என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வம்பா கீரப்பாளையத்தில் கழிவு நீர் தொட்டிகளை பா.ஜ.க.வினர் சீரமைத்தனர்.
    புதுச்சேரி:

    உப்பளம் சட்ட மன்ற தொகுதி வம்பாகீரப்பாளையம் மீனவர் பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் தொட்டிகள் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருமளவில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்த அப்பகுதி மக்கள் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மூலமாக தொகுதி பொறுப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான   வெற்றிச்செல்வத்திடம்   தகவல் தெரிவித்தனர். 

    உடனே வெற்றிச் செல்வம், தொகுதி தலைவர் சக்திவேல் மாநில செயற்குழு  உறுப்பினர் மாரியப்பன், தெய்வநாயகம் ஆகியோரோடு  புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு கழிவுநீர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  பொதுப்பணித்துறை பொது சுகாதாரத்துறை கழிவுநீர் அதிகாரிகள் அதிநவீன தகுந்த வாகனத்துடன், ஊழியர்களோடு வந்து பார்வையிட்டு அடைப்புகளை சரி செய்தனர்.
    திருக்கனூர் அருகே கஞ்சாவிற்ற 4பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே சுத்துக்கேணி ஏரிக்கரை பகுதியில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கும் கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக காட்டேரிக் குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்து விசாரனை நடத்தினர். அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்திய போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.  அவர்கள் மொத்தம் 500கிராம் கஞ்சா வைத்திருந்தனர்.  இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர் பாடியை சேர்ந்த சஞ்சய் (வயது28) அஜித் குமார்(22) சுத்துக்கேணி அம்பேத்கார் வீதியை சேர்ந்த அருள்(22) மற்றும் சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன்(22) என்பதும் இவர்கள் குறிப்பாக கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  கஞ்சா 2மோட்டார் சைக்கிள் 2செல்போன் மற்றும் கஞ்சா விற்பனை பணம் ரூ.500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் அவர்கள் எங்கிருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும், இதன் பின்னணியில் யார், யார்?  உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பாகூர்:

    புதுவை தெற்கு போலீஸ் சூப்பிரண்டு கண்காணிப்பில் முதலியார்பேட்டை, அரியாங் குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ளது.

    இதில் அதிக குற்ற சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகள் அதிகமுள்ள பகுதியாக அரியாங்குப்பம் முதலிடத்திலும், முதலியார்பேட்டை 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

    அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் வெடிகுண்டு கலாச்சாரம், கஞ்சா விற்பனை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இதனைத் தடுக்க போதிய போலீஸ் இல்லாததால் இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பாக 10 குற்றவாளிகள் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஜெயிலில் இருந்து உள்ளூரில் உள்ள ரவுடிகளை கொண்டு இயக்கி வருவதும் தெரியவந்துள்ளது. ஆனால் போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை. இது சம்பந்தமாக அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

    கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ரவுடிகளை ஒடுக்கும் வகையில் புதுவை காவல்துறை விடியல் ஆபரே‌ஷன் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.

    இதன்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவது, மேலும் ஆயுதங்கள் பறிமுதல் செய்வது என ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள். மற்றும் போலீசார் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீரென ரவுடிகள் வீடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் இரு பிரிவாக அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். மேலும் பழுதடைந்த கட்டிடங்கள், ஒதுக்குப்புற இடங்களிலும் சோதனை செய்தனர். ஆனால் குற்றவாளிகள் உஷாரானதால் போலீசார் அவர்கள் யாரையும் பிடிக்க முடியவில்லை. மேலும் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

    அதிகாலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை செய்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கரிக்கலாம்பாக்கத்தில் முன்விரோதத்தில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது30). இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. 

    அனிதா தற்போது தமிழ்நாடு காவல்துறையில் பணி கிடைத்து பயிற்சி பெற்று வருகிறார். செல்வத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் செல்வம் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மாதவன் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். மது போதையில் முன் விரோதத்தை மனதில் வைத்து மாதவன் தனது நண்பருடன் சேர்ந்து செல்வத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.

    மேலும் பீர் பாட்டிலை உடைத்து செல்வத்தின் தலையில் குத்தினார். அதோடு இதே இடத்தில் கொலை செய்துவிடுவதாக செல்வத்தை மிரட்டிவிட்டு மாதவன் தனது நண்பர் களுடன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வத்தை அங்கிருந் தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் செல்வம் அனுமதிக்கப்பட்டார். அங்கு செல்வம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் செல்வத்துரை கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  மாதவன் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.
    புதுவையில் தனித்தனி விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மனைவி ஜெயகாந்தா(வயது53). இவர் புதுவை உழவர்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று  ஜெயகாந்தா ஒரு தட்டுவண்டியில் காய் கறிகளை ஏற்றிக்கொண்டு அந்த வண்டியிலேயே அமர்ந்து உழவர் சந்தைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அண்ணாசாலையில் வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென தட்டு வண்டியில் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயகாந்தா காலில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஜெயகாந்தாவை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயகாந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர் திருமானிகுயில் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது30). சம்பவத்தன்று   இவர் தனது மனைவி ரம்யா கிருஷ்ணன்(27) என்பவருடன் புதுவையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். 

