என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூர் அருகே சேலையில் தீ பிடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலியானார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சிவராந்தம் காலனியை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மனைவி கோகிலம் (வயது80). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகமுத்து இறந்து விட்டதால் கோகிலம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில்   கோகிலம் டீ தயாரிக்க கியாஸ் அடுப்பை மெழுகுவர்த்தி மூலம் பற்ற வைத்தார். அப்போது மெழுகுவர்த்தி தீ எதிர்பாராத விதமாக கோகிலம் சேலையில் பற்றிக்கொண்டது. இதில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் கோகிலம் அலறி துடித்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோகிலத்தை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோகிலம் பரிதா-பமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது பேரன் வேலு கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பிம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் தினவிழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேணு தலைமை தாங்கினார். மருத்துவமனை நிர்வாக குழு முதன்மை ஆலோசகர் பாபு டேனியல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
    “கொேரானா காலத்தில் செவிலியர்கள் பங்கு பாராட்டுக்குரியது.  மேலும் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இணைப்பு பாலமாக இருந்து அதிக நேரம் செலவிட்டு அவர்கள் சிகிச்சைக்கு பக்கபலமாய் இருக்கும் செவிலியர்களை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    பின்னர், செவிலியர்கள் பங்கு பெற்ற  நடனம்-  பாடல் போட்டி கோலப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற செவிலியர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

    விழாவில் பதிவாளர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சதீஷ் உள்பட மருத்துவ நிபுணர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிம்ஸ் செவிலியர் துறையினர் செய்திருந்தனர்.
    சுதேசி, பாரதி மில்களை மூட புதுவை அரசுக்கு தார்மீக உரிமை இல்லை என்று முன்னாள் எம்.பி.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை-யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை தொழில்துறை சுதேசி,  பாரதி மில்களை இந்த மாத இறுதியில் மூடிவிட அரசுக்குப் பரிந்துரைத்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.  இதனை அரசு நிராகரித்து மில்களை தொடர்ந்து இயக்கு-வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
      
    தொழில் நலிவுக்கான காரணங்களை ஆய்வு செய்து மில்களை புனரமைத்து சீரமைக்க வேண்டியது அரசின் கடமை. அவற்றை ஒரேடியாக மூடி வளர்ச்சியை முடக்குவது அல்ல.
     
    20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மில்கள்  நலிவுற்ற போது எம்.பி.யாக இருந்த நான் மத்திய ஜவுளித்துறை மந்திரி,  தேசிய ஜவுளிக் கழக தலைவர் ஆகியோரிடம் பலமுறை  முறையிட்டு 2 மில்களையும் புதுவை அரசுக்கு பெற்றுத் தந்தேன்.  

    மில்களில் நஷ்டம் ஏற்பட்டதற்கு காரணத்தை குழு அமைத்து அரசு அறிந்திருக்க வேண்டும்.  மத்திய ஜவுளித் துறையில் உள்ள வல்லுநர்களை ஒரு குழுவாக அமைத்து ஆய்வு செய்தால் மாற்று வழிமுறைகளும் அதற்கு தேவையான நிதி உதவியும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். இதை ஏன் அரசு செய்யவில்லை?

    இந்த மில்களை மூடுவதற்கான தார்மீக உரிமை இந்த அரசுக்கு இல்லை. ரோடியர் மில்லை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறும் கவர்னர் இந்த 2 மில்களையும் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    புதுவையில் உள்ள ரோடியர், சுதேசி பாரதி, ஸ்பின்கோ,  காரைக்காலில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் மில்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். அரசின் மாநில உற்பத்திக்கும் ஏற்று-மதிக்கும், பட்ஜெட்டுக்கும் வருவாய் கிடைக்கும். 

    இவ்வாறு பேராசிரியர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
    கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

    மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது.

    அதோடு ஒவியம் சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சிறைசாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.

    இதனை அறுவடை செய்யும் விழா சிறையில் நடந்தது. சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் அறுவடையை தொடங்கி வைத்தனர்.

    கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது. காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    விநாயகர் சதூர்த்தி விழாவின் போது கைதிகள் தயாரித்த காகித கூழ் விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் புதுவை வந்த மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கைதிகள் செய்த விநாயகர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. விவசாயம் செய்வது மன மகிழ்ச்சியை அளிப்பதாக கைதிகள் தெரிவித்தனர். இது குறித்து கைதிகள் கூறியதாவது:

    சிறையில் பல நாள் தூங்கியதில்லை. தற்போது விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம். ஒரு விதை செடியாக மலரும் போதும் மிக மகிழ்ச்சி அடைகிறோம் விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து விட்டோம்.

    முன்பு நாள் ஒன்றுக்கு ரூ. 25 சம்பளம். இன்று விவசாயத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பளம் பெறுகிறோம். தண்டனை காலம் முடிந்தும் பலரும் சிறையில் இருக்கிறோம். அரசு கருணையோடு விடுதலை செய்தால் இயற்கை விவசாயம் செய்வோம்.

    இவ்வாறு கைதிகள் தெரிவித்தனர்.

    வைத்திக்குப்பம்-குருசுகுப்பம் பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    புதுச்சேரி:

    புதுவையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி எதிராளிகளை கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில் பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் நாட்டு வெடிகுண்டு வீசியும்,அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்திற்கு பின் புதுவையில் உள்ள அனைத்து ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் அதிரடியாக நுழைந்து வெடிகுண்டு,பயங்கர ஆயுதங்கள் உள்ளனவா என சோதனை நடத்தி வருகின்றனர். இருந்த போதிலும் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் புதுவையில் குறையவில்லை. 

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு காராமணிக்குப்பம் ெரயில்வே கேட் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்தது.உடனே சம்பவ இடத்திற்கு சென்ற உருளையன்பேட்டை போலீசார் வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டு மற்றும் வன அலுவலகம் அருகே புதரில் மறைத்து வைத்திருந்த 4 வெடிகுண்டை கைப்பற்றினர்.

     இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ் தலைமையில்  முத்தியால் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவப்பிரகாசம், ஜான்சன் மற்றும் போலீசார் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் மற்றும் சோலைநகர் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனினும் ரவுடிகளை போலீசார் எச்சரித்து சென்றனர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால்  ரவுடிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
    ரூர்பன் திட்டத்திற்கு நிதி ஒதுக்காததால் பாகூர் கொம்யூன் வளர்ச்சி திட்டபணிகள் நிறுத்தியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சரிடம் கட்டுமான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:
     
    புதுச்சேரி கட்டுமான நலச்சங்க தலைவர் சரவணன், முதல்- அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் பாகூர், திருநள்ளாறு கொம்யூனை தத்தெடுத்து ரூர்பன் திட்டத்தில் மாதிரி கொம்யூனாக மாற்ற ரூ.200கோடியில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

    பணிக்கான மதிப்பில் தவணையில் ரூ.2கோடியை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்து இருந்தது.

    ஆனால் இதற்கான தொகையை அரசு டெபாசிட் செய்யாமல்‌ வேலையை தொடங்கியபின், செய்த பணிக்கு தவணை தொகையை 3 மாதங்களாக வழங்காமல் நிலுவையில் வைத்து உள்ளது.

    இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கேட்கும் போது, இத்திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பணிக்கு முறையாக அனுமதி கொடுக்கவில்லை என்கின்றனர். அதனால் பணிக்கான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்குவது கடினம் என தெரிவிக்கின்றனர்.

    இதனால் பாகூர் கொம்யூனில் ரூர்பன் திட்டத்தில் தொடங்கப்பட்ட போர்வெல், குடிநீர் குழாய் அமைத்தல், பஸ்நிலையம், மீன்வளத்துறை, சிமெண்ட் மற்றும் தார்சாலை அமைக்க உள்ள பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுவிட்டது.

