என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.
    புதுச்சேரி:

    உலக சுகாதார நிறுவனத்தின் துணை இயக்குனர் ஜெனரல் டாக்டர் சவுமியா சாமிநாதன் நேற்று புதுச்சேரிக்கு வந்தார். சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் வார் ரூமுக்கு சென்று அவர் ஆய்வு நடத்தி கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதை கேட்டறிந்தார். அவருக்கு கோவிட் வார் ரூமின் சிறப்பு பணி அதிகாரி பங்கஜ்குமார் ஜா விளக்கினார்.

    அதைத்தொடர்ந்து சட்டமன்ற வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை டாக்டர் சவுமியா சாமிநாதன் சந்தித்து பேசினார். சட்டமன்ற கமிட்டி அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

    அப்போது புதுவை மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை செயலாளரும், கலெக்டருமான அருண் விளக்கி கூறினார். கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தெரிவித்தார். கொரோனாவை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசுக்கு டாக்டர் சவுமியா சாமிநாதன் ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் கவர்னர் கிரண்பேடியை போனில் தொடர்புகொண்டு பேசினார். அவரிடம் டாக்டர் சவுமியா சாமிநாதன் தெரிவித்த விவரங்களை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தொற்று பாதிப்பு விவரங்களை அறிதல், சோதனை மற்றும் தடுப்பு திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், எந்தவகையிலும் இவற்றில் எதையும் குறைக்கவேண்டாம் என்றும் சவுமியா சாமிநாதன் தெரிவித்தார். கொரோனா மட்டுமின்றி மற்ற மருத்துவ சேவைகளையும் உறுதி செய்ய கேட்டுக்கொண்டார். கொரோனா நீண்ட காலம் இருக்கும் என்பதால் மற்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இவற்றில் ஏதேனும் குறைபாடு அல்லது தளர்வு ஏற்பட்டால் அதை மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும், சிறிய வீடுகளில் தனிமைப்படுத்துவது என்பது எல்லா உறுப்பினர்களையும் பாதிக்கும்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தீவிரமடையும் போதே மாநிலம் முழுவதும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அரசு அதற்கான நடவடிக்கை எடுக்காததால்வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெறுமாறு ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    தொற்று பாதித்தோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் இந்த அரசு எந்த ஒரு சிறு நிதியுதவியும் செய்யவில்லை. கொரோனா பாதித்து குணமடைந்தோருக்கு யாரும் வேலை வழங்க முன்வராததால் அந்த குடும்பங்கள் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு தான் அரசு சார்பில் ரூ.700 அளவுக்கு உணவுப் பொருள் வழங்கப்படுகிறது.

    மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.230 சாப்பாட்டிற்காக அரசு செலவு செய்கிறது. இந்த தொகை ரூ.300 ஆக உயர்த்தப்படும் என் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனாவுக்காக வீடுகளில் சிகிச்சை பெற திருப்பி அனுப்பப்படுபவர்கள் குறைந்தது 20 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு மக்களை ஏமாற்றாமல் உடனே உதவிகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    இறைச்சி கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே பாஸ்கர் என்பவர் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கடைக்குள் சென்று கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் பாஸ்கர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து துப்பு துலக்கியதில் மடுவுபேட் பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற மணிவண்ணன், சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் தான் பணம் பறித்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரித்ததில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சாலையோர கடையில் 3 பேரும் 750 ரூபாய்க்கு பனியன் எடுத்து விட்டு பணம் கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் இதுவரை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,680 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1,504 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1,246 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இதுவரை 3,828 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 
    புதுச்சேரியில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,680 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள் நிலையில் 16,95,982 குணமடைந்துள்ளனர். 47,033 பேர் உயிரிழந்துள்ளனர்.  6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்தியாவில் குணமடைந்தோர் சதவிகிதம் 70.77 ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.98 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் விகிதம் 27.27 ஆகவும் உள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  6,680 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 3,828 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 102 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை (வயது 56). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்தநிலையில் நேற்று பிற்பகல் அவர் மரணமடைந்தார். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியானதில் ஏழுமலைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    ஊசுடு தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்டு ஏழுமலை வெற்றிபெற்றார். அதன்பின் 2001 தேர்தலில் கண்ணன் தலைமையிலான புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். காங்கிரஸ்-புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2004 வரை உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பின் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் ஊசுடு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாசிக் நிறுவனத்தின் தலைவராகவும் ஏழுமலை பதவி வகித்து உள்ளார். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.