    புதுவை&கடலூர் மெயின் ரோடு பூரணாங்குப்பம் சந்திப்பில் வந்த போது திடீரென சாலை தடுப்பு கட்டையில் கார் மோதியது.

    இதில் ரம்யா கிருஷ்ண னுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக அதே காரில் அவரது கணவர் பாக்யராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரம்யா கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    எண்ணெய் வகைகளை தொடர்ந்து புதுச்சேரியில் இரும்பு டன்னுக்கு ரூ.20 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது. சிமெண்டு, எலக்ட்ரிக்கல் பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது.
    புதுச்சேரி:

    ரஷியா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரின் தாக்கம் பல்வேறு விதங்களில் பொதுமக்களை பாதித்து வருகிறது. குறிப்பாக தங்கத்தின் விலை கடந்த 2 வாரத்தில் நிலையற்றதாக இருந்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.55 வரை அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் பங்குச்சந்தை நிலவரத்துக்கேற்ப அவ்வப்போது இரும்பு விலை (முதல் தரம்) ஏற்றத்தாழ்வை சந்திப்பது வழக்கம். ஆனால் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து இரும்பு விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது.

    அதாவது, புதுச்சேரியில் கடந்த 15 நாட்களில் மட்டும் (முதல், 2-ம் தரம்) ஒரு டன் ரூ.20 ஆயிரம் வரை இரும்பு விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த மாதம் (பிப்ரவரி) இறுதியில் இரும்பு (முதல் தரம்) ரூ.75 ஆயிரமாக இருந்தது. ஆனால் டன்னுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்து தற்போது ரூ.95 ஆயிரமாக விற்கப்படுகிறது. 2-ம் தரம் ரூ.62 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்ந்து ரூ.82 ஆயிரமாக உள்ளது.

    இந்தநிலையில் முதல் தரம் கம்பிகள் ஓரிரு வாரங்களில் மேலும் ரூ.15 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    அதேபோல் சிமெண்டு ஒரு மூட்டை (50 கிலோ) ரூ.350-ல் இருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி கட்டுமான தளவாடங்களான எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பொருட்களும் சற்று விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து இரும்பு வியாபாரிகள் மதி, மோகன், யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    இரும்பு விலையில் தேவைக்கேற்ப ஏற்றத்தாழ்வு இருக்கும். கோடை காலங்களில் அதிகரித்தும் மழைக்காலங்களில் குறைந்தும் விற்கும். ஆனால் இந்தியாவில் இரும்பு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இந்தநிலையில் தற்போது ரஷியா- உக்ரைன் இடையேயான போர் காரணமாக மூலப்பொருட்கள் இறக்குமதி குறைவு மற்றும் பங்கு சந்தை சரிவால் இரும்பு விலை கடந்த 15 நாட்களில் மட்டும் டன்னுக்கு முதல், 2-வது தரம் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இது வியாபாரிகளை மட்டுமின்றி காண்டிராக்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விலை உயர்வு காரணமாக பல இடங்களில் கட்டுமான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக வியாபாரிகள், காண்டிராக்டர்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகள் முழுவதும் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே இரும்பு கம்பி உள்பட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    சிறப்புக்கூறு நிதியை செலவிடாததை கண்டித்து தலித் பழங்குடியின கூட்டமைப்பினர் புதுவை சட்டசபையை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    புதுச்சேரி:

    சிறப்பு கூறு நிதியை செலவிடாததை கண்டித்து புதுவை தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக இன்று காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டசபை நோக்கி வந்தனர்.

    ஊர்வலம் மற்றும் போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் நீலகங்காதரன் தலைமை வகித்தார். தலித் உரிமை இயக்க தேசிய தலைவர் ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலமாக வந்த போராட்ட குழுவினரை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசார் தடுப்புகளை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்ட குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரிகார்டுகளின் மீது ஏறி சட்டமன்றம் நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.

    இருப்பினும் சிலர் சட்டமன்ற நுழைவு வாயிலுக்கு சென்றனர். சட்டமன்ற காவலர்கள் நுழைவு வாயில் கதவை மூடினர். அங்கு தரையில் அமர்ந்த போராட்ட குழுவினர் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    எஸ்.சி., எஸ்.டி. சிறப்புக்கூறு துணைத்திட்ட நிதியை புதுவை அரசு முழுமையாக செலவிட வேண்டும்.

