என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அச்சம் தவிர்!
- சிறுவயதில் தொடங்குகிற இவ்வித அச்சம், மனித வாழ்வில் பருவ வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றது.
- அச்சம் என்பது பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு எல்லாருக்கும் இயல்பாக அமைவது ஆகும்.
அச்சம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள அச்சமின்றிக் காத்திருக்கும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்.
'அச்சம்' என்பது உள்ளத்தின் வழியாகத் தோன்றி, உடம்பின் வழியாக வெளிப்பட்டு நிற்கும் ஒருவகை உணர்ச்சியாகும்.
" நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப!"
என்னும் நூற்பாவில் தொல்காப்பியர், மனித உடம்பில் தோன்றும் உணர்ச்சி வெளிப்பாடுகளை, நகைத்தல், அழுதல், இகழ்தல், வியத்தல், அஞ்சுதல், வீறு கொள்ளுதல், சினத்தல், மகிழ்தல் என எட்டு வகைப்படுத்துவார். இவற்றில் கூடுதலாகச் 'சாந்தமாக இருத்தல்' என்பதையும் சேர்த்து மெய்ப்பாடுகளை வடமொழியார் ஒன்பதாக்கி, நவரசங்கள் என்று குறிப்பிடுவர். அந்த வகையில் உள்ளத்தில் தோன்றி உடம்பில் வெளிப்பட்டு நிற்கும் ஒருவகை உணர்வு அச்சம் என்பதாகும்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், அதில் யாதானும் ஒரு துன்பமோ இடையூறோ திடீரென ஏற்பட்டுவிடுமோ என்று உள்ளம் கற்பனையில் கலங்கி, உடல் உண்மையாகவே நடுங்கிச் சீர்குலைதல் அச்சம் ஆகும். மனோதத்துவ அளவில் தொடங்கி, உடலியல் நோய்கள் வரை பெருகிடும் தொல்லைகளை அச்சம் கொண்டுவந்து சேர்க்கும்.
அச்சம் என்பது பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு எல்லாருக்கும் இயல்பாக அமைவது ஆகும். ஆனாலும் நாம் எதற்காகப் பயப்படுகிறோம்?; பயம் கொள்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா?; முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதுபோல, சம்பந்தமற்றவைகளைச் சம்பந்தப் படுத்திக்கொண்டு, வீண் அச்சத்திலும் கவலைகளிலும் ஆழ்ந்து போகிறோமா? என்பதை நமது அச்சங்களிலிருந்து சற்றுத் தள்ளி நின்றுகொண்டு அவற்றைக் கண்காணிக்கப் பழக வேண்டும்.
உயிரச்சம் தான் நமது எல்லா அச்சங்களிலும் தலைமையானதும் முதன்மையானதும் ஆகும். யாதானும் அஞ்சத்தக்க சூழல் உருவாகும்போது, "என்ன உயிரா போய்விடும்?; இதற்குப்போய் இப்படி பயப்படுகிறோமே?" என்று நமது மனத்தைப் பார்த்து அடிப்படையான ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டால், எந்த விதமான பயமும் நம்மை அணுகாது, நம்மைக்கண்டு பயந்து ஓடிவிடும். பாரதி," காலா! வாடா! உன்னைக் காலால் உதைக்கிறேன் வாடா!" என்று எமனையும் அச்சமின்றிக், குஸ்திக்கு அழைக்கும் துணிச்சல் அனைவருக்கும் வரவேண்டும்.
