் மீது ஏவினான். அதனால் அவனுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடைசி முயற்சியாக சக்தி முழுவதையும் ஒன்று திரட்டி, வைரவரை அனுப்பி வைத்தான். வைரவர் ஞானியாரின் வீட்டுக்கு வந்ததும், அவரது வீட்டில் திருவருள் நிறைந்திருப்பதையும், ஞானியார் முருகனாகவே தோற்றம் அளிப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்டார். இதனால், ஞானியாரிடம் தம் நிலையை வைரவர் கூறினார். ஞானியார் இறையருளால் வைரவமூர்த்தியைத் தம் வீட்டில் உள்ள ஒரு பீடத்தில் அமர்த்தினார்.
வைரவர் திரும்பி வராததைக் கண்ட மந்திரவாதி பொல்லாப்பிள்ளை ஆசான் மனக் கலக்கம் அடைந்தான். அவனுக்கு இனம்புரியாத பயம் ஏற்பட்டது. அதனால், அந்த மந்திரவாதி, அப்பகுதி மன்னனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு குலசேகரன் பட்டினத்துக்கு வந்தான். ஞானியாரின் பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினான். என்றாலும், சற்றும் கோபம் கொள்ளாமல் அவர்களை குலசை ஞானியார் உபசரித்தார்.
அதன்பின் ஞானியார் தவ வலிமையாலும், திருவருளாலும் அந்த மந்திரவாதியின் மனைவி மக்களை தம் வீட்டுக்கு வரவழைத்தார். இதைக் கண்ட மந்திரவாதிக்கு மேலும் பயம் ஏற்பட்டது.
அப்பொழுது ஞானியார், "உனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட துயரத்தைக் கண்டு நீ மனம் கலங்குவதைப் போல, நீ செய்த தீய செயல்களால் மற்றவர்கள் மனம் கலங்குகின்றார்கள் அல்லவா? எனவே, உன்னுடைய மந்திர சக்தியைக் கொண்டு இதுபோன்ற தீய செயல்களைச் செய்யாதே, நன்மைகளை மட்டுமே செய்", என்று அறிவுறுத்தி அந்த மந்திரவாதியை அவரது குடும்பத்துடன் அனுப்பிவைத்தார். இச்சம்பவத்தின் மூலம் குலசை ஞானியாரின் புகழ் நாடு முழுவதும் பரவியது. அனைவரும் இவரைப் போற்றிப் புகழ்ந்தனர். மன்னனும் இவருக்கு மரியாதை செய்து அவரைத் தன்னுடனேயே வைத்திருந்தான்.
குலசை ஞானியார் வயதான நிலையிலும், தமது அன்றாடக் கடமையான பள்ளியறை பூஜை சமயத்தில் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதில் இருந்து தவறுவதில்லை. ஒரு சமயம் மழைக்காலம் வந்தது. எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. அச்சமயம் வழி தெரியாமல் திகைத்த குலசை ஞானியாரின் முன்பாக ஒரு சிறு விளக்கொளி தோன்றியது. அந்த ஒளி அவருக்கு வழிகாட்டி திருச்செந்தூர் ஆலயத்தின் சண்முக விலாசம் வரை வந்து மறைந்தது. அவரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஆலயத்தார் நடந்ததை அறிந்து வியந்தனர். ஞானியாரும் பள்ளியறை பூஜையைக் கண்டு வணங்கி இல்லம் திரும்பினார்.
அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த ஞானியாரின் கனவில் திருச்செந்தூர் முருகன் காட்சி தந்தார். பக்தா உமக்கு வயது முதிர்ந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீ இனி திருச்செந்தூருக்கு தினமும் வரவேண்டாம். அதற்கு பதில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும், நானே உன் வீட்டிற்கு வந்துவிடுகிறேன். அந்த சமயத்தில் நீ என்னை உன் வீட்டிலேயே வழிபடலாம்" என்று அருள்வழங்கினார். அதன்படியே, ஞானியார் வீட்டிலேயே பள்ளியறை பூஜையைச் செய்து வந்தார். அந்த உண்மையை அறிந்த ஊர்மக்கள் அவரை தெய்வத்திற்கு இணையாக மதித்து வந்தனர். அவர் வாழ்ந்த வீட்டைச் திருச்செந்தூர் முருகனின் படுக்கை வீட்டுக் கோவில் என்று அழைத்தனர். இன்றும் குலசையில் இந்த இடம் படுக்கை வீட்டுக்கோவில் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாள் திருச்செந்தூர் ஆலயத்தில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஞானியார் நேராகத் திருச்செந்தூர் ஆலயம் சென்று காணும் வகையில் அனைவரும் தன்னைக் வணங்கி வழிபாடு செய்து, அப்படியேநடந்து கருவறைக்குச் சென்றார். ஆனால், அவர் திரும்ப வெளியில் வரவே இல்லை. அவரது உருவம் மறைந்துவிட்டது. இதைக் கண்டு பக்தர்கள் திகைத்து நின்றனர். அதே நேரத்தில் குலசேகரன்பட்டினத்தில் ஞானியார் தமது இல்லத்தில் உயிர் நீத்தார் என்பதை அறிந்து வியந்தனர். எந்தவிதமான மந்திர சக்தியும், மாய சக்தியும் திருச்செந்தூர் முருகன் பக்தரிடம் பலிக்காது என்பதற்குக் குலசை ஞானியார் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
இதே போன்று திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.






