என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சனியின் வக்ர பலன்கள் 2025
- புதன் சூரியனை விட்டு ஒரு ராசிக்கு மேல் விலகிச் செல்லாது.
- குரு பகவான் வருடத்திற்கு 4 முதல் 5 மாதங்கள் வரையில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.
விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரியனின் கதிர்வீச்சை பெற்றே இயங்குகிறது. சூரியனின் கதிர்வீச்சில் இருந்து கிரகங்கள் விடுபடும் போது அதன் சுழற்சி வேகம் குறைந்து வக்கிர கதியை அடைகின்றன. இதை மேலும் விளக்கமாக கூறுவதென்றால் சூரியன் உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மனிதர்கள் அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடுகிறார்கள். சூரியன் மறைந்தவுடன் (அதாவது சூரிய ஒளி மறைந்தவுடன்) உடல் அலுப்பு அதிகமாகி ஒய்வு எடுக்கிறார்கள்.
அதே போல் கிரகங்களுக்கு சூரியனின் பரிபூரண ஒளிக்கதிர் கிடைக்காத போது கிரகங்கள் வக்ரகதியில் இருக்கும். கிரகங்களின் சுழல் வேகங்கள் நிலையானவை. பூமிக்கும் கிரகங்களுக்கு இடையிலான தூர வித்தியாசங்களால் ஒரு கிரகம் பின்னோக்கி செல்வது போல மாயத்தோற்றம் ஏற்படும். சூரியன், சந்திரனை தவிர அனைத்து கிரகங்களுக்கும் அதாவது செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கும் வக்ரகதி உண்டு.
ராகு, கேதுக்கள் இயற்கை வக்ர கிரகங்கள். குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியன் நிற்கும் ராசியில் இருந்து 5,6,7,8,9 ஆகிய ராசிகளில் நிற்கும் போது வக்ர கதியை அடைகின்றன. செவ்வாய் சூரியன் நின்ற ராசியில் இருந்து 6,7, 8-வது ராசியில் நிற்கும் போது வக்ரம் அடையும். சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்றும் முக்கூட்டு கிரகம் என்பதால் சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்/பின் ராசியில் 90 டிகிரிக்குள்ளாகவே இருக்கும் என்பதால் பஞ்சாங்கத்தின் உதவியின்றி சுக்கிரன், புதனின் வக்ர கதியை பஞ்சாங்கத்தின் உதவியுடனே அறிய முடியும்.
கிரகங்களின் வக்ர காலம்
புதன் சூரியனை விட்டு ஒரு ராசிக்கு மேல் விலகிச் செல்லாது. புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 24 நாட்கள் வக்ரகதியில் இருக்கும்.
சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 50 நாட்கள் வரை வக்ரகதியில் சஞ்சரிக்கும்.
செவ்வாய் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுமார் இரண்டு மாதம் முதல் 6 மாதம் வரை வக்கிரகதியில் சஞ்சரிக்கும். ஸ்தம்பனகதி என்னும் நிலையில் ஒரே ராசியில் ஆறு மாத காலம் கூட இருப்பார்.
குரு பகவான் வருடத்திற்கு 4 முதல் 5 மாதங்கள் வரையில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.
சனி பகவான் வருடத்திற்கு 4 மாதம் முதல் 5 மாதங்கள் வரை வக்ரகதியில் பயணிப்பார்.
ஐ.ஆனந்தி
கிரகங்களின் வக்ர பலன்கள்
1. வக்ர கிரகம் மாறுதலான பலனைத்தரும்.
2. வக்ர கிரகம் உக்ரமான பலனைத் தரும்.
3. வக்ர கிரகம் அதிக வலிமை பெறும்
4. வக்ர கிரகம் தன் முடிவை மாற்றாது.
5. வக்ர கிரகம் அதிகம் உள்ளவர்கள் விதிக்கு கட்டுப்பட்டு வாழ மாட்டார்கள்.
6. வக்ர கிரகம் அதிகம் உள்ளவர்கள் விதியை தன் விருப்ப படி மாற்ற விரும்புவார்கள்.
7. வக்ர கிரகங்களின் கொள்கை ஜாதகரையும் பாதிக்கும் ஜாதகரை சார்ந்தவர்களையும் பாதிக்கும். ஆனால் அதைப் பற்றி வக்கிர கிரகம் கவலைப்படாது. ஒரு முறை ஒரு விஷயத்தை முடிவு செய்தால் தன் பேச்சை தானே கேட்காது.