    வில்லியனூர் அருகே உள்ள பங்கூரில் தனது குடும்பத்துடன் ஏழுமலை வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கவிப்பிரியா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

    புதுவையில் ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ.வும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பாலன் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஏழுமலையும் பலியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 41.78 சதவீத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மாநிலத்தில் இன்று அதிக அளவாக 481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆகவும், உயிரிழப்பு 96 ஆகவும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 2,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் நாளை மறுநாள் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
    புதுச்சேரியில் இன்று மேலும் 481 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,381 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.

    தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும்.

    நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக இன்று மேலும்  481 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,381 ஆக உயர்ந்துள்ளது.
    கொசு உற்பத்தியை தடுக்க தவறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பராவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய்களை வராமலும் பரவாமலும் தடுக்கலாம். மலேரியா பரப்பும் கொசுக்கள் பொதுவாக நன்னீர் தேக்கங்களான மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகள், கிணறுகள், பெரிய சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆகையால் மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைப்பதாலும், கிணறுகளை வலை கொண்டு மூடுவதாலும் மலேரியா கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.

    உயிர்க்கொல்லி நோயான டெங்குவை பரப்பும் கொசுக்கள் பொதுவாக தேனீர் குடுவைகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பானைகள், ஆட்டு உரல்கள், பூஞ்சாடிகள், டயர்கள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தேங்கியுள்ள தண்ணீர் மேலும் தேங்காய் மட்டைகள், இளநீர் குடுவைகளில் டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

    இப்பொருட்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவாமல் தடுக்கலாம். மக்கள் குப்பைகளை வாய்க்காலில் கொட்டாமல் இருப்பதன் மூலம் யானைக்கால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் அவரவர் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள இடங்களை தாங்களாகவே முன்வந்து தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து நோய் பரவாமல் தடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    சுகாதாரத்துறை உத்தரவின்படி மலேரியா, டெங்கு மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் கொசு உற்பத்தியை உண்டாக்கும் இடங்களை தடுக்க தவறும்பட்சத்தில் அந்த நபர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    தற்போது கொரோனா பாதிப்பு புதுவையில் அதிகமாக உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் இணைய தளம் மூலம் உணவு பொருட்களை வரவழைத்து சாப்பிடுகிறார்கள். பிறகு காலியான பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கப்புகளை வீட்டிற்கு அருகாமையிலேயே போட்டுவிடுகிறார்கள். இதில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகிறது. இதன் மூலம் டெங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    ஆகையால் இப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்டால் டெங்கு நோய் வராமல் தடுக்கலாம். இந்தசூழ்நிலையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா நோயை தடுக்கலாம்.

    மழைக்காலங்களில் மக்கள் கொசு வளர்ச்சியை தடுக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒத்துழைப்பதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் இல்லாத புதுச்சேரியை உருவாக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    கொரோனா தடுப்பு முயற்சியில் தோல்வி அடைந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தன் தவறை மறைக்க கவர்னரை வம்புக்கு இழுக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒட்டுமொத்த யூனியன் பிரதேசத்திற்கும் தான் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதை மறந்து மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்பட்டு வருகிறார். ஏனாம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் அசைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் சுட்டிக்காட்டியவுடன் அங்குள்ள தன்னார்வல தொண்டு நிறுவன செலவில் வழங்கப்படுவதாக கூறுகிறார்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு வழங்க எந்த தனியார் தொண்டு நிறுவனத்திடமாவது பேசினாரா? அல்லது அழைப்பாவது விட்டாரா? இவை எதையும் செய்யாமல் புறக்கணித்துவிட்டு தற்போது சப்பை கட்டு கட்டுகிறார்.

    தனது தவறை மூடி மறைக்க கவர்னர் கிரண்பேடியை சண்டைக்கு இழுக்கிறார். உண்மையில் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கொரோனா நோயாளிகளை சந்திப்பவன் ஹீரோ இல்லை. சக அமைச்சர்களுக்குக்கூட கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க தவறிவிட்டார்.