சிறு குழந்தைகளின் கண்களின் அருகில் நமது கைகளைக் கொண்டுபோய் படக்கென்று தட்டும்போது, ஏற்படும் ஓசையையும் காற்றின் விசையையும் உணர்ந்து அவை கண்களை இமைத்து மூடும்; அதையே கொஞ்சம் அதிர்ச்சியோடு விரைந்து கண்ணிமைத்து மூடும்போது குழந்தை பயந்துவிட்டது என்று நாம் பயப்படுவோம். சிறு குழந்தைகள் விளையாட்டில் 'யானைக்குப் பயப்படுவியா? பூனைக்குப் பயப்படுவியா?' என்று கேட்க, அது, 'எதற்கும் பயப்பட மாட்டேன்' என்று சொல்ல, நாம் விரைந்து கைகளைக் கொண்டு குழந்தையின் கண்களுக்குமுன் சென்று விசிற, குழந்தை, படக்கென்று கண்ணிமைக்க, நாமும் 'இதோ பயந்து விட்டது! பயந்துவிட்டது!' என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஒரே அச்ச மகிழ்ச்சிதான் போங்கள்!.
சுந்தர ஆவுடையப்பன்
சிறுவயதில் தொடங்குகிற இவ்வித அச்சம், மனித வாழ்வில் பருவ வளர்ச்சிக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றது. மருத்துவர் போடுகிற ஊசிக்கு பயம், அவர் தருகிற மருந்து உண்ண பயம், தவழ பயம், நடக்க பயம், ஓட பயம், நீந்த பயம், மழையில் நனைய பயம், மலையில் ஏற பயம், சைக்கிள் ஓட்ட பயம், கார், ரெயில், விமானம் ஏற பயம் என வாழ்வின் தொடக்கத் தருணங்கள் எல்லாம் பயமயமாகவே ஆகிப்போகின்றன.
அச்சப்படுவது சரியா? தவறா? என்கிற அடிப்படையான ஒரு கேள்விக்கு வருவோம்.
நமது ஆதிக் கருத்துக் கருவூலர் திருவள்ளுவப் பெருந்தகை அச்சம் குறித்துப் பலகுறள்களில் கருத்துக் கூறியுள்ளார். " அச்சமே கீழ்களது ஆசாரம்" என்னும் வரிகளில், 'அச்சப்படுவது கீழ்மக்களின் ஒழுகலாறு' என்கிறார். கயவர்கள் குறித்த கருத்துப் பகிர்வில் வள்ளுவப் பெருந்தகை, அவர்களிடம் எஞ்சிநிற்கும் நற்குணங்களில் ஒன்று அச்சப்படுவது மட்டுமே! என்கிறார். இங்கே அச்சப்படுவது நல்லது என்பது அவர் கருத்து. " அச்சமுடையார்க்கு அரணில்லை" எனவரும் ஓர் இடத்தில், 'எதற்கெடுத்தாலும் அச்சப்பட்டு நிற்பவர்களுக்கு வாழ்க்கையில் பாதுகாப்புக் கிட்டாது' என்று எச்சரிக்கிறார்.
இங்கே 'அஞ்சுவது கூடாது' என்கிறார். "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை!" எனவரும் குறளில் தான், 'எதற்கும் நான் அஞ்ச மாட்டேன்! என்று கூறுவது முட்டாள்தனமானது!; அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அறிவுடையவர்கள் நிச்சயம் அஞ்சவே செய்வார்கள்!' என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறார். அப்படியானால், அச்சப்படுவதையும் அறிவுக்கண் ஊடாகப் புகுத்திப் பார்த்துப், பகுத்துப் பார்த்து, அஞ்சுவதா? அஞ்சாமல் தள்ளுவதா? என்கிற முடிவுக்கு வர வேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டும்; அஞ்சத் தகாதவற்றைத் துணிச்சலோடு புறந்தள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அச்சப்படுவது என்பது, ஏற்கனவே நடந்த ஒரு துன்ப நிகழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, இம்முறையும் அதைப்போலவே நிகழ்ந்து விடுமோ? எனச் செயல் தொடங்கும் முன்னரே வருந்தி நிற்பது ஆகும். வரப்போகிறது வலியா? தோல்வியா? துன்பமா? என்பதை உணர முடியாமலேயே, கற்பனையாக எண்ணி அச்சப்படுவதும் உண்டு. சில மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தை கையில் எடுத்தவுடன் தூக்கம் வந்து விடும்; சிலருக்கு உடனே கழிப்பறை செல்ல வேண்டும்போல ஆகிவிடும். சிலர் தேர்வுக்குப் படிக்கும்வரை அச்சமின்றிப் படித்துவிட்டு, தேர்வறைக்குள் நுழைந்து, கேள்வித் தாளை வாங்கியவுடன் படித்த எல்லாமே சரசரவென அழிந்தழிந்து மறந்து போகும்.