    மேலும் பாகூர் பகுதியில் அரசு ஒப்புதல் வழங்காத நிலையில் ரூ.8 கோடிக்கு சாலைபணிக்கு டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணி ஆணை வழங்காமல் இருந்து வருகிறது.

    இதேபோல பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பணி ஆணை வழங்காமல் இருந்து வருகிறது. அரசு பணி ஆணை வழங்கும்போது அதற்கான முழு தொகையையும் வைப்பு நிதியில் வைத்து திட்ட பணிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பாதிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டு வேண்டிய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    கொத்தபுரிநத்தம் முத்து மாரியம்மன் கோவிலில் கழுமர திருவிழாவில் 200 கிலோ அசைவ உணவு படையல் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை கொத்தபுரிநத்தம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    முத்து மாரியம்மமன் கோவிலில் நடைபெறும் கழுமரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.அந்த ஊரை சேர்ந்த பெண்கள் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ திருமணமாகி சென்றாலும்  ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் தவறாது பங்கேற்பது வழக்கம்.

    குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, நோய் தீர்வு உட்பட எந்த பிரச்னைக்கு ஆண்கள் விரதம் இருந்து கழுமரம் ஏறி வேண்டுவது மரபாக பின்பற்றப்படுகிறது. திருவிழாவில் ஆண்கள் மட்டுமே நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.சித்திரை மாதத்தில்  10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கும்.
     
    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.  இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.  

    மேலும் ஊரணி பொங்கல்,  சாகை வார்த்தல்,  உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பால்,  தயிர்,  இளநீர்,  தேன்,  சந்தனம்,  உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  

    அதன்பிறகு செடல் போட்டுக் கொள்ளும்  திருவிழா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்த ருளினார். 

    அதனையடுத்து தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, கழுமரம்  ஏறும் விழா நடந்தது. 75 அடி உயரமுள்ள கழு மரத்தில்  காப்பு கட்டிய  ஆண் பக்தர்கள் மட்டும் ஏறி அமர்ந்தனர்.  

    கூடையில் வரும் மோரை அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சம் பழத்தினை பக்தர்களுக்கு  வீசி எறிவார்கள். அந்த பழத்தினை பிடித்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். கழு மரம் ஏறி உச்சியில் இருக்கும் எலுமிச்சை பழங்கள் கிடைப்பவர்களுக்கு எல்லா நலமும் கிடைக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.

    விழாவின் மற்றொரு சிறப்பாக கிராம மக்கள் வீடுகளில் சமைத்த அசைவ உணவை கழுமரம் முன் கும்பம் கொட்டி (மொத்தமாக வெள்ளை துணியில்) படையலிடுகின்றனர். 

    இந்த அசைவ உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு 200 கிலோ அசைவ உணவை கொட்டி பிரசாதமாக அளித்தனர்.அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. 

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை.2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கழுமரத்திருவிழா விமர்சையாக  நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அரும்பார்த்தபுரம் கேட் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை வீடுகளை காலி செய்யக்கூடாது என ரெயில்வே அதிகாரிகளிடம் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் தொகுதி அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி சுமார் 100 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். 

    இந்த குடும்பத்தினரை காலி செய்ய ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால்  பாதிக்கப்படும் மக்கள் அரசிடம் முறையிட்டனர். 

    இதனையடுத்து அரசு அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை மாற்று இடம் ஒதுக்கி தரப்படவில்லை.

    இந்த நிலையில்  ரெயில்வே  அதிகாரிகள் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகளை காலி செய்யும்படியும்  அங்குள்ள மக்களிடம் வலியுறுத்தினர். 

    இதுபற்றி அப்பகுதி மக்கள் எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ.விடம்  முறையிட்டனர்.

    இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில்வே துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. 

    அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு பட்டா வழங்கப்படும் வரை காலி செய்ய வற்புறுத்தாதீர்கள், பட்டா வழங்கியவுடன் வீடுகளை அவர்களே காலி செய்துவிடுவார்கள் என உறுதியளித்தார். 
    இதனையடுத்து ரெயில்வே துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
    மூடும் முடிவை கைவிட்டு பாரதி-சுதேசி மில்லை நவீனப்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப–தாவது:-

    புதுவை மாநில மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த சூழலில் புதுவை நகர பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுதேசி மற்றும் பாரதி மில் மூடும் அறிவிப்பை இந்த அரசு திரும்பப்பெற வேண்டும். 

    புதுவை மாநிலத்தில் சொல்லப்படும் அடையா–ளங்களில் ஒன்றான சுதேசி மற்றும் பாரதி மில்களை நவீனப்படுத்தி மீண்டும் திறந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என்று சொல்லிஆட்சிக்கு வந்து விட்டு இப்பொழுது இந்த 2 மில்களையும் மூடும் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை.

    ஏற்கனவே புதுவையில் அரசு வேலை செய்வதாக நம்பி சம்பளம் கொடுக்காமல் பல ஆயிரம் இளைஞர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர். எனவே பாரதி மற்றும் சுதேசி மில் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையை நவீனப்படுத்தி இயக்கினால் இளைஞர்களுக்கு வேலையும், நல்ல சம்பளமும் கொடுக்க முடியும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று புதுவையில் உள்ள 2 மில்களையும் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    புதுச்சேரி கம்பன் கழக மேடை ஏற்றம் தரும் மேடை என்றும் இதற்கு நானே சான்று என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நடைபெற்ற கம்பன் விழாவுக்கு தலைமை வகித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

    உலகத்தில் உள்ள எந்த இலக்கிய அமைப்புக்கும் இல்லாத பெருமை புதுவை கம்பன் கழகத்துக்கு உண்டு. அரசியல் வேறுபாடுகளை தாண்டி யார் முதல்அமைச்சராக இருந்தாலும், கம்பன் கழகத்தின் புரவலராக இருப்பது தமிழுக்கு பெருமை சேர்க்கிறது.

    தமிழ் பேசும் கவர்னர் இந்த நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கிறார். கம்பன் கழக மேடை, ஏற்றம் தரும் மேடை. இதற்கு நானே சான்று. 1983-84ம் ஆண்டில் நான் வக்கீலாக இந்த மேடைக்கு வந்து பேசியுள்ளேன்.

    2007 முதல் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக வந்து பேசினேன். அதன்பிறகு ஆந்திரா, தெலுங்கானா மாநில நீதிபதியாக வந்துள்ளேன்.

    இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக வந்து விழாவில் பங்கேற்கிறேன். இந்த மேடை ஏணியில் ஏற்றி வைக்கும் மேடை. இதை குறிப்பாக மேடையில் உள்ள ஒருவருக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். புரிந்தவர்களுக்கு புரியட்டும், புரியாதவர்களுக்கு புரியாமல் போகட்டும்.

    இந்த கழகத்தோடு 38 ஆண்டுகள் நானும் பயணித்துள்ளேன். கம்பன் கழகம் தொடங்கி 55 ஆண்டுகளில் கொரோனா 2 ஆண்டுகள் தவிர்த்து 3 நாட்கள் அதிக மக்கள் கூட்டத்தோடு நடத்தப்பட்டு வருகிறது.

    பல நகரங்களில் கம்பன் கழகம் தொடங்கி 3 நாட்கள், 2 நாட்கள், அரைநாள் என விழா நடைபெறும் நாட்கள் குறைந்துவிட்டது.

    ஆனால் புதுவை மக்கள் கம்பன் விழாவை கைவிடவில்லை. ஆயிரம் ஆண்டாக கம்பனை கொண்டாடுகிறோம். உலகில் வேறு எந்த கவிஞரையாவது கொண்டாடியுள்ளதா? என்பதற்கு வரலாற்று சான்று இல்லை.

