என் மலர்
புதுச்சேரி
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்து இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூரை அடுத்த வடமங்கலம் அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 24) இவர் வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். நாளடைவில் ஜெயக்குமாரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகியதால் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இதற்கிடையே ஜெயக்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
மேலும் ஜெயக்குமாருடன் பழகுவதை தவிர்க்க அந்த பெண் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.
மேலும் இதற்கு சம்மதிக்காவிட்டால் தனிமையில் ஒன்றாக இருந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு அந்த பெண் பணியவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச படத்தை அவரது உறவினர்களுக்கும் சமூகவலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.
பாரதீய ஜனதா கட்சி இன்று அபிரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா மாநில, மாவட்ட பட்டியல் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜனதா பட்டியலின தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பட்டியல் பணி பொறுப்பாளர் அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம், ஆகியோர் கலந்து கொண்டு பட்டியல் அணி நிர்வாகிகளுக்கு பொறுப்புக்கான நியமனம் கடிதத்தை வழங்கினர். இதில் கலந்துகொண்டு அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
பாரதீய ஜனதா கட்சி இன்று அபிரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. இதற்கு காரணம் பா.ஜனதா மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான். நாளுக்கு நாள் பா.ஜனதா வளர்ந்து கொண்டே உள்ளது. ஒரு காலத்தில் பா.ஜனதா மக்கள் விரோதமான கட்சி என எதிர்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் உண்மையை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக சிறுபான்மை சமூக மக்கள் பட்டியலின மக்கள் பா.ஜனதாவால் மட்டுமே இந்திய நாட்டிற்கும் புதுவைக்கும் விடியலை கொடுக்க முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மத்திய பா.ஜனதா ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு என்னென்ன செய்திருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக பா.ஜனதா ஆட்சியில் சலுகைகள் எல்லாம் பறிபோய்விடும் என்று எண்ணுகிறார்கள். அப்படி இல்லை.
இது எதிர்க்கட்சிகளால் வேண்டுமென்றே பரப்பப் படும் பொய்ப்பிரச்சாரம் என்பதனை மக்கள் மத்தியிலே குறிப்பாக பட்டியல் இன மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். பட்டியல் இன மக்களையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் உயர்த்திப் பிடிக்கின்ற கட்சி பாரதீய ஜனதா கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்கள் எஸ்.கே.சி.கஜேந்திரன், மூத்த வக்கீல் அம்மாவாசை, கங்கைஅமரன் சுப்பிரமணி, அய்யப்பன், ராஜேஸ்வரி, பொதுச் செயலாளர் மணியம்மை, நாகராஜன் பொருளாளர் டாக்டர். சிவபெருமான், மாநில செயலாளர்கள் அருள், அருண்குமார், பிரகாஷ், ராஜா, வக்கீல் சிவகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், கார்த்தி, காமாட்சி, தீனன், சத்தியமூர்த்தி, ராஜாராம், தட்சிணாமூர்த்தி, சமூக வலைதள பிரிவு அமைப்பாளர் அருள்குமார், பட்டியலின அணி வில்லியனூர் மாவட்ட தலைவர் விண்ணரசன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், நகர மாவட்ட தலைவர் வெற்றிவேல், காரைக்கால் மாவட்ட தலைவர் கஜேந்திரன், அரியாங்குப்பம் மாவட்டத் தலைவர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது இவை சிதிலமடைந்துள்ளது. இதை சீரமைப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் எதிரொலியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 7லட்சம் செலவில் புதுப்பிக்கவும், ரூ. 55 லட்சம் செலவில் கல்வி மையம், பல்நோக்கு சமூக நல கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி அரசாணை பெறப்பட்டது.
