search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து கோவிலுக்கு நிலத்தை இலவசமாக வழங்கி அதற்கான பத்திரத்தை கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்த காட்சி
    X
    இந்து கோவிலுக்கு நிலத்தை இலவசமாக வழங்கி அதற்கான பத்திரத்தை கோவில் நிர்வாகியிடம் ஒப்படைத்த காட்சி

    இந்து கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கிய இஸ்லாமியர் - பாராட்டுகள் குவிகின்றன

    காரைக்காலில் இந்து கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    காரைக்கால்:

    புதுவை மாநிலம் காரைக்காலில் காஞ்சீபுரம் கோவில்பத்து கிராமம் உள்ளது. இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான சவுதா என்ற சின்னதம்பி என்பவர் நிலம் வாங்கினார். இவர் இஸ்லாமியர் ஆவார். ஏற்கனவே அந்த இடத்தில், அப்பகுதியை சேர்ந்த இந்துக்கள் சூலம் நட்டு வழிபட்டு வந்தனர். இந்தநிலையில் அங்கு கட்டிடமாக முனீஸ்வரன் கோவிலை கட்டி பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர். இதுபற்றி சவுதாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் அந்த இடத்தை கோவிலுக்கே எழுதித் தர முன்வந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கினார்.

    அதன்படி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில், கோவில் அமைந்துள்ள இடத்தை தானமாக பத்திர அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை கோவில் நிர்வாகி பசுபதியிடம் ஒப்படைத்தார்.

    ஒரு அங்குல நிலத்தைக்கூட பிறருக்கு விட்டுக்கொடுக்க விரும்பாத இந்த கால கட்டத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் தனது நிலத்தை தானமாக வழங்கிய காரைக்காலை சேர்ந்த இஸ்லாமியரான சவுதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இந்து கோவிலுக்கு இலவசமாக நிலம் வழங்கியது குறித்து சவுதா என்கிற சின்னதம்பி கூறுகையில், ‘தற்போது முனீஸ்வரன் கோவில் உள்ள நிலத்தை மனைகளாக பிரித்து விற்பதற்காக, அரசுத் துறையில் அனுமதி கோரியபோது, அந்த இடத்தில் கோவில் இருப்பதாகவும், அதற்கு சம்மதம் தெரிவிக்கிறீர்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என அதிகாரிகள் கேட்டனர். ஆனால் நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், 1,200 சதுர அடி உள்ள அந்த இடத்தை ஈகை திருநாளின்போது அந்த கோவிலுக்கே எழுதி வைத்துவிட்டேன். கோவில் அருகே உள்ள 3 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் பூங்கா அமைப்பதற்காக நகராட்சிக்கு எழுதி கொடுத்துவிட்டேன்’ என்றார், பெருமிதத்துடன்.

    Next Story
    ×