வக்ர கிரகம் எல்லா காலத்திலும் பிரச்சினையை தராது. தசா புத்தி காலத்தில் மட்டுமே கடுமையான பாதிப்பை தரும் என்பதால் வக்கிர கிரக தசாபுத்தி அந்தர காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். கிரகங்கள் தன் கடமையை செய்யும் யாரையும் விட்டு வைப்பதில்லை. வக்ரம் எனப்படுவதற்கு மாறுதலான இயக்கம் என்று பொருள். வக்ர கிரகங்கள் எதிர்மறையாகப் பலன் தரும். ராகு/கேதுக்களுக்கு இணையாக மாறுபட்ட பலன்களைத் தரும். சுப பலன் தரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
உச்ச கிரகம் வக்ரம் பெற்றால் நீச்ச பலனைத் தரும். நீச்ச கிரகம் வக்ரம் பெற்றால் உச்ச பலனைத் தரும். வக்ரகதியில் உள்ள கிரகம் சுப கோள்களின் சாரம் பெற்றால் கொடுக்க. வேண்டிய பலனை சற்றுத் தாமதமாகக் கொடுக்கும். 6,8,12-ம் அதிபதிகள் வக்கிரம் பெறும் போதும் பாதகாதிபதிகள் வக்கிரம் பெறும் போதும் சில யோகங்களை தருவார்கள். சுப கிரகங்கள் வக்ரம் பெற்றால் மனதால் ஏற்றுக் கொள்ள முடியாத சுப பலனை கொடுக்கும்.
அசுப கிரகங்கள் வக்ரம் பெற்றால் இரட்டிப்பு அசுப பலனையும் தருவார்கள். இது போன்று வக்கிர கிரகங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. என் அனுபவத்தில் வக்ர கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்களில் ராகு/கேதுக்களுக்கு இணையாக ஜாதகருக்கு சில, பல அசவுகரியங்களை வழங்குகிறது.
தற்போது கோட்சாரத்தில் மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 13.7.2025 அன்று முதல் 27.11.2025 வரை வக்ர கதியில் செல்லப் போகிறார்.
அதில் 13.7.2025 முதல் 3-10-2025 வரை தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் 4.10.2025 முதல் 27.11.2025 வரை பூரட்டாதி நட்சத்திரத்திலும் வக்ர கதியில் பயணிக்கிறார். சனிபகவான் தனது சுய நட்சத்திர சாரத்தில் வக்கிரமடையும் காலத்தில் நாட்டில் தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். புதிய தொழில் வரிகளால் வியாபாரிகள் மன சஞ்சலம் அடைவார்கள்.
விலைவாசியில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் விலை அதிகமாகும். பொது மக்களை குறிக்க கூடிய கிரகமான சனி பகவான் வக்ரமடைவதால் ஆட்சியாளர்களுடன் மக்களுக்கு மன பேதம் அதிகமாகும். முதலாளி தொழிலாளிகளிடையே ஒற்றுமை குறையும். வருட கிரகங்களின் பெயர்ச்சி சுய ஜாதக தசா புத்தியுடன் இணைந்தே பலனை நிர்ணயிக்கின்றன. ஒரு கிரகம் அசுப பலனை வெளிப்படுத்தினால் இன்னொரு கிரகம் இன்பத்தை தரும். மேலும் சுய ஜாதக ரீதியான தசா புத்தி சாதகமான நிலையில் இருந்தால் கோட்சார கிரகங்களும் சுப பலனைத் தரும். தசா புக்தி சற்று ஏற்ற இறக்கமாக இருந்தால் கோட்சார கிரகங்களால் சில பாதிப்புகள் வரலாம். இதனால் 12 ராசிகளுக்கு உண்டாகப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்
தற்போது மேஷ ராசிக்கு 12-ம் இடமான அயன சயன போக விரய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 13.7.2025 முதல் 3.10.2025 வரை தனது சுய நட்சத்திர சாரமான உத்திரட்டாதியில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். அதாவது மேஷ ராசிக்கு 10.11-ம் அதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சுய சாரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.
