என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா (பிப்ரவரி-3) மாலை முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது
    புதுச்சேரி:

    புதுவை  காளத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி  (பிப்ரவரி-3) மாலை முதல் கால யாக பூஜை நடைபெறுகிறது.

    புதுவை மிஷன் வீதியில் பிரசித்தி பெற்ற காளத்தீஸ்வரர்  கோவில் (செட்டிக்கோவில்) உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    இந்த நிலையில் மீண்டும் இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் வருகிற 6&ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

    இதனையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை  9 மணிக்கு மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் நடந்தது. மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, தீபாரதணை நடைபெற்றது. இன்று மாலை 4.30 மணிக்கு மேல் முதல் காலை யாக பூஜை நடைபெறுகிறது. 6 மணி முதல் 7 மணி வரை ஆன்மீக சொற்பொழிவும்,  7 மணி முதல் 9.30 மணி வரை புதுவை சம்பந்தம் குருக்கள் குழுவினரின் திருமுறை திருப்புகழ் இன்னிசை நடக்கிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7மணிக்கு 2&ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 7 மணிக்கு 4&ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5&ம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

    6&ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் 9.20 மணிக்கு கற்பகவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சிவகாமி அம்பிகா சமேத நடராஜர், ஞானாம்பிகா சமேத நடராஜர், ஞானாம்பிகா சமேத காளத்தீஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், இந்து சமயஅறநிலையத்துறை செயலர் மகேஷ், ஆணையர் சிவசங்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழுவினர், திருப்பணி ஆலோசனைக்குழுவினர் மற்றும் புதுவை ஆயிர வைசிய மரபினர்கள் செய்து வருகிறார்கள்.
    புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2-ந் தேதி 3 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 499 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 286, காரைக்காலில் 159, ஏனாமில் 53, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    புதுவையில் 94, காரைக் காலில் 25, ஏனாமில் 7, மாகியில் 8 பேர் என 134 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 432, காரைக்காலில் 141, ஏனாமில் 120,  மாகியில் 18 பேர் என 711 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆ யிரத்து 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 551 பேர் சிகிச்சையில்  குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 4 ஆயிரத்து 135, காரைக்காலில் ஆயிரத்து 971, ஏனாமில் 368, மாகியில் 30 பேர் என 6 ஆயிரத்து 504 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 638 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  

    புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்த 82 வயது முதியவர், சுதானா நகரை சேர்ந்த 60 வயது பெண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர்  எண்ணிக்கை ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 38 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி  போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.
    மத்திய பட்ஜெட்டில் புதுவை புறக்கணிப்பால் பா.ஜனதா கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள் என ரங்கசாமிக்கு தி.மு.க. மறுபரிசீலனை செய்யவேண்டும்.
    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம், புதுவை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் திருத்திய மதிப் பீட்டுக்கு மத்திய அரசு ரூ.150 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளது. 6-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியபோது இழப்பீடு வழங்கியது. 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்கு எந்த நிதியும் வழங்கவில்லை. 

    மழை சேதத்தை மத்தியக்குழு பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என புதுவை அரசு கோரியிருந்தது. இதைப்பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 

    ஏற்கனவே பல துறை சார்ந்த ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அங்கன் வாடி ஊழியர்கள் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். ஆட்சி மாறினாலும், காட்சி எதுவும் மாறவில்லை. சிறிய பணிகள்கூட நடைபெறவில்லை. இதனால் புதுவை மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர். 

    கூட்டணியில் இருந்தாலும் புதுவைக்கென மத்திய அரசு எதையும் வழங்க தயாராக இல்லை. எனவே பா.ஜனதா கூட்டணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    அண்ணா நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம்,  கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    dmk

    புதுவை மாநில தி.மு.க.வினர் எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் ஏ.எப்.டி. திடலில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். 

    நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில் குமார், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், செந்தில்குமார், சண்.குமார வேல், பெல்லாரி கலிய பெருமாள், தொகுதி பொறுப் பாளர்கள் கோபால், முகிலன், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்  தைரியநாதன், ஜே.வி.எஸ். சரவணன் என்ற ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், சக்திவேல்,  வேலன்,  அருள்செல்வி, பழனி,  பிரபாகரன், சத்தியா ஆறுமுகம், பாஸ்கர்,  தொகுதி செயலாளர்கள் ராமசாமி, முத்துவேல், சவுரிராஜன், சிவகுமார், தியாகராஜன், தங்கவேல், கோதண்டம், ஆர்.சக்திவேல், திராவிடமணி, ஜி.சக்திவேல், சீதாரமன், ராஜாராமன், பாண்டு அரிகிருஷ்ணன்,  கலிய கார்த்திகேயன்,  அணிகளின் அமைப்பாளர்கள் முகமது யூனூஸ்,  மணிமாறன், அண்ணா அடைக்கலம், விஜயராஜ், மதனா, தேன்மொழி  பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, பாண்டுராசன், இளஞ்செழிய பாண்டியன், செல்வநாதன், கோதண்டராமன், லோக கணேசன், அகஸ்டின் சித்து, அருண்குமார், பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    admk1புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், உப்பளத்தில் உள்ள தலைமைக் அலுவலகத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 

    பின்னர் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், பெரியசாமி, ராஜாராமன், இணை செயலாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பானந்தம்,  சின்ன துரை, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, அன்பழக உடையார், கணேசன், உமா, மூர்த்தி,  ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி, மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அண்ணா நினைவு நாளையொட்டி மாநிலம் முழுவதும் அன்னதானம், நலத்திட்ட  உதவிகளும் வழங்கப்பட்டது. 


    admk2புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

    பின்னர் ஓம்சக்தி சேகர் தலைமையில் நிர்வாகிகள் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர். 