இவ்வகை நிகழ்வுகளுக்கு எல்லாம் தேவையற்ற கற்பனைகள், மற்றும் மனக் குழப்பங்களால் உண்டாகும் பயமே காரணம் ஆகும். அச்சத்தை அந்தந்தக் காரண காரியங்களுக்கு ஏற்பத் துணிச்சலுடன் துரத்துவதற்கு முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டால், அச்சத்தையும் வெல்லலாம்! தேர்விலும் ஜெயிக்கலாம்!. 'உயிரச்சம்' என்பது, 'இதனால் உயிருக்குத் தொல்லைகள் நேருமே!. உயிர் சார்ந்த உடம்பிற்கும் ஊறுகள் தோன்றுமே!. அமைதியாகவும், நிம்மதியாகவும், விபத்துகள், ஆபத்துகள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டுவிடுமோ? என்று பயப்படுவதுதான்.
'உயிரச்சம்' என்பது எப்போதாவது ஒருமுறை தோன்றலாம்!. ஆனால் அது அன்றாடம் தோன்றினால், அது தீர்க்கப்பட வேண்டிய மனநோய் வகையில் சேர்ந்துவிடும். எந்த ஒரு உயிர்ப் பிராணிக்கும், உயிர் ஒருமுறைதான் போகும்! அதை தினமும் அச்சப்படுவதன் மூலம், அன்றாடம் போக்கிக் கொள்வது என்றால், வாழ்க்கையே அன்றாடம் செத்துப் பிழைப்பதுபோல் ஆகிவிடும். மரண பயம் மனிதனை மன நோயாளியாகவும், அதன்வழி உடல் நோயாளியாகவும் மாற்றிவிடும்.
ஒரு நாட்டில், எந்த வேலையுமே செய்யாத ஒரு இளைஞனைக் கைது செய்து சிறையில் அடைக்கும்படி அந்த நாட்டு ராஜா உத்தரவு பிறப்பித்தார். இளைஞனின் உறவினர்கள் எல்லாரும் ஒன்றுகூடி வந்து, 'அந்த இளைஞன் என்ன குற்றம் செய்தான்?; அவனை விடுதலை செய்யுங்கள்!' என்று ராஜாவிடம் முறையிட்டனர். 'அவன் எந்த வேலையும் செய்யாமல் இருந்ததுதான் குற்றம்!' என்று கூறிய ராஜா அந்த இளைஞனைச் சிறையிலிருந்து அழைத்து வரச் சொன்னார்.' உனக்கு நிபந்தனையுடன்கூடிய ஒரு வேலையை ஒப்படைக்க இருக்கிறேன்; ஒருமாதத்தில் அந்த வேலையைச் செய்து முடித்து விட்டாயானால், விடுதலை செய்வேன்! சம்மதமா?' என்று ராஜா கேட்டார். 'என்ன வேலை? என்ன நிபந்தனை?' என இளைஞன் ராஜாவைப் பார்த்துக் கேட்டான்.
