என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசைக்கு நேற்று பிறந்த நாளாகும்.

    பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி கடிதம் மூலம் கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமருக்கு கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுவைக்கு வந்த கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரின் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    கவர்னர் மாளிகையில் கலெக்டர் வல்லவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது பேசிய கவர்னர் தமிழிசை, தனக்கு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இல்லை. இருப்பினும் கவர்னர் மாளிகை சார்பில் நடந்த பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    கவர்னர் மாளிகைக்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, தமிழிசையின் தலையில் கை வைத்து ஆசி வழங்கி, பூங்கொத்து அளித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கவர்னரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    ரெட்டியார்பாளையத்தில் மொபட் மீது பஸ் மோதியதில் அங்கன்வாடி ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்திைரயர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடி பகுதியில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். 

    வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.

    ெரட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது முன்னாள் சென்ற தனியார் பஸ்சை ராஜலட்சுமி முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

    அப்போது பஸ் உரசியதில் ராஜலட்சுமி மொபட்டோடு தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் முன்பக்க டயர் ராஜலட்சுமியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்து போனார். 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    புதுவை- விழுப்புரம் சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகிறது. 

    வளவனூரை சேர்ந்த செல்வகணபதி எம்.பி.யின் உறவினர் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் கண்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள். 

    அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் பல்கலைக்கழக பஸ் மோதி படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    புதுச்சேரி:

    வில்லியனூரில் தர்மபால சோழ மன்ன ரால் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. 

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு தேர் திருவிழா தொடங்குகிறது. 

    இதையொட்டி கடந்த 5 நாட்களாக பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடு பலிகொடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது.  7.30 மணி முதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 

    தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10-ந் தேதி திருக்கல்யாணம்,  11-ந் தேதி தேரோட்டம்,  12-ந் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. 

    விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    காங்கிரசில் ஊழல் செய்யாதவர்களே இல்லை என பா.ஜனதா தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை 8 ஆண்டில் பிரதமர் மோடி செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உலகம் போற்றும் தலைவரக மோடி மாறியுள்ள்ளார். 

    8 ஆண்டில் ஊழல் இல்லாத அரசை மக்கள் பார்த்து வருகின்றனர். எல்லா மாநிலங்களையும் ஒரேமாதிரியாக பாவித்து திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. 

    ஊழல் இல்லாத இந்தியா,  குடிநீர், உணவு, சொந்த வீடு போன்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறார். 

    பிரதமரின் சாதனைகளை விளக்கி மக்கள் இயக்கமாக தெருமுனை பிரசாரம் செய்து வருகிறோம். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது. பிரதமரின் டிஜிட்டல் முறையால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா தடுப்பூசிகள் 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாடு வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகிறது.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அவரின் மகன் என்ன தொழில் செய்கிறார்? 

    கடந்த தேர்தல்களில் அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என சொல்ல முடியுமா? காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா? காங்கிரஸ் கட்சியில் ஊழல் செய்யாதவர்களே இல்லை. 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    பேட்டியின்போது பொதுச்செயலாளர் மோகன்குமார், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், துணைத்தலைவர்கள் அமாவாசை, கஜேந்திரன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சிவபெருமான் ஆகியோர் உடனிருந்தனர். 
    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை பட்டபடிப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் முதுகலை மேலாண்மைத்துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் இணைந்து நடத்திய இளங்கலை மாணவர்களுக்கான முதுகலை பட்டப்படிப்பு விழிப்புணர்வு குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் கான்குயர்-22 என்ற தலைப்பில் நடைபெற்றது. 

    இக்கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் இலக்கிய விமர்சகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ராமலிங்கம், புட்கிங் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சரத்பாபு ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

    இந்நிகழ்ச்சிக்கு மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் செந்தில் வரவேற்று பேசினார். 

    நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியலின் துறைத்தலைவர் மாரியப்பன் மற்றும் முதுகலை மேலாண்மைத்துறையின் துறைத்தலைவர் மதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கல்லூரியின் டீன் ராஜப்பன் நன்றி கூறினார்.
    புதுவை அரசு போக்குவரத்து கழக எழுத்தரை தாக்கியதாக கண்டக்டர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட்டை நெல்லுமண்டி வீதியை சேர்ந்தவர் பாவாடை (வயது52). இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது அலுவலக பொது மேலாளர் ஏழுமலையுடன் அலுவக கோப்புகளை எடுத்துக்கொண்டு புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் பாவாடையும், பொது மேலாளர் ஏழுமலையும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரியும் லோகையன் (54) என்பவர் பாவாடையை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி நிலுவை தொகைக்கு ஏன் பில் போடவில்லை என கூறி கன்னத்தில் அறைந்தார். அப்போது பொது மேலாளர் ஏழுமலை தடுத்த போதும் அதனையும் மீறி பாவாடையை தாக்கிய லோகையன் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பாவாடை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த லோகையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் நேவிராஜ்(வயது26). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். 

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நேவிராஜியிடம் அவரது ஊரை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி என்பவர் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார்.

    அதன்படி நேவிராஜ் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். 2 மாதம் மட்டுமே தவணை தொகை கட்டிய புகழ் அதன் பிறகு தவணை தொகை கட்டவில்லை.

    அடுத்த சில நாட்களில் ஒரு வழக்கில் புகழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் புகழ் வாங்கிய மோட்டார் சைக்கிளை  அவரது நண்பர்களான திருக்குமரன் மற்றும் வசந்த் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.

    இதையடுத்து தவணை தொகை கட்டாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய நேவிராஜ் வேலை பார்க்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. 