ஒவ்வொகு குடியிருப்புக்கும் தனித்தனி மின் அறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நகர மற்றும் கிராம அமைப்பு துறை மூலம் கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அனைத்து குறுக்கு வீதிகளையும் புதிய சிமெண்ட சாலைகளாக மேம்படுத்துதல், இருபுற வாய்க்கால் கட்டைகளை கட்டுதல் போன்ற பணிகளுக்கு நிதி பெற கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சிற்றரசு, உதவி பொறியாளர் அணில்குமார், இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பணிகள் குறித்தும் நிதி ஒதுக்கீடு பற்றியும் அப்பகுதி மக்களிடம் நேரு எம்.எல்.ஏ. விளக்கினார். ஆய்வின் போது உருளையன்பேட்டை தொகுதி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதுவையில் தி.மு.க. சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று துணி பைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாரிசாமி பத்திரிசியா அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பைகளை கோவிலுக்கு வந்திருந்த சுமார் 200க்கும் பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் பாரம்பரிய உணவு வகைகளை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலை உருண்டை, ஆரஞ்சு மிட்டாய், கமர்கட், எள் உருண்டை ஆகியவைகளையும் சிவா எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதுகுறித்து சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற வகையில் மஞ்சப்பை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதன் படி புதுவையிலும் தி.மு.க. சார்பில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்று துணி பைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
நகராட்சியை கண்டித்து சி.ஐ.டி.யூ. வியாபாரிகள் ஊர்வலம், முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி மூலம் அடிக்காசு வசூல் செய்யப்பட்டு வந்தது. அடி கணக்கை கொண்டு ரூ.10 முதல் ரூ20 வரை வசூல் செய்யப்பட்டது.
தற்போது நகராட்சி அடிக்காசு வசூல் செய்வதற்கு டென்டர் விட்டு தனியார் மூலம் வசூல் செய்து வருகிறது. இதனால் அடிக்காசு வசூலிப்பவர்கள் ரூ.50 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், அடிக்காசை தனியார் வசூல் செய்யும் போக்கினை கண்டித்தும் தனியாருக்கு டெண்டர் விட்ட நகராட்சி ஆணையரை கண்டித்தும். சி.ஐ.டி.யூ மற்றும் புதுவை பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதற்காக காமராஜர் சிலை அருகில் சி.ஐ.டியூ. சாலையோர வியாபாரிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். போத்தீஸ் அருகே அவர்கள் வந்தபோது ஒதியஞ்சாலை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் ஊரேவலத்தில் வந்தவர்களுக்கும் இடையில் வாய்தகராறும், லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
பின்னர் வியாபாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 2 பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் சிஐடி யூ நிர்வாகிகள் சீனுவாசன் பிரபுராஜ் மதிவாணன் கொளஞ்சியப்பன் ராஜ்குமார் சாலையோர சங்க நிர்வாகிகள் அழகுராஜ் வடிவேல் வீரமணிகண்டன் சேவியர் சூரியன் கேம்ராஜ் சுரேஷ் ராமசாமி ரவி அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுவையில் கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:
சின்ன வீராம்பட்டினம், மறைமலை அடிகள் நற்பணி மன்ற இரவு பாடசாலை மையத்தில், சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. தினமும் மாலை, 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு பயிற்சியாளர்கள் கொண்டு சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது.
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழித்திடும் வகையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக சிவராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள், வண்ண உபகரணங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார்.
ஓவிய பயிற்சியை ஓவியர்கள் ரவி, அன்புநிலவன், அருண்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு அளித்தனர். நிகழ்ச்சியை அருண் நாகலிங்கம் ஒருங்கிணைத்தார். மறைமலை அடிகள் இரவு பாடசாலை பொறுப்பாளர்கள் கோவிந்தசாமி, விஜயகுமார், பாபு, இறையரசன் ஆகியோர் நிகழ்ச்சியை வழி நடத்தினர்.
மத்திய அரசிடம் உரிய நிதியை பெற்று சுதேசி-பாரதி மில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எஸ்.பி. சிவக்குமார் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதேசி-பாரதி மில்களை, நிர்வாகம் சார்பில் வருகிற 30-ந்தேதியுடன் மூட அனுமதிக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிந்துரை நேரடியாக உயர்நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், வந்துள்ள தகவல் மனதை கலங்க செய்கிறது.
ஏ.எப்.டி., சுதேசி மற்றும் பாரதி மில்களில் அந்த காலங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான குடும்பங்களினால் புதுவையில் அமைதி நிலவியது. குற்றங்கள் குறைந்திருந்தன.