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பேராசிரி யர் ராமதாஸ், இணை செயலாளர் காசிநாதன்,  துணை செயலாளர்கள் கோவிந்தம்மாள், நாகமணி, சதாசிவம், கணேசன், பொருளாளர் சங்கர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலய இளங்கோ, ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், மாசிலா குப்புசாமி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், மாணவரணி செயலாளர் புகழ்பாரி, மகளிரணி செயலாளர் வெரோனிகா, பாசறை  தலைவர் ராதாகிருஷ்ணன் உடையார், தொகுதி செயலாளர்கள் வேலவன், வெங்கடேசன், கமல்தாஸ், கோபால்,  ஆனந்தன், நகர செயலாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதியநீதி கட்சி சார்பில் அண்ணாசிலைக்கு மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், நடராஜன், தேவநாதன், கேசவன், வக்கீல்கள் ராஜேந்திரன், இளங்கோ, மகேஷ், வேல்பாரி, மோகன், சேகர், கோவிந்தராஜ், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கெண்டனர்.
    கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்து கொடுத்தார்.
    புதுச்சேரி: 

    ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கத்தில் அரசு சமுதாய மருத்துவமனை இருந்து வருகிறது. 

    இந்த ஆஸ்பத்திரிக்கு கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள  50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்று வருகின்றனர். 

    ஆனால், அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்து வருகிறது இதனால் அடிக்கடி ஆம்புலன்ஸ் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

    எனவே, கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் ஏற்பாடு செய்தார். 

    அதன்படி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.36 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி கரிக்கலாம்பாக்கம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த  நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை டாக்டர் திருமலை சங்கர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ரெட்டியார்பாளையத்தில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி: 

    புதுவை ரெட்டியார்பாளையம் ஆரூத்ராநகர் முதல் தெருவை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 29) எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு திருமணமாகி 1 ¾ ஆணடு ஆகிறது. 

    இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. ஜெயபாரதி தனியார் எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். பழனி ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிராஜா வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி ஜெயபாரதி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனமுடைந்த பழனிராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார். உடனே அவரது மனைவி ஜெயபாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  பழனிராஜா பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க-தி.மு.க. புறக்கணித்தன.
    புதுச்சேரி:

    புதுவையில் 10 ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் தேர்தல் நிறுத்தப்பட்டது. இடஒதுக்கீடு அளிக்க சசிதரன்  தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ரெட்டியார்பாளையத்தில்  உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் ராய்பிதாமஸ்  தலைமை வகித்தார். 

    தேர்தல் துறை அதிகாரிகள் வஞ்சுனவள்ளி, ஆலோசகர்   சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காங்கிரஸ் பெத்தபெருமாள், அ.தி.மு.க. மோகன்தாஸ், இந்திய கம்யூனிஸ்டு கீதநாதன், மார்க்சிஸ்டு நடராஜன் உள்பட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

    ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., எதிர்கட்சியான தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணத்தை புறக்கணித்தன.  கூட்டத்தில், இடஒதுக்கீடு பிரச்சினையை 2 மாதத்தில் முடித்து தேர்தலை நடத்த வேண்டும். தமிழகம் போல இடஒதுக்கீடு இல்லாமல்  தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 

    தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பேசும்போது, கட்சி  நிர்வாகிகளின் ஆலோ சனைகள் கருத்தில் கொள்ளப்படும். விரைவில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.  

    தி.மு.க.  தொடர்ந்த வழக்கு வருகிற 7-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணைக்கு வர உள்ளது. இதன் முடிவை பொறுத்து புதுவையில் உள்ளாட்சி தேர்தல் சூடு பிடிக்கும் என தெரிகிறது.
    அப்பா பைத்தியம் சாமி கோவிலில் 7-ந்தேதி குரு பூஜை நடக்கிறது.
    புதுச்சேரி: 

    சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சாமிகள் கோவிலில் 22-ம் ஆண்டு குருபூஜை விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
     
    இதையொட்டி காலை 7 மணி முதல் ஞானவிநாயகர், ஞானமுருகர், சற்குரு அப்பா பைத்தியம் சாமிகளுக்கு மகா அபிஷேகம், 12.30  மணிக்கு மகாதீபாராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு அன்னமளிப்பு விழா நடக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் பக்தர்கள் செய்து வருகின்றனர். 

