search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    கொரோனாவை ஒழிக்க மக்களும் கைகோர்க்க வேண்டும்- கவர்னர் அறிவுறுத்தல்

    கொரோனாவை ஒழிக்க மக்களும் கைகோர்க்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது, மார்க்கெட்டுகளில் விழிப்புணர்வு, ரோந்துபணி மேற்கொள்வது, சுகாதாரத் துறையுடன் இணைந்து முககவசம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    காலத்தின் தேவையறிந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். தொற்றை எதிர்த்து போராட ஒற்றுமைதான் மிகவும் அவசியம். கொரோனா பரவலை தடுக்க தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியம். எனவே தகவல் பரிமாற்றத்தையும், ஒன்றிணைத்து செயல்படுவதையும் மேலும் பலப்படுத்துவோம். இதன்மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் இலக்கை அடைவோம்.

    தனிமனித உடற்பயிற்சி, சமூகபொறுப்பு, சுயஒழுக்கம் ஆகியவற்றை இன்னும் மேம்படுத்த நாம் தொடர்ந்து பாடுபடுவோம், கொரோனா கட்டுப்பாட்டு அறை அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து செயல்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களின் தகவல்களையும் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த அதிகாரி இதனை வழி நடத்தி வருகிறார். பொதுமக்கள் 104 இலவச தொலைபேசி எண் சேவையை தொடர்புகொண்டு தங்கள் புகார்கள், தகவல்களை அளிக்க முன்வர வேண்டும்.

    புதுவை மக்களும் கொரோனாவை கட்டுப்படுத்த கைகோர்த்து செயல்பட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மண்டல மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். மண்டல மருத்துவர்கள் சுகாதாரத்துறை இயக்குனருடன் தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகங்களுடனும் ஒன்றிணைந்து அவர்களிடமிருந்தும் தகவல்களை பெற்று கொரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×