இது நாள் வரை உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் வெகுவாக குறையும். 4.10.2025 முதல் 27.11.2025 வரை மேஷ ராசிக்கு 9, 12ம் குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ர கதியிலும் பயணிக்கிறார். அந்த காலகட்டத்தில் ஆன்மீக பயணம், வெளிநாட்டு குடியுரிமை பெறுவதில் ஆர்வம் கூடும். வீண் விரயம், வைத்தியச் செலவுகள் குறையும். அறுவை சிகிச்சை வரை சென்ற கை, கால், மூட்டு வலி பிரச்சனைகள் தாமாக சீராகும். தந்தை, தந்தை வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட அலைச்சல், அலுப்புகள் குறையும். வக்ர கால பாதிப்புகள் குறைய செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் வழங்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கோச்சார சனி பகவான் 13.7.2025 முதல் 3.10.2025 வரை தனது சுய நட்சத்திர சாரமான உத்திரட்டாதியில் வக்ர கதியில் சஞ்சரக்கிறார். அரசு உத்தியோக முயற்சி இழுபறியாகும். புதிய தொழில் முயற்சியில் அதிக கவனம் தேவை. முக்கிய பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்களை கவனமாக பராமரிக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. 4.10.2025 முதல் 27.11.2025 வரை ரிஷப ராசிக்கு 8,11-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்தி ரத்தில் வக்ர கதியில் பயணிக்கிறார்.
8,11-ம்மிடம் பணபர ஸ்தானம். மறைமுக வருமானம் ஈட்டுவதையும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை தவிர்க்கவும். விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம் போன்ற பாதிப்புகள் குறையும். முக்கிய பஞ்சாயத்துகள் வழக்குகள் இழுபறியாகும். மூத்த சகோதரர், சித்தப்பாவை பகைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் புரிபவர்கள் அதிக முதலீட்டில் பெரிய தொழிலில் நடத்துபவர்கள் சுய ஜாதக பரிசீலனை செய்து கொள்வது நல்லது. சிலருக்கு விபரீத ராஜயோக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடி வரும். சனியின் வக்கிர பாதிப்புகள் குறைய வெள்ளிக் கிழமை வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் கோச்சாரத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். ராசிக்கு 8,9 அதிபதியான சனிபகவான் தனது சுய நட்சத்திர உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரை வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். தந்தையுடன் தர்க்கம் செய்வதை தவிர்க்கவும். விபத்து கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். தனிமை உணர்வு நீங்கும். தொழில் போட்டிகள் உருவாகலாம். அலைச்சல் வேலைப் பளு அதிகமாகும்.
4.10.2025 முதல் 27.11.2025 வரை மிதுன ராசிக்கு 7, 10 ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம். லாபம் சற்று ஏற்ற, இறக்கமாக இருக்கும். சிலர் தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். தொழிலை தக்க வைத்துக்கொள்ள சில முதலீடுகள் செய்ய நேரிடும். உத்தி யோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள். இரண்டாவது குழந்தை பிறக்கும். சிலர் இரண்டாவது முறையாக கருத்தரிப்பார்கள். புதன் கிழமை பச்சைப்பயிறு தானம் வழங்கவும்.
கடகம்
கடக ராசிக்கு 7,8-ம் அதிபதியான சனிபகவான் கோட்சாரத்தில் ராசிக்கு 9ம்மிடமான பாக்யஸ்தனாத்தில் சஞ்சரிக்கிறார். இவர் தனது சுய நட்சத்திரமான உத்திரட்டாதியில் 13.7.2025 முதல் 3.10.2025 வரையில் வக்ர கதியில் சஞ்சரிக்கப் போகிறார். புதிய முயற்சிகளில் கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். தம்பதிகளுக்குள் நிவவிய பனிப்போர் விலகும். மறு விவாக முயற்சியில் நேரமும், காலமும் விரயமாகும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட பணம், பொருள், நகை, உயில், சொத்து, காப்பீட்டு பணம் போன்றவைகள் கிடைக்கலாம். 4.10.2025 முதல் 27.11.2025 வரை கடக ராசிக்கு 6, 9-ம் அதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் பயணிக்கிறார். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும்.
வேலை இல்லாதவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் தகுந்த வேலை கிடைக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும்.
மீதமுள்ள 8 ராசிக்கான பலன்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.
தொடரும்...
செல்: 98652 20406