    இதேபோல புதுவை திலாசுப்பேட்டையில்  உள்ள அப்பா பைத்தியம் சாமி  கோவிலும் வருகிற 7-ந்தேதி குருபூஜை விழா நடக்கிறது.  காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு நடக்கிறது. 7.30  மணிக்கு அப்பா பைத்தியம் சாமிக்கு தமிழில் வேள்வி வழிபாடு.

    காலை 9 மணிக்கு வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், தீபாராதனை ந டக்கிறது. பிற்பகல் 1 மணிக்கு அபிஷேகம், திருக்குட நன்னீராட்டு, 12 மணிக்கு திருமுறை விண்ணப்பம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
    தந்தை இறந்த துக்கத்தில் புதுவை பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை வாலிபர் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சேட் (வயது50). இவரது மகன் ராஜ்குமார்(27). கடந்த 20-ந் தேதி சேட் திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 30-ந்தேதி இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் 31-ந் தேதி நடந்தது.

    தந்தை தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையடைந்த ராஜ்குமார் அன்றிரவு அங்கிருந்து பஸ் மூலம் புதுவைக்கு வந்தார்.

    புதுவை பஸ் நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கி கிடந்த அவரிடம் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினரை வரவழைத்தனர்.

    இதையடுத்து உறவினர்கள் ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

    ராஜ்குமார் புதுவை பஸ் நிலையத்தில் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இதுகுறித்து அவரது உறவினர் பாக்கியராஜ் புதுவை உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ஜெய்குல் (வயது22). இவர் புதுவை அரியூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் அருகே கிருஷ்ணகிரி மீன்குடியல் பகுதியை சேர்ந்த சார்லஸ் (38) என்பவரும் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் ஜெய்குலிடம் தனது மோட்டார் சைக்கிள், ஐபேடு மற்றும் சில பொருட்கள் தருவதாக கூறி ரூ.1.லட்சத்து 70 ஆயிரம் வாங்கினார். ஆனால் சார்லஸ் அந்த பொருட்களை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் திடீரென வீட்டை காலி செய்து விட்டு சார்லஸ் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜெய்குல் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சார்லஸ் இதற்கு முன்பு சென்னையில் ஒரு தேசிய வங்கியில் மானேஜராக பணிபுரிந்து பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்திருந்ததும், இதனால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பணம் மோசடி செய்து தலைமறைவான சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுவையில் காதலியுடன் தனியார் விடுதியில் தங்கி இருந்த காதலன் திடீரென மயங்கி விழுந்து இறந்து போனார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வேலூர் திருநகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் பொழில் இளவேனில் (வயது24). இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இருவரும் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கி புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.

    நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்று விட்டு இரவு விடுதியில் தங்கினர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ரமேசுக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. உடனே பொழில்இளவேனில் காதலனை சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் விடுதிக்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை ரமேசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொழில்இளவேனில் விடுதி ஊழியர்கள் உதவியோடு ரமேசை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொழில் இளவேனில் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தை மின்துறை ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்.
    புதுச்சேரி:

    நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்தநிலையில் கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின் ஊழியர்கள் சங்க பிரதிநிதி களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இந்தநிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கி விட்டது.

    ஏற்கனவே தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

    ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்துறை தலைவரின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 2 நாட்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.

    இதன்காரணமாக மாநிலம் முழுவதும் நகர, கிராமப் புறங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல், மின் அலுவலகம் முற்றுகை, பஸ் சிறை பிடிப்பு போன்ற போராட்டங்களில் குதித்தனர்.

    இதனால் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதில் அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தலைவர் சண்முகம் மற்றும் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய தொழிற்சங்கத்தினரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இருதரப்பிலும் தற்காலிகமாக சமரசம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெற அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மின்துறை தனியார் மயம் தொடர்பாக பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊழியர்கள் பணி பாதுகாப்பு, மக்கள் நலன் குறித்து ஆராயப்பட்டது.

    புதுச்சேரியின் தற்போதைய நிலை குறித்து மீண்டும் மத்திய அரசுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியல் கட்சி தலைவர்கள், மின்துறை ஊழியர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிந்து மின்துறை தனியார் மயம் குறித்து அரசு முடிவு எடுக்கும்.

    மின்துறை ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மின்துறை ஊழியர்களும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். மின்துறை ஊழியர்களுக்கு அறிவித்த உத்தரவாதத்தை அரசு நிறைவேற்றும். மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியை மேற்காள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரி மின்துறை போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

    மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களாக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்தநிலையில் முதல்-அமைச்சர், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்கள், பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். மின்துறை தொழிற்சங்க ஊழியர்கள் அளிக்கும் கருத்துக்களை மத்திய அரசுக்கு விளக்கி தனியார் மயமாக்கமாட்டோம் வாக்குறுதி அளித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து வேலைநிறுத்த போராட்ட்ம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் நாளை (இன்று வியாழக்கிழமை) முதல் பணிக்கு திரும்புவோம். மின்துறை தனியார் மயம் நடவடிக்கை தொடர்ந்தால் ஊழியர்களின் போராட்டமும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×