    படித்தவர் மனதையெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் கொள்ளையடித்ததால்தான் கம்பனை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து, இந்த மேடையில் பங்கேற்றவர் உச்சம் பெறுவார் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி புதுவையைச் சேர்ந்த 10 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த நாகையை சேர்ந்தவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை சாரதாம்பாள் நகர் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் லாஸ்பேட்டை மெயின் ரோட்டில் பாக்கமுடையான் பட்டு பார்வதி திருமண மண்டபம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரிடம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்த முல்லை நாதன் (வயது 49). என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக ஜெராக்ஸ் எடுத்தும் செல்லும் வாடிக்கையாளராக இருந்து பழக்கமானார்.

    இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு தெரிந்த நபர் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதாகவும் அவர் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் வேலைபார்க்கும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் குணசேகரனிடம் முல்லை நாதன் தெரிவித்தார்.

    இதையடுத்து குணசேகரன் தனது ஜெராக்ஸ் கடையின் அருகில் ஸ்கூல் பேக் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் கூறி அவரது மகன் சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இரண்டரை லட்சம் பணம் வாங்கிக் கொடுத்தார்.

    3 மாதத்தில் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறிய முல்லை நாதன் 5 மாதங்கள் கடந்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.

    இது குறித்து முல்லை நாதனிடம் குணசேகரன் கேட்ட போது தனி ஆளாக வேலைக்கு அனுப்ப முடியாது. குரூப்பாக தான் அனுப்ப முடியும். எனவே இன்னும் ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யுமாறு முல்லை நாதன் தெரிவித்தார்.

    அதன்படி தனக்கு தெரிந்த மேலும் 9 பேரிடம் பணம் வாங்கி கொடுத்தார்.

    மொத்தம் ரூ.14 லட்சம் வங்கி மூலமாகவும் நேரடியாகவும் இந்த பணத்தை முல்லைநாதனிடம் குணசேகரன் அளித்தார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல விசா பெற்றுத்தரவில்லை.

    இது பற்றி முல்லை நாதனிடம் குணசேகரன் கேட்ட போது தற்போது கை உடைந்து விட்டதால் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுவதாக முல்லை நாதன் தெரிவித்தார்.

    செல்போனில் பல முறை தொடர்பு கொண்டு கேட்ட போது இதே பதிலையே முல்லை நாதன் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன் சம்மந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்த போது அதுபோல் யாரும் தங்கி சிகிச்சை பெறவில்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

    பின்னர் தீர விசாரித்த போது முல்லை நாதன் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமுல்லை வாசல் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து குணசேகரன் திருமுல்லை வாசல் சென்று முல்லைநாதனிடம் பணத்தை கேட்ட போது திருப்பித் தந்துவிடுவதாக உறுதி கூறினார். ஆனால் அதன் பிறகும் முல்லை நாதன் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து வேலைக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு குணசேகரனுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவர் வட்டிக்கு பணம் வாங்கி அதனை கொடுத்துவிட்டார்.

    இதற்கிடையே முல்லை நாதனுக்கு ஏற்கனவே குணசேகரன் ரூ.8 லட்சம் கடனாக கொடுத்திருந்தார். அந்த பணத்தையும் முல்லை நாதன் கொடுக்கவில்லை. இடையில் குணசேகரனிடம் வாங்கிய பணத்துக்காக முல்லை நாதன் ரூ.8 லட்சத்துக்கு காசோலை கொடுத்து இருந்தார். ஆனால் அதனை வங்கியில் செலுத்திய போது அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்ப வந்து விட்டது.

    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த குணசேகரன் இதுபற்றி புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த முல்லை நாதனை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    அரியாங்குப்பம் அருகே சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த தமிழக பகுதியான கிழிஞ்சிக்குப்பம் அருகே அங்காளங்குப்பம் கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

     காலை 9 மணியளவில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமிகள் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 

    இந்த கும்பாபிஷேக விழாவில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை தனசேகர், கவுரவ தலைவர் ஜீவா என்கிற சிவா, தர்மகர்த்தா செந்தில், ஊர் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் அங்காளங்குப்பம் குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
    ×