    கடந்த சில தினங்களாக அருகில் உள்ள தமிழக மாவட்டங்களைவிட இங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நோய்த்தொற்று பரவலை தடுக்க ஹீரோவாக செயல்பட வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதுபோல் செயல்படாமல் இருப்பதுதான்.

    ஆரம்பகாலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவும், தங்கும் இடமும் வழங்கப்பட்டது. தற்போது இடம் மட்டுமே வழங்கப்படுகிறது, உணவுகூட வழங்கப்படுவது இல்லை. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தற்போது வரை உள்ளது. அதுபோல் கொரோனா நோயாளிகளுக்கு என மாத்திரை மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இதை நோயாளிகளுக்கு வழங்கினால் விரைவில் அவர்கள் குணமடைவார்கள். ஆனால் அந்த மாத்திரையைக்கூட இதுவரை வாங்கித்தரவில்லை. புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி, குணப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    புதுச்சேரியில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
     
    இந்நிலையில், புதுச்சேரியில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 3,532 பேர் குணடைந்துள்ளனர்.
    கவர்னர் கிரண்பேடிக்கு கடவுள் பாடம் கற்பிப்பார் என்று புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குறைபாடுகள் இருப்பதாக வந்த புகார்கள் தொடர்பாக நானே நேரில் சென்று 2 நாட்கள் ஆய்வு நடத்தினேன். நோயாளிகள் சொன்ன குறைகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது சாப்பாட்டிற்காக ரூ.230 செலவு செய்கிறோம். அதை ரூ.300 ஆக உயர்த்த முதல்-அமைச்சரிடம் கேட்டுள்ளேன். அவரும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஏனாமில் நோயாளிகளின் சாப்பாட்டிற்காக ரூ.225தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள நோயாளிகளுக்கு அசைவ உணவுகள் தன்னார்வல தொண்டு நிறுவன செலவில்தான் வழங்கப்படுகிறது. அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.

    புதுவையிலும் நோயாளிகளுக்கு கூடுதல் உணவு வகைகளை வழங்க கூறியுள்ளேன். விரைவில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும். இந்த காலகட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மீது யாரும் குறை சொல்ல வேண்டாம். அப்படி செய்தால் பணியில் அவர்களுக்கு சலிப்பு ஏற்படும்.

    சண்டே மார்க்கெட்டில் தமிழக பகுதியில் இருந்து வந்தவர்கள் கடைபோட்டதாக புகார்கள் வருகிறது. நாளை பேரிடர் மேலாண்மைகுழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வாரம் 2 நாட்கள் முழு ஊரடங்கு போட வலியுறுத்துவேன்.

    மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை நம்மால் இப்போது மக்களுக்கு கொடுக்க முடியவில்லை. அந்த அரிசியை ஆசிரியர்களை வைத்து கொடுக்க கவர்னர் உத்தரவிடுகிறார். அப்படி கொடுத்தால் அரிசி வழங்க 2 மாதங்கள் ஆகும். ரேஷன்கடைகள் மூலம் வழங்கினால் 5 நாட்களில் கொடுத்துவிடலாம்.

    இந்த விவகாரத்தையும் கவர்னர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கொண்டு சென்றுள்ளார். முதல்-அமைச்சரும் உள்துறை செயலாளரிடம் பேசி உள்ளார். கவர்னர் தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று செயல்படுகிறார். அவர் மீண்டும் தவறு செய்யவேண்டாம்.

    கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் இருக்கும் நோயாளிகளிடம் இருந்து புகார் வந்தபோது கவர்னர் ஏன் அங்கு செல்லவில்லை. முன்பு சைக்கிளில் ஆய்வுக்கு சென்றவர் இப்போது செல்ல வேண்டியதுதானே? அவர் முன்பு நடத்திய நாடகத்தை இப்போது நடத்த வேண்டியதுதானே? கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்தால்தான் உண்மையான ஹீரோ.

    தவறான முடிவுகள் எடுக்கும் கவர்னர் கிரண்பேடிக்கு கடவுள் பாடம் கற்பிப்பார். நோயாளிகளை காப்பாற்ற போராடுபவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இல்லாவிட்டால் கடந்த 3 மாதமாக தூங்கியதுபோல் இப்போதும் தூங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×