என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருபுவனை அருகே செல்போனை தாய் பறித்துக்கொண்டதால் பிளஸ்-2 மாணவி எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சிலுக்காரிபாளையம் மயிலம் பாதை பகுதியை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் சாலை பணி மேற்கொள்ளும் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி புஷ்பவதி. இவர்களது மகள் ‌ஷகி (வயது 16). இவர் திருபுவனையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ‌ஷகி வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் புஷ்பவதி கண்டித்து வந்தார்.

    இதுபோல் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ‌ஷகி செல்போனை வெகுநேரமாக பார்த்துக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.

    பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில் படிக்காமல் இப்படி ஏன் செல்போன் பார்த்துக் கொண்டு இருக்கிறாய்? என கேட்டு செல்போனை புஷ்பவதி பறித்து வைத்துக் கொண்டார்.

    இதனால் மன வருத்தம் அடைந்த ‌ஷகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார்.

    ஆனால், இதனை ‌ஷகி யாரிடமும் சொல்லவில்லை. 2 நாள் கழித்து ‌ஷகிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரிடம் தாய் புஷ்பவதி விசாரித்த போது எலி மருந்தை தின்று விட்ட தகலை தெரிவித்தார்.

    உடனே ‌ஷகியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் ‌ஷகி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து புஷ்பவதியின் உறவினர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவை காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு விற்பனை முயற்சிகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுவை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை சங்க தலைவர் சபாபதி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஜெயசங்கர் மற்றும் மனோகர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் முகவர்கள் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் ஜனகர் நன்றி கூறினார்.
    மரப்பாலம் சிக்னலில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி வைத்திலிங்கம் எம்.பி.யிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைத்து தர கோரி வைத்திலிங்கம் எம்.பி.யை சந்தித்து சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கும், புதுவையிலிருந்து கடலூருக்கும், மேலும் காரைக்காலில் ஒரு திட்டம் என நான்கு திட்டங்கள் மூலம் புதிய ரெயில் பாதை அமைக்க தாங்கள் வைத்த கோரிக்கையின் மூலம் நிறைவேறி விடும் என்று நம்புகிறேன்.

    புதுவையில் உள்ள பல சட்டமன்ற தொகுதியில் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     எனது முதலியார்பேட்டை தொகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். தாங்கள் தங்களின் நிதியிலிருந்து 200 எல்.இ.டி. பல்புகள் ஒதுக்கி தந்தீர்கள். அது முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

    முதலியார்பேட்டை- கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பு பஸ் நிறுத்தத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. 

    இதனால் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தங்களின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மரப்பாலம் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மேம்படுத்தப்பட்ட நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைவார்கள். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், சபயர் நியூயார்க் நிறுவன பிரதிநிதி பிரியதர்ஷினி, வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை  கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) சபயர்  நியூயார்க்  நிறுவனத்துடன்  புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு  பரிமாற்றம் செய்து கொண்டது. 

    சபயர் நியூயார்க்   நிறுவனம்,  அமெரிக்காவின் நியூயார்க் நகரை  தலைமையிடமாக கொண்டு செயல்படும்  அனைத்து  வீடியோ நிபுணத்துவ நெட்வொர்க்கிங் பிளாட்பார்ம்  வாய்ப்பு களுடன் மக்களை இணைக்கும் ஒரு  நிறுவனம் ஆகும். 

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்  தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி  கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு துறை அதிகாரி  ஜெயக்குமார்   முன்னிலையில்,  எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண் மற்றும்   சபயர்  நியூயார்க்  நிறுவன பிரதிநிதி பிரியதர்ஷினி ஆகியோர்  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவரை காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 21). ரவுடி. இவர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் சுந்தர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது காதலி, தன் காதலன் ஒரு ரவுடி என்பதை கேள்விப்பட்டு, அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். கடந்த 3 மாதங்களாக எவ்வளவோ முயன்றும் காதலியுடன் சுந்தரால் பேச முடியவில்லையாம். இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் அவர் தனது தோழிகளுடன் பாண்டி மெரினா பீச்சுக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுந்தர், ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய் என்று கூறி, அவரை கையால் தாக்கினார். மேலும் என்னை காதலிக்கவில்லை என்றால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதில் காயம் அடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி சுந்தரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    அண்ணா நகரில் பாலத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணியால் மரப்பாலம் சந்திப்பில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப் பாளையத்தில் இருந்து வரும் மேட்டு வாய்க்கால், ரெட்டியார்பாளையம், பூமியான்பேட்டை, இந்திரா காந்தி சதுக்கம், அண்ணாநகர், அய்யனார் நகர் வழியாக உப்பனாற்றில் கலக்கிறது.