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய அந்த நிறுவனத்தை சேர்ந்த அகஸ்டின் என்பவர் கிருமாம்பாக்கத்துக்கு வந்தார். அவருடன் நேவிராஜியும் உடன் வந்தார்.

    இதன் காரணமாக நேவிராஜ் மீது திருக்குமரனும்,  வசந்தும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேவிராஜ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். 

    பின்னர் நேவிராஜ் அகஸ்டினுடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சிலர் சண்டை போட்டுக்கொண்டிருந்தை கண்ட நேவிராஜ் அங்கு சென்று பார்த்தார்.

    அந்த நேரத்தில் அங்கிருந்த திருக்குமரனும், வசந்தும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி காட்டிக்கொடுத்த துரோகியே என்று பேசி அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து நேவிராஜியின் முகத்தில் குத்தினர். மேலும் இனிமேல்  எங்களிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    பீர் பாட்டிலால் குத்தியதில் முகத்தில் காயமடைந்த நேவிராஜ் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருக்குமரன் மற்றும் வசந்தை தேடி வருகிறார்கள்.
    காரைக்கால் அருகே திருநள்ளாறில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர். திருநள்ளாறு புறவழிச்சாலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, காவல்நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது அவர் பெயர் நறுமுகன்(வயது20), காரைக்கால்மேடு சுனாமி நகரைச் சேர்ந்தவர் என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து, போலீசார் நறுமுகனை கைது செய்து, ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை  கைப்பற்றினர்.
    பா.ஜனதா ஆட்சியில் மெகா ஊழல் நடந்திருப்பதாக ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமீபத்தில் ரூ.2 ஆயிரம் நோட்டில் 54 சதவீதம், ரூ.500 நோட்டில் 108 சதவீதம் கள்ள நோட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    2016-ல் கருப்பு பணத்தை ஒழிப்பதாகக்கூறி கொண்டுவந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.  கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருந்த சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் மீது எவ்வழக்கும் இல்லை என விடுவித்துள்ளனர். 

    இதேபோல சென்னையில் பணியாற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் என்பவர் ஸ்டாக் எக்சேஞ் தகவல்களை கசியவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் மெகா ஊழல் நடந்துள்ளது. 

    ரபேல் விமானம் வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளோம். கடந்த 8 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் ஏற்கனவே ரூ.54 லட்சம் கோடி கடன் பல மடங்காக உயர்ந்துள்ளது. 

    அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகின்றனர். தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பொதுத்துறைகளை வழங்கி வருகின்றனர். 

    தற்போது பா.ஜனதா வுக்கு மீண்டும் ஆட்சிக்கு வருவோமா? என்ற பயம் வந்துள்ளது. எனவே மத துவேசத்தை உருவாக்கி ஆட்சியை கைப்பற்ற நினைத்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    தொகுதியில் பணிகள் நடைபெறவில்லை என்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரு எம்.எல்.ஏ. போராட்டம்
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதியில் வாய்க்கால்களை துர்வாருதல், புதிதாக சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பணிகள் மேற் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து உருளையன் பேட்டை  தொகுதி எம்.எல்.ஏ. நேரு, தொகுதி மக்களுடன் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டார். 

     அமைச்சர்கள் தொகுதியில் மட்டும் பணிகள் நடக்கிறது. எனது தொகுதியில் வேலை எதுவும் நடைபெறவில்லை  எனக்கூறி அதிகாரிகளிடம் நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறி யாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள், அங்கு வந்து எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித்துறை மூலம்  உருளையன்பேட்டை தொகுதியில்  நடைபெற வேண்டிய பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து தருவதாக  உறுதிய ளித்தனர். 

    இதையடுத்து நேரு எம்.எல்.ஏ. முற்றுகையை கைவிட்டு பொதுமக்களோடு கலைந்து சென்றார்.
    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி ஆம்ஆத்மி கட்சி நூதன போராட்டம் நடத்தினர்
    புதுச்சேரி:

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரி ஆம்.ஆத்மி கட்சியினர் புதுவை அண்ணாசாலையில்  அரை நிர்வாணத்துடன் நூதன போராட்டம் நடத்தினர். 

    பின்னர் புதுவை ஆம்.ஆத்மி கட்சியின் செயலாளர் ஆலடிகணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு இளைஞர்களிடம் பரவி வருகிறது. படித்த இளைஞர்கள் ஆன்லைனில் சொந்த பணத்தை செலவிட்டும், கடன் வாங்கியும், மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும் விளையாடுகின்றனர். 

    இதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்கின்றனர். இப்பிரச்சினையை உணராமல் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கிறது. 

    புதுவை சட்டசபையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் சட்டத்தை இயற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ரவிசீனிவாசன், சண்முகசுந்தரம், பூபேஷ் ராஜன், கண்ணபிரான், சுத்தம் சுந்தர்ராஜன், ஜெயராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    சேதராப்பட்டு தொழிலாளர்களுக்கு கஞ்சாவிற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைபார்த்து வருகின்றனர். 

    மேலும் இங்கு தனியார் கலைக்கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளார்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக சேதரா ப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது சட்டைப்பையில் சோதனை மேற்கொண்டனர். அவரது சட்டைப்பையில் சிறு சிறு பொட்டலங்களாக 11 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டனர். மொத்தம் 115கிராம் கஞ்சா வைத்திருந்தார். 

    அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவை ஆலங்குப்பம் ஜி.வி. நகரை சேர்ந்த பிரேம் குமார் என்ற பிரேன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம் குமாரை போலீசார் கைது செய்தனர்.
    ×