'நான் இப்போது ஒரு செம்மறி ஆட்டையும், அந்த ஆட்டிற்குத் தேவைப்படும் ஒருமாதத்திற்கான தீவனத்தையும் தந்து விடப் போகிறேன். நீ வீட்டிற்கு எடுத்துச் சென்று நல்லபடியாச் செம்மறியாட்டை ஒரு மாதம் வளர்க்க வேண்டும். நிபந்தனை என்ன வென்றால், நீ ஆட்டைப் பெறும்போது அதனை எடைபோட்டு எடுத்துச் செல்ல வேண்டும்; ஒரு மாதம் கழித்து ஆட்டைக் கொண்டு வரும்போது ஆட்டை எடைபோட்டுப் பார்ப்போம்; ஒரு மாதத்திற்கு முன் ஆட்டை எடுத்துச் செல்லும்போது ஆடு என்ன எடை இருந்ததோ அதில் 100 கிராம் கூடக் கூடவோ, குறையவோ கூடாது. இந்த நிபந்தனைப்படி சரியாக நீ ஆட்டை வளர்த்துத் தந்தால் உனக்கு விடுதலை!' என்றார் ராஜா.
உடனே, 'எனக்கு பதில்கூற ஒருநாள் அவகாசமும், எனது வீடுவரை சென்றுவர அனுமதியும் தேவை!' என்று கேட்டான் இளைஞன். ராஜாவும் வழங்கினார். வீடு சென்ற இளைஞன் அங்கிருந்த வயது முதிர்ந்த தாத்தாவிடம் ஆலோசனை பெற்றான். மறுநாளே அரண்மனைக்கு வந்து, அரசனின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு, ஆட்டையும் தீவனத்தையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் ஆயிற்று; ராஜா வளர்க்கத் தந்த ஆட்டோடு அரண்மனை திரும்பினான் இளைஞன். அரசவையில் ஆடு அவையோர் முன்னிலையில் எடைபோட்டுப் பார்க்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! ஒரு மாதத்திற்குமுன் என்ன எடையில் இருந்ததோ அதே எடையில்தான் இப்போதும் ஆடு இருந்தது.
"என்ன விதமான உணவூட்டல் முறைகளைக் கையாண்டு, ஆட்டைப் பெருக்கவும் விடாமல், இளைக்கவும் விடாமல் பார்த்துக்கொண்டாய்?. என்ன 'கலோரி' அடிப்படையில் எந்த 'டயட்' முறையைக் கையாண்டீர்?" என்றெல்லாம் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு இளைஞனைக் கேள்விமேல் கேட்டுத் துளைத்தனர். "நான் சிறப்பாக எந்த முறையையும் கையாளவில்லை; என் தாத்தா சொல்லித் தந்த முறையைக் கையாண்டேன்!. வெற்றி பெற்றேன்!" என்றான் இளைஞன்.
"அது என்ன முறை என்றால், ஆட்டைக் கட்டிப்போட்டு, அரசன் தந்த சத்தான தீவனங்களையெல்லாம் நாள்தோறும் அதன்முன் போட்டேன். கூடுதலாக என் தாத்தா சொன்னபடி ஒரு ஓநாயைக் கூட்டி வந்து ஆட்டிற்கு எதிர்த்தாற்போல பத்தடி தூரத்தில் கட்டிப்போட்டு விட்டேன். ஆட்டிற்கு ஓநாய் பகை!. என்னதான் சத்தாகச் சாப்பிட்டாலும் எந்த நேரத்திலும் தமக்கு ஓநாயால் ஆபத்துக் காத்திருக்கிறது என்கிற அச்சமே அதன் உடம்பைப் பெருக்க விடாமல் பார்த்துக்கொண்டது. இதுதான் எனது வெற்றியின் ரகசியம்" என்றான் இளைஞன். உடம்பு இளைக்க உணவு மட்டுமல்ல அச்சமும் காரணம் ஆகும்.
தேவையற்ற அச்சம் தேவையற்ற நோய்களுக்கும் செயல் தடுமாற்றங்களுக்கும் ஆதாரம். அச்சப்படுவது ஒரு வகையில் எச்சரிக்கையாக இருப்பதற்குத் தேவைதான் என்றாலும், சதா அச்சப்பட்டுக் கொண்டே இருப்பதால் எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை.
தொடர்புக்கு 9443190098