    சென்டாக்கில் தேர்வான மாணவர்களுக்கு மட்டும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என பாரபட்சம் காட்டக்கூடாது. சிறப்புக் கூறு நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை செயல்படுத்தாத புதுவை அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரகாஷ், ராஜா, புண்ணியக் கோடி, எழிலன், சேகர், ராமன், ஏகாம்பரம், அரிகிருஷ்ணன், கண்ணதாசன், லெனின், கங்காதரன், சரவணன், நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுவையில் பிரபல ஜவுளி கடையில் கொள்ளையடிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை அண்ணாசாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த ஜவுளிக்கடையை வழக்கம் போல இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் முடிந்ததும். கடை உரிமையாளர் கல்லாப்பெட்டியில் ரூ.17 ஆயித்தை மட்டும் வைத்து பூட்டிவிட்டு மீதி பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றார். 

    மறுநாள் காலை 9,40 மணிக்கு ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது பணம் வைக்கும் கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடை உரிமையாளர் ஜவுளிக்கடைக்கு விரைந்து வந்தார். கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.17 ஆயிரம் கொள்ளை போயிருந்ததை கண்டார். இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கடையில் பொறுத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவு 2 மணிக்கு மேல் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. எனவே 2 மணிக்கு மேல்  ஜவுளிக்கடையில் கொள்ளை சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரிகிறது.

    கடையின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் திருடர்கள் எப்படி வந்திருப்பார்கள் என போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 5-வது மாடியில் கிரில் கேட் திறந்து கிடந்தது. இந்த வழியை பயன்படுத்தி திருடர்கள் பணத்தை கொள்ளை அடித்து சென்றிருக்காலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து அங்கு சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்து தொர்டந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    முகமூடி அணிந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

    சாலை விரிவாக்கத்துக்காக திருவண்டார் கோவிலில் இருந்து மதகடிப்பட்டு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் அகற்றப்பட்டு  வருகிறது. 
    திருபுவனையில் ஏரிக்கரை யோரம் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

    இந்த நிலையில் இன்று காலை புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு சுற்றுச்சூழல் ஆர்வலர் இயக்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பனைமர முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பனை மரங்களை அகற்று வதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே, பனை மரங்களை அகற்றாமல்  சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
    உழவர்சந்தையில் வியாபாரிகள் அடாவடித்தனம் செய்து காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
    புதுச்சேரி:

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் பொதுமக்களுக்கு நேரடியாக சென்றடைய  வேண்டும் என்ற நோக்கத்திலும், இதன் மூலம் விவசாயிகளும், பொது மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத திட்டத்தில் தமிழகத்தில் முதல் முறையாக உழவர்சந்தை கொண்டு வரப்பட்டது. 

    அதனைத்தொடர்ந்து புதுவையிலும் உழவர்சந்தைகள் தொடங்கப்பட்டன. புதுவை பழைய பஸ் நிலையம், லாஸ்பேட்டை, அரியாங்குப்பம், அரும்பார்த்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உழவர்சந்தை ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், நாளடைவில் இதற்கு வரவேற்பு இல்லாததால் பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர்சந்தையை தவிர மற்ற இடங்களில் உழவர்சந்தைகள் செயல்படவில்லை. 

    பழைய பஸ் நிலையத்தில் உள்ள உழவர்சந்தைக்கு கிராமப்புற பகுதிகளில் இருந்து கீரை வகைகள், கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைக்காய்,  கொத்தவரங்காய், பாகற்காய், மாங்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். 

    குறைந்த விலையில் இவைகள் விற்பனை செய்யப்படுவதால் நகர பகுதி மக்கள் வாங்கி பயனடைந்து வந்தனர். ஆனால், நாளடைவில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    இது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கிய உழவர்சந்தை தற்போது வியாபாரிகள் சந்தையாக மாறிவிட்டது என பொதுமக்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
    இந்த ஆண்டு புதுவை சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அன்பழகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி: 

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் போலி மதசார்பின்மையை பேசும் கட்சிகளுக்கு சரியான பாடத்தை மக்கள் அளித்துள்ளார்கள். 

    5 மாநிலத்தில் 4-ல் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். பிரதமர் மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு புதுவை மாநில  அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

    காங்கிரஸ் தனது தவறான செயல்பாட்டினால் பஞ்சாபில் ஆட்சியை இழந்து  உள்ளது. நாட்டின் பிரதான 2-வது தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தவறான செயல்பாட்டினால் மாநில கட்சியாக மாறுவது கவலைதரும் விஷயமாகும். 

    புதுவையில் எதிர்வரும் பட்டெஜட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்டங்களுடன் முழுமையான பட்ஜெட்டை ரங்கசாமி அறிவிப்பார். பட்ஜெட்டுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து உரிய ஆலோசனையை பெற்று சிறந்த ஒரு பட்ஜெட்டை அளிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. தொற்று எண்ணிக்கை பூஜ்யமானது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. புதுவையில் 4, காரைக்காலில் 2 பேர் என 6 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

    புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 774 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

    புதுவையில் 7, காரைக்காலில் 10, மாகியில் 4 பேர் என 21 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 21 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது.

    புதுவையில் 2-வது தவணை உட்பட 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    ×