தற்போது வெற்றிபெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி நடத்துகின்ற ஆட்சியாளர்களை வாழ்த்துகின்றோம். ஆனால் ஆட்சி கட்டிலில் அமர்ந்து ஒரு வருடம் கழிந்த பின்னால் அனைத்து மில்களும் மூடப்படுவதும், அதை இயங்க செய்வதற்கு உண்டான சக்தியும், பலமும், செல்வாக்கும் பெற்ற, முதல்-அமைச்சரும், கவர்னரும், புதுவையில் பெஸ்ட் ஆட்சியை தருவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ள பிரதமரும் வேடிக்கை பார்ப்பதும், மில்களை இன்று வரை இயங்கச் செய்யாமல் அமைதியாய் இருப்பதும், மில்கள் மூடப்படுகின்ற நடவடிக்கைகளை அங்கீகரிப்பதும், எந்த வகையில் நியாயம்.
3 மில்களும் முழுமையாக இயங்குவதன் மூலம், புதுவை மாநிலத்தின் ஐந்தில், ஒரு பகுதி குடும்பங்கள் நிம்மதியாக வாழும் என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை.தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, ஒரு எதிர்க்கட்சித்தலைவராக, மில்களை உடனடியாகத் திறக்கக்கோரி சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுநாள் வரை ஒரு பதிலும் இல்லை.
எனவே கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோர் மத்திய அரசை அணுகி உரிய நிதியை பெற்று 3 மில்களையும் இயங்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் பராமரிப்பின்றி வீணாகிறது. இதனால் வீரர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளத்தில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தில் நாள்தோறும் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் ஏராளமானோர் நடை பயிற்சிக்கு வருகின்றனர்.
ஆனால், தற்போது அரங்கம் பராமரிப்பில்லாததால் செயற்கை புல்வெளி ஹாக்கி திடல் மோசமாகி வீணாகி விட்டது. அதோடு, கழிவறை, குடிநீர் வசதிகளும் சரியாக இல்லை. கடந்த ஆண்டு பிப்ரவரியில் புதுவைக்கு வந்த பிரதமர் மோடி விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் சிந்தடிக் தடகள ஓடுகளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி 14 மாதங்களாகியும் பணி முடிவடையவில்லை. ஆமை வேகத்திலேயே பணிகள் நடக்கிறது.
சிந்தடிக் தடகள ஓடுகளம் ரூ.7 கோடியும், நீச்சல் குளம் அமைக்க ரூ. 5 கோடியும் மத்திய அரசு நிதி தர முடிவு எடுத்தது. ஆனால், பணிகள் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியாலும், முதல்கட்ட பணிகளை முடிக்காததாலும் அடுத்தக்கட்ட நிதியை மத்திய அரசிடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிந்தடிக் தடகள ஓடுகளம் பணியை ஒப்படைப்பதிலும் குளறுபடி ஏற்பட்டு, தற்போது வட இந்திய நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கால்பந்து, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுக்கு சிந்தடிக் திடல்கள் இல்லாததால் வீரர்கள் மண்ணில் விளையாடுவதால் ஆட்டத்திறன் பாதிக்கப்படுகிறது. பராமரிப்பு இல்லாததால் தேசிய அளவிலான போட்டிகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.விளையாட்டுத்துறை கல்வித்துறையின் கீழ் உள்ளது.
இதனால் விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்குவதில் சிக்கலும் பற்றாக்குறையும் உள்ளது. விளையாட்டுக்கு தனித்துறை அமைக்கப்படும் என ஆட்சியாளர்கள் பல முறை அறிவித்தும் நடைமுறைக்கு வரவில்லை. விளையாட்டுக்கு தனித்துறை அமைத்தால்தான் பிரச்சினைகள் தீரும் என விளையாட்டு வீரர்கள் கூறுகின்றனர்.
புதுவையில் சவர்மா விற்பனைக்கு தடை? உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
புதுச்சேரி:
கேரளாவில் கோழி இறைச்சியை கொண்டு தயாரிக்கப்படும் சவர்மா சாப்பிட்டவர் இறந்தார்.
