search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொத்தபுரிநத்தம் கழுமர திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    கொத்தபுரிநத்தம் கழுமர திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

    முத்து மாரியம்மன் கோவிலில் கழுமர திருவிழா

    கொத்தபுரிநத்தம் முத்து மாரியம்மன் கோவிலில் கழுமர திருவிழாவில் 200 கிலோ அசைவ உணவு படையல் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை கொத்தபுரிநத்தம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    முத்து மாரியம்மமன் கோவிலில் நடைபெறும் கழுமரத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.அந்த ஊரை சேர்ந்த பெண்கள் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ திருமணமாகி சென்றாலும்  ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் தவறாது பங்கேற்பது வழக்கம்.

    குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, நோய் தீர்வு உட்பட எந்த பிரச்னைக்கு ஆண்கள் விரதம் இருந்து கழுமரம் ஏறி வேண்டுவது மரபாக பின்பற்றப்படுகிறது. திருவிழாவில் ஆண்கள் மட்டுமே நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள்.சித்திரை மாதத்தில்  10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கும்.
     
    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.  இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.  

    மேலும் ஊரணி பொங்கல்,  சாகை வார்த்தல்,  உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனுக்கு பால்,  தயிர்,  இளநீர்,  தேன்,  சந்தனம்,  உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  

    அதன்பிறகு செடல் போட்டுக் கொள்ளும்  திருவிழா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து அலங்கரித்து  வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்த ருளினார். 

    அதனையடுத்து தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, கழுமரம்  ஏறும் விழா நடந்தது. 75 அடி உயரமுள்ள கழு மரத்தில்  காப்பு கட்டிய  ஆண் பக்தர்கள் மட்டும் ஏறி அமர்ந்தனர்.  

    கூடையில் வரும் மோரை அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சம் பழத்தினை பக்தர்களுக்கு  வீசி எறிவார்கள். அந்த பழத்தினை பிடித்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். கழு மரம் ஏறி உச்சியில் இருக்கும் எலுமிச்சை பழங்கள் கிடைப்பவர்களுக்கு எல்லா நலமும் கிடைக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.

    விழாவின் மற்றொரு சிறப்பாக கிராம மக்கள் வீடுகளில் சமைத்த அசைவ உணவை கழுமரம் முன் கும்பம் கொட்டி (மொத்தமாக வெள்ளை துணியில்) படையலிடுகின்றனர். 

    இந்த அசைவ உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த ஆண்டு 200 கிலோ அசைவ உணவை கொட்டி பிரசாதமாக அளித்தனர்.அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. 

    கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக விழா நடைபெறவில்லை.2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கழுமரத்திருவிழா விமர்சையாக  நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×