    மழைநீர் வடியும் முக்கிய வாய்க்காலான இதில் பூமியான்பேட்டை, அண்ணாநகர் எதிரில் சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்கால் தூர்ந்து போனது. 

    இதனால் மழைகாலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மழைநீர் விரைவாக வெறியேற பூமியன்போட்டை சந்திப்பில் ரூ.66 லட்சத்தில் ப்ரீகாஸ்ட் முறையில் சிறிய பாலம் கட்டப்பட்டது. 

    அதேபோல   நெல்லித் தோப்பு அண்ணா நகர் எதிரில் சாலையின் குறுக்கே 27 மீட்டருக்கு சிறிய பாலம் கட்டும் பணி ரூ.1.75 கோடியில் தொடங்கியுள்ளது. இதற்காக இந்திராகாந்தி சிக்னல் எதிர்புறம் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    5 நாட்களுக்கு இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அண்ணாநகர்   எதிரே சாலையின் நடுவே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சாய்தளம் அமைப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. 

    பாலத் துக்கான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. ப்ரீகாஸ்ட் முறையில் தயாரித்து வைத்துள்ள 27 கான்கிரீட்  பெட்டிகளை பயன்படுத்தி சிறிய பாலம் அமைக்கப்பட   உள்ளது. போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் மரப்பாலம் சந்திப்பு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உள்ளது. 

    சென்னை, விழுப்புரம், கடலூர் என அனைத்து மார்க்கத்திலும் இருந்து வரும் வாகனங்கள் மரப்பாலத்தை கடந்து புவன்கரே வீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தன. பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் கடலூர் சாலை வழியாக மரப்பாலம் வந்து செல் கின்றன. 

    இதனால் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் இப்பகுதியில் கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம்-அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    இக்கோவிலில் மகோற் சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு சாமி வீதி உலா நடந்து வந்தது.

    கடந்த  8-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் ரணகளிப்பும், அதனை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அம்மனை அலங்கரித்து தேரில் அமர்த்தி தேரோட்டம் நடந்தது. 

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேரினை இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று  கோவிலை வந்தடைந்தது.  இரவு மயான கொள்ளை நடந்தது. பின்னர் வீதி உலா நடைபெற்றது.  

    விழாவில் செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அனிபால் கென்னடி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி, அ.தி.மு.க. மாநில துணைச்செயலாளர் குமுதன் புருஷோத்தமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா,  துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்த லிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.
    வேளாண் அறிவியல் மையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவிலேயே சிறந்த வேளாண் அறிவியல் நிலையமான புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் அரசின் தெளிவற்ற கொள்கை, திறமையின்மையாலும் மெதுவாக அழிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 716 நிலையங்களில் புதுவை முதலிடத்தில் இருந்தது. 

    இங்கு வேளாண் ஆராய்ச்சியாளரை இயக்குனராக நியமிக்காதது, தன்னாட்சி அதிகாரம் வழங்காதது, 11 ஆண்டாக பணிபுரிந்த 153 தினக்கூலி ஊழியர்களை பணி நீக்கம்செய்தது போன்ற காரணத்தில் சரிவை நோக்கி செல்கிறது. பணிநீக்கம்  செய்யப்பட்ட 153 ஊழியர்கள்தான் அடித் தளமாக இருந்தனர். 

    143 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து உற்பத்தி பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரத்து 100 சம்பளமாக வழங்கப்பட்டது. அறிவியல் நிலையத்துக்க ஆண்டுக்கு ரூ.125 லட்சம் வருமானம் ஈட்டித் தந்துள்ளனர். 

    இவர்களின் சம்பளம் ரூ.75.27 லட்சம். சுமார் 50 லட்சம் வருமானம் ஈட்டித்தந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் அவர்களின் குடும்பத்தினர் 2 ஆண்டாக வறுமையில் வாடுகின்றனர். இவர்களை பணிநீக்கம் செய்தது தவறு என கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ளது. 

    எனவே,  பணிநீக்கம் செய்யப்பட்ட 153 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்தி வேளாண் விஞ்ஞானியை இயக்குனராக நியமிக்க வேண்டும். அரசு இந்த நடவடிக்கை எடுத்தால் அறிவியல் நிலையம் செழிப்புற்று வேளாண் துறை வளர்ச்சி அதிகரிக்கும். 

