என் மலர்
புதுச்சேரி
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது இன்று காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்தது.
மேலும், நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நாளை பிற்பகலில் கரையை கடக்க உள்ளது. அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்:
வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. இதையொட்டி கடலோர பகுதி முழுவதும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மீனவ கிராமங்களுக்கும் சென்று தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 11 மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு 480 விசைப்படகுகளும், 1000 பைபர் படகுகளும் உள்ளன.
இந்த தொழிலை நம்பி 12 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். ஆழ்கடலில் விசைப்படகு மூலம் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கி மீன் பிடித்து கரை திரும்புவதுண்டு.
தற்போது புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
ஆனால், 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற 200 மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை. காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவ கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து மீனவ பஞ்சாயத்தாருக்கும், மீன் வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகள் மூலம் கடலுக்கு சென்ற மீனவர்கள் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
நிவர் புயல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக மாநில பேரிடர் மாநில அவசரகால மையத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அனைத்து அரசுதுறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நிவர் புயல் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி புதுவையில் ஒவ்வொரு துறைகளிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்கம்பம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யவும், மரங்களில் உள்ள கிளைகளை அகற்றவும், மரங்கள் கீழே விழாமல் பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
மின்சாரம் தடைபட்டாலும் தடையில்லாமல் குடிநீர் வழங்கவும், மின்சாரம் தடைபட்டால் 12 மணி நேரத்தில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். 99 சதவீத மீனவர்கள் புதுவைக்கு திரும்பி வந்துவிட்டனர். புதுவையில் ஒரு படகில் மட்டும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப வில்லை.
காரைக்காலில் 90 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை, கடலோர காவல்படை மூலம் கரை திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் காலக்கெடு இருக்கிறது. மீனவர்களின் படகு மற்றும் வலைகளை பத்திரமாக வைக்க உத்தரவிட்டுள்ளோம்.
தேவையான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டு உள்ளோம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருமணம் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்து போதுமான உணவு வழங்கப்படும்.
தாழ்வான பகுதிகளில் என்ஜின் மோட்டார் மூலம் நீரை அகற்றவும் தயாராக ஏற்பாடுகள் செய்துள்ளோம். புதுவையில் 84 மையங்கள் அமைத்துள்ளோம்.
வியாபார நிறுவனங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நாளை வரை மூட உத்தரவிட்டுள்ளோம்.
தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வேண் டாம் என்று தொழிற்சாலைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். வியாபார நிறுவனங்களை மூட வலியுறுத்தி உள்ளோம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.
உயிர் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலை எதிர் கொள்ள அனைத்து துறைகளும் 24மணி நேரமும் செயல்பட்டு தயார் நிலையில் உள்ளது.
புதுவையில் நானும், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி ஆகியோரும் காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணனும் களப்பணியில் ஈடுபடுவோம்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும்வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பற்றி திறக்கப்பட்ட நிலையில் நிவர் புயல் காரணமாக மழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






