search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    கொசு உற்பத்தியை தடுக்க தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்- சுகாதாரத்துறை எச்சரிக்கை

    கொசு உற்பத்தியை தடுக்க தவறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பராவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய்களை வராமலும் பரவாமலும் தடுக்கலாம். மலேரியா பரப்பும் கொசுக்கள் பொதுவாக நன்னீர் தேக்கங்களான மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகள், கிணறுகள், பெரிய சிமெண்டு மற்றும் பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றில் இனப்பெருக்கம் செய்கிறது. ஆகையால் மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைப்பதாலும், கிணறுகளை வலை கொண்டு மூடுவதாலும் மலேரியா கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.

    உயிர்க்கொல்லி நோயான டெங்குவை பரப்பும் கொசுக்கள் பொதுவாக தேனீர் குடுவைகள், உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், பானைகள், ஆட்டு உரல்கள், பூஞ்சாடிகள், டயர்கள், குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் தேங்கியுள்ள தண்ணீர் மேலும் தேங்காய் மட்டைகள், இளநீர் குடுவைகளில் டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்கிறது.

    இப்பொருட்களை முழுவதுமாக அப்புறப்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவாமல் தடுக்கலாம். மக்கள் குப்பைகளை வாய்க்காலில் கொட்டாமல் இருப்பதன் மூலம் யானைக்கால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் நேரத்தில் அவரவர் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள இடங்களை தாங்களாகவே முன்வந்து தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரித்து நோய் பரவாமல் தடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    சுகாதாரத்துறை உத்தரவின்படி மலேரியா, டெங்கு மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை பரப்பும் கொசு உற்பத்தியை உண்டாக்கும் இடங்களை தடுக்க தவறும்பட்சத்தில் அந்த நபர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    தற்போது கொரோனா பாதிப்பு புதுவையில் அதிகமாக உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் இணைய தளம் மூலம் உணவு பொருட்களை வரவழைத்து சாப்பிடுகிறார்கள். பிறகு காலியான பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய கப்புகளை வீட்டிற்கு அருகாமையிலேயே போட்டுவிடுகிறார்கள். இதில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகிறது. இதன் மூலம் டெங்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    ஆகையால் இப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்டால் டெங்கு நோய் வராமல் தடுக்கலாம். இந்தசூழ்நிலையில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் கொரோனா நோயை தடுக்கலாம்.

    மழைக்காலங்களில் மக்கள் கொசு வளர்ச்சியை தடுக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒத்துழைப்பதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் மற்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் இல்லாத புதுச்சேரியை உருவாக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×