என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை மாநிலத்தில் மின்வினியோகத்தை தனியார் மயமாக்குவதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கான கோப்பினை கவர்னர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு புதுவையில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி, மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த புதுவை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் புதுவை அரசு சார்பில், புதுவை மாநிலத்தில் மின்துறை நல்ல முறையில் செயல்படுவது தொடர்பாகவும், பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நஷ்டம் பெரிய அளவில் இல்லாதது தொடர்பாகவும் மின் துறைக்கு சொந்தமான ரூ.1,200 கோடி சொத்தை தனியார் மயமாக்க முடியாது என தெரிவித்து கவர்னர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

    இந்த கோப்பின் மீது எந்த முடிவும் எடுக்காமல் கவர்னர் கிரண்பேடி அதை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    பாகூர்:

    கொரோனா ஊரடங்கால் உடல்நலம் பாதித்த தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அதியமான் (வயது 27). மீனவர். சென்னையைச் சேர்ந்த செம்பருத்தி என்ற சந்திரலேகா (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின் செம்பருத்தி, கணவருடன் நல்லவாடு பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

    செம்பருத்தியின் தாயார் சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து தாயாரைப் பார்க்க செம்பருத்தி விரும்பினார். இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மனைவியை அழைத்துச்செல்ல அதியமான் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மகனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சென்னை செல்லலாம் என்று அதியமான் தெரிவித்து இருந்தார். அதன்படி கடந்த 5-ந்தேதி பிறந்தநாளும் நடந்து முடிந்தது. ஆனால் அதன் பிறகும் மனைவியை சென்னைக்கு அழைத்துச்செல்லவில்லை. இதனால் மனமுடைந்த செம்பருத்தி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து தவளகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கொரோனா ஊரடங்கால் சென்னையில் உள்ள தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 
    கொரோனாவை ஒழிக்க மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது, மார்க்கெட்டுகளில் விழிப்புணர்வு, ரோந்துபணி மேற்கொள்வது, சுகாதாரத் துறையுடன் இணைந்து முககவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    காலத்தின் தேவையறிந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தொற்றை எதிர்த்து போராட ஒற்றுமைதான் மிகவும் அவசியம். கொரோனா பரவலை தடுக்க தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியம். எனவே தகவல் பரிமாற்றத்தையும், ஒன்றிணைத்து செயல்படுவதையும் மேலும் பலப்படுத்துவோம். இதன்மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் இலக்கை அடைவோம்.

    தனிமனித உடற்பயிற்சி, சமூகபொறுப்பு, சுயஒழுக்கம் ஆகியவற்றை இன்னும் மேம்படுத்த நாம் தொடர்ந்து பாடுபடுவோம், கொரோனா கட்டுப்பாட்டு அறை அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் தகவல்களையும் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த அதிகாரி இதனை வழி நடத்தி வருகிறார். பொதுமக்கள் 104 இலவச தொலைபேசி எண் சேவையை தொடர்புகொண்டு தங்கள் புகார்கள், தகவல்களை அளிக்க முன்வர வேண்டும்.

    புதுவை மக்களும் கொரோனாவை கட்டுப்படுத்த கைகோர்த்து செயல்பட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மண்டல மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மண்டல மருத்துவர்கள் சுகாதாரத்துறை இயக்குனருடன் தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுடனும் ஒன்றிணைந்து அவர்களிடமிருந்தும் தகவல்களை பெற்று கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 8.4.2019 அன்று இரவு வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் கோட்டகுப்பம் முகமது யூனுஸ் என்பவரின் மகன் உசேன் (வயது 22) என்பவர் அங்கு வந்தார்.

    அவர் அந்த சிறுவனை மோட்டார் சைக்கிளில் கடத்திக்கொண்டு ஆரோவில் பகுதிக்கு சென்றார். அங்கு அவர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் அவர் அந்த சிறுவனை வீட்டின் முன்பு கொண்டு வந்து விட்டுச்சென்றார். அந்த சிறுவன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தான்.

    இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், ரமேஷ் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தனபால் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட உசேனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனபால் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து உசேனை போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,862 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,862 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் இறந்துள்ளதால் பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் இறந்துள்ளதால் பலி எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி. உப்பளம் அம்பேத்கர் சாலையில் இவரது வீடு உள்ளது. இங்கு வேலைபார்த்து வந்த பெண் ஒருவருக்கு கடந்த வாரம் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    இந்தநிலையில் கந்தசாமியின் தாயார் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையொட்டி அமைச்சர் கந்தசாமியின் குடும்பத்தினர் அனைவரையும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவர்கள் கோரிமேட்டில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று அதிவிரைவு பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதன் முடிவில் அமைச்சர் கந்தசாமி, அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான விக்னேஷ் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.எஸ்.ஜே. ஜெயபால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று மாலை தான் வீடு திரும்பினார். இதற்கிடையே கடந்த வாரம் திங்கட்கிழமை சட்டசபை வளாகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முகாமில் அமைச்சர் கந்தசாமி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை.

    தற்போது மீண்டும் பரிசோதனை செய்ததில் அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சட்டசபை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரின் அலுவலகத்தையும் ஒரு சில நாட்கள் மூட திட்டமிடப்பட்டு உள்ளது.

    கடந்த 31-ந் தேதி தலைமை செயலகத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டார். இதனால் மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகிறார்கள்.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,432 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,432 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரியில் இன்று மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,432 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 857 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19,08,255 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12.82 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 5.86 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 39795 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,432 ஆக உயர்ந்துள்ளது.
    ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுகாதார ஊழியர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் கொரோனா பிரிவில் பணிபுரிய கூடுதல் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுகாதார ஊழியர்கள் 50 பேர் மீது கோரிமேடு போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையொட்டி சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை அதிகரிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் தற்போது 259 பேரும், ஜிப்மரில் 381 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புதுவை மாநிலத்தில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையொட்டி சட்டசபை வளாகத்தில் நேற்று மாலை முதல்-அமைச்சர் நாராயணசாமி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், துறையின் செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகளை அதிகப்படுத்துவது, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் படுக்கைகள் பெறுவது, சிகிச்சை முறையில் மாற்றங்கள் கொண்டு வரலாமா? மேலும் தடுப்பு முறைகள், வருங்காலத்தில் நோயாளிகள் அதிகமானால் சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் பரிசோதனை கருவிகள் வாங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தொடர்பாகவும் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் இனிவரும் காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு தடையில்லாமல் இலவச அரிசி வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவிக்கப்பட்ட பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    காரைக்காலில் இந்து கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்காலில் காஞ்சீபுரம் கோவில்பத்து கிராமம் உள்ளது. இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான சவுதா என்ற சின்னதம்பி என்பவர் நிலம் வாங்கினார். இவர் இஸ்லாமியர் ஆவார். ஏற்கனவே அந்த இடத்தில், அப்பகுதியை சேர்ந்த இந்துக்கள் சூலம் நட்டு வழிபட்டு வந்தனர். இந்தநிலையில் அங்கு கட்டிடமாக முனீஸ்வரன் கோவிலை கட்டி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர். இதுபற்றி சவுதாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் அந்த இடத்தை கோவிலுக்கே எழுதித் தர முன்வந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கினார்.

    அதன்படி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், கோவில் அமைந்துள்ள இடத்தை தானமாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை கோவில் நிர்வாகி பசுபதியிடம் ஒப்படைத்தார்.

    ஒரு அங்குல நிலத்தைக்கூட பிறருக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத இந்த கால கட்டத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய காரைக்காலை சேர்ந்த இஸ்லாமியரான சவுதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்து கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கியது குறித்து சவுதா என்கிற சின்னதம்பி கூறுகையில், ‘தற்போது முனீஸ்வரன் கோவில் உள்ள நிலத்தை மனைகளாக பிரித்து விற்பதற்காக, அரசுத் துறையில் அனுமதி கோரியபோது, அந்த இடத்தில் கோவில் இருப்பதாகவும், அதற்கு சம்மதம் தெரிவிக்கிறீர்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என அதிகாரிகள் கேட்டனர். ஆனால் நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், 1,200 சதுர அடி உள்ள அந்த இடத்தை ஈகை திருநாளின்போது அந்த கோவிலுக்கே எழுதி வைத்துவிட்டேன். கோவில் அருகே உள்ள 3 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் பூங்கா அமைப்பதற்காக நகராட்சிக்கு எழுதி கொடுத்துவிட்டேன்’ என்றார், பெருமிதத்துடன்.

    ×