    இவர்களை பணிநிரந்தரம் செய்து, சம்பளத்தையும் அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    புதுவையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 479 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    புதிதாக புதுவையில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப் பட்டது. மாநிலத்தில் யாரும் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறவில்லை.
     
    புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில்  ஒட்டு மொத்தமாக  இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 768 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். புதுவையில் 11, காரைக்காலில் 12, மாகியில் 4 பேர் என 27 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 27 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. 
    புதுவையில் 2-வது தவணை உள்பட 16 லட்சத்து 880 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    கரிக்கலாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே திருக்காஞ்சி காலனி பெரியார் வீதியை சேர்ந்தவர் ராஜி(வயது49). வெல்டராக வேலை செய்து வருகிறார்.

    நெல்லிக்குப்பத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனது மனைவி கலைவாணி(38), மகன் தொல்காப்பியன்(13) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கரிக்கலாம்பாக்கம்-பாகூர் செல்லும் ரோட்டில் செங்கான்ஓடைகுளம் அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக ராஜி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட ராஜி, அவரது மனைவி கலைவாணி மற்றும் மகன் தொல்காப்பியன் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக் காக கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் தொல்காப்பியன் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். 

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை குருமாம்பேட் அமைதி நகரை சேர்ந்தவர் வாழுமுனி. கட்டிட தொழிலாளி. இவர் நேற்று காலை கட்டிட வேலைக்காக தன்னுடன் சித்தாளாக வேலை பார்க்கும் குனிஜெராய்(44) என்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு வழுதாவூர் சாலையில் வந்துகொண்டிருந்தார்.

    அய்யங்குட்டிப்பாளையம் அய்யனார் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் வாழுமுனி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த குனிஜெராய்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கனகசெட்டிக்குளத்தில் பெட்ரோல் போட பண தர மறுத்ததால் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வானூர் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ் குமார் (வயது33). இவர் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கீழ்புத்துப்பட்டு பகுதியில் ரோந்து பணி சென்று விட்டு கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார்.

    அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப பணம் தருமாறு போலீஸ்காரர் சதீஷ் குமாரிடம் கேட்டனர். அதற்கு சதீஷ்குமார் உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப நான் ஏன் பணம் தரவேண்டும் என கூறி பணம் தர மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் போலீஸ்காரர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் வீசி விடுவோம் என்று சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது-.

    இதுகுறித்து சதீஷ்குமார் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து போலீஸ்காரர் சதீஷ்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    சிறப்பு கூறு நிதியை தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும் என தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான மூர்த்தி தலைமையில் செயல் தலைவர் மற்றும் ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பின் தலை வருமான ரோக. அருள்தாஸ், கன்வீனர் மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பொறுப்பாளர்கள் திரு மால், கிருஷ்ணமூர்த்தி, பழனிச்சாமி, பொன்னிவேல், ஆதிகேசவன் ஆகியோர் கொண்ட குழுவினர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
    அதில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சிறப்பு நிதியை பெறும் பல்வேறு துறைகள் சிறப்பு கூறு திட்டங்களை முறையாக திட்டமிடாமல் ஆண்டு இறுதியில் வேறு பணிகளுக்கு நிதியை திருப்பி கணக்கு காட்டுகின்றனர். 

    அத்துடன் திட்டங்களுக்கு நிதி கேட்டு நீதித்துறைக்கு கோப்புகள் சென்றால் பல்வேறு கேள்விகளை முன்வைத்து நிதிச் செயலர் வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறார். தலித்துகளுக்கான திட்டத்தை முடக்குவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே இந்த நிதி ஆண்டில் 20 நாட்களே உள்ள நிலையில் மீதமுள்ள 38 சதவீத நிதியை பயன்பெறும் வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆதிதிராவிட மக்களுக்கு அரசு நல்லது செய்ய முயலும்போது அதிகாரிகள் அலட்சியத்தால் முடக்கப் படுகிறது.  இது போன்ற நிதிகள் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் சிறப்புக் கூறு நிதிச் சட்டம் இயற்றப்பட்டு முறையாக செயல்படுத்தப்படுகிறது.

    புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் இதற்கான சட்டத்தை கொண்டுவர இருந்தது, ஆனால் நிறுத்தி வைக்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியிலாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     வருகிற நிதி ஆண்டின் முதல் பட்ஜெட்டில் சிறப்பு கூறு நிதிக்கான திட்டங்களை வரையறுத்து தனி பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×