தமிழகத்திலும் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதையடுத்து புதுவையில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட நகர பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சுமார் 27 கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு தனியார் ஓட்டலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கனில் அளவுக்கதிகமாக கலர்பவுடர் சேர்க்கப்பட்டு இருந்ததால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பினாயில் மற்றும் உப்பைகளை கொட்டி அழித்தனர்.
பஸ்நிலையம் அருகே அனைத்து கடைகளிலும் சிக்கனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். சுமார் 50 கிலோவுக்கு மேல் சிக்கன் அழிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை செயலர் உதயகுமார் கூறும்போது, பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு வகைகளை செய்து விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் புதுவையில் சவர்மாவுக்கு தடை விதிக்கப்படும் என தெரிகிறது.
கண்டாக்டர் தோட்டம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் 10 அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
1998-ல் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் சுமார் கால் நூற்றாண்டை கடந்து விட்டதால் பழுதாகி, வலிவிழந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்கள் மீது விழுந்து வருகிறது. இதனால் அக்குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த பீதியுடன் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதியதாக கட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். கடந்த ஆட்சி காலத்தில் அப்போதைய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கட்டிடம் உறுதித்தன்மை வலுவிழந்து இருப்பதை உணர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
ஆனால், இதுவரை புதிய குடியிருப்பு கட்ட பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து உருளையன் பேட்டை தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கோபால் இன்று புதுவை குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அலுவலர் சிற்றரசு, உதவி பொறியாளர் அணில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்த விரைந்து வந்து நேரில் பார்வையிட்டனர். சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஏற்கனவே கட்டப்பட்டு பயனாளிகளிடம் ஒப்ப டைக்காமல் உள்ள குடி யிருப்புகளுக்கு மாற்றிவிட்டு, இந்த குடியிருப்பை இடித்து புதியதாக கட்டித்தர அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன்னிலையில் உறுதியளித்தனர்.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜிப்மர் இயக்குனர் உருவபடம் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் கடந்த 29-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், எதிர்காலத்தில் ஜிப்மரில் பயன்படுத்தப்படும் பதிவுகள், சேவை புத்தகங்கள், பணிக்கால கணக்குகள் என அனைத்திலும் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் ஆர்ப்பாட்டம் உள்ளி ட்டவற்றில் ஈடுபட்டன.
இந்த நிலையில், புதுவை ஜிப்மரில் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயப்படுத்தி திணிக்கப்படுவதையும், அதற்காக சுற்றறிக்கை அனுப்பிய அந்த நிர்வாக இயக்குனரைக் கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஜிப்மர் மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதற்காக கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில். மாநில நிர்வாகிகள் தலையாரி, அரிமா தமிழன், செல்வந்தன், எழில்மாறன், தமிழ்வளவன் ஆகியோர் முன்னிலையில் 100- க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் சுப்பையா திருமண மண்டபம் அருகே ஒன்று கூடினர்.
அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஜிப்மர் மருத்துவமனை நோக்கி வந்தனர். அவர்கள் ஜிப்மரில் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்தும், அது தொடர்பாக நிர்வாகத்தின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், இந்தி திணிப்புக்கு காரணமான மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். அப்போது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தையினருக்கும் இடையில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு விடுதலை சிறுத்தையினர் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடிரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஜிப்மர் இயக்குனரின் உருவ படத்தை தீயிட்டு கொளுத்தி, காலால் மிதித்தனர். இதனை போலீசார் தடுக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்களது போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை பல்கலைக்கழகம் முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுவை பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். தலித் பழங்குடி கூட்டமைப்பு நீலகங்காதரன், ராமமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனந்தன், பிரின்ஸ்கஜேந்திரபாபு, மார்க்சிஸ்டு ராஜாங்கம், பெருமாள், பாரதி அண்ணா, வாசுதேவன், முத்துக்குமரன், சங்கரன், வாஞ்சிநாதன், சுப்புராயன், பிரவீன், எழிலன், தமிழவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செயய வேண்டும். புதுவையில் நீட் ஒழிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். கியூட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திலும் 25 சதவீத இடங்களை புதுவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.






