என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பூக்களுடன் கைதிகள், அதிகாரிகள் உள்ளனர்
    X
    அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் பூக்களுடன் கைதிகள், அதிகாரிகள் உள்ளனர்

    புதுவை மத்திய ஜெயிலில் கைதிகள் பயிரிட்ட பூ, காய்கறிகள் அறுவடை

    கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

    மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைதிகளுக்கு யோகா, தியான வகுப்புகள் நடைபெறுகிறது.

    அதோடு ஒவியம் சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    சிறைசாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.

    இதனை அறுவடை செய்யும் விழா சிறையில் நடந்தது. சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அதிகாரி சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் அறுவடையை தொடங்கி வைத்தனர்.

    கத்திரிக்காய், மாங்காய், எலும்பிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது. காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    விநாயகர் சதூர்த்தி விழாவின் போது கைதிகள் தயாரித்த காகித கூழ் விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் புதுவை வந்த மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கைதிகள் செய்த விநாயகர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. விவசாயம் செய்வது மன மகிழ்ச்சியை அளிப்பதாக கைதிகள் தெரிவித்தனர். இது குறித்து கைதிகள் கூறியதாவது:

    சிறையில் பல நாள் தூங்கியதில்லை. தற்போது விவசாயம் செய்வதால் நிம்மதியாக தூங்குகிறோம். ஒரு விதை செடியாக மலரும் போதும் மிக மகிழ்ச்சி அடைகிறோம் விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து விட்டோம்.

    முன்பு நாள் ஒன்றுக்கு ரூ. 25 சம்பளம். இன்று விவசாயத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பளம் பெறுகிறோம். தண்டனை காலம் முடிந்தும் பலரும் சிறையில் இருக்கிறோம். அரசு கருணையோடு விடுதலை செய்தால் இயற்கை விவசாயம் செய்வோம்.

    இவ்வாறு கைதிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×